Wednesday, January 6, 2016

கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்

இன்றைய (06-01-2016) தினமணி நாளிதழில் “கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது பத்தி.

கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்

உலகில் இன்றைக்கு மூத்த மொழியாக பழக்கத்தில் இருப்பது கன்னித் தமிழும், சீனமும், அரபும் ஆகும். இதோடு பண்டைய மொழிகளான லத்தீன், ஹிப்ரு போன்ற பல மொழிகள் அழிந்துவிட்டன.

தமிழ்மொழிக்கென்றே தனியான பல கீர்த்திகள் உள்ளன. அது வேறு எந்த மொழிக்கும் இல்லை. தமிழில் மண் சார்ந்த வட்டார இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், திராவிட இலக்கியங்கள், பொதுவுடைமை இலக்கியங்கள், தேசிய  சிந்தனை கொண்ட இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண்ணிய இலக்கியங்கள், தொழிலாளர் இலக்கியங்கள், இசை இலக்கியங்கள் என பலவகைப் படுத்தலாம். இலக்கணமும், இலக்கியமும் தமிழில் செழுமையானது. அக, புற இலக்கியங்கள் தமிழில் மட்டும் உள்ளன. தமிழின் இலக்கிய வரலாறு நெடிய வரலாறாகும்.

இலக்கியம் என்பது ஒன்றுதான். உலகம் எங்கும் ஆயிரக்கணக்கான மொழிகளில் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அதுபோல தமிழ்மொழியிலும் காலகாலமாக இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இன்றும் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்மொழியிலேயே கரிசல் இலக்கியம், கொங்கு மண்டல இலக்கியம், தஞ்சை வட்டார இலக்கியம், மதுரை மண் இலக்கியம், நாஞ்சில் நாட்டு இலக்கியம், நெல்லைச் சீமை இலக்கியம், பழைய ஆற்காட்டு பகுதி இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்தலாமே?

நம் முன்னோர்கள் தமிழ் இலக்கியத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்தார்கள். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் வாழ்கிற மக்களின் வாழ்வியல் அனுபவமும், கடலும் கடல்சார்ந்த இடத்தில் வாழ்கிற மக்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஒன்றாகாது. எனவே தான் நம் முன்னோர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தார்கள்.

பனிப்பிரதேசத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் எழுதுவதும் இலக்கியம்தான். ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்கிற மற்றோர் எழுத்தாளன் எழுதுவதும் இலக்கியம் தான். புவியியல் அமைப்புப்படி இந்த இலக்கியங்களை நாம் வகைப்படுத்த வேண்டியதிருக்கின்றது.

பல பன்முகத் தன்மை கொண்ட தமிழ் இலக்கியத்தில் வட்டார மண் சார்ந்த இலக்கியம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றது. அந்த வகையில் தெற்குச் சீமையில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தேனி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களின் தென்பகுதியில் உள்ள கரிசல் மண்ணில் உதித்த இலக்கியங்கள் விவசாயிகளுடைய பாடுகளையும், ரணங்களையும் வெளிப்படுத்துகின்றன. அக்னி வெயிலிலும், கந்தக பூமியிலும் அங்குள்ள மக்கள் சந்திக்கின்ற வதைகள், மகிழ்ச்சிகளை அந்த மண் சார்ந்த மொழி நடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில், கரிசல் நிலப்பகுதி தனித்த புவியியல் அமைப்பைக் கொண்டதாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் அனுபவத்தில் இருந்து கரிசல் நிலப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல் மாறுபட்டதாக உள்ளது. காவிரி தீரவாசத்தில் அங்குள்ள மக்கள் கலைகளிலும், இசையிலும் நாட்டமுள்ளவர்கள். அம்மண்ணில் உதித்த தி.ஜானகிராமன், மௌனி போன்றவர்கள் அந்த மண் வாசனையோடு தஞ்சை மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அதிகமாக சொல்லியதுண்டு. ஆனால் கரிசல் பகுதியின் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் போராட்ட வாழ்க்கைதான்.

பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே கரிசல் நிலம் திகழ்கிறது. இங்கு மழையை நம்பி மக்கள் விவசாயம் செய்து வாழ்கிறார்கள். இப்பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை. சிவகாசியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் தீப்பெட்டித் தொழிலும், பட்டாசு தயாரிப்பு மற்றும் அச்சுத் தொழிலும் இன்றைய காலக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் மண்ணையும் மழையையும் நம்பி வாழ்கின்ற இப்பகுதி மக்களின் வாழ்வியல் அனுபவம் என்பது தனித்தன்மையானதாகும். கடுமையான உழைப்பும், மன உறுதியும் கொண்ட இப்பகுதி விவசாயிகள் கடந்து வந்த பாதை மிகவும் கடுமையானது. இன்றும் பெரிய அளவில் இப்பகுதியில் விவசாய புரட்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. இத்தகைய வாழ்வியல் சூழ்நிலையில் வாழ்ந்து வருகிற மக்களின் அனுபவத்தை இங்கு வாழ்ந்த எழுத்தாளர்கள் தன் எழுத்தில் பதிவு செய்தார்கள்.

இந்த வட்டாரத்தில்தான் விவசாயிகளின் போராட்டங்கள் 1970களின் துவக்கத்தில் ஆரம்பித்து அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகளினுடைய புரட்சியே இங்கு நடந்தது. கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சை நிமிர்த்தி போராடிய விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். குறிப்பாக கோவில்பட்டி மெயின் ரோட்டிலும் என்னுடைய கிராமம் குறிஞ்சாகுளத்தில் 7 விவசாயிகளும் விவசாயப் போராட்டத்தில் காவல்துறையினால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அது மட்டுமல்லாமல் சங்கரன்கோவில் அருகே உள்ள பநவடலி சத்திரம், இராஜபாளையம் அருகே உள்ள சிமெண்ட் ஆலை இருக்கின்ற ஆலங்குளத்திலும் துப்பாக்கி சூடுகள் நடைபெற்றன.  வானம் பார்த்த பூமியில் வறட்சியின் காரணமாக இயற்கையாகவே போராடும் மன திடத்தை விவசாயிகள் பிறப்பிலேயே பெற்றிருந்தனர். இது ஒரு வீர பூமி. ஏனென்றால் இப்பகுதியிலிருந்து இராணுவத்தில் அதிகமானவர்கள் பணியாற்றியதுண்டு.

இப்படிப்பட்டவர்களின் வாழ்வியலை சொல்வதுதான் கரிசல் இலக்கியம்.

கரிசல் பூமியில் பிறந்து வாழ்வில் சாதனைகள் படைத்த அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத் துறையினர், சிற்பிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் அது ஒரு தனி நூலாகிவிடும்.

கரிசல் இலக்கியம் என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் என்ற குக்கிராமத்தில் பிறந்த கி. ராஜநாராயணன் அவர்கள். தான் வாழும் கரிசல் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வியலில் உள்ள இன்ப துன்பங்களை, அழகுணர்ச்சிகளை, இறையியலை, கலை நுகர்வை, உணவுப் பழக்கவழக்கங்களை, கலாச்சார கூறுகளைத் தன்னுடைய படைப்பில் மிக நுட்பமாகப் பதிவு செய்தார். அதுவரை எழுதப்பட்டு வந்த தமிழ் சிறுகதைகளின் தடத்தில் இருந்து மாறி புதிய வட்டார மொழிநடையில், புதிய கதைக்களத்தில் புதிய கருத்துக்களை மையமாகக் கொண்டு கி.ரா. சிறுகதைகளைப் படைத்தார். அப்போதுதான் மண் சார்ந்த வட்டார இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. எனவே தமிழ் இலக்கிய உலகமே கி.ரா.வின் படைப்புகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது.

கி.ரா. பிறந்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கு. அழகிரிசாமி. இருவரும் தோழர்கள். இவர்கள் நட்பின் ஆழத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கி.ரா. அவர்களுக்கு கு.அழகிரிசாமி அவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்தாலே தெரியும். இது கு.அ. வின் கடிதங்கள் என்று நூலாக வெளியாகியுள்ளது. ஆனால் கு. அழகிரிசாமி கரிசல் இலக்கியம் என்ற முத்திரையுடன் தன் கதைகளைப் படைக்கவில்லை. கி.ரா. தான் கரிசல் இலக்கியம் என்ற கோட்பாட்டை முதன்முதலாக தமிழ் இலக்கியத்தில் முன்வைத்த முன்னத்தி ஏராக இருக்கிறார்.

முதன்முதலாக கரிசல் நிலம் பகுதியில் வாழும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை எல்லாம் 1980இல் தொகுத்து கரிசல் சிறுகதைகள் என்று கி.ரா.வே நூலாக வெளியிட்டார்.

கி.ரா. கரிசல் வட்டாரத்தில் நிலவும் வாய்மொழிக் கதைகளையும் எழுத்தில் பதிவு செய்தார். கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி கி.ரா.வின் சாதனைகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் வட்டார வழக்குச் சொல்லகராதி என்பது முதன்முதலாக கி.ரா. தயாரித்து அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா 1982ல் வெளியிட்டார்.

கி.ரா. இப்படி ஒரு இயக்கமாகச் செயல்பட்டால் கரிசல் எழுத்தாளர்களே அவரை முன்னிறுத்தி ஏர் என்றும், கரிசல் இலக்கிய கீதாரி என்றும் அழைப்பதுண்டு. கி.ரா. தான் மட்டும் எழுதியதோடு, கரிசல் பகுதியில் எழுதிக்கொண்டிருக்கும் சக எழுத்தாளர்களையும் எழுதும்படி தூண்டினார். இந்தத் தரவை கி.ரா.வின் நான்கு தொகுப்புக் கடிதங்களில் படித்தாலே புரியும்.

கி.ரா.வுக்கு அடுத்து பூமணியைக் குறிப்பிட வேண்டும். ஒரே கிராமத்தைச் சேர்ந்த கி.ரா.வும், கு.அழகிரிசாமியும் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றதைப் போலவே, பூமணியும் சாகித்ய அகாதமி விருது பெற்றார். பூமணியின் அஞ்ஞாடி என்ற நூல் அவ்விருதைப் பெற்றுத் தந்தது. சூரங்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். போத்தையா. இவர் ஒரு சிறந்த நாட்டுப்புற கலைகளின் களப்பணியாளர். ஆசிரியராகப் இருந்த எஸ்.எஸ். போத்தையா அப்பகுதியில் வாய்மொழியாய் உலவிய நாட்டுப்புறக் கதைகளையும் பாடல்களையும் சொலவடைகளையும், வழக்குச் சொற்களையும் சேகரித்துள்ளார். கி.ரா. அவர்கள் வழக்குச்சொல் அகராதி என்ற நூலைத் தொகுத்தபோது, எஸ்.எஸ். போத்தையா அவர்கள் வழக்குச்சொற்களை சேகரித்து உதவினார். இவர் கம்மவார் வாழ்வியல் சடங்குகளையும் தொகுத்துள்ளார். இவரின் நண்பர் சூரங்குடி ஆ. முத்தானந்தமும், கரிசல் இலக்கியத்தில் தன்னுடைய சுவடுகளை பதித்தவர்.

சுப.கோ. நாராயணசாமியும், வீர.வேலுச்சாமியும், கி.ரா.வுக்குப் பல நாட்டுப்புறக் கதைகளைச் சிறுவர் நாடோடிக்கதைகள், வழக்குச் சொல் அகராதிக்கான கலைச்சொற்களையும் சேகரித்துக் கொடுத்துள்ளார்கள். வீர. வேலுச்சாமியின் நிறங்கள் என்ற சிறுகதைத் தொகுதி கரிசல் இலக்கியத்தின் ஒரு மைல் கல் ஆகும். தெக்கத்தி ஆத்மாக்கள் என்ற குணச்சித்திரத் படைப்பை வழங்கிய ப.செயப்பிரகாசத்தின் சிறுகதைகள் கரிசல் மக்களின் வாழ்வியலை கலைநயத்துடன் சித்தரிப்பவை. 1965இல் மொழிப்போரில் பங்கேற்றவர். இவர்களைத் தொடர்ந்து கரிசல் இலக்கியத்தைத் தலைநிமிர வைத்தவர்களில் தனுஷ்கோடி ராமசாமிக்கும்  சோ.தர்மருக்கும் முக்கியப் பங்குண்டு. இவர்கள் ஒரு கால கட்டம். இதை அடுத்த காலக்கட்டத்தில் வேல ராமமூர்த்தியும், லெட்சுமணப் பெருமாளும் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

மேலாண்மை பொன்னுச்சாமி கலை அழகுடனும் முற்போக்குச் சிந்தனையுடனும், சிறுகதைகளையும், நாவல்களையும் படைத்தார். இவரும் சாகித்ய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளராவார். தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் தனித்துவமானவை. இவருடைய சகோதரர் கோணங்கியுடைய படைப்புகள் யாவும் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடுகின்றது. கோணங்கியின் ஆரம்பகால சிறுகதைகள் மண் வாசனையும், மனித நேயமும் மிக்கவை. இவரின் மதினிமார்களின் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. தற்போது வேறொரு தளத்தில் நாவல்களை எழுதி வருகிறார். கோணங்கியின் உலகம் தனியானது. இவர் கல்குதிரை என்ற பருவகால சீற்றத்தையும் நடத்தி வருகிறார்.

சுயம்புலிங்கம் தனித்துவமான மொழிநடையுடைய கரிசல் இலக்கியப் படைப்பாளி. இவரது கவிதைகளிலும் வட்டார வழக்குமொழி கொஞ்சும்.

இவர்களுக்கு அடுத்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாதவராஜும், உதயசங்கரும். மாதவராஜின் கதைகள் மயக்கம் தரும் நடை உடையவை. இவர் சிற்றிதழ் ஆசிரியர். தற்போது உதயசங்கருடைய பணியும் இத்தளத்தில் முக்கியமானது. கிருஷியும், நாறும்பு நாதனின் படைப்புகளும் முக்கியமானவை.

ஓவியர் கொண்டையராஜு குடும்பத்தைச் சார்ந்த மாரீஸ் கரிசல் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.

எட்டயபுரம் இளசை அருணாவும், இளசை சுந்தரம் ஆகியோருடைய கரிசல் இலக்கியப் பணிகளை மறக்க முடியாது.

கரிசல் மண்ணில் கோதை நாச்சியார் ஆண்டாள், ஆவுடையக்காள், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், உமறுப்புலவர், வ.உ.சிதம்பரனார், பாரதி, பொதி சுவாமிகள், நாவலர் சோமசுந்தர பாரதி என்ற ஆளுமைகளில் துவங்கி பன்மொழிப் புலவர் இராஜபாளையம் ஜெகந்நாத ராஜா, கி.ரா., கு.அழகிரிசாமி, தீபம் நா. பார்த்தசாரதி, ல.சண்முகசுந்தரம் என்ற பட்டியலில் பொன்னீலன், ஆர்.எஸ்.ஜேக்கப் (நெல்லை), எஸ். இராமகிருஷ்ணன் (மல்லாங்கிணறு), கவிஞர் தேவதச்சன் (கோவில்பட்டி), தேவதேவன் (தூத்துக்குடி), மாலன் (விளாத்திகுளம்), செம்மலர் எஸ்.ஏ. பெருமாள் (விருதுநகர்), பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம் (கோவில்பட்டி), ரா. அழகிரிசாமி (சாத்தூர்), கணபதி (எ) மாறன் (குமிழங்குளம்), கவிஞர் சமயவேல், கொ.மா. கோதண்டம் (இராஜபாளையம்), கௌரிசங்கர் (கோவில்பட்டி), பாமா (வத்திராயிருப்பு), உதயசங்கர் (கோவில்பட்டி), அப்பாஸ் (கோவில்பட்டி), ஸ்ரீதர கணேசன் (தூத்துக்குடி), கு. சங்கரநாராயணன் (திருவில்லிப்புத்தூர்), ஜி. காசிராஜன் (கஞ்சம்பட்டி), பொ. ராமசாமி (சிவகாசி), பொன்ராஜ் (சிந்தப்பள்ளி), ருத்ர துளசிதாஸ் (சிவகாசி), பாரததேவி (சொக்கலிங்கபுரம்), கொண்டல்சாமி (ஒட்டநத்தம்), தமிழச்சி தங்கபாண்டியன் (மல்லாங்கிணறு), கழனியூரான், ஞானன் (சிவகாசி), இளசை மணியன், திடவை பொன்னுச்சாமி, அப்பண்ணசாமி, கவிஞர் லீனா மணிமேகலை (வ.புதுப்பட்டி),  கவிஞர் திலகபாமா (சிவகாசி), மதுமிதா, ரஜினி பெத்ராஜ் (இராஜபாளையம்) போன்ற கரிசல் இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் விரிந்துகொண்டே செல்லும். இந்தப் பட்டியல் முழுமையானதும் அல்ல.

கி.ரா.வும், அடியேனும் இணைந்து கரிசல் வட்டார தரவுகளை வெளிப்படுத்துகின்ற வகையில் கதைசொல்லி கந்தாய இலக்கிய இதழையும் நடத்துகின்றோம்.

கரிசல் இலக்கியவாதிகளின் பங்களிப்பு தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாதது. மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் யாவரும் ஒவ்வொரு விதத்தில் தமிழ் இலக்கியத்திற்கு சேவை செய்துள்ளார்கள் என்றாலும் அவர்களின் படைப்புகளில் எல்லாம் கரிசல் மக்களின் ஒரு நூற்றாண்டு கால வாழ்க்கை பல்வேறு விதங்களில் பல்வேறு வழிகளில் பதிவாகியுள்ளது.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நடைச்சித்திரங்கள், கடிதங்கள் என்று எதை எழுதினாலும் தனித்துவத்துடனும் வெக்கை வெயில் அடிக்கும் கந்தக பூமியில் கரிசல் முத்திரையுடனும் இவர்களின் சகல படைப்புகளும் திகழ்கின்றன. 

தமிழ்மொழிக்கும், பண்பாட்டுக் கலாச்சாரவெளிக்கும், இலக்கியத்திற்கும், கரிசல் எழுத்தாளர்கள் செய்துள்ள பணிகள் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.



No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...