Sunday, October 16, 2016

கண்ணதாசன்

கண்ணதாசன் நினைவு நாள்  அக்டோபர் 17 

காலத்தால் மறக்கமுடியாத காவியத்தலைவன்.
தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். 
கண்ணதாசனின் பாடல்கள்  சாகாவரம் பெற்றவை. 

வெள்ளித்திரையிலும் தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கண்ணதாசன். கவியரசு எனப் போற்றப்பட்டவர்

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்  எழுதியவர்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

இவரது முதல் பாட்டு கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று கன்னியின் காதலியில் வெளிவந்தது 

இவரது கடைசிப் பாட்டு மூன்றாம் பிறை படத்தில் வெளிவந்த கண்ணே கலைமானே என்பதாகும்.

மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.முத்தான முத்தல்லவோ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு  முடிக்க முடியாமல் இருந்தபாடல் நெஞ்சம் மறப்பதில்லை.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்.ஈ.வெ.கி.சம்பத் ஜெயகாந்தன் சோ பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும் என்பார் ஜெயகாந்தன். நெடுமாறன் அவர்கள் எனக்கு நன்கு அறிமுகம் , என் மீதுஅன்பு காட்டினார்.

கண்ணதாசனின் பாடல்கள் படிக்காத பாமர மக்கள் இடம்
சென்று சேர்ந்தது.கவியரசரின் பாடல்கள் நிலைத்து நிற்பதற்கு காரணம் அவரின் அனுபவமும் கவிதை நயமும் தான்

மொழி புலமையினாலும் கற்பனை நயத்தாலும் கருத்துச் செழுமையாலும் எளிய நடையினாலும் தனது இசைப் பாடல்களை காலத்தால் அழியாத காவியங்களாக்கிவிட்டார் கண்ணதாசன்.

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார்.

 நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை  எனப் பாடி  இன்று நிலைத்திருப்பவர் கவியரசு கண்ணதாசன். தன் மீதான சுய விமர்சனங்கள் உட்பட எவர் மீதான விமர்சனங்களையும் தயக்கமின்றி வெளிப்படுத்திய கவிஞர்.

கண்ணதாசன் பாடல்கள் காயப்பட்ட இதயத்திற்கு  மருந்து. தெளிவில்லாத மனதுக்கு ரசவாது. சிந்திக்கும் அறிவிற்கு அறுசுவை விருந்து. பாடல்களை ரசிக்காத மனம் கூட கண்ணதாசன் பாட்டில்  மயங்கும்.

கல்கியில்  எழுதிவந்த சேரமான் காதலி என்ற வரலாற்றுப் புதினம் கண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமியின் விருதினைப் பெற்றுத் தந்தது. அவரின் அர்த்தமுள்ள இந்துமதம்  பல தொகுதிகள் இந்து சமயத்தை எளிதாக விளக்கும் முறையில் வெளியாயின.வாசகர்களிடம் பேராதரவினை இந்நூல்கள் அவருக்குப் பெற்றுத்தந்தன.

கவியரசரின் இலக்கியப் படைப்புக்களின் முடிமணியாக இன்றும் திகழ்ந்துவருவது கிறித்தவப் பேரிலக்கியமான இயேசு காவியம்.

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞர் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர்.

 கம்பரின் செய்யுளிலும் பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

உடல்நிலை காரணமாக 1981 ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 17  இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.கண்ணதாசன் 54ஆம அகவையில் இறந்தார்.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது.இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
...
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
.....
கண்ணதாசனே ! – நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...