Sunday, July 14, 2019

தூது சொல்லும் சங்க இலக்கியம் - Sangam Literature.

தூது சொல்லும் சங்க இலக்கியம் - Sangam Literature.
________________________________________

ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் பள்ளியில் படித்த ஆறாம் வகுப்பு கிழிந்து கந்தலாகி இருந்த பாடப் புத்தகத்தை சிலதினங்களுக்கு முன் கிராமத்திற்குச் சென்ற போது பார்க்க நேர்ந்தது. அதைப் புரட்டி பார்த்தபோது அப்போதே விரும்பிப் படித்த பாடல் கண்ணில் பட்டது.
சங்கப் பாடலில் தனிப்பாடலாக வானில் பறக்கும் நாரையை தபால்காரரைப் போல விளித்து அழைத்து தன்னுடைய குடும்ப வறுமையை சத்தி முத்தப் புலவர் பாடும் பாடல் அது. பள்ளிச் சிறுவனாக இருக்கும் போது அடிக்கடி பாடிக்கொண்டிருக்கும் பாடல்.
பழைய புத்தகங்களை எடுத்து இந்த பாடலைப் பார்த்தபொழுது நெகிழ்வாக இருந்தது. புரட்சிக்கவி பாரதிதாசன் இந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு சத்தி முத்தப் புலவர் என்ற நாடகத்தை எழுதினார்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

என்ற பாடலை புலவர் பாடும் போது, அச்சமயம் நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற மன்னன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் பணியாளரை விட்டு அவரைத் அழைத்து அவருக்குத் தேவையாபவற்றை வழங்கினான். இவர் பின்னர் களத்தூர் குடிதாங்கி முதலியாரால் ஆதரிக்கப்பட்டார்.
அக்காலத்தில் பறவைகளிடம் தூது அனுப்புவதையும், சீட்டுக்கவி மூலமாக புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் மன்னர்களுக்கு அனுப்பப்பட்டன. மகாகவி பாரதியும் எட்டையபுர மன்னருக்கு சீட்டுக் கவி எழுதி அனுப்பியது உண்டு.
மன்னர்கள் மட்டுமே ஓலைச்சுவடிகளிலோ, பட்டுத்துணிகளிலோ செய்திகளை எழுதி தூதுவர்கள், ஒற்றர்கள் மூலமாக குதிரைகளில் அனுப்புவது அக்காலத்தில் வாடிக்கை.
இன்றைக்கு தபால், தந்தி, தொலைபேசி, கூரியர், செல்பேசி வரை தொலைதொடர்பு விரிவுபடுத்தப்பட்டது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
14-07-2019.


No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...