Saturday, November 5, 2022

#*மூத்தவழக்கறிஞர் என்டிவி #நூற்றாண்டு*!

*தமிழகத்தில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞராகவும், சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் மறைந்த என்.டி.வானமாமலை. அவருடைய நூற்றாண்டு. அவரைப் பற்றிய எனது கட்டுரை இன்றைய (5-11-2022)தினமணியில்*...

#*மூத்தவழக்கறிஞர்
என்டிவி
#நூற்றாண்டு*!
————————————
இந்த ஆண்டு தெற்குச் சீமையில் பிறந்த மூத்த வழக்கறிஞர் நாங்குநேரி திருவேங்கடாச்சாரி வானமாமலைக்கு நூற்றாண்டு. நெல்லைச் சீமையில் காருகுறிச்சி அருணாசலம், கு.அழகிரிசாமி, தொமுசி, கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் பாளை சண்முகம் மட்டுமல்லாது, எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த ஆண்டுதான் நூற்றாண்டு.  நடிகமணி டி.வி.நாராயணசாமி எம்.ஜி.ஆரை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தியவர். தொடக்க காலத்தில் கலைஞர் திருவாரூரில் இருந்தபோது, அண்ணாவிடம் கலைஞருடைய ஆற்றல்களை எடுத்துச் சொன்னவர். அதுமட்டுமல்ல, தி.மு.க.வில் கண்ணதாசனோடு நடிகமணி பணி செய்ததை கவிஞரே பாராட்டியுள்ளார். ஈ.வி.கே.சம்பத்துக்கும் அண்ணாவுக்கும் பிரச்னைகள் ஏற்பட்டபோது, காவலர் கூட்டத்தை நடத்தியவர்களில் நடிகமணியும் ஒருவர். நூற்றாண்டு காணும் இவர்கள் அனைவரும் எங்களின் நிமிர வைக்கும் நெல்லை மண்ணின் மைந்தர்கள்.



தமிழகத்தில் ஞானபீடம் பெற்ற இருவரில் ஒருவர் அகிலன். அவருக்கும் நூற்றாண்டுதான். ஆனால் அவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூர். அகிலனுடைய நூற்றாண்டு விழாவை அவருடைய பெருங்காளூர் கிராமத்தில் அண்ணன் புலவர் மதிவாணன் நடத்தியதாக நானறிந்த வரையில் தகவல். இத்தனை ஆளுமைகளுடைய நூற்றாண்டு இந்த வருடம். இவர்களைப் பற்றிய ஒரு பேச்சு பரவலாக, விசாலமான தளத்தில் இல்லையே என்பதுதான் வருத்தம். போலியாக சில நபர்களை பிம்பங்களாகக் கட்டமைத்துக் கொண்டாடுவது, இங்கு வாடிக்கையாகிவிட்டது. பாரதியினுடைய, ‘விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய்... எனக்குரை யாயோ?’ என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
நூற்றாண்டு காணும் வழக்கறிஞர் என்.டி.வி.யைப் பற்றி 50 - களின் இறுதிகளிலேயே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் தந்தையாருக்குத் தெரிந்தவர். பிற்காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பழகி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரோடு வழக்குகள் நடத்தக் கூடிய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன.  
சற்று மங்கலான நினைவு, 1959 – இல் ஒருமுறை நெல்லையில் அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இருந்த நீதிமன்றத்துக்கு எனது தந்தையார் என்.டி.வி.யைச் சந்திக்கச் சென்றபோது, என்னை அழைத்துச் சென்றார். அப்போது, இளமையாக இருந்த என்.டி.வி.யை வழக்கறிஞர் உடையோடு பார்த்து நான் பிரமித்ததுண்டு. நெல்லையில் அன்றைக்குப் புகழ்பெற்ற சந்திரவிலாஸ் ஓட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றது எல்லாம் இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. நெல்லை நீதிமன்றத்தில் என்.டி.வி.,      செல்லப்பாண்டியன், பாலாஜி என்ற சிறப்பான குற்ற இயல் சட்ட வழக்கறிஞர்கள் என அறியப்பட்டனர். அப்போது நரசிம்மபாரதி என்பவர் மாவட்ட நீதிபதியாக இருந்தார்.  

அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகராகவும் என்.டி.வி. வலம் வந்தார். பாளை ஜவஹர் மைதானம், நெல்லை டவுண் காந்தி சிலை அருகே நடக்கும் கூட்டங்கள், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பை என அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட ஊர்களில் நடக்கும் கூட்டங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் என வடக்கே இருந்து அன்றைய கேரளாவில் இருந்த குமரி மாவட்ட எல்லை களியக்காவிளை வரை உள்ள ஊர்களில் நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் எல்லாம் என்.டி.வி. இரவில் சென்று உரையாற்றுவார். அப்போது அவருடைய உரைக்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது.
பகலில் வழக்கறிஞர் பணி; இரவில் கட்சிப் பணி என்று இளமைக்காலத்தில் கடந்து வந்தவர். ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், பாலதண்டாயுதம், ஏ.நல்லசிவன், ஐ.மாயாண்டிபாரதி, ஆர்.எஸ்.ஜேக்கப், மீனாட்சிநாதன் உள்ளிட்ட 51 பேருக்கு மேல் உள்ளவர்களின் மீது, 1952 - இல் கம்யூனிஸ்ட்களின் மீது நெல்லை சதி வழக்கு தொடுக்கப்பட்டு அவர்கள் கடுமையான தண்டனைக் கைதிகளாக இருந்தனர். அப்போது, நெல்லை வழக்குமன்றத்தில் வழக்கு நடத்தி என்.டி.வி. அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். அது அன்றைக்குப் பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.
அதேபோல, கம்யூனிஸ்ட்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏன் ஆந்திரம், மலபாரிலிருந்து வந்து எட்டயபுரம் வட்டாரத்தில் உள்ள பிதப்புரம், சிந்தலக்கரை, குளத்துள்ளாபட்டி, கோட்டுர், கரந்தை என கோவில்பட்டி பல பகுதியில் உள்ள பல கிராமங்களில் தலைமறைவாக இருந்த நேரத்தில், அவர்களுக்குப் பாதுகாவலராக இருந்தவர் என்.டி.வி. எனவே கோவில்பட்டித் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வெற்றி பெறும். இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சோ.அழகிரிசாமி தொடர்ந்து வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் என்.டி.வி. போன்றவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது, என்.டி.வி. சி.பி.ஐ.லேயே தங்கிவிட்டார். நல்லகண்ணு, நா.வானமாமலை போன்றவர்களோடு சேர்ந்து தான் பிறந்த  நாங்குனேரியிலுள்ள ஜீயர் மடத்துக்கு எதிராக சாமானிய மக்களைப் பாதுகாக்கவும் போராட்டங்கள் நடத்தியதெல்லாம் உண்டு.  
 இவருடைய தந்தையார் நா.திருவேங்கடாச்சாரியார் கல்கத்தாவில் தோல் தொழிற்சாலையை நடத்திய தொழிலதிபர். கல்கத்தாவில்தான் என்.டி.வி. பிறந்தார். 

வீர வைணவ குடும்பத்தைச் சார்ந்தவர்.  பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் இராசயனத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞரானார். சென்னையில் இவர் விடுதியில் தங்காமல் இவர் தந்தையார் விரும்பியபடி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரே உள்ள நாங்குனேரி ஜீயர் மடத்தில் தங்கித்தான் பட்டங்களைப் பெற்றார். அப்போது அவரின் குடும்பப் பாரம்பரியப்படி தலையில் குடுமி, கையில் நாலாயிர திவ்ய பிரபந்தந்தத்தை வைத்துப் படித்துக் கொண்டே இருப்பார். இது அவருடைய இளமைக்காலம்.
அந்தண சமுதாயத்தைச் சேர்ந்த பலர் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர். அவர்களைப் போலவே கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் என்.டி.வி. சேர்ந்தார். புதுமையான கருத்துகள், லெனினின் தாக்கம், மார்க்சிய சிந்தனைகள் இவர் மனதை ஆக்கிரமித்தன. 

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 1964 – இலில் இருந்து மத்திய முன்னாள் அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோடு இணைந்து கிரிமினல் வழக்கறிஞராகப் பணிகளை மேற்கொண்டார்.  

என்.டி.வி. அவர்களின் வழக்கறிஞர் அலுவலகத்தில் அசோக்குமார், கே.என்.பாஷா, சுதந்திரம் போன்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். கே.என்.பாஷாவும், சுதந்திரமும் பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்புக்கு வந்தனர்.
அந்த காலகட்டத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் என்.டி.வி.,  ஆஜர் ஆனார்.தலைவர் கலைஞர் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கலைஞரிடம் குறுக்கு விசாரணை நடத்தியவரும் இவரே.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிக்குச் சென்றபோது, என்னைத் தட்டிக் கொடுத்தவர் என்.டி.வி. எனக்கு இஸ்கஸ் - இல் (இந்தோ சோவியத் நட்புறவுக் கழகம்) பணியாற்ற பொறுப்புகளைத் தந்தார். மதுரையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடந்த இஸ்கஸ் மாநாட்டில் ராஜபாளையம் அலெக்ஸும் நானும் முக்கிய பணியாற்றியதை என்.டி.வி. பாராட்டியதும் உண்டு. இஸ்கஸ்ஸில் அன்றைக்கு என்.டி.சுந்தரவடிவேலு, ஜெயகாந்தன், சமுத்திரம், சிற்பி, மதுரை டாக்டர் திருஞானம் என பல நிர்வாகிகள் இருந்தனர். இன்றைக்கு சென்னை சோவியத் ரஷ்யா அரங்கத்தில் பொறுப்பாளராக இருக்கிற தங்கப்பனுடைய பணி பெரிதானது.  

கீழ்ப்பாக்கம் மாணிக்கேஸ்வரி சாலையில் இருந்த என்.டி.வி. இல்லத்துக்கு எண்ணிலடங்காமுறை நான் சென்றது உண்டு. மூத்த வழக்கறிஞராக அவரை வைத்து பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தியதும் உண்டு. வெறும் தந்தியை வைத்துக் கொண்டு, வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் தள்ளுபடி செய்த நிலையில் - இனி தூக்குத் தண்டனைதான் என்ற நிலையில் – வைகோ மற்றும் என்னுடைய நீதிமன்றப் பணிகளை வைத்து என்.டி.வி. வாதாடி, குருசாமியின் தூக்குக் கயிறை அறுத்துத் தூக்கிலிட்டார் என்பதெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவை. இன்றைக்கு தூக்குத் தண்டனையை ஒழிப்போம் என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இத்தனை வசதிகள் இல்லாத அன்றைக்கு தூக்குத் தண்டனை கைதியைக் காப்பாற்றியது நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாகும். இதில் என்.டி.வி.இன் பங்கு முக்கியம். இந்த வழக்கில் வழக்கறிஞர் கட்டணம் கூட வாங்க அவர் மறுத்துவிட்டார்.  
அதைப்போல, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாண்டிபஜார் வழக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் மீதான பல வழக்குகள், வேறு சில வழக்குகள் என தொகுத்தால் அவையே பெரும் பட்டியலாகிவிடும்.

இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழகக் கிளையின் செயலாளர்களாக என்னையும் வழக்கறிஞர் கீதா ராமசேஷனையும் நியமித்தார். இந்த அமைப்பின் தமிழக நிர்வாகிகளாக அன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி, என்.டி.வி., ப.சிதம்பரம், கே.டி.கோசல்ராம் சகோதரர் கே.டி.பால்பாண்டியன்,  ஆர்.காந்தி,      வழக்கறிஞர் தண்டபாணி என சில முக்கியமானவர்களெல்லாம் இடம் பெற்றனர். அப்போது இந்திராகாந்தி படுகொலை நிகழ்ந்தது. இந்த அமைப்பின் சார்பில் நானும் கீதா ராமசேஷன் போன்றவர்கள் எல்லாம் கோவையில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களைச் சந்தித்து ஆய்வு செய்து அறிக்கையாக அளித்தோம். அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் என்.டி.வி.யும், ப.சிதம்பரமும், கே.டி.பால்பாண்டியனும் வாதாடி கோவை சீக்கியர்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட அளவுக்கு இழப்பீடுகளைப் பெற்றுத் தந்தமைக்கு கோவையில் பாராட்டு நிகழ்வு நடந்ததெல்லாம் 
கடந்த கால நிகழ்வுகள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், பழ.நெடுமாறன், வைகோ, தமிழக விவசாய சங்கத் தலைவராக இருந்த சி.நாராயணசாமி நாயுடு, தமிழக சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ஜி.கருத்திருமன், இலங்கைத் தமிழ்த்தலைவர் அ.அமிர்தலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சி சோ.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்றவர்களை என்.டி.வி.யின் வீட்டுக்கு எந்த நேரத்திலும் அழைத்துச் செல்லக் கூடிய உரிமை எனக்கு இருந்தது. 

அவர் வீட்டு மாடியில் வழக்கறிஞர் அலுவலகம். அவருடைய மேஜையின் நேராக சுவரில் பதிக்கப்பட்ட பலகையில்  அந்த வாரத்தின் லிங்க், மெயின்ஸ்ட்ரீம், இபிடபிள்யூ, செமினார், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஆன்லுக்கர், சன்டே, டைம்ஸ் ஆகிய இதழ்கள் வரிசையாக, நேர்த்தியாக கண்ணில் படும். அவருடைய உபசரிப்பில் நெல்லை உணவின் மணத்தைப் பலமுறை அனுபவித்ததுண்டு. இவருடைய துணைவியார் வேலூர் நகரத்தைச் சேர்ந்தவர். இன்முகம் காட்டி வரவேற்பார். இறுதிக் காலத்தில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து இவருடைய மைத்துனர் வி.கோபிநாத் குடியிருந்த மயிலாப்பூருக்கு வீட்டை மாற்றிக் கொண்டார். இறுதி காலங்களில் அடிக்கடி அவரை நான் சந்திப்பது உண்டு.  

கலைஞர், நெடுமாறன் ஆகிய பல தலைவர்கள் பங்கேற்ற என் திருமணத்தில் கலந்து கொண்டு அவர் உருக்கமாகப் பேசியதும், தினமணி கட்டுரைகள் அடங்கிய எனது ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ நூல் வெளியீட்டு விழா 1995 –இல் மயிலை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றபோதும் கலந்து கொண்டு அவர் பேசிய பேச்சுகள் இன்றைக்கும் நினைவில் உள்ளன.  

இறுதியாக அவரிடம் நான் கேட்ட வார்த்தைகள்: “உடம்பு வயசாயிட்டுதுல்ல... சற்று அமைதியாக ஓய்வெடுப்பேன்” என்பதுதான். அவர் அன்றைக்கு சொன்ன சொற்கள், இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றன.  

என்.டி.வி. என்ற மனிதநேயருக்கு நூற்றாண்டு. அவர் புகழை நினைவு கொண்டு போற்றுவோம்.
கட்டுரையாளர்:
அரசியலாளர்

#மூத்தவழக்கறிஞர்_என்_டி_வி
#ksrpost
5-11-2022.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...