Saturday, May 19, 2018

*ஈழப் பிரச்சனை - அன்றும், இன்றும்....*







பாரதிராஜாக்கள்.....
----------------------
கடந்த 04-05-1986 அன்று மதுரை பாண்டியன் ஹோட்டலில் வாஜ்பாய், என்.டி. ராமாராவ், எச்.என். பகுகுணா, ஃபரூக் அப்துல்லா, ராமுவாலியா, ராசைய்யா, கே.பி.உன்னிகிருஷ்ணன், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்ற பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் என்னைப் போன்றோர்கள் எல்லாம் அப்போது முன்னின்று மாநாட்டின் ஏற்பாடு மற்றும் முக்கியப் பணிகளை செய்தோம். 

இந்நிகழ்வில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழைக்க நெடுமாறன் கேட்டுக் கொண்டதால் நேரில் சென்று அழைத்தேன். அப்போது ‘அண்ணே பயிற்சி பணிகள்  ஏற்கனவே திட்டமிட்டுவிட்டோம். அதனால் வர இயலவில்லை’என்றார். எனவே பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம், திலகர் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு (Conclave) துவங்கும் போது, திடீரென என்.டி.ராமாராவ் கலைஞரிடம் எல்.டி.டி.ஈ மற்றும் இலங்கை தமிழர் இயக்கங்களின் பெயர்களின் விரிவாக்கத்தை ஆங்கிலத்தில் கேட்டார். அருகில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த பழ.நெடுமாறன்,  என்னிடம் ‘ராதா இந்த அரங்கத்தில் இதை பற்றியான புரிதலுள்ள ஆட்கள் யாருமில்லை, நீங்களே எழுதிக் கொடுங்கள்’ என்று என்னிடம் கூறினார். 
நான் அனைத்திற்கும் விரிவாக்கம் எழுதி கொடுத்தேன். 

இந்த நிகழ்வில் பேராசிரியர்,கி. வீரமணி, முரசொலி மாறன், வைகோ, அய்யன அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்  சி.டி. தண்டபாணி, பொன் முத்துராமலிங்கம் மாநாட்டு அரங்கில் இருந்தனர்.

இந்த மாநாட்டில் பல அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் குறிப்பாக எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பின் தலைவர் பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம் ,திலகர், கலந்து கொண்டனர். டி.யு.எல்.எப் (TULF) சார்பில் ஏ. அமிர்தலிங்கம் மற்றும் எம். சிவசிதம்பரம், ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) சார்பில் எஸ். வரதராஜபெருமாள், ப்ரோடெக் (ProTEC) சார்பில் எஸ்.சி.சந்திரஹாசன்,ஏ.தங்கதுரை, ஆகியோர் பங்கேற்றனர். ஈரோஸ் (EROS) சார்பில் ஈ. ரத்தினசபாபதி, கோவை மகேசன், ஆகியோர் டி.ஈ.எல்.எப் (TELF) எம்.கே.ஈழவேந்தன் சார்பில் பங்கேற்றனர். டெலோ (TELO) சார்பாக மதி, தமிழ்நாடு தகவல் மையம், மதுரையின் சார்பில் மகேஸ்வரி வேலாயுதம், தமிழ்நாடு தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (TIRU) எஸ். விநாயகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (EPRLF) சார்பில் ரூபன், பிளாட் (PLOTE) அமைப்பின் சார்பில் முகுந்தன் மற்றும் ENDLF போன்ற பல்வேறு ஈழ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். மாநாடு தொடங்கியதற்கு பின்னர் புகைப்படக் கலைஞர்களை அனுமதிக்கவில்லை. அதனால் தாமதமாக வந்த பிளாட் பிரதிநிதிகளை படமெடுக்கவில்லை.

மாலையில் மதுரை ரேஸ் கோர்சில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வாஜ்பாய், என்.டி.ராமாராவ் உள்பட, அகில இந்திய தலைவர்கள் உரையாற்றினார்கள்.

நான் மாநாட்டு பிரதிநிதிகளுக்கு அறைகளை ஒதுக்குதல், மாநாட்டு பாஸ்கள் போன்ற நிர்வாகப் பணிகள் மட்டுமல்லாமல், மாநாட்டின் தீர்மானங்களை முரசொலி மாறனோடு சேர்ந்து ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருந்தேன். மாநாடு முடிந்தவுடன் தலைவர் கலைஞர் என்னை அழைத்து பாராட்டினார். 

இன்றைக்கு பேசுகின்ற பாரதிராஜா போன்றோர்கள் அன்று எங்கே இருந்தார்கள் என்று தெரியாது.  
இன்றைய பாரதிராஜாக்களின் முழக்கங்களும், சம்பாஷனைகளும் வாழ்க என்று தான் எங்களைப் போன்றவர்கள் சொல்ல வேண்டிய நிலை. 

வரலாற்று பக்கங்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா?
வாழ்வது சில காலம். அந்த காலத்தில் இதயசுத்தி, மனசாட்சியோடு பேசுவோம், கடமையாற்றுவோம், செயல்படுவோம். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை பொதுத் தளங்களில் அள்ளிவிடுகிறார்கள். வேறென்ன சொல்லமுடியும்....?
#MaduraiTeso Conference 
#TESO
#EELAM
#LTTE
#எல்டிடிஈ
#ஈழம்
#டெசோ
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

19-05-2018

படங்கள்.
1. மதுரை டெசோ மாநாட்டின் செய்தித்தாள் படங்கள்
2. பிரபாகரன், பத்மநாபா, பாலகுமார், சபாரத்தினம் 
3. பாரதிராஜாவும், டக்ளஸ் தேவானந்தா (அவரைப் பற்றி அனைவரும் அறிந்தது தான்).

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...