Sunday, January 3, 2016

விருதுநகர் செந்திக் குமார நாடார் காலேஜ் 1947 ல் துவங்கிய மலரும் நினைவுகள்

இன்றைக்கு பழைய கோப்புகளை பார்க்கும்பொழுது விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் காலேஜ், 1947 ல் துவங்கியபோது ஆரம்ப விழா அழைப்பிதழ் கண்ணில் பட்டது. எவ்வளவோ நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. வானம்பார்த்த கரிசல் மண்ணில் கல்லூரிக்கு படிக்கச் செல்ல வேண்டுமென்றால் பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி, திருநெல்வேலி இந்துக் கல்லூரி, தூத்துக்குடி வா.உ.சி. கல்லூரி, கோவில்பட்டி வேங்கடசாமி நாயுடு கல்லூரி அதற்கு அடுத்தபடியாக விருது நகர் வி.எச்.என்.எஸ்.என். என்று அழைக்கப்படுகின்ற விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரிக்குத்தான் செல்ல வேண்டும்.

1960களின் இறுதி மற்றும் 1970களின் துவக்கத்தில் அரசியல் பணிகள் காரணமாக இந்த கல்லூரிகளுக்கு எல்லாம் காலாற சுற்றியதுண்டு. எத்தனை போராட்டங்கள். குறிப்பாக விருதுநகர் செந்திக்குமார நாடார் காலேஜ், விரிந்த பரப்பில் அதிகமான கட்டிட வசதிகளோடு அருப்புக்கோட்டை சாலையில் சோலைகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த கல்லூரிக்கு நுழைவாயிலிலிருந்து கல்லூரி கட்டிடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் நெடிய சாலையின் இரண்டு புறம் மரங்களும், விளையாட்டுத் திடல்களும், கலை அரங்கம் என்று சொல்லக்கூடிய ஆடிட்டோரியமும் உண்டு.

இங்குள்ள விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் ருசியானது. குறிப்பாக ஆட்டுக் கறியான சுக்கா வறுவலும், பரோட்டாவும் இந்தக் கல்லூரிக்கு பிரசித்தம். அது மட்டுமல்லாமல் விடுதியில் வாழை இலையோடு சைவ சாப்பாடு பரிமாறும்போது சாம்பாருக்குப் பிறகு, வழங்கப்பட்ட ரசம் அவ்வளவு ருசியாக இருக்கும். மாணவர்கள் அதை கையில் பிடித்து சப்புக் கொட்டிக் கொண்டு குடிப்பது உண்டு. அங்கு பயிலும் மாணவர்களின் விருந்தினராக அந்த விடுதியில் பலமுறை உணவு உண்டுள்ளேன். இது ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் தொட்டிலாகும். சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அண்ணன் பெ. சீனிவாசன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, ச. அமுதன் என்ற முக்கிய தளகர்த்தர்கள் எல்லாம் இங்கு மாணவர்கள். ச. அமுதன் தலைவர் கலைஞர் அவர்களை இந்த கல்லூரிக்கு அழைத்துச் சென்று மாணவர் பேரவையை துவக்கி வைக்க செய்தார். இது நடந்தது 1965க்கு முன்னால் உள்ள காலகட்டம்.

இங்கு பழைய காங்கிரஸ், பிற்காலத்தில் ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற மாணவர் இயக்கங்களும் வலுவாக இருந்தன. பேராசிரியரின் சகோதரர் பேராசிரியர். திருமாறன் இக்கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருந்தார். இரசாயனத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கலாசாமி இன்றைக்கும் நினைவில் உள்ளார். தங்கராஜ் நீண்டகாலம் முதல்வராக இருந்தார்.

திருநெல்வேலியிலிருந்தோ, கோவில்பட்டியிலிருந்தோ மதுரைக்கு பயணிக்கும்போது, பல சமயம் இந்த கல்லூரிக்கு சென்றுவிட்டுதான் பயணத்தை தொடர்ந்ததுண்டு. காலச் சக்கரங்கள் வேகமாக செல்லலாம். ஆனால் நினைவுகள் இன்றைக்கும் பசுமையாக இருக்கின்றன. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, கல்லூரியில் படித்து பிரிந்து பல்வேறு பணிகளில் அமர்ந்து ஓய்வு பெறும்போதுதான் கல்லூரி வாழ்க்கையை அசைபோடுவது என்பது நிகரில்லாத மனதிற்கு அலாதியான ஒரு போக்காகும். எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த சிந்தனைகள் வரும்போது மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். நான் பாளையங்கோட்டையிலும், மதுரையிலும், டெல்லியிலும், சென்னையிலும், கல்லூரி மாணவனாக படித்தாலும் அந்த நினைவுகளோடு நான் தென் மாவட்ட மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கல்லூரிகளான மாயவரம் ஏ.வி.சி. கல்லூரி, தஞ்சாவூர் சரபோஜி, புஷ்பம் கல்லூரி, திருச்சி செயிண்ட் ஜோசப், நேஷ்னல் கல்லூரி, ஜமால் முகமது, மதுரை, மற்றும் கோவை கல்லூரிகளில் அரசியலில் மாணவர் அமைப்பை உருவாக்க லாரிகளிலும், கிடைக்கின்ற வாகனத்தில் தொற்றிக்கொண்டு அலைந்த தேசாந்திரியான வாழ்க்கை இன்னொரு தடவை கிடைக்குமா என்பது சந்தேகமே. அதை நான் பெற்ற பேராகவே நினைக்கின்றேன்.

இந்த நிலையில் விருது நகர் வி.எச்.எஸ்.என். கல்லூரி 1970 காலகட்டங்களிலேயே முதுகலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள் வந்துவிட்டன. ஒரு பல்கலைக் கழகம் போல அமைந்த கல்லூரி. அமைதியான ரம்யமான ஒரு சூழல்.

1974ல் வெள்ளி விழா நிகழ்ச்சி தேதி நினைவில்லை. காலை 10 மணிக்கு துவங்கி நள்ளிரவைத் தாண்டி விமரிசையாக நடந்தது இன்றைக்கும் நினைவிருக்கின்றது. அதை அந்த விழாவை முடித்துவிட்டு விடியற்காலை 4 மணிக்கு விருது நகர் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தை பிடித்து பாளையங்கோட்டைக்கு சென்றது இன்றைக்கும் நினைவிருக்கிறது. இக்கல்லூரியில் வி.செல்வராஜ், க.அய்யனார், திருவேங்கடசாமி, இராமகிருஷ்ணன், படையாளி முகமது, எத்திராஜ் போன்ற பல நண்பர்கள் இங்கு படித்தவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உலக நாடுகளில் உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுகளும் பெற்றுவிட்டனர். அவர்களை சந்திக்கும்போது நாங்கள் பேசிக் கொள்வது கல்லூரியை விட கல்லூரியில் சாப்பிட்ட உணவை தான். இளமை வாழ்க்கையின் தவம். அதை நேர் வழியில் அனுபவித்தால் அதன் சுகமே தனி. எத்தனை இனிமையான திரைப்பாடல்கள். விருது நகரில் சென்ட்ரல், முத்து, என பல திரையரங்குகளில் பார்த்த திரைப்படங்கள் இது எல்லாம் விருதுநகர். இரண்டு நாட்களுக்கு முன்னால் விருதுநகர் பரோட்டாவை சாப்பிட வேண்டாம் என்று நான் பதிவிட்டாலும், 43 ஆண்டுகளுக்கு முன்னால் விருதுநகரில் பிய்த்து போட்ட பரோட்டாவையும் எம்டி சால்னாவையும், சிக்கன் லெக் பீசையும் 17 - 20 வயதுகளில் உண்டது எல்லாம் இன்றைக்கு நினைத்து பார்க்க முடியுமா? இதை இன்றைய இளைஞர்களிடம் சொன்னால், அவர்கள்பீட்சாவையும், பர்கரையும் சாப்பிட்டுவிட்டு இதற்கு ஈடு உண்டா என்று கேட்கிறார்கள். இதெல்லாம் கால மாற்றம். என்றைக்கும் பழைமை எங்களைப் போன்றோருக்கு இனிமையாக செல்கின்ற நினைவுகள் எங்களுடைய பணிகளில் ஏற்படும் கவலைகளைப் போக்கும் மாமருந்தாகும்.

இதே கல்லூரியில் 1996 பொதுச் தேர்தலில் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, இந்த கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது நான் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

இந்தக் கல்லூரியின் ஆரம்ப விழா விருதுநகரில் 11.8.1947 காலை 10 மணி அளவில் செந்திக் குமார நாடார் காலேஜ் என்ற பெயரில் விருது நகர் ரயில்வே நிலையத்திற்கு கிழக்கே பேராலி ரோட்டில் மதுரை மில்ஸ் கம்பெனி வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்ட கலெக்டர் விவேகானந்த மூர்த்தி தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி பிரின்சிபால் ராவ் பகதூர் பி.வி. நாராயாணசாமி நாயுடு பங்கேற்க இந்த கல்லூரி துவங்கப்பட்டது. இதன் அழைப்பிதழை இக்கல்லூரியின் போஷகர் ராவ்பகதூர் மு.ச.பெ. செந்திக்குமார நாடார் ஊ.பு.அ. சவுந்திரபாண்டியனார், ராவ்சாகிப் பெ.சி. சிதம்பர நாடார், வே.வ. இராமசாமி, மு.செ. பெரியசாமி நாடார், கல்லூரியின் முதல் முதல்வர் ஜோசப் பிராங்கோ, எம்.ஏ.எல்.டி. ஆகியோர் இணைந்து அழைத்த அழைப்பிதழ் விருதுநகர் சதானந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அப்போது வண்ணங்கள் இல்லாமல் வெள்ளை அட்டையில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் இதோ.


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...