Saturday, March 7, 2015

விவசாயிகளின் போராட்டம் (Agriculturist Agitation in Tamil Nadu) (3)


விவசாயிகளின் போராட்டம்  வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ஆங்கிலேயர் காலத்தில் விவசாயிகளின் உரிமைகளைக்கேட்டுப் போராடிய ஒரு விவசாயி கடம்பூர் பக்கத்தில் ஆங்கிலேயரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதுதான் முதல் விவசாயியின் மீது நடந்த துப்பாக்கிச் சூடு. இது இந்தியநாடு விடுதலை பெறுவதற்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம். மேற்கு வங்கத்தில் அதே காலக்கட்டத்தில் அவரி பயிர் விவசாயிகள் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.

1970 இறுதியில், விவசாயப் போராட்டங்கள் திரும்பவும் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் நிரம்பி வழிந்தது.  அந்த விவசாயிகளின் போராட்டத்தை அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் ஆதரித்தது.

காமராஜரும் விவசாயிகளின் இந்தப்போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அறிக்கைகளும் வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில் 1பைசா மின்கட்டணம் உயர்வுக்கு பெரும்போராட்டம் நடந்தது. அப்போது தமிழாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் . பா.இராமச்சந்திரன், பொதுச்செயலாளர் பழ.நெடுமாறன், குமரி அனந்தன், பொன்னப்ப நாடார், இராஜாராம் நாயுடு, கோவை கருத்திருமண் போன்றோர்கள் எல்லாம் இந்தப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமிநாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துமல்லா ரெட்டியார் (மதுராந்தகம்), முத்துசாமி கவுண்டர் (கரூர்), வி.கே.ராமசாமி போன்ற பலர் இந்தப் போராட்டக்களத்தை தலைமையேற்று நடத்தினர். அப்போது  கோவில்பட்டி மெயின்ரோட்டில்  பயணிகள் விடுதி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் தோட்டாக்களுக்கு பலியாகி இறந்தனர். அதேகட்டத்தில் சேலம் பெத்தநாயக்கன் பாளையத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்தது.

அந்தப் போராட்ட காலக்கட்டத்தில் கோவில்பட்டி மயான பூமியாகக் காட்சியளித்தது. கலைமணி காசி அவர்களின் உணவுவிடுதி அருகே
பெரும் கலவரமும் வெடித்தது. இப்படியான முதல்கட்டப் போராட்டம் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கம் வீறுகொண்டு எழுந்தது.

தமிழகமெங்கும் கட்டவண்டியை சாலையில் மறித்துப் போராட்டம் நடைபெற்றது. கோவை நகரமே குலுங்கியது. குறிப்பாக, கோவில்பட்டி, சங்கரன்கோவில் , இராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, கோபிச்செட்டிப்பாளையம், காங்கேயம், ஈரோடு, கரூர், சேலம்-ஆத்தூர், நாமக்கல், மதுராந்தகம், திருத்தணி, வேலூர் போன்ற பல நகரங்கள் விவசாயிகளின் போராட்டத்தினால் ஸ்தம்பித்தது. கோவில்பட்டியில்,  குண்டடிபட்டு மடிந்த  விவசாயிகள் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல, இந்திராகாந்தியின் அமைச்சரவையில் இருந்த  மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் வந்திருந்தார்.

*

1980ல் விவசாயிகள் போராட்டம் நடத்தும் போது,  எம்.ஜி.ஆர்  மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அப்போது 31-12-1980 அன்று  என் சொந்த கிராமமான, குருஞ்சாக்குளத்தில் எட்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டடிபட்டு இறந்தனர். அந்தக்காலக்கட்டத்தில், ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் தெற்குப்பகுதியான வள்ளியூர்வரை விரிவடைந்த போராட்டம் மேலும் வலுவாகி, திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை நாராயணசாமி நாயுடு தலைமையில் அன்றைய ஆட்சியை விவசாயிகள் நடுநடுங்க வைத்தனர். அன்றைக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டால் மேற்கே சங்கரன்கோவிலிலிருந்து கிழக்கே திருவேங்கடம் வழியாக கோவில்பட்டி வரை உள்ள கிராமங்கள் மற்றும் குருவிகுளம் முதல் கழுகுமலை வரையுள்ள விவசாய கிராமங்களில் காவல்த்துறையின் கெடுபிடிகள் கடுமையாக இருந்தது.

எங்கள் ஊரில் துப்பாக்கிச் சூடு நடக்கும்போது நடைபெற்ற சம்பவத்தை வை.கோ அவர்கள் அவர்கள் வெளிப்படுத்தினார்.  குருஞ்சாக்குளம் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தி.மு.க சார்பில், சென்னை திருவல்லிக்கேணி தேரடியில் தலைவர் கலைஞரும், அண்ணன். வைகோ அவர்களும்   முழக்கமிட்டனர்.

*
நாராயணசாமி நாயுடு சென்னைக்கு  வந்தால்,  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த என் மயிலாப்பூர் வீட்டுக்கு வருவார். என்னுடைய வீட்டில் அப்போது எஸ்.டி.டி தொலைப்பேசி அழைப்புகள் பேசுவதற்கு அவருக்கு வசதியாக இருந்தது.  சென்னைக்கு வந்தால் பழைய உட்லண்ட்ஸ் அல்லது ஸ்வாகத் ஓட்டலில் தங்குவார். எப்போதும் அவர் உடன் இருப்பது வாடிக்கை.

திருத்தணியைச் சேர்ந்த வழக்கறிஞர். சின்னி கிருஷ்ணன், பிரகாஷ் பாபு போன்ற திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவருடன் உடனிருப்பார்கள். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது சென்னையில் சிறப்பு மருத்துவரிடம் பரிசோதித்தார்.

அவருடைய சொந்த ஊரான சர்க்கார் சாம்பக்குளம் அருகே உள்ள கிராமத்திற்கு எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி போன்ற தலைவர்கள் சென்று சந்திக்க விரும்பினார்கள். பழ.நெடுமாறனும், நானும் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். கலைஞரைச் சந்திக்கவேண்டுமென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக வைகோவை அணுகியபோது அவர் டெல்லியில் இருந்தார்.

இப்படி தொடர்ந்து போராட்டங்கள் ,சுற்றுப்பயணங்கள், காவல் துறையின் கைது கெடுபிடிகள் என பல சூழல்கள் மத்தியில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தினார். அப்பொழுது கோவையில் விவசாயிகள் சங்க அலுவலகம் கம்மவார் பிரஸ்ஸில் இருந்தது.

எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984ல் நடக்கும் போது, கோவில்பட்டி பயணியர் விடுதியில் தங்கியிருந்தபோது  தூக்கத்தில்  அவர் உயிர் பிரிந்தது.
*
நீண்ட காலமாக அவருக்கு கோவில்பட்டியில் சிலை எடுக்க வேண்டுமென்ற விருப்பம்  மனதில் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கோவில்பட்டியில் அவருடைய சிலையை நிர்மாணித்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் தள்ளிப்போய்க்கொண்டிருக்கின்றது. நாராயணசாமி நாயுடு அவர்களின் சிலையினை கோவில்பட்டியில் நிறுவுவதை என் வாழ்நாள் கடமையாக எண்ணியுள்ளேன்.

அவருடைய மறைவுக்குப் பிறகு, 1989ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தலைவர் கலைஞர் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கினார். அரசு அதிகாரிகள் இது சாத்தியமில்லை என்று தடுத்தும், ”இல்லையில்லை விவசாயிகளுக்கு ஏதாவது செய்யனும். அதற்கு இலவச மின்சாரம் கொடுக்கவேண்டும்” என்று உறுதியோடு அந்த திட்டத்தை நிறைவேற்றினார். அதற்கு உரிய உந்துதலாக இருந்தது வை.கோ அவர்களின் பங்காகும். அன்றைக்குக் கோவை மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த தி.மு.க அமைச்சர் மு.கண்ணப்பனும் இதனை ஆதரித்தார்.

1989ல் ஆட்சிக்கு வந்து 1991ல் ஜெயலலிதா முயற்சியில் அன்றைய பிரதமர் சந்திரசேகர்  தி.மு.க ஆட்சியைக் கலைத்தார். பின், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திரும்பப் பெற்றார். இதை எதிர்த்து தி.மு.க ஒவ்வொரு தாலுகாவிலும் மாட்டுவண்டிப் போராட்டத்தை நடத்தியது.

சென்னையில் தலைவர் கலைஞர் இதுகுறித்து கூட்டங்கள் நடத்தினார். சங்கரன்கோவிலில் வை.கோ அவர்கள் போராட்டங்கள் நடத்தினார். கோவில்பட்டியில் என் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது.  இவ்வாறு ஒவ்வொரு நகரங்களிலும் தி.மு.க தலைமை ஏற்க தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்தைக் கண்டு அஞ்சி,  ரத்து செய்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை வழங்கியது.
*
இதே காலக்கட்டத்தில் கோவில்பட்டியில், விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தில் அய்யநேரி எத்திராஜ நாயக்கர், அகிலாண்டபுரம் . ஜோஸப் இருதயரெட்டியார் என்ற இருவிவசாயிகள் ஜெயலலிதா அரசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பேரணியில் கலந்துகொண்ட நூறு விவசாயிகளின் ட்ராக்டர்களை காவல்துறையினர் கையகப்படுத்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டனர்

அப்போது வைகோ அவர்கள்,  நாடாளுமன்ற கூட்டத்தொடர் பணியில் இருந்தார். இந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டு உடனே எனக்கு தொலைப்பேசியில் அழைத்து, “ உடனே கோவில்பட்டிக்குச் செல்லுங்கள், நானும் புறப்பட்டு வருகிறேன்” எனச் சொன்னார்.  அன்றைக்குக் கோவில்பட்டி மெயின்ரோடு  விருந்தினர் விடுதியிலிருந்து, லெட்சுமி மில் வரைக்கும் நிசப்தமாக இருந்தது. மக்களிடையே  இறுக்கமான பதட்டம் நிலவியது. விவசாயிகள் அனைவரும் தங்கள் ட்ராக்ட்டரை மீட்கவேண்டுமென்ற வேதனையோடு சாலைகளைவிட்டு ஒதுங்கி, கோபாலன் பஸ் கம்பெனி அருகே அமர்ந்திருந்தனர்.

அன்றைக்கு தூத்துக்குடி மாவட்ட  எஸ்.பியிடம் கோவில்பட்டி சென்றவுடன், நான் தலையிட்டு,   “தலைவர் கலைஞர் சொல்லிவிட்டார்; வைகோ டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார், அவர் வந்தால் போராட்டம் மேலும் வெகுண்டெழும். எனவே உடனே கையகப்படுத்தின ட்ராக்டர்களை திரும்ப விவசாயிகளிடம் ஒப்படைத்துவிடுங்கள் ”என்று சொன்னவுடன் பெரும் வாக்குவாதத்திற்கு இடையே விவசாயிகளின் டிராக்டர்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

வை.கோ அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனைபற்றிப் பேசிவிட்டு கோவில்ப்பட்டிக்கு விரைந்து வந்தார். பின்பு,  மறைந்த இரண்டு விவசாயிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.  வெங்கடாசலபுரம்  மயானத்தில் எத்திராஜநாயக்கரை அடக்கம் செய்த  இரங்கல்கூட்டத்தில் விவசாயிகள் முன்னிலையில் வைகோவும், நானும் பேசினோம்.  வை.கோ அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா அரசு அந்த இரண்டு விவசாயிகளும் துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை, உடல்நலமில்லாமல் இறந்தார்கள் எனச் சொல்லியது அதிர்ச்சிக்குள்ளானது.


உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில்,  இருதயஜோஸப் ரெட்டியார்  உடலைத் திரும்பவும் தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை செய்யவேண்டுமென்று வை.கோ அவர்கள் என்னை ரிட் மனு தாக்கல் செய்யச் சொன்னார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதி கே.எஸ்.பக்தவச்சலம், இருதயஜோஸப் ரெட்டியார் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.  தமிழக உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முதலாக, புதைக்கப்பட்ட உடல் மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட உத்தரவு வாங்கியது விவசாயிகள் போராட்டத்திற்காகத்தான்.

இதேபோல, கட்டபொம்மனுடைய வாரிசு குருசாமிநாயக்கரை ஜனாதிபதியின் கருணைமனு வரைக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, தூக்குக்கயிறை நெருங்கியபோது வை.கோ அவர்கள் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வாதாடியதின் அடிப்படையில்  காப்பாற்றப்பட்டார். இந்த இரண்டு வழக்குகள் போல பல பொதுநல வழக்குகளை நடத்தி வெற்றிபெற்றது போராட்டங்களால்  சோர்வான என்  மனதுக்கு ஆறுதல் தரும் விஷயங்களாகும்

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்  குறித்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சுப்ரமணியன் தலைமையில், கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நீதி விசாரணை நடந்தது. விசாரணையில் வழக்கறிஞராக நான் வாதாடினேன். அண்ணன். வைகோ அவர்களும் நேரடியாக வந்து இதுகுறித்தான ஆவணங்களோடு மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த நீதிவிசாரணையில் , இடைச்செவல் ஆவுடைத்தாய், சத்திரப்பட்டி.பொன்.இராமசுப்பு மற்றும்  வில்லிசேரி, ஆவல்நத்தம், அய்யநேரி, சின்னமலைக்குன்று, விஜயாபுரி போன்ற பலகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

இப்படியான நினைவுகள் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழக விவசாயிகள் போராட்டம் குறித்து முழு வரலாற்று நூலை எழுதிவிட்டேன். அதில் சில திருத்தங்கள் மேற்கொண்டு அச்சுக்கு அனுப்பவேண்டிய பணி மிச்சமிருக்கின்றது. அந்தநூலை கோவில்பட்டி மண்ணில் வைத்து வெளியிட வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கின்றது. அப்போதாவது, மறைந்த நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை எடுப்பதற்கான முன்முயற்சிகள் அந்த விழாவில் அறிவிக்க வேண்டுமென்ற நோக்கமும் என்னிடம் உள்ளது.  காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-03-2015.








1 comment:

  1. மிகவும் பயனுல்ல தகவல். புத்தகம் வேண்டும் எவாறு தொடர்புகொள்வது? vitrustu@gmail.com., Balasubramanian 9042905783, www.voiceofindian.org

    ReplyDelete

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...