Monday, May 7, 2018

*நீட் நதி மூலம் *

*நீட் நதி மூலம் *
---------------------------
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்,உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் தொடர்புகள் .
————————————————-
'1992 காலகட்டத்தில் பிரதமர் பி .வி. நரசிம்ம ராவ் ஆட்சியில் புதிய பொருளாதார கொள்கை, தாராளமாயமாக்கள் என மத்திய அரசு புகுத்திய போது; 'உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதற்க்குதான் நீட் தேர்வு.

இந் நிலையில்,இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''
இவ்வாறு கூட்டாட்சியில்  நாடு சமூக நீதியை சிதைத்து கல்வியை வணிகமாகப் பார்க்கிறது.

இந்த நீட் கொடுமையின் நதிமூலம் தாராளமாயமாக்கள் கொள்கைதான். இதன் நீட்சிதான இன்றைய நீட் பிரச்சனை.ஆட்சிகள் மாறினாலும், அரசு பரிபாலணங்களால் இந்த கொடுமை தொடரத்தான் செய்கின்றது. காங்கிரஸைக் கேள்விக் கேட்டு ஆயிரம் கதைகள் சொல்லும் மோடி அரசு ஏன் இதை மாற்ற முயலவில்லை. புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் என்பதை எதிர்த்து தினமணி, Indian Express செய்தித்தாள்கள மற்றும் தமிழ் இந்தியா டூடே,ஜீனியர் விகடன் கட்டுரைகளும், சிறு பிரசுரங்களும் வெளியிட்டேன்.

நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் வந்த இந்த கேடிற்கு அடிப்படைக் காரணம் தவறான பொருளாதார அணுகுமுறைகளும், ஆலோசனைகளும் மற்றும் பரிந்துரைகள் தான். சந்திரசேகர் சில மாதங்கள் பிரதமராக இருந்த போது இந்தியாவின்இருப்பு  தங்கத்தை விமானத்தில் ஏற்றி அடகு வைத்தார். அதை இன்னமும் மீட்கவில்லை என்று நினைக்கிறேன். அதன் பிறகு பொருளாதாரத்தில் இந்தியா சின்னாபின்னாமானது. வளைகுடா நாடுகளின் பிரச்சனைகள், பெட்ரோலிய கச்சா என்ணெய் விலையேற்றம் என்ற சூழலில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் டங்கல் பரிந்துரைகளை ஏற்று உலகமயமாக்கலுக்கு சிகப்பு கம்பளத்தை இந்தியா விரித்தது. அந்த நோயின் விளைவுகளில் நீட் தேர்வும் ஒன்று. 

தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் நீட் ரணப்படுத்துகிறது. ஏற்கனவே தொலைபேசித் துறையில் அயல்நாட்டினர் புகுந்துவிட்டனர். நாட்டின் ரகசியங்கள் கபளீகரம் செய்யப்படும். அயல்நாட்டு செய்தித்தாள்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் ஏன் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவமனைகள் கூட இங்கு வந்து தொழில் நடத்தலாம் போன்ற வாய்ப்புகளை புதிய பொருளாதாரக் கொள்கை வழிவகுத்து தந்துவிட்டது. 

இதன் விளைவு தான் நாட்டின் இரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், பிரதான சின்னங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் என அனைத்தையும் தனியார்வசமாக்கும் கொள்கைகள் தாராளமயமாக்கல் என்ற நிலையில் தான் துவங்கியது. தீப்பெட்டி போன்ற சிறு தொழில்கள் கூட நசிந்து சின்னாபின்னமாகி அன்றாடம் கூலிக்கு போகும் தொழிலாளர்களின் வாழ்வை கூட அழித்துவிட்டது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்களை நடைமுறையில் கொண்ட துணைக் கண்டமாகும். இதில் நீட் போன்ற பிரச்சனைகளை நமக்கே தெரியாமல் கமுக்கமாக கொண்டு வந்ததை காலம் கடந்து அறிகின்றோம். கூட்டாட்சியில் இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் மத்திய அரசு நினைத்தால் தாங்கள் போகிற போக்கில் தாராளமாக என்ன வேண்டுமானாலும் முடிவெடுத்துக் கொள்ளலாம். மாநில அரசின் அனுமதியோ, அதற்கு தெரியப்படுத்துவது கூட இல்லாமல் டெல்லியில் அமர்ந்து கொண்டு கூட்டாட்சியின் எல்லா எதிர்வினைகளையும் செய்கின்றனர். இது தான் நீட் துவக்கத்தின் வரலாறாகும். இதை அன்றைக்கு சிலர்  போராடினார்கள். பலர் வேடிக்கை பார்த்தார்கள். அந்த விளைவின் காரணமாக இன்றைக்கு நாம் வேதனைப்படுகின்றோம். 

#நீட்_தேர்வு
#உலகமயமாக்கல்
#டங்கல்_பரிந்துரை
#நரசிம்மராவ்
#மோடி
#NEET
#MODI
#Narasimha_Rao
#Globalization
#Dangal_representation
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-05-2018
தொடரும் .....

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...