Monday, April 10, 2023

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’

இன்றைய, 10-4-2023 தினமணியில் ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ என்ற எனது கட்டுரை….

#தமிழகத்தில்நாயக்க மன்னர்கள்ஆட்சி
#தமிழ்மண்ணோடும்மனதோடும்  இணைந்தவர்கள் !
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
————————————————————-
சேர, சோழ, பாண்டியர் மூவேந்தர் ஆட்சி 14- ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற பின் தமிழகத்தில் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி அமைந்தது. செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் ஒரு சில கால கட்டங்களில் உறையூர், திருக்காட்டுப்பள்ளி, திருநெல்வேலி வள்ளியூர் வரை நாயக்க மன்னர்கள் ஆட்சி அமைந்தாக தரவுகள் உண்டு
இவர்கள் ஆட்சி தமிழகத்தில் 1529 முதல் 1736 வரை 207  ஆண்டுகள் நடந்தது.  இதைக் குறித்து சத்தியநாத அய்யரும், தமிழறிஞர் அ.கி.பரந்தாமனாரும் எழுதியுள்ளனர். அ.கி.பரந்தாமனார் தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக இதைக் குறித்து ஆய்வு செய்தார். இப்படி பல வரலாற்றுநூல்கள் நாயக்க் மன்னர்கள் ஆட்சிக் காலம் பற்றி எவ்விதஎதிர்மறை விமர்சனங்களும் இன்றி எழுதப்பட்டுள்ளன.
மதுரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சியம்மன் கோவில்தான். மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே அது ஒரே நேரத்தில் முழுமையாகக் கட்டப்பட்ட ஒன்றுதான் என்பதாகவே நாம் நினைப்போம். அதுவும் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவே நினைப்போம். ஆனால் உண்மையில் நாம் இன்றைக்குப் பார்க்கும் மீனாட்சி அம்மன் கோவில் பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.  
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் கிழக்குக் கோபுரமே மிகப் பழமையானது. முதலாம் சடாவர்மன் குலசேகரபாண்டியனின் (கி.பி.1191) காலத்தில் கட்டப்பட்டது. நான்காம் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1303- 1324) திருப்பணி செய்து திருத்தப்பட்டு உள்ளது. மேற்கு கோபுரம்  பராக்கிரம பாண்டியன் காலத்தில்கட்டப்பட்டுள்ளது. வடக்கு கோபுரம் கி.பி.1570 இல் முதலாம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டுள்ளது.  
இவை தவிர, கோவிலுக்கு வெளியே உள்ள புதுமண்டபம், கோவிலுக்கு உள்ள வீர வசந்தராயர் மண்டபம், பேச்சியக்கா மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் என உள்ள பல மண்டபங்கள் எல்லாம் பல காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன.  
மதுரை மீனாட்‌சி அம்மன் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. 1029 தூண்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆயிரங்கால் மண்டபம் கி.பி.1570 அளவில் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.கிருஷ்ணப்ப நாயக்கரின் பிரதிநிதியாகச் செயல்பட்டுஆயிரங்கால் மண்டபம் கட்ட முனைப்போடு செயல்பட்டவர்அரியநாத முதலியார்.
விஜயநகர மன்னர்களின் நிர்வாகியாக இருந்த  சின்னப்ப நாயக்கர் என்பவர் சுந்தரேஸ்வர் திருக்கோவிலில் நாயக்க மண்டபம், சின்னீசுவரம் போன்றவற்றை உருவாக்கியிருக்கிறார். சித்ர கோபுரத்திலும் பல திருப்பணிகளைச் செய்து வலுப்படுத்தியுள்ளார். 
சொக்கநாதர் மற்றும் அங்கயற்கண்ணி அம்மையாரின் சன்னதிக்கு எதிரில் உள்ள பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றுக்குப் பொன் வேய்ந்து திருமலை நாயக்கர் மன்னர் ஒளி கூட்டியுள்ளார். மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள கிளிக் கூண்டு மண்டபம் சொக்கநாதர் மற்றும் மீனாட்சியம்மன் சன்னதியிலுள்ள பலிபீடம், கொடிக்கம்பம், மீனாட்சியம்மன் கோயிலுக்குஎதிரிலுள்ள புதுமண்டபமாகிய வசந்த மண்டபம், மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள முக்குறுணி விநாயகர், மதுரை மீனாட்சியம்மன் சன்னதி, சொக்கநாதர் சன்னதிகளில் உள்ள ஆறுகால் பீடப்பகுயில் உள்ள துவார பாலகர் மற்றும் துவார பாலகியர் செப்புத்திருமேனிகள் போன்றவை திருமலை நாயக்கர் மன்னரால் வழங்கப்பட்டவை. கள்ளழகர் திருவிழாவின்போது, அழகர் தேனூர் வைகைக் கரையில் தீர்த்தமாடச் சென்று கொண்டிருந்த நிகழ்வை மதுரை வைகைக் கரையில் தீர்த்தமாடும் நிகழ்வாக மாற்றி அமைத்தவர் திருமலை நாயக்கரே. அழகர் கோவிலில் நாட்டிய மண்டபம் ஒன்றையும் கட்டியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு முன்னால் இராணி மங்கம்மாளின் அமைச்சர் காமாட்டம் அச்சராயரால் கட்டப்பட்டுள்ள நகரா மண்டபம்  உள்ளது.
கி.பி.1711 - இல் விஜயரங்க சொக்கநாதரால் திருக்கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் மேற்குப் புறத்தில் வசந்த மண்டபம் எனும் ராணிமங்கம்மாள் மண்டபம்உள்ளது.  அதன் விதானத்தில் எண்திசைக்காவலர்களோடு மீனாட்சியம்மன் தனித்தனியே போரிடும் காட்சிகளும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணக் காட்சியும், மீனாட்சியம்மன் இராணி மங்கம்மாள் செங்கோல் வழங்கும் காட்சியும் மிக அழகாக ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
இவை தவிர, திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள பெரிய கோபுரம், அழகர்கோவிலில் உள்ள கருவறை, விமானம் எல்லாமும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்படி மதுரை மண்ணோடும்,மக்களின் ஆன்மிக உணர்வுடன் இரண்டற கலந்துவிட்டவர்களாகவே விஜயநகரப் பேரரசு கால மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.
வடக்கில் அமைந்த மொகலாயர் ராஜ்ஜியம் தெற்கே பரவவிடாமல் தடுத்தது விஜயநகர சாம்ராஜ்யம். மாலிக்காபூர் தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்த போது, அதனை எதிர்கொண்டவர்கள் விஜயநகர சாம்ராஜ்யமும், தமிழகத்தில் இருந்த நாயக்க மன்னர்களும் ஆவார்கள்.
முதலாம் ஹரிஹரர் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் ஆனைக்குந்திக்கு எதிரில் தலைநகரை நிறுவி 18.04.1336 அன்று முடிசூட்டிக் கொண்டார். விஜயநகரப் பேரரசின் தொடக்கமாக அமைந்த இந்த முடிசூடும் நிகழ்ச்சிக்குப் பின் கம்பணர், புக்கர், மாரப்பர், முத்தப்பர் என்ற தனது நான்கு சகோதரர்களை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தார். விஜயநகரப் பேரரசில் சங்கம மரபு, சாளுவமரபு, துளுவ மரபு, ஆரவீடு மரபு என்ற நான்கு மரபினர் ஆட்சி செய்தனர். 
முதலாம் ஹரிஹரர் 1336 முதல் 1357 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். 1357 முதல் 1377 வரை முதலாம் புக்கர் விஜயநகர வேந்தராக ஆட்சி புரிந்தார்.  இவருடைய ஆட்சிக் காலத்தில் நெல்லூர், கடப்பை, பெனுகொண்டா, பெல்லாரி, அனந்தப்பூர், மைசூரின் வடபகுதி, கோவா, தமிழ்நாடு இவருடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாக இருந்தன. இவருடைய மகன் குமார கம்பணர் கொங்குநாட்டைக் கைப்பற்றிய பிறகு, மதுரையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் திருச்சி ஸ்ரீ ரங்கத்துக்கு அருகில் உள்ள சமயபுரத்தில் மதுரை சுல்தானான முபாரக் ஷாவை 1371 - இல் தோற்கடித்தார். மதுரைப் பகுதி விஜயநகர பேரரசுவுக்கு உட்பட்ட பகுதியாகியது. மதுரைப் பகுதியை வென்ற குமார கம்பணர் மதுரைப் பகுதியின் முதல் மகா மண்டலேசுவராக  (அரசுப் பிரதிநிதியாக ) நியமிக்கப்பட்டார். 
இரண்டாம் தேவராயரது ஆட்சிக் காலத்தில் மதுரைப் பகுதி, ராமநாதபுரம் பகுதி ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பு வாணாதிராயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசுவநாதநாயக்கரின் ஆட்சிக் காலத்தில் மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயமுத்தூர், ஈரோடு மாவட்டப்பகுதிகளும் திருவாங்கூரின் ஒரு பகுதியும் மதுரை நாயக்கரின் ஆட்சிக்குட்பட்டபகுதிகளாக இருந்துள்ளன. இங்ஙனம் பரந்து விரிந்திருந்த மதுரை நாயக்கராட்சிப் பகுதியை திறம்பட நிர்வகிக்க  72பாளையங்களாக பிரிக்கப்பட்டன. 
விஜயநகரப் பேரரசின் மேலாதிக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, மதுரையில் தனிஉரிமை பெற்ற நாயக்கராட்சியை நிறுவ திருமலை நாயக்கர் முயற்சி செய்தார். திருமலை நாயக்கரின் மரணத்துக்குப் பின் அவருடைய மகன் இரண்டாம் முத்து வீரப்பன் பதவிக்கு வந்தார். அதற்குப் பிறகு அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் மதுரை மன்னரானார். அவர் ராணி மங்கம்மாளின் கணவர். அடுத்துராணி மங்கம்மாளின் ஆட்சி. அவருடைய பேரன் விஜயரங்கசொக்கநாதர் ஆட்சி, அவருடைய மனைவி மீனாட்சிஅரசியின் ஆட்சி என ஒருகட்டத்தில் நாயக்கர் ஆட்சிமுடிவுக்கு வருகிறது. 
தெலுங்கு மொழி பேசுபவர்களாக விஜயநகரப் பேரரசின்அரசர்களும், மதுரை நாயக்க மன்னர்களும் இருந்தாலும்,  அவர்கள் தமிழ் மண்ணோடும், தமிழ் மக்களின் ஆன்மீகஉணர்வோடும் கலந்துவிட்டவர்களாகவேஇருந்திருக்கிறார்கள்.
கிருஷ்ண தேவராயர் 1509 முதல் 1529 வரை முப்பதாண்டுகள் விஜயநகரப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆண்டாளின் வரலாற்றை ஆமுக்தமால்யதா என்ற பெயரில் தெலுங்கில் எழுதினார். காளஹஸ்தி, நாகலாபுரம்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற பல ஊர்களுக்குச் சென்று அந்த ஊர்களில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு இருக்கிறார்.  மதுரை அழகர் கோவிலுக்குச் சென்று அங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்து அழகரை வழிபட்டு இருக்கிறார்.
வாணாதிராயர்கள் விஜயநகர ஆட்சியில் செல்வாக்குமிக்க அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள். இவர்கள்  தீவிரவைணவ பக்தர்கள். அழகர்கோவிலைச் சுற்றி வலிமையானகோட்டையைக் கட்டியவர்கள் இவர்களே. வாணாதிராயர்கள்அழகர் கோவிலிலும் திருவில்லிப்புத்தூர் கோவிலிலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
விஜயநகர மன்னர் சதாசிவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய படைத்தலைவரான விட்டலதேவராயரின் கீழ் ஓர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தவர் திம்மப்ப நாயக்கர். இவர் கி.பி.1551 –இல் மதுரையில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலை முற்றிலுமாக திருத்திக் கட்டியிருக்கிறார். கோவில் வழிபாட்டுக்கான செலவுகளுக்கான நிதியையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
மாவலி வாணாதிராயர்கள் தீவிரமான வைணவ பக்தர்களாக இருப்பினும் சிவன் கோயில்களுக்கும் நல்ல ஆதரவு காட்டியுள்ளனர். இவர்களால் திருவில்லிபுத்தூர், காளையார் கோயில், அழகர்கோயில், மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகிய பல கோயில்கள் திருப்பணி கண்டுள்ளன. இன்று சோமசந்த விமானம் என்று பெயர் பெற்றுள்ள அழகர் கோயில் விமானம் உறங்காவில்லிதாசன் வாணதிராயனால் கி.பி. 1464 - இல் கட்டுவிக்கப்பட்டது.
மதுரையை 17 ஆம்  நூற்றாண்டு திருமலை சவுரு நாயுனு அய்யிலுகாரு என்ற  திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலம் முக்கிய காலகட்டம் ஆகும். திருமலை நாயக்கர் காலத்தில் அரண்மனையாக இருந்த கட்டடம், இப்போது திருமலைநாயக்கர் மஹால் என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளையும், கலை ஆர்வலர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. இந்த அரண்மனையைக் கட்ட மண் எடுத்த இடமே வண்டியூர் தெப்பக்குளம் ஆகிவிட்டது. மதுரையில்மாரியம்மன் கோவிலுக்கு தெற்கே உள்ள தெப்பக்குளம் திருமலை நாயக்கர் காலத்தில் கி.பி.1635 - இல் உருவாக்கப்பட்டதாகும். 88 ஆயிரத்து 258 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்தக் குளத்துக்குத் தேவையான தண்ணீர் வைகை ஆற்றில் இருந்து வருவதற்காக வாய்க்கால் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தில் தான் மதுரை இறைவன் சுந்தரேசுவரின் தெப்பத் திருவிழா திருமலை நாயக்கரின் பிறந்த நட்சத்திரமான தைப்பூச நாளில் இன்றளவும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள இராணி மங்கம்மாளால் கட்டப்பட்டுள்ள முன் மண்டபத்திலுள்ள தூண் ஒன்றில் முருகன் தேவயானைத் திருமணக் காட்சி சிற்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மதுரையில் இன்று காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வரும் தமுக்கம் கட்டடம், கோடைகாலத் தங்குமிடப் பயன்பாட்டிற் காகவும், வீர விளையாட்டுகளைக் கண்டுகளிப்பதற்காகவும் இராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட ஒன்று என்பர். மீனாட்சியம்மன் கோயில் அருகிலுள்ள மத்திய சந்தையிலுள்ள கட்டடம், மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளிக் கட்டடம்.இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் பழைய பணியகக் கட்டடம் போன்றவை இராணிமங்கம்மாள் காலக் கட்டுமானங்களாகும்.
தஞ்சை நாயக்கர் ஆட்சியில் செவ்வப்பநாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், ராமபத்ர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்று தஞ்சையில் ஆட்சியில் இருந்த அரசர்களின் பெயர்களாகும். இவர்களும் தஞ்சை மாவட்டத்தில் சைவத்தையும் வைணவத்தையும் போற்றினர். செவ்வப்பநாயக்கர் காலத்தில்தான் நாகப்பட்டினத்துக்கு போர்த்துக்கீசியர் வந்தனர். இவர்களும் நீர்ப்பாசனத் திட்டங்கள், மடங்கள்,  அமைத்ததுண்டு. தஞ்சை கோட்டையும் செவ்வப்ப ஏரியும் இன்றைக்கும் பேர் சொல்கின்றன.
விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் இந்த மண்ணின்தெய்வங்களோடு ஒன்றிவிட்டவர்களாகஇருந்திருக்கின்றனர். என்றபோதிலும் பிற மதத்தைச்சேர்ந்தவர்களை மதிக்கக் கூடியவர்களாகவும்இருந்திருக்கின்றனர்.
கூன் பாண்டியன் காலத்தில் மதுரையில் கோரிப்பாளையம் தர்காவிற்கு நிலங்கள் வழங்கப்பட்டு இருந்தன. பின்பு அந்த நிலம் அரசால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அதற்கான ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, நிலங்களைத் திரும்பவும் தர்காவுக்கேவீரப்ப நாயக்கர்  அளித்ததை தர்கா கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. 
வீரப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்காக பெர்ணான்டஸ் என்ற போர்த்துக்கீசிய பாதிரியார் வந்திருக்கிறார். ராபர்ட் டி நொபிலி என்ற ரோமானிய கத்தோலிக்கத் துறவி, மதுரைக்கு வந்து இந்து துறவிகள் போல துவராடை அணிந்து சைவ உணவுப் பழக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்து சமயச் சடங்குகள் சிலவற்றை ரோமானிய கத்தோலிக்கச் சடங்குகளில் இணைத்துக் கொண்டு கிறித்தவ சமயத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கருக்கும் விஜயநகர வேந்தர் இரண்டாம் வேங்கடருக்கும் அடங்கியவராகவே நடந்துள்ளார்.
ராணி மங்கம்மாள் கிறித்தவ சமயத்திற்கும், பள்ளிவாசல்களுக்கும் கொடை வழங்கி தனது சமயநல்லிணக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும் இந்துமதத்தின் அடிப்படைகளை விட்டுத் தராமல்வாழ்ந்திருக்கிறார். 
கோவில் கட்டுமானங்கள், திருப்பணி செய்தல் என்றஅளவில் மட்டும் நின்றுவிடாமல், சாலை அமைப்பது போன்றபணிகளிலும் நாயக்கர் கால மன்னர்கள்ஈடுபட்டிருக்கின்றனர். இராணி மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் கால்வாய் செப்பனிடப்பட்டுள்ளது. மங்கம்மாள் சாலை மலை மேலே சோலை என்று மக்கள் மகிழ்ந்து போற்றுமளவிற்குச் சிறந்த சாலைகளை அமைத்துள்ளார். சாலை ஓரங்களில் நிழல்தரும் மரங்களை நடச் செய்திருக்கிறார். 
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அன்னசத்திரங்கள் மட்டுமல்லாமல், பயணிகளுக்கு இரவு நேரம் தங்கவும்,உணவு கிடைக்கவும் கல் மண்டபங்கள் இவர்களால் அமைக்கப்பட்டன. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்களால் அமைக்கப்பட்ட கல்மண்டபங்கள் சில பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்துவிட்டன. இன்றைக்கும் ஒரு சில கல் மண்டபங்களைப்  பார்த்தால் அவற்றின் பலமான கட்டுமானங்களைத் தெரிந்து கொள்ள முடியும். 
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் குளங்கள், ஏரிகள் நிரம்ப வெட்டினர். வெட்டியது மட்டுமல்ல, அதில் நீரைத் தேக்கிவைத்தனர். நீர்ப்பாசனத்துக்காக நீரை வெளியேற்றமதகுகள், கழிங்கல்கள் ஆகியவற்றை அறிவியல்ரீதியாக ஏற்படுத்தினர். அன்றைய ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம் இவர்கள் வெட்டிய ஏரிகளால்தான் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.
தமிழில் நிறைய இலக்கியங்கள் நாயக்கர் மன்னர்களின்ஆட்சிக் காலத்தில் உருவாகியிருக்கின்றன. சங்கத் தமிழ்ஏடுகளைப் பாதுகாத்து அவற்றைப் பொதுவெளியில்வைத்திருக்கின்றனர். பரஞ்சோதி முனிவரின்திருவிளையாடல் புராணம், போற்றிக் கலிவெண்பா, மதுரைபதிற்றுப்பந்தாதி போன்ற இலக்கியங்கள் உருவாகின.கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மை குறம்,  மதுரைக் கலம்பகம், , சகலகலாவல்லி மாலை, நான்மணி மாலை, நீதிநெறி விளக்கம் ஆகியநூல்களை குமரகுருபரர் அளித்துள்ளார். திருவரங்ககலம்பகம், திருவரங்க அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கட அந்தாதி போன்ற பக்தி இலக்கியங்கள்உருவாகிய காலமும் இதுதான். 
திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த சுப்ரதீபக்கவிராயர் விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் காதல் ஆகியஇலக்கியங்களைப் படைத்திருக்கிறார். குற்றாலக்குறவஞ்சி, குற்றாலத் தலபுராணம், பிரபுலிங்க லீலை, திருக்காளத்திப் புராணம், அழகர் கிள்ளைவிடு தூதுஆகியவை மட்டுமல்ல, இராபர்ட் டி நொபிலியின்மந்திரமாலை, ஞானோபதேசம், ஏசுநாதர் சரித்திரம், தமிழ்போர்த்துக்கீசிய அகராதி எல்லாம் நாயக்கர் காலத்தின்படைப்புகளே. வீரமாமுனிவரின் தேம்பாவணி, பரமார்த்தகுருகதை, தொன்னூல் விளக்கம், திருவாலூர்வெண்கவிப்பா, கித்தோரியம்மன் அம்மானை போன்றவையும்மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் முகிழ்த்தபடைப்புகளாகும். 
நீதி பரிபாலனம், மக்கள் நலன் என்பதை பிரதானமாகக்கொண்டு செயல்பட்டவர்களாக நாயக்க மன்னர்கள்இருந்திருக்கின்றனர். தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்டிருந்தாலும், விஜயநகரப் பேரரசின் தமிழக நாயக்கமன்னர்கள் தமிழ் மண்ணோடும், மனதோடும்கலந்துவிட்டதற்கான ஆதாரங்களாகவே இன்றைக்கு உள்ளகோவில்களும், சாலைகளும், கட்டங்களும், இலக்கியங்களும் பிற தரவுகளும் உள்ளன என்றசொல்லலாம்.
 
கட்டுரையாளர்: அரசியலாளர்
 
 

#தமிழகத்தில்_நாயக்க_மன்னர்கள்_ஆட்சி
#மதுரை #தஞ்சை #செஞ்சி
#Nalckar_kings_of_Tamilnadu #Madurai
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #K_S_Radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன், #தமிழக_அரசியல்,

#KSR_Post
10-4-2023.


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...