Thursday, November 17, 2022

*வெளி வர இருக்கும் அடியேன்தொகுத்துள்ள* (2தொகுதிகள்) #*கிரா100 க்கு* *திருஅ.முத்துலிங்கம்அவர்களின் அணிந்துரை*;

*வெளி வர இருக்கும் அடியேன்தொகுத்துள்ள*
(2தொகுதிகள்) #*கிரா100 க்கு* 
*திருஅ.முத்துலிங்கம்அவர்களின் அணிந்துரை*; 
————————————


எளிமையின் அழகு
அ.முத்துலிங்கம்
கி.ரா எழுதிய கடைசி நூல் ’மிச்சக் கதைகள்.’ மிகச் சுவாரஸ்யமான பல சம்பவங்களை, இதற்கு முன்னர் எங்குமே சொல்லியிராத நிகழ்வுகளை, இதிலே சொல்லியிருக்கிறார். பலவிதமான உடல் வாதைகள் அவரை வாட்டிய போதிலும் அவற்றிற்கு இடம் கொடுக்காமல் ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்தபடி பல கட்டுரைகளை எழுதி நூலை பூர்த்தி செய்தது இவரின் சாதனை. வாழ்வின் தரிசனமான இவர் நூலையும், ஆசிரியரையும் கொண்டாடும் விதமாக அமைந்ததுதான் ‘கி.ரா 100’ தொகுப்பு.
இந்த நூலில் 78 இலக்கிய ஆளுமைகள், கரிசல் கதைகளின் தந்தை பற்றி எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பதிப்பாசிரியர் கதை சொல்லியின் இணை ஆசிரியர், பன்முக தன்மை கொண்ட அரசியலார் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் இந்த நூலை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.இந்த முயற்சிக்கு கைகொடுத்து உதவிய விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களின் சேவையையும் மறக்க முடியாது.
கி.ராவை நான் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதிய வயதிலும் விடாது தேடிக்கொண்டிருக்கும் அவருடைய பண்பே என்னை முதலில் கவர்ந்தது. ‘கண்பார்வை இல்லாதவருக்கு கனவு வருமா? அது காட்சியாகத் தெரியுமா?’ என்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தார். ’காட்சி படிமம் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஆகவே கனவும் காட்சியாக தெரியும் வாய்ப்பு இல்லை’ என்று ஒரு விஞ்ஞானி போல தன் தீர்க்கமான முடிவை சொன்னார். புதியதை தெரிந்துகொள்ளும் வேட்கை அவரிடம் இறுதிவரை இருந்தது.
கி.ராவுக்கு எளிமையின் அழகில் அதிக நம்பிக்கை உண்டு. சிக்கலான ஒன்றை எளிய மொழியில் புரிய வைத்துவிடும் சித்து அவருக்கு கைவந்தது. இதற்கு சிறந்த உதாரணம் ’இரிசி’ என்ற வார்த்தையை துல்லியமாகவும், விரசம் இல்லாமலும் விளக்குவதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி. கி.ரா இப்படி விளக்குகிறார். ’நொங்கை வெட்டினால் மூன்று குழிகளிலும் நொங்கு இருக்கும். குழிகள் இல்லாத நொங்குதான் இரிசி.’ இதனிலும் சிறப்பாக யார் விளக்க முடியும்?
இவரிடம் ஓர் உலக சாதனை உள்ளது. கி.ராவுக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இவர் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை தமிழாக்கியிருக்கிறார். இன்னொருவர் ஆங்கிலத்தில் படித்து அர்த்தம் சொல்ல தமிழிலே மொழியாக்கம் செய்திருக்கிறார். இப்படி  வியக்கும்படியான காரியங்களை சாதாரணமாக சாதித்துவிடுவார்.
மூன்று தலைமுறைகளின் ஆராதனை பெற்றவர் கி.ரா. மலையை பக்கத்தில் நின்று பார்க்க முடியாது. தூரம் வேண்டும். தூரம் என்பது இங்கே காலம். எதிர்வரும் தலைமுறைகள் எளிமையான, நேரடித்தன்மையான, கலாபூர்வமான இவர் படைப்புகளை வாய்மொழி வடிவில் படித்து இன்புறுவர்.
ஒருவர் வாழ்க்கையில் ‘மிச்சக் கதைகள்’ என ஒன்றுமே கிடையாது. அவற்றை எழுதி முடித்த அடுத்த கணமே புதுக்கதைகள் தோன்றிவிடும். ’கி.ரா 100’- கேஎஸ்ஆரின் தொகுப்பு ஓர் ஆரம்பம்தான். கிராவின் வாழ்க்கையும், அவர் கதைகளும், அவர் கண்ட மானுட அறமும் விரிந்துகொண்டே போகும். அன்பு பெருகும். வாழ்த்துகள்.

அ.முத்துலிங்கம்
எழுத்தாளர், கனடா

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...