Thursday, January 14, 2016

தைப் புத்தாண்டு - பொங்கல் திருநாள்

தை புத்தாண்டு பிறந்து பொங்கல் நாளின் போது விவசாய அறுவடைகள் முடிந்துவிடும்.  விவசாயிகள் அகம் மகிழ்ந்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள் என்று கொண்டாடி கிராமங்களேமகிழ்ச்சியில் தளைக்கும். எனக்கு நினைவு தெரிந்தவரை கிராமத்தில் சிலம்பாட்டம், கபடி, பின்பு 1960களில் கைப் பந்து (volley ball) என்று விளையாட்டுப் போட்டிகள் நடப்பது வாடிக்கை.

ஞாயிறைப் போற்றும் வகையில், அதாவது சூரியன் உதிப்பது உத்ராயணம், தஷ்ணாயணம் என அழைக்கப்படுவது உண்டு.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயணம் என்றும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தஷ்ணாயணம் என சூரியன் இடம் மாறுவதை காலங்களில் வகைப்படுத்துவார்கள். உத்ராயணம் காலத்தில் தை பிறக்கிறது.  நாம் தைப் பொங்கல் கொண்டாடுவதைப் போல ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் மற்றும் வட புல மாநிலங்களிலும் மகர சங்கராந்தி என்று அறுவடை நாளை கொண்டாடுவது உண்டு.

இப்படி இந்தியா முழுவதும் தை மாதத்தை கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தை பிறப்பதை விமரிசையாகவும், எதையோ எதிர்பார்த்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர். எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறோம்.

எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து 1950, 1960 களிலிருந்து 1990 வரை கிராமங்களில் தைப் பொங்கல் ஒரு உற்சாகத்தோடு, உறவுகளோடு கொண்டாடுவதை பார்த்துள்ளேன்.  தொலைக்காட்சிகள் வந்தவுடன் அந்த கொண்டாட்டங்கள் கொஞ்சம் அடங்கிவிட்டன.  1993 லிருந்து தொலைக்காட்சிகளின் முன்பு உட்கார்ந்துகொண்டு பொங்கலை வீட்டின் உள்ளேயே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். தெருக்களிலும், கிராமத்தின் மந்தைகளிலும் கொண்டாடிய பொங்கல் வீட்டுக்குள் அடங்கிவிட்டது.

அதிகாலையில் எழுந்து பள்ளிப் பருவத்திலேயே கன்னிப் பிள்ளை, வேப்ப இலைகளை அடங்கிய கொப்புகளை எடுத்துக்கொண்டு வயற்காட்டிலும், தோட்டத்திலும் மற்றும் வானம் பார்த்த மானாவாரி நிலங்களிலும் சூரிய உதயத்திற்கு முன், விடியற்காலை வைகறைப் பொழுதில் இந்த கன்னிப் பிள்ளை, வேப்ப இலைகளை அந்த விவசாய நிலங்களில் கட்டுவதுண்டு.  இதற்கு பொழி என்று அழைப்பதுண்டு. விடியற்காலை இருட்டில் பேட்டரி லைட்டோடு பின் பனிக் காலத்தில் பனித்துளிகள் உடம்பில் படும் வண்ணம் கட்டியதெல்லாம் இன்றைக்கு மலரும் நினைவுகளாக உள்ளன.  பொழியை கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது சூரிய உதயம் ஏழு மணிக்கு வீட்டின் வெட்டவெளியில் கரும்பு, மஞ்சள், மாவிலை போன்றவற்றோடு பொங்கல் இடுவதை பார்க்க ரம்மியமாக இருக்கும்.


பொங்கல் என்பது கிராமம், விவசாயம், தொன்மை சார்ந்த திருவிழா ஆகும். இது சூரியனை வணங்கும் வழிபாடு என்று கூட கூறலாம். இது உழவுக்கும், வேளாண்மைக்கும் எடுக்கின்ற திருவிழா. இந்த பழமை வாய்ந்த ஏர்ப்பிடிப்பு கிராம விழா தற்போது சடங்காகவும், சம்பிரதாயமாகவும் ஆகிவிட்டது.

தீபாவளியைப் போல புத்தாடையில் மஞ்சள் தடவி, விடியற்காலை குளித்து பொங்கல் இடும்போது ஏற்படுகின்ற அதிர்வலைகள் இன்றைய காலக்கட்டத்தில் ஏற்படவில்லையே என்று மனதிற்குள் எண்ண ஓட்டமும் இருக்கிறது.

பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையையொட்டி வீட்டிற்கு வெள்ளையடித்து, பழையதை ஒதுக்கி, மறுநாள் பொங்கலுக்காக, வீட்டையும் மாட்டுத் தொழுவத்தையும் ஒரு தொண்டாக சுத்தப்படுத்துவதும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளங்களிலோ, ஊரணிகளிலோ குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணமிட்டு, மாலை ஆறரை மணி அளவில் மாட்டுப் பொங்கலுக்கு பொங்கலிட்டு, படையலிட்டு பூஜைகள் செய்வதெல்லாம் உண்டு. அந்த பூஜைகள் இரவு ஏழு, எட்டு மணி வரை நீடிக்கும். ஏரி கலப்பைகளையும், மாட்டு வண்டிகளையும், நன்றாக துடைத்து சுத்தப்படுத்துவதும் உண்டு.

இவையெல்லாம் படிப்படியாக குறைந்து, ஏதோ பொங்கல் என்று இன்றைக்கு நடப்பது மனதளவில் சோபிக்கவில்லை.  இருப்பினும் கால மாற்றம், பரிணாம மாற்றங்கள், உலக மயமாக்கல், தொலைக்காட்சிகள் என்ற நிலையில் பழைமையிலிருந்து இன்றைய பொங்கல் மாறுபட்டுவிட்டது. தமிழர்கள் தைத் திருநாளை பாரம்பரியமாக கொண்டாடுவது முக்கிய நிகழ்வாக நாட்டில் நடப்பதை எக்காலத்திலும்அழியாது என்ற நம்பிக்கை உள்ளது.

சில கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முடிந்து கரி நாள் அன்று நாட்டுப்புற தெய்வங்களான சிறுவீட்டம்மன் போன்ற தெய்வங்களின் உருவங்களை கோவில்பட்டி போன்ற நகரங்களில் செய்து கிராமத்தில் வைத்து இரண்டு வாரங்கள் முறையான பூஜைகள் செய்து இரண்டு வாரத்திற்குப் பிறகு, பெரிய கொண்டாட்டமாக, திருவிழாவாக, அந்த நாட்டுப்புற தெய்வங்களை ஊர் முழுக்க சுற்றி எடுத்து வந்து குளத்தில் கரைப்பது உண்டு. அன்றைக்குப் பெரும் திருவிழா. அந்த திருவிழாவில் கரகாட்டம், வில்லிசை, நாடகம், பாவைக் கூத்து போன்ற நிகழ்வுகளும் கிராமத்தில் விடிய விடிய நடக்கும்.  இதுவும் தைப் பொங்கலின் தொடர்ச்சி ஆகும்.

இப்படியான தொன்மையான நாகரிகத்தின் பழக்க வழக்கங்களை இந்த ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது.

தைப் பிறந்தால் ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு. விவசாயிகளுக்கு தைப் பிறந்தால் வீட்டில் திருமணங்களோ, புது வீடு கட்டினால், புகுமனை விழாவோ என்பது நடத்துவது ஒரு வாடிக்கை.  அதனால்தான் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதுண்டு.

கவிஞர் கண்ணதாசனோடு நெருங்கிப் பழகியவன். அவர், "நம்பிக்கை நம்பிக்கை" என்பார்.  அவர் சொல்கின்ற விதத்தைப் பார்த்தால், மனதளவில் ஒரு தைரியத்தை கொடுக்கும்.  அதைப் போல தை மாதம் நெருங்கிவிட்டால், தை பிறக்குது, எல்லாம் சரியாகிவிடும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை. இந்த நம்பிக்கையில்தான் இந்த மானிட வாழ்வே உள்ளது. அதற்கு அச்சாரமாக திகழ்வதுதான், தைப் பொங்கல் திருநாள், உழவர் திருநாள். நாம் அனைவரும் போற்றுவோம்.

நம்பிக்கையில் நம்பிக்கையோடு பயணிப்போம். போலிகளை ஒதுக்குவோம். நல்லவற்றை அடையாளம் காண்போம்.  அதற்கு தைத் திருநாள் வழி செய்யும்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...