Saturday, April 25, 2015

பண்டைய பண்பாட்டுப் பொருள்கள் - Ancient Cultural Symbols (2)




அக்காலத்தில் மாவரைக்க, சிறிய மாவு மில்களோ, ஆலைகளோ கிடையாது.  மசாலா அரைக்கவும் , துவையல்கள் அரைக்கவும் மிக்ஸிகள் கிடையாது. இட்லி மாவு அரைக்க கிரைண்டர்கள் கிடையாது

அம்மிக்கல்லும், ஆட்டு உரலும், திருக்கையும் தான் புழக்கத்தில் இருதது. நெல்லை கைக்குத்தலாக  உரலும் உலக்கையும் பயன்படுத்தப் பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இந்தத் தளவாடங்கள் 1980வரை  பயன்படுத்தப்பட்டது பார்வையில் இருந்தது.

அம்மியில் அரைத்த மசாலாவில், நல்லெண்ணெய் ஊற்றி நாட்டுக் கோழி குழம்பும்,  சட்னியும், துவையலும் அரைத்தச் சாப்பிட்ட ருசியே தனி.

ரசிகமணி டி.கே.சி சொல்வார், “இட்லிக்கும் தோசைக்கும் தனிரக அரிசியும், உளுந்தின் அளவைக் கவனத்தோடு கலந்து ஊறவைத்து  ஆட்டு உரலில் அரைத்தால் தான் இட்லியும் மெதுவாக வரும், தோசையும் சுவையாக இருக்கும்” என்பார். டி.கே.சி வீட்டின் தோசையை ராஜாஜியும் , கல்கியும் பாராட்டியது நாம் அனைவரும் அறிந்ததே.

திருக்கையில் அரைக்கும் ராகிமாவும், உளுந்து மாவிலும் களி செய்து,
நல்லெண்ணெய் ஊற்றி, கருப்பட்டி வைத்துச் சாப்பிட்டால் உடல்வலுவாகும் என்று கி.ரா சொல்வார்.

இப்படியான கல்லில் வடித்த உபயோகப் பொருட்களை இன்றைக்கு மறந்தேவிட்டோம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வேலையைச் சுலபமாகச் செய்யவேண்டும்,அலுவல் நேரங்களின் அவசரம், அதிகமான ஓய்வு தேவை, தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தபிறகு இது புழக்கத்தில் இல்லாமலே ஆகிவிட்டது.

அக்காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் இதைக் கவனிக்கவே நாள் முழுதும் ஒருவருக்கு வேலை சரியாக இருக்கும். கி.ராவின் கோபல்ல கிராமத்தில் இவையெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

என்னுடைய கிராம வீட்டில் ஆட்டுரல் முதல் திருக்கைவரைக்கும்   இரண்டு ஜதையாக ஒவ்வொன்றும் உள்ளன. அவற்றைச் சென்னைக்குக் கொண்டு வந்து  அடையாளப் பொருட்களாகப் பாதுகாத்துக் கொள்ளலாமா என்று நினைக்கின்றேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-04-2015.




No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...