Saturday, July 27, 2019

அரசியல் காலச் சக்கரத்தில் சில மலரும் நினைவுகள்

அரசியல் காலச் சக்கரத்தில் சில மலரும் நினைவுகள்
-------------------------------------

டெல்லி அரசியலில் 1970, 80 களில் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்தவன் அடியேன். மத்திய முன்னாள் அமைச்சர் கே.பி. உன்னிகிருஷ்ணனோடு நெருக்கமான பழக்கமும் அப்போது உண்டு. டெல்லி சென்றால் நெடுமாறனும், நானும் கே.பி. உன்னிகிருஷ்ணனையும் முன்னாள் பிரதமர் சந்திரசேகரையும் சந்திப்பதுண்டு. அங்கு இருக்கும் முழு நேரத்தையும் கே.பி. உன்னிகிருஷ்ணனனோடு இருப்பது வாடிக்கை. இந்திரா காந்திக்கு நம்பிக்கைக்கு உரியவராக காங்கிரஸ் கட்சியில் விளங்கினார். ஆங்கிலத்தில் நன்கு எழுதுவார். இவர் எழுதும் தீர்மாணங்கள்தான் காங்கிரஸ் மாநாடுகள் வாசிக்கப்படும்.
1971ல் இருந்து கேரள மாநிலம், படகரா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், விபி.சிங் அவர்களின் அமைச்சரவையில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.
உன்னிகிருஷ்ணன் இந்திரா காந்தியின் போக்குக்கு எதிராக சரத்சின்கா, சங்கர நாராயணன், சரத்பவார், ஏ.கே. அந்தோணி போன்றவர்களுடன் அவசரநிலை காலத்திற்கு பிறகு காங்கிரஸில் இருந்து வெளியேறி காங்கிரஸ் (சோஷலிஸ்ட்) என்று உருவாக்கினார்கள். அவசர நிலை காலத்திற்கு பின் இந்திரா காந்தி தோற்றபிறகு கர்நாடக மாநிலத்தில் தான் தேவராஜ் அர்ஸ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அவர் இந்திரா காந்திக்கு எதிராக இருந்தார். அப்போது உன்னிகிருஷ்ணன் அர்ஸ் க்கு ஆதரவாக இருந்தார.
தீன் மூர்த்தி லேனில் தான் வசித்த வீட்டில் லட்ச புத்தகங்களுக்கு மேல் அருமையாக சேர்த்து வைத்திருந்தார். அதே போல கர்நாடக இசையை விரும்பி கேட்பார். உடல் நிலை பாதிக்கப்பட்டு யாரையும் சந்திப்பதையும் தவிர்க்கின்றார். கேரள அரசியலில் மறைந்த முதல்வர் கருணாகரன் இவருக்கு எதிராக காய்களை நகர்த்தியதும் உண்டு. இதெல்லாம் 1970 களில்… அதே போல அந்த காலக்கட்டத்தில் அம்பிகா சோனி, ரக்ஷானா சுல்தானா சஞ்சய் காந்திக்கு தொடர்புடையவர். இவருடைய புதல்வி அம்ரிதா சிங் 1980களில் பாலிவுட் நடிகை.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரிய ரஞ்சன்தான் முன்ஷி, ஒரிசாவை சேர்ந்த ராமச்சந்திர ராத் என இளைஞர்கள் பட்டாளம் காங்கிரஸில் இருந்தன. அந்த காலக்கட்டத்தில் இந்திரா காந்திக்கு நெருக்கமாக மாராட்டியத்தை சேர்ந்த ரஜினி படேல், ஏ.ஆர். ஆண்டலே, வசந்த சாத்தே ஆகியோர் உடன் இருந்தனர். மேற்கு வங்க சித்தார்த் சங்கர்ரே ஆலோசனைகளை ஏற்பதுண்டு. இப்படியான தலைவர்களை பற்றி ஓரளவு நினைவில் உள்ளது.
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மறைந்த முதல்வர் ஒய். எஸ். இராஜசேகர ரெட்டி பிரிக்க முடியாத தோழர்களாக அன்றைக்கு இளைஞர் காங்கிரஸில் வலம் வந்தனர். கேரளாவை சேர்ந்த ரமேஷ் சென்னிதலா எங்களோடு மாணவர் காங்கிரஸில் இருந்தவர். இன்றைக்கு முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றார். இவர்களெல்லாம் அஸ்ஸாமில் நடந்த முகாமில் பார்த்த்துண்டு, ஒரு சிலரிடம் பேசியதுண்டு.
ஆனால், மாணவர் காங்கிரஸ் 1970 களில் நடந்த நினைவுகளை என்னுடைய நினைவுகள் தொகுப்பில் எழுதியுள்ளேன். திரும்பவும் விசயத்திற்கு வருகின்றேன். அம்பிகா சோனியையும், ரக்ஷனா சுல்தானாவையும் சுற்றி இளைஞர்கள் கூட்டம் இருக்கும். ஒரு காலத்தில் காங்கிரஸில் தாரகேஸ்வரி சின்கா போன்று கட்சியில் உள்ள இளைஞர்களை ஈர்க்கும் பெண்களாக இவர்கள் இருந்தார்கள். திரும்பவும் அம்பிகா சோனி பற்றி சொல்ல வேண்டும்.
மத்திய தகவல் மற்றும் அலைபரப்புத் துறை அமைச்சரான அம்பிகா சோனி 1942 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத பஞ்சாப்பில் லாகூரில் பிறந்தார். இவரது தந்தை நகுல் சென் ஒரு இந்தியக் குடிமைப் பணி (I.C.S) அதிகாரி. அம்பிகா தனது பி.ஏ பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் முடித்தார். பிறகு, பேங்காக்கிலுள்ள அலையன்சு ஃபிரான்சே சிலிருந்து டிப்ளோம் சுப்பீரியர் என் லாங் பிரான்சேசு பட்டமும், கியூபாவின் ஹவானா பல்கலைக்கழகத்திலிருந்து எஸ்பேனியா கலை மற்றும் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சோனியா காந்தி உடனான நெருக்கத்தினால் இத்தாலிய மொழியும் சமீபத்தில் கற்றுக் கொண்டார்.
இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக 1975 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 வரை இப்பதவி வகித்தார். 1976 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டில் அனைத்து இந்திய பெண்கள் காங்கிரசின் தலைவரானார்.
இந்த கே.பி. உன்னிகிருஷ்ணனை பற்றியும், அம்பிகா சோனியை பற்றியும், சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருந்தவர்கள் இன்றைக்கு அமைதியாக உள்ளனர். அரசியல் உழைப்பையோ வேறு சூழலினால் நீடிக்க முடியாது. இயற்கையான போக்கில் தான் அரசியலை விட வேண்டும். அந்த போக்கில் வாய்ப்பிருக்கும் எல்லைவரை நாம் போகலாம் என்பதை இவர்கள் இருவரிடம் மட்டுமல்ல வேறு சில நண்பர்களின் அனுபவங்கள் வாயிலாகவும் மனதில் ஏற்பட்ட உணர்வுகளாகும்.
இன்றைக்கும் இந்திரா காந்தி, கே.பி.உன்னிகிருஷ்ணன், அம்பிகா சோனி, மேனகா காந்தி ஆகியோர் 1970களில் எழுதிய கடிதங்கள் என்னுடைய கோப்புகளில் இருக்கின்றன. இவர்கள் அனைவருடைய கையொப்பங்கள் யாவும் பார்வையில் ஈர்க்கும். இவர்களோடு எடுத்துக்கொண்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள் யாவும் பிரபாகரன் என்னுடன் தங்கியிருந்த 1982ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் காவல் துறையினர் சோதனையில் (Raid) எடுத்து சென்ற புகைப்படங்களை திரும்ப கிடைக்காதது. இன்றைக்கும் எனது வாழ்க்கையில் வேதனைபடுத்துகின்ற ஒரு நிகழ்வாகும்.
இந்த பத்தியில் சொல்லவந்த கருத்து என்னவென்றால், திறமையான உன்னிகிருஷ்ணனும் உடல் நிலை சரியில்லாமல் அரசியலில் இருந்து விலகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.இருப்பினம் நினைவுகளை பதிவு செய்யவேண்டும் என்பதே நோக்கம். 46 ஆண்டுகளில் அரசியல் காலச் சக்கரங்களில் இப்படியான நல்ல உள்ளங்களையும் நண்பர்களையும் சந்தித்தது மனதிற்கு இதமானது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-07-2019.
Image may contain: 1 person
Image may contain: 2 people

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...