Wednesday, April 22, 2015

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர்த்துளி - Srividya - Unforgettable, Iconic Lady of South Indian Cinema.



 சமீபத்தில் நளினி சிவக்குமார், ரீமா மகாலிங்கம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள UNFORGETTABLE என்ற நூலை வாசித்தேன்.
 இருவரும் ஐதராபாத்தில் கல்லூரிப் பேராசிரியர்களாக பணியாற்றி, பெண்களுடைய திரை ஆளுமையைப் பற்றி இந்த நூலில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நூலை ரூபா பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தெனிந்திய மொழித் திரைப்படங்களில் மின்னிய திரைத் தாரகைகளாக விளங்கிய எம்.எஸ்.சுப்பு லட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், கண்ணாம்பாள், பானுமதி, டி.பி.ராஜலட்சுமி, டி.ஆர்.இராஜகுமாரி, பத்மினி, சாவித்திரி, ஜமுனா, சௌகார் ஜானகி துவங்கி 1980கள் வரை நடித்த ஸ்ரீவித்யா, ரேவதி , நதியா வரைக்கும் நடித்த 34 பெண் நடிகைகளைப் பற்றி சுருக்கமான விளக்கமான சிறப்பான பதிப்பாக இந்நூல் அந்தக்காலத்துப் புகைப்படங்களை ஆவணப்படுத்தி இந்நூல் வெளியாகியுள்ளது.

இந்நூலைப் படிப்பவர்கள் நிச்சயமாக இந்நூலாசிரியர்களைப் பாராட்டுவார்கள். நூலில் முதலில் ஸ்ரீவித்யாவைப் பற்றித்தான் நான் படித்தேன். ஏனெனில் , அவர் தன்னுடைய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தியபோது என்னென்ன பாடுபட்டார், எப்படியெல்லாம் ஏமாற்றப் பட்டார் என்று அறிந்தபோது, இப்படியும் நாம் விரும்பிப் பார்க்கும் ஒரு திரைப்பட நடிகைக்கா சோதனைகள்   என்று மனதில் நினைத்ததுண்டு.

அவரைப்பற்றிய, பதிவு வெறும் திரைப்படச் செய்திகளாக மட்டுமல்லாமல், அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் மற்றவர்களும் கற்றுக்கொள்ளும் படிப்பினையாக இருக்குமே என்று இந்தப் பதிவு.
இதைப்படித்தால் ஓரிரு நிமிடம் வேதனையில் மனம் வாடும்.

மீனாட்சி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ஸ்ரீவித்யாவின் நடிப்பு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களை ஈர்த்தது. இவரது தாயார் எம்.எல்.வசந்தகுமாரி பிரபலமான கர்நாடகப் பாடகர். தந்தை கிருஷ்ணமூர்த்தியும் பிரபலமான நடிகர்.









1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்த போது, உடல்நலக்குறைவு காரணமாக அவரது தந்தையார் நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தபோது, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாகப் பாடிக்கொண்டிருந்தார் அவரது தாயார்.

“கைக்குழந்தையான தனக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூட அம்மாவுக்கு நேரம் இருக்கவில்லை, அப்படி குடும்பத்துக்காக உழைத்தார்” என்று  பின்னாட்களில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீவித்யா.  இந்த பொருளாதாரக் கஷ்டங்களினால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழும்ப சங்கீத மேதையான தாத்தா அய்யாசாமி அய்யர் வீடுதான் ஸ்ரீவித்யாவின் இருப்பிடம்.

ஸ்ரீவித்யா சிறுமியாக இருக்கும் பொழுது மயிலாப்பூர் மார்கெட்டுக்கு தன் தாத்தாவோடு ரிக்ஷாவில் காய்கறி வாங்க வருவார். ரிக்ஷாவில் வரும்போது சங்கீத கீர்த்தனைகளை தாத்தா உபதேசிக்க பத்துவயதுக்குள் கச்சேரி செய்யுமளவுக்கு இசையைக் கற்றுத் தேர்ந்துவிட்டார் ஸ்ரீவித்யா.

ஆனாலும் அவருக்கு சங்கீதத்தைவிட நாட்டியத்தில் தான் பிடிப்பு அதிகம் இருந்தது. காரணம் இந்தியாவிலே நடனத்துக்குப் பெயர்பெற்ற திருவாங்கூர் பத்மினி சகோதரிகள் வசித்த வீடும் ஸ்ரீவித்யாவின் வீடும் பக்கத்துப் பக்கத்து வீடுகள். நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனம் என்றால் அவருக்கு உயிர். பத்மினியே குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை நாட்டியம் கற்றுக்கொள்ள வைத்தார்.  பத்மினி-ராகினி நடத்திய நாட்டிய நாடகத்தில் பாலசீதாவாக ஆறுவயதிலே நடித்தவர் ஸ்ரீவித்யா. பதினோரு வயதில் நாட்டிய அரங்கேற்றமும் முடிந்தது.

பின் இந்தியா முழுக்க நடனத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் நடித்து, பி.ஆர்.பந்துலு தயாரித்த “ரகசிய போலீஸ் 115” திரைப்படத்தில் கதாநாயகி வாய்ப்பு ஸ்ரீவித்யாவின் வீட்டுக் கதவைத் தட்டியது. அலங்காரச் சோதனைக்குப் பிறகு, “புடவையில் சிறுபெண்ணாகத் தெரிகிறார்” என்று நிராகரித்ததோடு இன்னும் சில வருடங்களில் நானே வாய்ப்புக் கொடுக்கிறென் என்றார் எம்.ஜி.ஆர்.
பின் அந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதா ஒப்பந்தம் ஆனார்.

அதுவரையில் நடிப்பின் மீது ஆர்வமில்லாமல் இருந்த ஸ்ரீவித்யா ஏ.பி.நாகராஜன் ஏற்கனவே கேட்டுவந்த “திருவருட்செல்வர்” படத்தில் நாட்டியமாட சம்மதம் தெரிவித்தார்.  “காரைக்கால் அம்மையார்” படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய “தகதகதகவென ஆடவா” பாடலில் ஸ்ரீவித்யாவின் நாட்டியத்தைப் பார்த்து தமிழ்நாடே கைதட்டிப் பாராட்டியது.

அதன்பிறகு மலையாளத்தில் “சட்டம்பிக்காவலா” படத்தில் நாயகியாக நடித்தார். கதாநாயகன் சத்யனுக்கு அப்போது ஐம்பத்தி ஏழுவயது. நாற்பதுவருடம் மூத்த நடிகருடன் துணிச்சலாக நடித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.

தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் கே.பாலச்சந்தரின் இராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் “வெள்ளி விழா”, “நூற்றுக்கு நூறு” ஆகியபடங்களில் நடித்து, பாலச்சந்தர் படங்களுக்கு ஆஸ்தான கதாநாயகியாக உருவாகினார். அவருடைய “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படம் கமல்ஹாசனுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவும் சிவக்குமாரும் முக அசைவுகளிலே சொல்லவேண்டிய வசனங்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.



ஸ்ரீவித்யாவின் பெரிய கண்களும், அவருடைய நடனமும் அவரை வெறும் கதாநாயகியாக மட்டுல்லாமல் திறமையான குணச்சித்திர நடிகையாகவும் உருமாற்றியது. “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் இருபது வயதுப் பெண்ணுக்கு தாயாக நடிக்க இருபத்தி இரண்டுவயது ஸ்ரீவித்யா சம்மதித்த போது ஆச்சர்யத்தில் மூழ்காத திரையுலகினரே இல்லை. அபூர்வ ராகங்களில் வந்த பைரவி கதாப்பாத்திரம் தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற கதாப்பாத்திரங்களுள் ஒன்று.

ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படத்தில் அவருடைய கதாநாயகி ஸ்ரீவித்யா தான். இந்தப்படத்தில் இடம்பெற்ற “ஏழு ஸ்வரங்களுக்குள்” பாடலும் ஸ்ரீவித்யா நடிப்பும், பாவனைகளும் இன்றைக்குப் பார்த்தாலும் என்ன அற்புதமாக இருக்கும்.

எழுபதுகளின் இறுதியில் ரஜினி, கமல் மட்டுமல்லாமல் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். சிவாஜி கணேசனுடன் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ போன்ற படங்களில் நடித்தவருக்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. எம்.ஜி.ஆர் முதல்வரானதும் கலைமாமணி விருதும், 1977-78ம் ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், எனத் 900படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீவித்யா, ஜார்ஜ் தாமஸ் என்பவரை மணந்து அடுத்த ஒன்பது ஆண்டுகள் பல கஷ்டங்களை அனுபவிக்கத் தொடங்கினார். ஜார்ஜ் தாமஸ் அவரது சொத்துக்களை அழித்து உல்லாசமாக வாழவே, அவரை விவாகரத்து செய்துகொண்டார். ஜார்ஜிடம் இருந்து தன் சொந்த வீட்டைக் கூட அவரால் திரும்பப் பெற முடியாமல் தவித்தார்.

பல சட்டப் போராட்டங்கள் நடத்தி தன் வீட்டைத் திரும்பப் பெற்றபோது நடிகர். செந்தாமரை, ஆர்.சி.சக்தி போன்ற நண்பர்கள் தான் உதவியாக இருந்தனர். வழக்கறிஞர் திரு.பிச்சை  மற்றும் என் போன்ற வழக்கறிஞர்களுக்கு அவர் எவ்வளவு நம்பி பாதிக்கப்பட்டுள்ளார் என்பது வழக்கு ஆவணங்கலைப் பார்க்கும் போது அறிந்து வேதனைப் பட்டதும் உண்டு. “நான் முதன்முதலாக அம்மாவின் மடியில் தலைவைத்து படுத்தபோது எனக்கு 34வயது முடிந்திருந்தது” என்று ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். வாழ்க்கை அவருக்கு கொடுத்தச் சோதனைகள் அத்தோடு முடியவில்லை. 2003ம் ஆண்டு அவருக்கு ‘ஸ்பைன் கேன்சர்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனாலும் ஸ்ரீவித்யா தன்னுடைய இந்த பாதிப்பு யாருக்கும் தெரியக்கூடாது என்று நண்பர்களையோ, உறவினர்களையோ, பிற பிரபலங்களையோ நேரில் சந்திப்பதையே தவிர்த்துவிட்டார். அவரது கடைசி மூன்று ஆண்டுகளில் அவரைச் சந்திக்க முடிந்தவர் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

 ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ திரைப்படம் வெளிவந்த காலத்திலிருந்து கமல்ஹாசன் ஸ்ரீவித்யா நட்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று ஊடகங்கள் எழுதின.


கமல்ஹாசன் ஸ்ரீவித்யா இருவருக்கும் இடையே நிகழ்ந்த கடைசி சந்திப்பை அடிப்படையாக வைத்து இயக்குநர் ரஞ்சித் ஸ்ரீவித்யாவின் கதையைத் திரைப்படமாக எடுத்தார். 2008ல் இந்தத் திரைப்படம் “திரக்கதா” என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்தது. ஸ்ரீவித்யாவின் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை பிரியாமணிக்கு கேரள அரசின் அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.


`இளம் வயதில் எங்கள் குடும்பமும், லலிதா-பத்மினி-ராகினி குடும்பமும் அருகருகே வசித்து வந்தோம். ராகினி ஒரு தங்க சங்கிலி அணிந்து இருந்தார். அதை வாங்கி நானும் அணிந்திருந்தேன். ராகினி புற்று நோயினால் இறந்து போனார். அதைப்போலவே எனக்கும் புற்றுநோய் வந்துவிட்டது'' என்று இறுதிகாலத்தில் ஸ்ரீவித்யா சொல்லியிருந்தார்.

2006ல் ஸ்ரீவித்யா காலமானபோது அவருக்கு வயது 53. அவருக்கு நடிப்பும், வாழ்க்கையும் வேறுவேறாக இருக்கவில்லை. எனவேதான் தன் கேன்சர் சிகிச்சைகளின் போதுகூட தன் தோற்றம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலே இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் அவரைக் கவனித்துக் கொண்டவர் மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார்.

ஸ்ரீவித்யா நடித்த சில திரைப்படங்கள்.

அபூர்வ ராகங்கள்
கண்ணெதிரே தோன்றினாள்
காதலுக்கு மரியாதை
நம்பிக்கை நட்சத்திரம்
ஆசை 60 நாள்
ஆறு புஷ்பங்கள்
துர்க்கா தேவி (திரைப்படம்)
ரௌடி ராக்கம்மா
இளையராணி ராஜலட்சுமி
அன்புள்ள மலரே
எழுதாத சட்டங்கள்
இவர்கள் வித்தியாசமானவர்கள்
நன்றிக்கரங்கள்
சித்திரச்செவ்வானம்
இமயம் (திரைப்படம்)
கடமை நெஞ்சம்
சிசுபாலன்
டில்லி டு மெட்ராஸ்
உறவுகள் என்றும் வாழ்க
தங்க ரங்கன்
திருக்கல்யாணம்
ராதைக்கேற்ற கண்ணன்
தளபதி
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆனந்தம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் அற்புதமாக தன் கண்களை உருட்டியே நடித்த அவரது நடிப்பை யாரும் மறக்க முடியாது.

நல்லவர்கள் நசுக்கப் படுகிறார்கள். உண்மைகள் உறங்குகின்றன, நியாயங்கள் நிராயுதபாணியாக உள்ளன, தகுதிகள் தடுக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சியாக நம் கண்முன்னால் வாழ்ந்தவர் ஸ்ரீவித்யா. நல்லவர், எதார்த்தமானவர், சிறுவயது முதல் சிக்கலே வாழ்க்கையாகக் கொண்டவர். தனது நடிப்பு உண்டு தானுண்டு என்று தன் பணிகளை மட்டும் பார்த்துக் கொண்டு நேர்மையாக வாழவேண்டுமென்று இலட்சியங்களைக் கொண்டவர்.

இப்படிப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சோதனையா? இயற்கையின் நீதி எங்கே இருக்கின்றது. ஸ்ரீவித்யா சிலரை நம்பி மோசம்போய் தன் வாழ்க்கையை இழந்தவர்.

கேரளாவில் இவர் மறைந்த போது அன்றைய முதல்வர் அச்சுதானந்தன்,  “தமிழகத்தில் பிறந்திருந்தாலும் ஸ்ரீவித்யா என்ற குழந்தையை மலையாள நாடு தத்தெடுத்துவிட்டது. அந்த மலையாள மகளுக்கு கேரளா அரசுமரியாதையோடு நல்லடக்கம் செய்யும்” என்று உத்தரவிட்டு கேரளஅரசு  அவரது இறுதி அடக்கத்தில் கௌரவப்படுத்தியது.  ஆனால் அதேகாலக்கட்டத்தில் ஸ்ரீவித்யாவின் நாட்டிய அபிமானியான,  மலையாளத்தில் பிறந்த பத்மினி சென்னையில் மறைந்தபோது,  இம்மாதிரி தமிழகத்தில் நடக்கவில்லை.

ஸ்ரீவித்யா வெறும் நடிகை மட்டுமில்லாமல், அவரது வாழ்க்கை மூலம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் மானிடத்திற்கு உள்ளது. ஒருவரை நம்பி ஏமாறாமல் நம்முடைய வாழ்க்கையை நாம் கவனமாக வழிநடத்திச் செல்லவேண்டும்.

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு அன்பினில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல..


என்ற கண்ணதாசனின் வரிகளில் தான் எவ்வளவோ அர்த்தங்கள். ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் துன்பங்களைச் சுமந்து, புன்னகைக்கும் கண்ணீராகத் தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-04-2015.












No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...