Friday, July 19, 2019

#தென்காசி மாவட்டம் உதயம்.

No photo description available.
————————————-
நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி இன்றுமுதல் தென்காசி மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி , செங்கோட்டை, கடையநல்லூர் , சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர் , சிவகிரி , ஆலங்குளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது. திருவேங்கடம் பகுதி மட்டும் வானம் பார்த்த கரிசல் பூமி ஆகும்.

மேற்காணும் தாலுக்காக்கள் அனைத்தும் மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள். என்னுடைய விவசாய நிலங்கள் இந்த மாவட்டத்தில் இருப்பதால் இந்த மாவட்டமும், தொலைவில் சென்று விட்ட திருநெல்வேலி மாவட்டமும் அதன் மீதான நேசமும் உரிமையும் ஒருத்துளிக்கூட குறைத்துக் கொள்ள முடியாது. அதே போல் விருதுநகர் மாவட்டமும் என் விருப்பத்திற்குரிய மாவட்டம் என சொல்வேன்.
என்னதான் இருந்தாலும் 60, 70களில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் *தெற்கு சீமை* என்ற புவியியல் கம்பீரம் இழந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது. 1986ல் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்த போது எனது ஆதங்கத்தை மனதில் ஏற்பட்ட ஒருவித தாக்கத்தை அன்று தினமணியில் பதிவு செய்தேன். அந்த மண்நேசம் இன்றும் மாறாதது.
நெல்லை மாவட்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் திருவில்லிபுத்தூர், விருதுநகர்(விருதுபட்டி), சாத்தூர், ராஜாபாளையம் ஆகிய வட்டாரங்கள் ஒருங்கிணைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது . எத்தனை மாவட்டங்களாக பிரிந்தாலும் திருநெல்வேலியின் தனித்துவம் மட்டும் நிலைத்து நிற்கும்.
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என திருஞானசம்பந்தர்சம்பந்தரும்
"தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும்,
"பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய வரிகள் இந்த மாவட்ட பிரிவுகளால் பொய்த்துப் போகுமா என்ன?
சரி, என்னசெய்வது? ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தனி வாழ்வு என்ற காரணமாக இடப்பெயர்ச்சி செய்து தனிக்குடும்பமாக பிரிவதில்லையா? அவ்வாறாக கருதி இப்பிரிவை ஏற்று எல்லாத்துறைகளிலும் வளர்ச்சிக் கண்டு தென்காசி மாவட்டம்.
முன்னேற்றம் காண வேண்டும் என வாழ்த்துகின்றேன் .

#தென்காசிமாவட்டம்உதயம் 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
18-7-2019

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...