Tuesday, April 18, 2023

மதுதண்டவதே! *Madhu Dandavate*

#மாமனிதர்
மதுதண்டவதே!
*Madhu Dandavate*
—————————————
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

 மது தண்டவதே மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமத்நகரில் 1924 ஜனவரி 21 - இல் பிறந்தார். மும்பை ராயல் அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல பெரிய கல்லூரிகளில் வேலை வாய்ப்பு கிடைத்த போதிலும்மும்பையின் சித்தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்து பின்னர் இயற்பியல்துறைக்கு தலைமை தாங்கினார். காரணம் அந்த கல்லூரி டாக்டர். அம்பேத்கரின் நிர்வாகத் தலைமையின் கீழ் இயங்கி வந்தது. 25 ஆண்டு காலம் அந்த கல்லூரியில் மது தண்டவதே பணியாற்றினார்.  



 1942 இல், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாடெங்கும் பற்றிப் போது படர்ந்து கொண்டிருந்தபோது, 28 வயதான இளைஞரான மது தண்டவதே அவர்களும், தன்னை அந்த வேள்வியில் இணைத்துக் கொண்டார். அதன் மூலம் அவருடையபொதுவாழ்க்கை தொடங்கியது. 
1955 - இல் போர்த்துக்கீசிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோவா விடுதலைப் போரிலும் பங்கேற்றார். லோகியோ உடன் கோவாவில் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டார். தென்னகத்தில் இன்றைய மொழிவாரி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டு நவம்பர்மாதத்தில்தான் ஏற்பட்டன. அதற்கு முன்பு நடைபெற்ற சம்யுக்த மகாராஷ்டிரக் கிளர்ச்சியிலும் மது தண்டவதேபங்கேற்றார். 
 
கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றபோதுஅவர் சித்தார்த்தா கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அரசியல் போராட்டத்தில் தான்ஈடுபடுவதால், கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படவாய்ப்பு உள்ளது என்பதால், ஆசிரியர் பணியைராஜினாமா செய்ய கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம்கொடுத்தார். ஆனால் நிர்வாகத் தலைமையில் இருந்தஅம்பேத்கர் மது தண்டவதேயை வேலையில் இருந்துவிடுவிக்க விரும்பவில்லை. போராட்டம் முடிந்துதிரும்பி வந்த பிறகு வேலையில் சேர்ந்து பணிசெய்யட்டும் என்று கூறிவிட்டார்.  
ஆச்சார்யா நரேந்திர தேவா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையின் கீழ் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவருடன் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் களத்தில் இருந்தார். அதன் பிறகு ஜனதா கட்சி, ஜனதா தளம் என்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். நாட்டில் ஆரோக்கியமான அரசியல் மறைந்துவிட்ட ஒரு சூழலில் - நாட்டின் அரசியல் வியாபார அரசியல், தரகுஅரசியலாக மாறிவிட்ட சூழலில் - 1991 தேர்தல் தோல்விக்குப் பின் மெல்ல, மெல்ல அரசியல் உலகில் இருந்து விலக ஆரம்பித்தார். 
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 25 இல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தபோது,நாடெங்கும் எண்ணற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டார்கள். மது தண்டவதே 1975  ஜூன் முதல் 1977 மார்ச் வரை பெங்களூரு  மத்திய சிறையில்மூத்த சோசலிசத் தலைவரான மிருணாள் கோருடன் அடைக்கப்பட்டார். அப்போது பெங்களூரு சிறையில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மிருணாள் கோர் சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார். மன மற்றும் உடல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதைக் குறித்து மது தண்டவதே சிறையில் இருந்தபோது அன்றைய பிரதமரான இந்திராகாந்திக்கு 14 ஜனவரி 1976 தேதி கடிதம் எழுதினார். 
அந்த கடிதத்தில், "நான் இந்தக் கடிதத்தின் விளைவுகளைப் பற்றி நான் நன்கு அறிந்திருக்கிறேன். இந்த தகவல்தொடர்பு மூலம், நான் உங்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் மற்றும் என்னுடைய காவல் நீடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை என்னால் நன்றாக கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இருப்பினும், அதைப் பற்றி நான் குறைந்தபட்சமே கவலைப்படுகிறேன். நான் இந்தக் கடிதத்தை எழுதும் சிறை முற்றம் எனது கல்லறையாக மாறினாலும் நான் தயங்காமல் இருப்பேன்’’ என்று எழுதியுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து கணவன் – மனைவி இருவரும் அரசியல் கைதிகளாகச் சிறையில்அடைக்கப்பட்டால் இருவரையும் ஒரே சிறையில்அடைப்பது நடைமுறையில் இருந்து வந்தது. இந்திரா காந்தி காலத்தில் அந்த நடைமுறை மீறப்பட்டது. அவசரநிலைக் காலத்தில் மது தண்டவதே பெங்களூரு மத்திய சிறையிலும்,  அவருடைய மனைவி பிரமிளா எரவாடா மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  பின்னர் மது தண்டவதே மட்டும் காவலரின் பாதுகாப்புடன், பெங்களூவிலிருந்து எரவடா சிறையில் உள்ள மனைவியைப் பார்க்கச் செல்லலாம் என்று நீதிமன்றம் பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அந்த நிபந்தனைகளை மது தண்டவதேயின் மனைவி பிரமிளாவிடம் சொன்னபோது அவர், கோபமடைந்திருக்கிறார். “அவசரநிலைப் பிரகடனம் முடிவுக்கு வரும் வரை நாம் உயிருடன் இருந்தால், நாம் ஜெயிலிலேயே தனித்தனியாக உயிருடன் இருப்போம். அதற்குப் பின் நாம் சந்திப்போம். அதற்கு முன்பே நாம் இறந்துவிட்டால், வேறு வேறு சிறைகளில் நாம் இருவரும் தனித்தனியாகச் சாவோம் ” என்று மதுதண்டவதேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.  
சிறையில் இருந்தபோது அவர்கள் எழுதிக் கொண்ட200 கடிதங்களில், இசை, புத்தகங்கள், கவிதை, தத்துவம் ஆகியவற்றைப் பற்றி விவாதித்தனர். இருவரும் தங்கள் மகனின் எதிர்காலம் குறித்தும் கடிதங்களில் எழுதினர். 
பெங்களூரு சிறையில் இருந்தபோது மது தண்டவதே மார்க்ஸும் காந்தியும் என்ற நூலை எழுதினார். இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தின்எதிர்காலம், சோசலிசக் கொள்கைகள் மற்றும்பரிமாணம் போன்ற நூல்களும் அவரால்எழுதப்பட்டவை.
மகாராஷ்டிராவின் கொங்கனில் உள்ள ராஜாப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 முதல் 1991வரையில் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் மது தண்டவதே.  
அவசரகால சட்டம் நீக்கப்பட்டு 1977 - இல் அமைந்த காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசான மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசில் 1977 மார்ச் முதல் 1979 ஜூலை வரை இரயில்வே துறைஅமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். வி பி சிங் அவர்கள் தலைமையிலான தேசிய முன்னணி அரசில், 1989 டிசம்பர் முதல் 1990 நவம்பர் வரை நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.  
ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேதுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மது தண்டவதே கொண்டு வந்தார். 1977 ஆம் ஆண்டு வரை, இந்திய இரயில்வேயின் முதல் வகுப்பு பெட்டி வசதியான படுக்கைகளைக் கொண்டிருந்தது. ரயில்களின் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் உள்ள படுக்கைகள் அப்போது முதுகை உறுத்தும் மரக்கட்டைப் படுக்கைகளாகவே இருந்தன. அவற்றின்மீது இரண்டு அங்குல கனத்துக்கு ஃபோம்மெத்தையைப் பொருத்தும் பணி இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. 
அறுபதுக்கும் மேற்பட்ட பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்கள் மது தண்டவதே ரயில்வே அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்ல, ரயில் பயணிகளின் அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்தார்.
அவர் ஆட்சிக் காலத்தில் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில்களும் மேம்படுத்தப்பட்டன. இரயில்வே துறையில் பயணச் சீட்டுகள் முன் பதிவில் கணினி முறையைக் கொண்டு வந்தார். அதன் விளைவாக பயணச் சீட்டு முன் பதிவுமுறைவெளிப்படைத் தன்மை உடையதாக ஆனது. இதனால்ஊழல் பெருமளவில் குறைந்தது.
அவர் அமைச்சராக இருந்தபோது 3 ஆயிரம் கேண்டீன் ஊழியர்கள் உட்பட ரயில்வே துறையில் பணி செய்த பல தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக ஆக்கப்பட்டனர். 18 – 20 ஆண்டுகளாக ரயில்வேதுறையில் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வந்த 400 அதிகாரிகளை உடனே நிரந்தரப் பணி செய்யும் அதிகாரிகளாக மது தண்டவதே மாற்றினார். 1974 இல் நடைபெற்ற ரயில்வே பணியாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது வேலை நீக்கம் செய்யப்பட்ட 26 ஆயிரம் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டார். மது தண்டவதேதான் கொங்கன் இரயில்வே திட்டத்திற்கு வழி கோலியவர்.
ஜனதா கட்சித் தலைவர்களான அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணன் இரா.செழியன், ஆந்திராவைச் சேர்ந்த பாபுல் ரெட்டி ஆகியோர் 1983 இல் யோடு மது தண்டவதேயைச் சந்திக்க அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களையும் என்னையும் அழைத்துச் சென்றது உண்டு. ஈழத்தமிழர்பிரச்னை ரணப்பட்ட அந்த காலத்தில் அது குறித்து மது தண்டவதேயிடம் நாங்கள் எடுத்துச் சொன்னதெல்லாம் உண்டு. அப்படித்தான் மது தண்டவதேயுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின் காங்கிரஸ் இயக்கத்தில் டெல்லியில் எனக்கு முகவரியாக இருந்த மத்திய முன்னாள் அணைச்சர் கே,.பி.உன்னிகிருஷ்ணன் மூலமும் மது தண்டவதேயுடன் எனக்கு பழக வாய்ப்புக் கிடைத்தது. 
தேசிய முன்னணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை மது தண்டவதே மார்ச் 19, 1990 - இல் சமர்ப்பித்தார். நாட்டின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து கடன்வாங்காமல் இருக்க வேண்டும் என்றார். எவ்வளவு கடினமாக இருந்தாலும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று கூறியமது தண்டவதே, அதற்கு  உரிய நடவடிக்கைகளைமேற்கொண்டார். 
வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அவர் நிதியமைச்சராகப் பணியாற்றியபோது, 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை விலக்கி கொண்டார்.இந்த தங்க கட்டுப்பாட்டுச் சட்டம் 1962 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்த ஒன்றாகும். ஒவ்வொரு 10 கிராமுக்கும் 250 ரூபாய் வரி கட்டி, நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கத்தை இறக்குமதி செய்யலாம்என்ற நிலை ஏற்பட்டது. இதனால் 1991- இல்அதிகாரபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் என்று எதுவுமே இல்லாத நிலை மாறியது. 1992 - இல் 110 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு முன்பு முறையற்ற வகைகளில் தங்கம் விற்பனை நடைபெற்றதனால் அரசுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இருந்தது. தங்க கட்டுப்பாட்டுச் சட்டத்தை விலக்கிக் கொண்டதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்தது.
மது தண்டவதே நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் அமைச்சகத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராக என்னை அவர் நியமித்தார்.  
காதி, கிராமப்புறத் தொழில்கள், சிறு தொழில்கள் நசிந்து விடாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று அவர் உணர்ந்திருந்தார். 
மது தண்டவதே மத்திய திட்ட குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.  கீழ்நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். மேலே இருப்பவரை கீழே தள்ளுவது அல்ல, கீழே இருப்பவரை மேல் நிலைக்கு கொண்டு வருவது தான் எனது இலக்கு என்று அவர் அறிவித்தார்.  
கட்சித்தாவல் தடைச் சட்டம் கொண்டு வந்த போது கருத்து மாறுபடும் உரிமை விதியை சட்டத்தில்சேர்த்திட மது தண்டவதே முயற்சி செய்தார். அரசியல் சார்பற்ற எல்ஐசி நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவராகத் தனது வாழ்நாளின் கடைசி 24 ஆண்டுகள் பதவி வகித்தார்.
அவர் அமைச்சராக இருந்தாலும் அவர் வீட்டில் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றே ஒன்றுதான் இருக்கும். காட்சிக்கு எளியவர். வெள்ளை முழுக்கைச் சட்டையும், பேண்ட்ஸும் இவருடைய உடை அடையாளங்கள். 
இவருடைய மனைவி பிரமீளா மது தண்டவதே ஆழ்ந்த வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரைச் சுற்றி ஏராளமான புத்தகங்கள் இருக்கும். இவர் வீட்டுக்குச் சென்றால் வித்தியாசமாக இஞ்சி டீ கொடுப்பது வாடிக்கை. 
மது தண்டவதே தினமும் அத்தனை தினசரிகளையும் படித்துவிட்டு, குறிப்பெடுத்துக் கொள்வார். இவருடைய வரவேற்பறையில் தினசரிகளை ஒழுங்காக அடுக்கி அவற்றை வித்தியாசமாக டீப்பாயில் வைத்திருப்பது நம்மை ஈர்க்கும். 
பல நண்பர்கள் இவரை மது என்றே அழைப்பார்கள். இரா. செழியனை இவர் செல்லமாக இரா என்று அழைப்பார்.
தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனைக் கருதியேஉழைத்த மாமனிதரான மது தண்டவதே தனது 81ஆவது வயதில் - 2005 ஆம் ஆண்டு நவம்பர்
12 ஆம் நாள் - இயற்கை எய்தினார். இறப்புக்குப் பிறகு தனது உடல், மும்பை ஜே.ஜே. மருத்துவமனை மாணவர்களின் பரிசோதனைக்கு வழங்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்து உடல் தானம் செய்திருக்கிறார்.   
அண்ணல் காந்தி, ஜே.பி., கிருபளானி, லோகியோவுடைய தாக்கங்கள் மது தண்டவதேயின் எழுத்தில் பேச்சில் தென்படும். இப்படிப்பட்ட அரசியல் ஆளுமைகளை பொதுவெளியில் இன்றைக்கு தேடிப்பார்க்கிறேன். தற்போது எங்கும் தென்படவில்லை.பிஜு பட்நாயக்கின் புதல்வர் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஓரளவு தென்படுகிறார். 
ஜவகர்லால் நேருவின் வீட்டில் மேஜையில்வைக்கப்பட்டிருந்த ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதையைப்போல மது தண்டவதேயின் வீட்டில் கைஃபிஆஸ்மியின் இந்த கவிதை வரிகள்வைக்கப்பட்டிருக்கும்.
A wave of anger
Blew away the lamps
But, yes, one remained;
Its name is hope, and it flickers on…..

#Madhu_Dandavate
#மதுதண்டவதே

 #KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#ksrpost
18-4-2023.


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...