Monday, July 29, 2019

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர். - " ஸ்ரீ வில்லிபுத்தூர் "

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர். - " ஸ்ரீ வில்லிபுத்தூர் " 
-------------------------------------

தந்தையும், மகளுமாக இரண்டு ஆழ்வார்கள் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதை நாச்சியார் தான் தொடுத்து அணிந்து சூடிப்பார்த்த பூமாலையை அரங்கணுக்கு கொடுத்து அனுப்பி கொண்டிருந்ததன் நினைவாக, இன்றும் தினந்தோறும் முதல் நாள் இரவு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மலர்மாலையை பெருமாளுக்கு மறுநாள் முதல் மாலையாக அணிவித்து சேவிப்பது இறை வழக்கம் இன்றளவும் நடக்கின்றது. இது ஒரு புறம் இருந்தாலும் இதில் உள்ள பக்திச் சுவையாக பாடிய பாசுரங்கள் அற்புதமான தமிழ். இந்த தமிழை வணங்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர்.
Image may contain: outdoor
இது ஆடி மாதம்.திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது நம்பிக்கை .
ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள். —
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயரரங்கற்கே கன்னி யுகந்தளித்தாள் வாழியே

இப்படி கோதைநாச்சியார் ஆண்டாளை நினைத்து பாடுவார்கள்.
வேடிக்கையாக 143 என்றால் ஆங்கிலத்தில் காதலுக்கு சொல்வார்கள் .
Image may contain: sky and outdoor
இறைவனிடத்தில் காதல் கொண்டு 143 பாடல்களை எழுதி இருக்கிறாள் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்.
இதில் உள்ள ஆண்டாளின் தமிழையும், இலக்கிய ரசத்தையும் நாம் போற்ற வேண்டும். 
உலகின் முதல் இசை தமிழோசையும் அதன் பண்களும் வைணவ பாசுரங்கள் மூலமாகவும் கேட்கலாம். நாலாயிர திவ்ய பிரபந்தம் மக்களுக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும், இனிமையையும் தரும் என்பார்கள். இதில் பிரபந்தம் என்பது இந்த பாடல்களின் தொகுப்பாகும். இதை திராவிட வேதம் என்றும் வைணவத்தின் மூல இலக்கியம் என்றும் சொல்வதுண்டு.

என்றைக்கும் கன்னித்தமிழ் ஓசையாகவும், செந்தமிழ் பிரவாளமாகவும், பள்ளிகொண்ட அரங்கனையும், திருவேங்கடத்தானையும், பெருமாளையும், அவனுடைய பல்வேறு பெயர்களில் பாடிடும் பாடல் தொகுப்பு தான் இந்த நாலாயிர திவ்ய பிரபந்தம். இது இசைத்தமிழ், அரையர் சேவை, நாடகத் தமிழிலும், நடைமுறைப்படுத்துகின்ற பக்தி இலக்கியம் ஆகும்.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுக்குள் 
வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் 
என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார்.

பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
நான்கு ஆயிரத் தொகுப்புகளில் 
முதல் ஆயிரம் பலர் பாடிய இசைத்மிழ்ப் பாக்களின் தொகுப்பாகும்.

இரண்டாவது ஆயிரம் திருமங்கையாழ்வார் பாடிய இசைப்பாத் தொகுப்பாகும்.
மூன்றாவது ஆயிரம் பலர் பாடிய இயல்பாத் தொகுப்பாகும்.

நான்காவது ஆயிரம் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி என்கிற இசைப் பாத்தொகுப்பாக அமைந்துள.
நான்கு ஆயிரங்களில் மூன்று ஆயிரங்கள் இசைப் பாக்களாகவும் ஒர் ஆயிரம் மட்டும் இயல்பாத்தொகுப்பாகவும் அமைந்துள.
இவை இசைத்தமிழுக்கு முன்னுரிமை தந்து தொகுக்கப் பெற்றுள என்பதனை உணர்த்துகின்றன.
பண், இராகம், தாளம், ஒத்துப் பெயர்களோடு இப்பாசுரத் தொகுதிகள் பதிப்பிக்கப் பெற்று வந்துள.

பொய்கையார், 
பூதத்தார், 
பேயாழ்வார் 
என்னும் முதல் ஆழ்வார்கள் 
பாடிய திருவந்தாதிகள் இயற்பாக்களாக உள்ளன.
இவை மூன்றாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள.
திருமழிசையாழ்வார், 
திருப்பாணாழ்வார், 
தொண்டரடிப் பொடியாழ்வார், 
குலசேகராழ்வார், 
பெரியாழ்வார், 
ஆண்டாள், 
திருமங்கையாழ்வார், 
நம்மாழ்வார், 
மதுரகவியாழ்வார் 
பாடிய பாசுரங்கள் இசைப் பாக்களாக உள.
இவற்றைப் பண்களோடு சேவித்த மரபு மாறி ஓதும் மரபில் இன்று வழக்கில் உள.
இவை பண்ணோடு பாடப்பட்டமையை அகச் சான்றுகள் வழி அறியமுடிகின்றன.
திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.

இந்த நூல் 
ஆன்ற தமிழ் மறை, 
ஐந்தாவது வேதம், 
திராவிட வேதம், 
திராவிட பிரபந்தம் 
என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு.
முதலாயிரம் - 947 பாடல்கள்
பெரிய திருமொழி - 1134 பாடல்கள்
திருவாய்மொழி - 1102 பாடல்கள்
இயற்பா - 817 பாடல்கள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்
********************************************************
1. திருப்பல்லாண்டு
2. பெரியாழ்வார் திருமொழி
3. திருப்பாவை
4. நாச்சியார் திருமொழி
5. பெருமாள் திருமொழி
6. திருச்சந்தவிருத்தம்
7. திருமாலை
8. திருப்பள்ளி எழுச்சி
9. அமலனாதிபிரான்
10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
11. பெரிய திருமொழி
12. திருக்குறுந்தாண்டகம்
13. திருநெடுந்தாண்டகம்
14. முதல் திருவந்தாதி
15. இரண்டாம் திருவந்தாதி
16. மூன்றாம் திருவந்தாதி
17. நான்முகன் திருவந்தாதி
18. திருவிருத்தம்
19. திருவாசிரியம்
20. பெரிய திருவந்தாதி
21. திருஎழுகூற்றிருக்கை
22. சிறிய திருமடல்
23. பெரிய திருமடல்
24. இராமானுச நூற்றந்தாதி

பன்னிரு ஆழ்வார்கள்
****************************
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவியாழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள்
10. தொண்டரடிப்பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன.
பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் 
பாடப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் 
இயற்றப்பட்டதாகும்.

இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும்.
இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர்.

இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.
முதலாயிரம்
*********************
ஆழ்வார் பெயர் : பெரியாழ்வார்
தலம் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
நூலின் பெயர் : 
திருப்பல்லாண்டு. 1 – 12, 
திருமொழி 13 – 473
ஆழ்வார் பெயர் : ஆண்டாள்
தலம் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
நூலின் பெயர் : 
திருப்பாவை 474-503
நாச்சியார் திருமொழி 504-646
ஆழ்வார் பெயர் : குலசேகர ஆழ்வார்
நூலின் பெயர் : பெருமாள் திருமொழி 647 - 751
ஆழ்வார் பெயர் : திருமழிசையாழ்வார்
தலம் : திருமழிசை
நூலின் பெயர் : திருச்சந்தவிருத்தம் 752 - 871
ஆழ்வார் பெயர் : தொண்டரடிப்பொடியாழ்வார்
நூலின் பெயர் : 
திருமாலை 872 – 916
திருப்பள்ளி எழுச்சி 917 – 926
ஆழ்வார் பெயர் : திருப்பாணாழ்வார்
தலம் : உறையூர்
நூலின் பெயர் : அமலனாதிபிரான் 927 - 936
ஆழ்வார் பெயர் : மதுரகவியாழ்வார்
நூலின் பெயர் : கண்ணிநுண்சிறுத்தாம்பு 937 - 947

இரண்டாவதாயிரம்
**********************************
ஆழ்வார் பெயர் : திருமங்கையாழ்வார்
நூலின் பெயர் : 
பெரிய திருமொழி 948 - 2031
திருக்குறுந்தாண்டகம் 2032 - 2051 
திருநெடுந்தாண்டகம் 2052 - 2081

மூன்றாவதாயிரம்
**********************************
ஆழ்வார் பெயர் : பொய்கையாழ்வார்
தலம் : காஞ்சிபுரம்
நூலின் பெயர் : முதல் திருவந்தாதி 2082 -2181
ஆழ்வார் பெயர் : பூதத்தாழ்வார்
தலம் : மாமல்லபுரம்
நூலின் பெயர் : இரண்டாம் திருவந்தாதி 2182 - 2281
ஆழ்வார் பெயர் : பேயாழ்வார்
தலம் : மயிலாப்பூர்
நூலின் பெயர் : மூன்றாம் திருவந்தாதி 2282 - 2381
ஆழ்வார் பெயர் : திருமழிசை ஆழ்வார்
நூலின் பெயர் : நான்முகன் திருவந்தாதி 2382 - 2477
ஆழ்வார் பெயர் : நம்மாழ்வார்
தலம் : ஆழ்வார்திருநகரி
நூலின் பெயர் : 
திருவிருத்தம் 2478 - 2577
திருவாசிரியம் 2578 - 2584
பெரிய திருவந்தாதி 2585 - 2671 
ஆழ்வார் பெயர் : திருமங்கை ஆழ்வார்
தலம் : ஆழ்வார்திருநகரி
திருஎழுகூற்றிருக்கை 2672
சிறிய திருமடல் 2673 – 2712
பெரிய திருமடல் 2713 - 2790
ஆழ்வார் பெயர் : திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி 2791 - 2898

நான்காவதாயிரம்
**********************************
ஆழ்வார் பெயர் : நம்மாழ்வார்
திருவாய்மொழி 2899 – 4000

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-07-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...