Wednesday, April 8, 2015

ஜென்மம் நிறைந்து சென்றவர் வாழ்க -ஜெ.கே. சிலநேரங்களில் சிலமனிதர்கள். - Tamil celebrity Novelist JeyaKandan.



பண்பட்ட படைப்பாளியாய் பட்டத்துயானையுமாய்  வாழ்ந்த எழுத்தாளர்,  ஜே.கே என்றழைக்கப்படும் ஜெயகாந்தன் என்ற ஆளுமை சற்றுமுன் இயற்கை எய்தினார்.

எதிலும் தனக்கென்ற ஒரு பானியில் எதைப்பற்றியும் அச்சப்படாமல் தன் மனதிற்குப் பட்டதைச் சொல்லும் அற்புத மனிதர். 1978 காலகட்டத்தில் இந்தோ-சோவியத் நட்புறவு கழகத்தின் மாணவர் பிரிவு நிர்வாகியாக நான் இருந்தபொழுது, ஜெயகாந்தன் அவர்களைச் சந்திப்பதுண்டு. மதுரை ராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸில் இதற்கான மாநாடு அப்போது நடந்தது.

அம்மாநாட்டில் கலந்துகொள்ள, இந்தோ-சோவியத் நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலாளரான மறைந்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். என்.டி.சுந்தர வடிவேலு மற்றும் ஜெயகாந்தனும் நானும் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணித்தோம்.

அப்போது,என்.டி.வியும் என்.டி.எஸ்சும் தூங்க வேண்டுமென நினைத்தார்கள். ஜெயகாந்தனோ தன்னுடைய  பிரத்யோகமான பைப்பில்  புகைப்பிடித்தபடியே உறங்காமல் விடிய விடிய பேசிக்கொண்டு வந்தார்.

முப்பதாண்டுகள் மேலாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ.அழகிரிசாமியின் புதல்வர் திருமணத்தை காந்தி மைதானத்தில் நடத்திவைக்கும் பொழுது, சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு ரயிலில் நாங்கள் பயணித்தபோதும் இதே நிலைமைதான் .

இம்மாதிரி எவ்வளவுதான் நமக்கு சங்கடங்கள் அவரால் ஏற்பட்டாலும், ஒரு சில நேரங்களில் அவருடைய பேச்சுக்காக  பொறுத்துக்கொள்வது ஒரு கடமையாகவே இருந்தது. ஏனென்றால் அவர்தானே சில நேரங்களில் சிலமனிதர்கள் என்ற புதினத்தைப் படைத்தார்.

இறுதியாக சோவியத் அரங்கில் நடைபெற்ற கதைசொல்லி இதழ் விழாவிற்கு அவரை அழைக்க நானும், பத்திரிகையாளர் மணாவும் அவரைக் காணச் சென்றபோது, மிகவும் நேசத்தோடு பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

அந்த கதைசொல்லி விழாவில் தான் தன்னுடைய பழைய கம்யுனிஸ்ட்
தோழர்களான நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோரோடு ஜே.கே கலந்துகொண்டார்.  அதற்குமுன்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிகழ்ச்சிகளில்  இடைக்காலத்தில் ஜெயகாந்தன் கலந்துகொள்ளாமல் இருந்தார்.  கதைசொல்லி நிகழ்ச்சியில் தான் ஜே.கேயுடன் வை.கோ, கி.ரா , நடிகர். சிவகுமார் மற்றும் நான் உள்ளிட்டோர் கலந்துகொண்டோம்.

அன்றைய நிகழ்ச்சியில், வை.கோ அவர்கள் ஆனந்தவிகடனில் வெளிவந்த ஜே.கேயின் முத்திரைக் கதைகளை மிக விமரிசையாகச் சொன்னபோது ஜெயகாந்தன் சொன்னார் “ வைகோவின் பேச்சை இன்றைக்குத்தான் பக்கத்திலிருந்து கேட்டேன். என்னுடைய கதைகளை நானே சொல்ல முடியாத வகையில் சிறப்பாக வைகோ இங்கு பேசினார்” என்று கூறினார்.

 “எங்களுடைய கட்சியின் காம்ரேட்களின் முன்னால் சொல்கின்றேன். ஒரு கிராமத்திலிருந்துகொண்டு கி.ராஜநாராயணன் இவ்வளவு அற்புதமாக எழுதுகின்றாரே, சென்னையிலிருந்துகொண்டு என்னால் அப்படி எழுதமுடியவில்லையே என்ற பொறாமையும் எனக்கு ஏற்பட்டது” என்று அதே மேடையில் கூறினார் ஜே.கே.

அதுமட்டுமில்லாமல் என்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,
“ வைகோவுக்கும் கி.ரா-வுக்கும் பாடுபடும் கே.எஸ்.ஆரை நீண்டகாலமாகப் பார்க்கிறேன். துருதுருவென்று, எது தன்னுடைய கடமையோ அதைத்தான் கவனிப்பாரொளிய வேறொன்றையும் எதிர்பார்க்கமாட்டார். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று பணியாற்றுகிறார். அவரது தினமணிக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். நீண்டநாளைக்குப் பிறகு எங்களுடைய காம்ரேடுகளான, நல்லகண்ணு, தா.பாண்டியன் கலந்துகொள்கின்ற கதைசொல்லியின் நிகழ்ச்சியில்  நானும்  கலந்துகொள்ள பெருமை கொள்கிறேன்.” என்று அவர் பேசியது இன்றும் நினைவிலாடுகிறது.

நீண்டகாலமாக ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள அரசமரத்துக்கு அருகேயுள்ள மாடிவீட்டில் தினமும் இவருடைய பரிவாரங்கள் கூடும். இலக்கியம் மட்டுமில்லாமல் தமிழக, இந்திய , உலக அரசியல் முதற்கொண்டு அனைத்தையும் பேசி, நள்ளிரவு ஒரு மணிக்குப் பிறகு எல்லோருமாக அந்த இடத்தைக் காலி செய்துண்டு. இது தினமும் நடக்கும் என்பேராயிரம் அவையைப் போன்ற சங்கமம்.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் இலக்கிய இதழான தாமரையில் தி.க.சி  ஆசிரியராக இருந்தபொழுது, ஜே.கேவுக்கும்  தி.க.சிக்கும் இலக்கியத்தில் முட்டலும் முறசலும் நடக்கும். இதெல்லாம் கடந்தகால நினைவுகள். கதை சொல்லி இதழை விரும்பிப் படிப்பவர்களில் ஜே.கேயும் ஒருவர். இடைப்பட்ட காலங்களில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் கதைசொல்லியை எங்கே என்று கேட்கவும் செய்வார்.

இதோ இன்றைக்குத் தான்  இதழை அவருக்கு அனுப்பி வைக்க அவரது முகவரியை ஒட்டிய பசைகூட இன்னும் காயவில்லை. இரவு 10மணியளவில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்து வந்தடைந்தது.  காலம் அவரை நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டுவிட்டதே என்ற வேதனை நெஞ்சை அழுத்துகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-04-2015.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...