Tuesday, March 14, 2023

#கிரா_நூற்றாண்டு_விழா_திரு_வெங்கய்யா_நாயுடு_ஆற்றிய_உரை



————————————————————
நேற்று காலை (13.03.2023) கி.ரா. நூற்றாண்டு விழா நடந்தது. அதில் கி.ரா. நூறு இரண்டு தொகுதிகளும் வெளியிடப்பட்டன. குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு.வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்.  முதற்பிரதியை ஆர்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பெற்றுக் கொண்டார். தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எம்.சக்ரவர்த்தி, மரபின் மைந்தன் முத்தையா, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 










நிகழ்ச்சியில் வரவேற்புரையை நான் நிகழ்த்தினேன். அப்போது நான் பேசியதாவது:

“இந்திய குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை அவசரநிலைக் காலமான 1974 - இல் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் விசாகபட்டினத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். அவர் ஆந்திராவின் மூத்த தலைவரான தென்னட்டி விசுவநாதனுடன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது ஆங்கிலத்தில் வெங்கய்யா நாயுடு பேசியதைக் கேட்டேன். அவ்வளவு அருமையாக, ஏற்ற இறக்கங்களோடு பேசினார். என்னுடைய உறவினர்,தேனி என். ஆர். தியாகராஜனும் தென்னட்டி விசுவநாதனும் நண்பர்கள்.அன்றைக்கு ஆந்திரா, மலபார், தென் கர்நாடகம் இணைந்த சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினர்கள். 

அதற்குப் பிறகு வெங்கய்யா நாயுடு அவர்களைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் நெல்லூர், உதயகிரி ஆந்திர சட்டமன்றத் தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ்யசபை உறுப்பினரானார். இரண்டு முறை எம்.பி. ஆக கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் தலைவர். வாஜ்பாய் அரசில் யூனியன் கேபினட் அமைச்சரானார். 2014 - இல் மீண்டும் அமைச்சரானார். இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரானார்.
 
இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. கலாசாரங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் தாய்மொழியையும் அந்த மண்ணின் கலாசாரத்தையும் நேசித்துப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. ‘யாதும் ஊரே யாவரும்’ கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் சொல்மொழிக்கேற்ப, ‘இந்தியா பன்மையில் ஒருமை’ என்ற அடிப்படையை கவனமாக மனதில் ஏந்தி கடமைகளை ஆற்ற வேண்டும் என்பார் வெங்கய்யா நாயுடு. 
  
இந்திய அரசியல் சாசனத்தின் மூலப்பிரதியின் நகல்தான் நான் காட்டும் இந்த பெரிய புத்தகம். இந்தப் புத்தகத்தை வெங்கய்யா நாயுடு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது எல்லாம் அங்குள்ள பிரதமர், அதிபர்களுக்குப் பரிசாக அளிப்பார். இந்த அரசியல் சாசன மூலப் பிரதி பிரேம் பெஹாரி நரைன் ரைஸாதா என்பவர் இடாலிக் ஸ்டைல் எனும் வடிவான சாய்வு எழுத்தில் கைப்பட எழுதப்பட்டதாகும். அதில், வேதகாலக் காட்சிகள், ஹரப்பா, மொகஞ்சதாரா அகழ்வாய்வுகள் முதல் காந்தியின் தண்டி யாத்திரை வரை இந்தியாவின் வரலாற்றைச்  சொல்லும் பல்வேறு சம்பவங்கள் நந்தலால் போஸ் என்பவரால் கவினுறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அந்த ஓவியங்களின் அர்த்தங்களையும் குறியீடுகளையும் வெங்கய்யா நாயுடு வெளிநாட்டு பிரதமர்களிடம், அதிபர்களிடம் பேசும்போது, எடுத்துரைப்பார்.

 சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, இந்திய குடியரசின் துணைத்தலைவர் என்ற பொறுப்பை எட்டக் கூடிய அளவில் பொதுவாழ்வில் கடமைகளை ஆற்றி உயர்ந்தவர். தமிழ் மொழி இனிமையான மொழி என்று பல இடங்களில் அவர் குறிப்பிட்டுப் பேசியதும் உண்டு. 
 
தமிழக அரசியலில் தெலுங்கு பேசும் ஆளுமைகளான சேலம் வரதராஜுலு நாயுடு, ஜி.டி.நாயுடு, டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன், கோவை நரசிம்ம நாயுடு, தேனி என்.ஆர்.தியாகராஜன், சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு ஸ்ரீவில்லிபுத்தூர் ராவன்னா கினா, விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு என்ற நீண்ட பட்டியல் கொண்ட தமிழர்கள் உண்டு. இவர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்களின் பணிகளை ஆற்றி உள்ளனர்.  சேலம் பி.வரதராஜுலு நாயுடு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். அவருக்கு அடுத்து காரியதரிசியாக பெரியார் இருந்தார். ஆங்கில தினசரியான இந்தியன் எக்ஸ்பிரஸ்,  தமிழ்நாடு ஏடு என்ற தமிழ் தினசரி ஆகிய இரண்டு தினசரிகளையும் நடத்தியவர். காமராஜருக்கும் சி.சுப்பிரமணியத்துக்கும் முதலமைச்சர் தேர்தலில் போட்டி இருந்தது. அந்த தேர்தலில் காமராஜர் முதல்வர் என்ற நிலைக்கு உயர, சேலம் வரதராஜுலு நாயுடுதான் உதவினார். ராஜாஜி, வ.உ.சி, முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களுக்கு உற்ற நண்பராக இருந்தவர் சேலம் வரதராஜுலு நாயுடு. இப்படியான ஆளுமைகள் மொழி, பிராந்தியம் கடந்து தமிழ்நாடு நலன், தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.  
 அதைப் போன்றே வெங்கய்யா நாயுடு அவர்களும் ஆந்திராவில் பிறந்தாலும், அவர் தமிழ்நாட்டின், கேரளாவின், கர்நாடகத்தின், ஆந்திராவின் ஒட்டுமொத்த தலைவராகவே இருக்கிறார். அனைவராலும் போற்றப்படக் கூடிய Tallest leader ஆக இருக்கிறார். தமிழ்நாட்டின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவராகவே அவர் எப்போதும் இருந்திருக்கிறார். 

அவர் கையால் கி.ரா. நூறு நூல்களை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இந்த தொகுப்பு நூலைக் கொண்டு வருவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளையும், அதற்கான மெனக்கெடல்கள்; இலக்கியவாதிகள், படைப்பாளிகள், கி.ராவோடு பழகிய மனிதர்கள் என பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், துறை சார்ந்த குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு 160 கட்டுரைகள் இறுதியாக்கப்பட்டு கி.ரா.நூறு என்ற இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளதையும், இது கிராவுக்கு அளிக்கும் மரியாதை என்றேன். ‘’ 

விழாவில் குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு.வெங்கய்யா நாயுடு பேசியதாவது: 

“ அழகான தமிழில் தொடர்ந்து பேச எனக்கு ஆசைதான். பிறர் பேசும்போது நான் தமிழை நான் நன்றாகப் புரிந்து கொள்வேன். ஆனால் அந்த அளவுக்கு எனக்குத் தமிழில் பேசி பயிற்சி இல்லை. எனவே ஆங்கிலத்தில் பேசுகிறேன். 
 தமிழில் மிகப் பெரும் எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழாவுக்கு என்னை அழைத்துக் கலந்து கொள்ளச் செய்தமைக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்ற முழுப் பெயரைக் கொண்ட கி.ரா, தமிழ் பாரம்பரியத்தின், கலாசாரத்தின் காவலராக இருந்திருந்திருக்கிறார். தென்தமிழகத்தில் பிறந்த அவரின் இடைவிடாத படைப்பு முயற்சிகளினால் எல்லாராலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் வருகை தரு பேராசிரியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

மூன்று தலைமுறை வாசகர்களால் அவரது படைப்புகள் வாசிக்கப்பட்டு இருக்கின்றன. 
 தமிழ் இலக்கிய வெளியில் ஒரு புதிய வழித்தடத்தை உருவாக்கியவர் கி.ரா. வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டின் தெலுங்கு பேசும் மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தின் வாயிலாகப் பதிவு செய்த முன்னோடி அவர். அவருடைய கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் ஆகிய இரண்டு புதினங்களுமே ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த தெலுங்கு பேசும் கம்மவார் மக்களைப் பற்றியதாகும். 1991 - இல் அவருடைய கோபல்லபுரத்து மக்கள் நாவல் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது. 

தனது 30  வயதிலிருந்தே எழுதத் தொடங்கிய கி.ரா, தனது 93 ஆவது வயதிலும் தமிழ் இதழில் தொடர் எழுதினார். அவருடைய கரிசல் காட்டு கடுதாசி ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தது.  தனது 97 ஆவது வயதில் அண்டரெண்ட பட்சி என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். இப்படி வாழ்நாள் முழுவதும் ஒரு படைப்பாளியாகவே இருந்திருக்கிறார். 
 கரிசல் மண்ணின் பேச்சுத் தமிழை இலக்கிய தரத்துக்கு முதன்முதலாக உயர்த்திய பெருமை அவரையே சாரும். தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு இதுவாகும். ஆந்திராவின் ராயலசீமா பகுதியைப் போன்று தமிழகத்தில் உள்ள கரிசல் பூமியில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பயணத்தையும், கலாசாரத்தையும் பதிவு செய்யும் ஏராளமான சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். 

அவருடைய வேட்டி சிறுகதை சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் கிழிந்த வேட்டியைப் பற்றியதாகும். அந்த சுதந்திரப் போராட்ட வீரர் வேட்டி கிழிந்திருப்பதை பிறர் பார்க்க இயலாதவாறு மறைத்துப் பிடித்திருப்பார்.  இந்த சிறுகதை இந்திய ஆன்மாவை பற்றிய ஒரு பதிவாகும்.
 கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான அவர், இலக்கியம் படைப்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. கரிசல் வட்டார வழக்கு அகராதிஎன்பதையும்உருவாக்கியிருக்
கிறார். 

1960 களிலேயே பேச்சுத் தமிழை இலக்கியத் தமிழில் பதிவு செய்தவர். பொதுவாக புதினங்களில் வரும் உரையாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் பேச்சுத் தமிழை, கதை சொல்பவரின் விவரணை எழுத்துகளிலும் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் கி.ரா. அதன் பிறகு கதை சொல்லும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. சொலவடைகள், உவமைகள், மக்களின் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள் என எல்லாமும் கதையாசிரியாரின் சித்திரிப்புகளில் இடம் பெறத் தொடங்கின.
 
தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த கி.ரா. பின்னர் சி.நாராயணசாமி நாயுடுவின் விவசாயப் போராட்டங்களில் பங்கு பெற்றார். பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நூல்களின் தொகுப்பாசிரியர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் அப்போது அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கி.ராவுடன் பாளையக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த காமராஜரிடம் கி.ரா.வை அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
கோபல்ல கிராமம் நாவல் தமிழ் இலக்கியத்தில் இதுவரை வெளியிடப்படாத புதிய பரிமாணத்துடன் அன்றைக்கு இருந்ததனால் அதை நூலாக வெளியிட பலரும் தயங்கினார்கள். யாரும் அதை நூலாக வெளியிட முன் வரவில்லை. அன்றைக்கு சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். நூல்களையும் பதிப்பித்தார். அவரிடம் பேசி, கோபல்ல கிராமம் நாவலை முதன்முதலில் நூலாக வெளியிடச் செய்த பெருமை, சிட்டி மற்றும் வழக்கறிஞர்கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கே உரியது. 
  
கி.ரா இலக்கியத்தில் மட்டுமல்லாமல், இசையிலும் ஆர்வமுடையவராக இருந்திருக்கிறார். விளாத்திகுளம் சுவாமிகள், காருக்குறிச்சி அருணாசலம் ஆகியோருடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. 
 
இன்று காலம் மாறிவிட்டது. நாம் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நமது நேரத்தை வீணடிக்கிறோம். குறிப்பாக இளம் தலைமுறையினர் நமது முன்னோர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தெரிந்து கொள்வதற்கு இலக்கியங்கள் உதவும். கிராவின் படைப்புகள் கடந்த 200 ஆண்டுகால மக்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள் ஆகும். 

கடந்த காலத்தின் தொடர்ச்சிதான் நாம். 
மேற்கத்திய பண்பாட்டை பின்பற்றுவதினால் எந்தப் பயனும் இல்லை. நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தைத் தெரிந்து கொண்டு அதைப் பேணிப் பாதுகாக்க நமது முன்னோர்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு கி.ராவின் படைப்புகள் உதவும்.
நமது நவீன இலக்கியங்கள் நமது வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும். அப்படித் தேடிச் சென்றவர்தான் கி.ரா. இன்னும் நீண்ட நேரம் கி.ராவின் பெருமைகளைப் பற்றிப் பேச எனக்கு ஆசைதான். உடல்நிலை சிறிது சரியில்லாத காரணத்தால் பேச முடியவில்லை” என்றார் வெங்கைய நாயுடு.
****

இந்த மகத்தான விழாவில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மரபின் மைந்தன் முத்தையா, மூத்த பத்திரிகையாளர் மணா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். விழாவில் பேசிய பங்கேற்பாளர்கள் அனைவரும், நூற்றாண்டு காணும் கரிசல் இலக்கியத்தின் முதுபெரும் படைப்பாளியான கி.ராஜநாராயணனைப் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் சிலாகித்துப் பேசினர்.
நிகழ்வின் துவக்கத்தில் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணா, நகர்ப்புறத்தில் நடப்பட்ட கிராமப்புறத்து நாற்றுதான் கி.ரா. என்றும், கி.ரா தான் ஒரு படைப்பாளி என்று அறியப்படுவதைவிட நல்ல மனிதர் என்று அறிவைதையே அவர் விரும்பினார் என்ற தகவல்களையும் கூறினார். அதோடு கி.ராவின் முக்கிய படைப்புகளான கோபல்ல புரம், கோபல்லபுரத்து மக்கள் போன்ற நாவல்களை திரைப்படமாக எடுத்து ஆவணப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
கடும் உழைப்பாலும் பெரும் முயற்சியாலும் கொண்டுவரப்பட்ட இந்த தொகுப்பு நூல் குறித்துப் பேசிய தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், புகழ்பெற்ற ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய விமர்சகர்கள், திரைத்துறையைச் சார்ந்த ஆளுமைகள், ஆர்வலர்கள் கி.ராவின் படைப்புகள் குறித்தும் அவற்றின் பன்முகத்தன்மை குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகளாக இவை மிளிர்கின்றன என்றார்.




கி.ராவுக்காக கதைசொல்லி காலாண்டு இதழை இன்றுவரை தொடர்ந்து நடத்திவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனைப் பாராட்டிய வைத்தியநாதன், கி.ராவுக்கும் கே.எஸ்.ஆருக்குமான நெருக்கமான உறவை விரிவாக எடுத்துக் கூறினார். 
கி.ராவின் படைப்பிலக்கிய ஆளுமையைப் பற்றியும் அவரது எளிமையைப் பற்றியும் சிலாகித்துக் கூறிய வைத்தியநாதன், கிரா தன்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை ஆவணப்படுத்தாமல் போய்விட்டோமே என்று ஆதங்கப்பட்டார்.
கடந்த நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் எழுத்தால் இணைக்கும் பாலமாக இருந்தவர் கிரா என்றும், அதேபோல் கடந்த நூற்றாண்டுக்கும் இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக இருக்கும் அரசியல்வாதி வெங்கய்யா நாயுடு என்றும், கி.ரா எனும் ஆளுமையைப் பற்றிய தொகுப்பு நூல்களை வெங்கய்யா நாயுடு வெளியிடுவது மிகப்பொருத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கியத்தில் எப்படி கிராவை நீக்கிவிட்டுப் பார்க்க முடியாதோ அப்படித்தான் இந்திய அரசியல் வரலாற்றில் வெங்கய்யா நாயுடுவின் பங்களிப்பையும் தவிர்த்து விட்டுப் பார்க்க முடியாது என்றார் கே.வைத்தியாநாதன்.

https://youtu.be/QWTqzX9kMb4

https://youtu.be/QWTqzX9kMb4

https://youtu.be/kKpMs1AioCg

#கிரா_100

#Kira
#ki_ra_centenary_celebrations,
#ki_Rajanarayanan, 
#கி_ராஜநாராயணன்

#எம்_வெங்கையாநாயுடு,
#M_Venkaiah_Naidu,

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

ஆசிரியர் கதை சொல்லி, 
பொதிகை-பொருநை-கரிசல்.
14-3-2023

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...