Thursday, January 7, 2016

வாழை மரம், வாழை இலை

ஒவ்வொரு நாளும் சாப்பாட்டு மேஜையில் உட்காரும்போது வாழை இலை பிரச்சினையில் சமையல்காரரோடு சண்டைபோட்டுக் கொண்டு உட்காரவேண்டியதாக உள்ளது.  நினைவு தெரிந்த காலத்திலிருந்து கிராமத்தில் வாழை விவசாயம் என்பதால் தட்டில் சாப்பிடாமல் வாழை இலையில் சாப்பிடுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.

வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் என்றால்தான் தட்டுகளில் உணவு உண்பது உண்டு.  அப்படி என்ன வாழை இலையின் மகிமை என்றால், பேரறிஞர் அண்ணாவே வாழை இலையை பற்றி சொன்ன வரிகள் இன்றைக்கு படிக்க நேர்ந்தது.

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்... தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன.

சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு விகிதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!

உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.

இதைக் கேட்டு, பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம்! அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர்.

அதற்கு, ''ஆமாம்! அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா.

வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அலர்ஜி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

அது மட்டுமல்லாமல் வாழையடி வாழையாக வாழையின் பயன்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

வாழைமரத்தின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை. வாழை இலையில் சாப்பிட்டால் வயிற்று மந்தம் வராது. வாழைப்பூ குடல் கிருமிகளை அழிக்கவல்லது. வாழழைப்பிஞ்சு வயிற்றுக் கடுப்பிற்கு மருந்தாகும். வாழைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். வாழைப்பழம் மலச்சிக்கலைத் தடுக்கும். வாழைத்தண்டு சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவுகிறது. வாழைப்பட்டை தீப்புண்களை ஆற்றும். வாழைச்சாறு பாம்பின் விஷத்தை முறியடிக்கும்.

இப்படி வாழை மரத்தின் எல்லாப் பாகங்களும் உபயோகமுள்ளவை என்பதால் “வாழையடி வாழை”யாகப் பிறருக்குப் பயன்படும்படி இருக்க வேண்டும் என்பது இயல்பான விஷயம்.

வாழை கன்றை நட்டு அதன் வளர்ச்சியை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். வேகமாகவும் வளரும். வாழை கன்று இலைகளை வெளியே விட்டு ஒரு மாத காலத்தில் அந்த நிலத்தின் மண்ணையே மறைத்து பச்சை பசேலென்று 10 ஏக்கர் அல்லது அதற்கு மேலும் பயிரிட்டால், கண்ணுக்கு எட்டிய வரை பூமியே பச்சையாக தெரியும்.

மகிழ்ச்சியான தருணங்களில் இனிய, மங்கல நிகழ்வுகளில் வாழைத் தோரணங்கள் கட்டுவது நமது கலாச்சாரம் மட்டுமல்லாமல், மனதை கவர்கின்ற நிகழ்வாகவே நாம் கொண்டாடுகிறோம்.

தலைவாழையில் விருந்து படைப்பது நமது நாகரிகத்தின் அடையாளமாகும்.

வாழையடி வாழையாக நாம் போற்றும் இந்த கலாச்சாரத்திற்கு அடையாளமாக திகழும் வாழை வாழையடி வாழையாக வளர்ந்தோங்க வேண்டும்.


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...