Monday, January 18, 2016

புதிய தலைமுறையின் மக்கள் மேடை விவாதம்

புதிய தலைமுறையின் மக்கள் மேடை விவாத அரங்கில் இரு தினங்களுக்கு முன்பு உழவர்கள் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. பார்க்கவேண்டும் என்று நினைத்த நிகழ்ச்சி. ஆனால் கேபிள் பிரச்னை. இப்போது பார்த்தேன்.

விவாத நிகழ்ச்சிக்கு வந்திருந்த கருத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்த விதம் மிகச்சிறப்பு. எல்லா நிகழ்வுகளிலும் இப்படிச் செய்யமுடியாது என்றாலும், சிறப்பு நிகழ்ச்சிகளின்போது மட்டுமேனும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு பற்றி சற்று விரிவாகப் பதிவுசெய்யலாம். அதற்கான நல்ல தொடக்கம் இந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்துமுடித்தேன். ஆக்கபூர்வமான விவாதம். அடுத்தகட்டம் பற்றிய யோசனையையும் விவாதத்தையும் உந்தித்தள்ளும் வகையில் அமைந்தது. மகிழ்ச்சி.

என்னதான் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி என்றாலும், என் கவனம் அரசியலின்மீதுதான். விவாதத்தினூடாக நண்பர் கே.எஸ்.ஆர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்கள் ஆட்சியதிகாரத்தில் நீடிப்பதற்கு இதர அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த கே.எஸ்.ஆர், அதற்கான உதாரணங்களாக ஓமந்துரார், சரண் சிங், தேவிலால் ஆகியோரைச் சுட்டிக் காட்டுகிறார். என்ன காரணமாக இருக்கும்?

முக்கியமாக, “ஓமந்துர் ராமசாமி ரெட்டியார்தான் அணைகளைக் கட்டினார். ஆனால், இந்தியாவில் முதன்முறையாக மொட்டை பெட்டிஷன் போட்டது ஓமந்தூரார் மீதுதான். நேரு அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.” என்ற தகவலையும் பதிவுசெய்தார்.

அந்த மொட்டை பெட்டிஷன் போட்டது யாராக இருக்கும் என்பது பற்றிய எந்தவித க்ளூவையும் கே.எஸ்.ஆர் கொடுக்கவில்லை. நேரலையில் மனம் திறக்காத கே.எஸ்.ஆர் ஃபேஸ்புக்கில் மன திறப்பாரா?



இவ்வாறு நண்பர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்து, அதை என்னுடைய பக்கத்தில் இணைத்துள்ளார்.

கடந்த 15.1.2016 அன்று புதிய தலைமுறை விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதத்தில் பங்கேற்றபோது, விவசாய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை இராஜதானி பிரதமராக இருந்தார். (அப்போது முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்). அவர் இருந்தபோது இருந்தபோது, ஆந்திராவும், கர்நாடகத்தில் சில பகுதிகளும், கேரளத்தில் சில பகுதிகளும் இணைந்த பெரிய மாநிலமாக இருந்தது.  சிறப்பான நிர்வாகத்தோடு நேர்மையாக ஆட்சி நடத்திய ஓமந்தூராரை சில சக்திகள் பதவியிலிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டது எல்லாம் கடந்த கால செய்திகள்.  அவர் மீது புகார் கடிதங்கள் அன்றைய பிரதமர் நேருக்கு அனுப்பப்பட்டது. படேல் அவர்கள் கூட இது குறித்து விசாரித்து ஓமந்தூரார் அப்பழுக்கற்றவர் என்று சொல்லியும், ஓமந்தூராரை அமைதியாக முதலமைச்சர் பணியை செய்யவிடாமல், அவரே முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, வடலூர் சென்று வள்ளலாரின் சன்மார்க்க கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை.  இந்த செய்திகளை 1979, 1980 கால கட்டங்களில் தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் அவர்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மூலமாக கேட்டுள்ளேன். இறுதியாக 1994 கட்டத்தில் மறைந்த பிரபல பத்திரிகையாளர் எஸ்.எஸ். மாரிசாமி (முன்னாள் எம்.பி.) அவர்களும் கூட என்னிடம் இது குறித்து விவரமாக 1994ல் அவரை சந்திக்கும்போது விரிவாக பேசும்போது அறிந்துகொண்டேன்.  இன்றைக்கு இந்த மூவரும் நம்மோடு இல்லை. எனவேதான் இது ஆய்வுக்கு உட்பட்டது என்று புதியதலைமுறை தொலைகாட்சி விவாதத்தில் தெரிவித்தேன்.  அக்காலத்திலும் தகுதியே தடை. பொது வாழ்வில் இருந்தவர்க்ள் அப்போதும் அவமானங்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஓமந்தூரார் காலத்தில் இந்த அளவு ஊடகங்களும், செய்தித்தாள்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இல்லை என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.  எனவே இந்த உண்மை குறித்து ஆய்வு நடத்தினால் பல செய்திகள் தெரியவரும் என்பதைத்தான் அன்றைய விவாதத்தில் குறிப்பிட்டேன்.

இதனை R Muthu Kumar க்கும், Venkada Prakash க்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...