Wednesday, April 1, 2015

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தந்தி தொலைக்காட்சிப் பேட்டி. - -SriLankan Prime Minister. Ranil Interview in Thanthi TV.


தேவையில்லாமல் பலகுழப்பங்களை ரணில் விக்கிரமசிங்கே இந்தப் பேட்டியினால் ஏற்படுத்திவிட்டார். வங்கக்கடலில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை என்றும், கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம் என்றும் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமில்லாமல் 2009ம் ஆண்டி யுத்தத்தில் தமிழர்களின் ஒருபகுதியினர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர் எனச்சொல்லி இருப்பது கொடுமையிலும் கொடுமை.

விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டும் ரணில் விக்கிரமசிங்கே, கடந்த காலங்களில் தேர்தலில் தான் வெற்றிபெற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனைச் சந்திக்க துடிக்கவில்லையா?
மேலும், திடீரென்று இராஜபக்‌ஷேவுக்கும், புலிகளுக்கும் ஓர் உடன்பாடு இருந்த்தாகவும் சொல்லி இருக்கின்றார். அந்த பிரச்சனையில் ஆதாரமில்லாமல் அமர்காந்த் என்ற ஒருவரின் தலையீட்டையும் ரணில் குறிப்பிடுவது பொறுத்தமாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடைய தலைமையைக் கேள்வி கேட்கும் ரணில் விக்கிரமசிங்கே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இராஜபக்‌ஷே என்ன நிலையிலிருந்தார் என்பதை எல்லாம் நினைத்துதான் பேசுகிறாரா!

அப்படியென்றால் வாக்கு வங்கிக்காக பிரபாகரன் அவர்களை சந்திக்க வேண்டுமென்று ரணில் ஏன் விரும்பினார். இலங்கை அதிபர்களாக வந்தவர்கள் அத்தனைபேருமே, விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்றுதானே தேர்தலில் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் போட்டியிட்டனர். சமீபத்தில் மைத்ரி சிரிசேனா தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெற்றொருக்க முடியாது. இந்த கூட்டணியில் தானே ரணில் விக்கிரமசிங்கே இருந்தார்.




13வது அரசியல் சட்டம் நிறைவேற்றும் என்று சொல்கிறார் ரணில். ஆனால், ஒரு மாகாண கவுன்சிலுக்கு காவல்துறை, நிலநிர்வாகம், நிலவருவாய், மீன்பிடித்தொழில் என்ற அதிகாரங்கள் வழங்கினால் தானே செயல்படமுடியும். அதற்கு தெளிவான பதில் ரணில் ஏதும் சொல்லவில்லையே?

இந்த அதிகாரங்களை வழங்குவதற்கு மைதிரிபால் சிரிசேனாவுக்கு அக்கறையுமில்லை. இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு நிலத்தில் தமிழர்கள் வசிக்கும் மாநிலங்களில் மட்டும் இராணுவம் இருப்பதும், தமிழர்களின் திருமணம் போன்ற சமுதாய நிகழ்ச்சிகள் நடத்தவேண்டுமென்றாலும் இராணுவத்தின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது.

இப்பகுதியில் உள்ள தமிழர் நிலங்களையும், சிங்களர்கள் கையகப்படுத்திக் கொண்டு, அதை நிலத்தின் உரிமையாளர்களான தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கின்றது. இச்சூழலில், எப்படி 13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்?.
இப்படி குழப்பமான, தெளிவில்லாத ரணிலின் பதில்களில் இருந்து என்ன நன்மைகள் ஈழத்தமிழர்களுக்குக் கிடைக்கப்போகின்றதோ...

ஜெயவர்த்னே, சேனநாயகா, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே, இராஜபக்‌ஷேவே, ஏன் மைதிரி சிரிசேனாவே ஆனாலும், ஏதாவது ஒருவகையில் நியாயங்கள் கிடைக்குமா?. கடந்தகால நடவடிக்கைகளில் இருந்து யோசித்துப் பார்த்தால் எதுவும் நடக்காது என்பதுதான் தெளிவாகியுள்ளது.
நாய்வாலை நிமிர்த்த முடியாது.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...