Thursday, January 7, 2016

உ. வே. சா. நூலகம் - பெசன்ட் நகர்

இன்றைக்கு (7.1.2016) பெசன்ட் நகர், கலாசேத்ரா வளாகத்தில் உள்ள தமிழ் தாத்தா உ.வே.சா. நூலகத்திற்கு, 1999க்கு பிறகு  கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பின் செல்ல வாய்ப்பு கிடைத்தது.  அங்கு ஒரு மணி நேரம் வரை இருந்து பழைய ஓலைச் சுவடிகளையும், பழைய நூல்களையும் கண்டுகளித்து அமர்ந்து சிலவற்றையும் படிக்க முடிந்தது.  இந்த நூலகத்தை முன்பு பார்த்ததை விட தற்போது பராமரிப்பு இல்லையோ என்ற கவலை அப்போது ஏற்பட்டது. இந்த நூலகத்தில் உள்ள பழைய ஓலைச் சுவடிகளை பதிப்பித்து நூல்களாக இந்த நூலகத்தின் பொறுப்பாளர் பசுபதி அவர்கள் முயற்சியால் வெளியிடப்பட்டது.


இந்த நூலகம் தமிழ் இலக்கியங்களை பதிப்பிப்பதிலும், ஓலைச் சுவடிகளை பாதுகாப்பதிலும் முக்கியப் பணியாக கொண்டுள்ளது. இங்கு அரிய பல தமிழ்ச் சுவடிகளும், நூல்களும் உள்ளன. இங்கு சுமார் 140 தலபுராணச் சுவடிகளும் உள்ளன. இவற்றுள் பல உ.வே.சா. அவர்களே தொகுத்தவையாகும்.

மத்திய மாநில அரசுகள் சரியாக நிதி உதவி வழங்குவதாகவும் தெரியவில்லை. ஊர் ஊராக சென்று சுவடிகளைத் தேடி பதிப்பித்த உ.வே.சா.வின் நினைவிடமாக இருக்கும் இந்த நூலகம் கவனிக்கப்படாமல் இருப்பது கவலைத் தருகின்றது. 

இது எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கு பயன்படுகின்ற கேந்திர நிறுவனமாகும். இதை சரியான முறையில் கவனித்து பாதுகாக்க வேண்டியது தமிழர்களுடைய கடமையாகும். இதையே ஓர் உயர் ஆராய்ச்சி நிறுவனமாகக் கூட மாற்றலாம்.

இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேராசான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா.,  ருக்மணி ஆருண்டேல், ஆருண்டேல், கும்பகோணம் பேராசிரியர் தியாகராஜ செட்டியார் படங்களைக் கூட சரியாக பராமரிக்கப்படவில்லையோ என்ற வேதனையும் நமக்கு ஏற்படுகின்றது. உ.வே.சா. பயன்படுத்திய பொருட்கள், துரு ஏரிய கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டுள்ளதை பார்க்க மனம் ஒப்பவில்லை.

இதை கவனிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகள்தான்.  அங்கு பணியாற்றுபவர்களால் என்ன செய்ய முடியும்?

அண்ணா நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்ற கொடிய எண்ணத்தில் திட்டமிட்டு பராமரிக்காமல் பாழ்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு அருமையான நூலகம்.









No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...