Tuesday, November 29, 2022

இந்து மகாசமுத்திரத்தை குறித்து ‘சீனா அரசின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எஜென்சி’ ஓர் ஆலோசனைக் கூட்டத்தை குன்மிங் நகரில் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு அழைப்பில்லாமல்

*தமிழ் தினசரி செய்தித்தாள்களே... ஊடகங்களே... இதழ்களே... இதையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையா? அவசியமில்லையா?*
 ————————————-
இந்து மகாசமுத்திரத்தை குறித்து ‘சீனா அரசின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எஜென்சி’ ஓர் ஆலோசனைக் கூட்டத்தை குன்மிங் நகரில் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு அழைப்பில்லாமல் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், தென்னாப்பிரிக்கா, கென்யா, முசாம்பிகா, தான்சானியா, சீசெல்ஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ், டிஜிபௌட்டி, ஆஸ்திரேலியா என 19 நாடுகளை அழைத்து நடத்தியிருக்கிறது.  



இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியாவும் மாலத்தீவும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

சீனாவுக்கு எதற்கு இந்த அடாவடித்தனமான வேலை? கள்ளத்தனமாக காய்களை நகர்த்தி, சீனா வட எல்லையில் இந்தியாவுக்கு தொடர்ந்து சிரமங்களைக் கொடுத்ததுபோல, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், கச்சத்தீவு அருகே உள்ள காற்றாடி உற்பத்தி, மற்றும் பட்டுவழிச் சாலை என்று வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டப் பார்க்கிறதா? ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் டிகோகார்ஷியா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் நடமாட்டம் இருப்பது அறிந்ததே. இப்படி இந்தியாவை அழைக்காமல் இந்தியப் பெருங்கடல் மாநாட்டை சீனா கமுக்கமாக நடத்தும் கள்ளத்தனம் எதற்கு? 
பொதுவுடைமைக் கொள்கையை ஆதரிக்கிறோம். ஆனால் இப்படியான சீன நிலைப்பாட்டைக் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டுகள் என்ன சொல்லப் போகிறார்கள்? 
இந்தியா உள் அரசியலி்ல் எப்போதும் மனமாச்சரியங்கள் உண்டு. ஆனால் இந்திய பாதுகாப்பு விடயத்தில் எப்போதும் எல்லாருக்கும் ஒரே மனநிலைதான் இருந்து வந்திருக்கிறது.
சீனா இப்படி மாநாட்டை நடத்துவதை எளிதில் விட்டு விட முடியுமா? 

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஆபத்து. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இருப்பு அதிகமானால் கூடங்குளம், தூத்துக்குடி துறைமுகம், மகேந்திரகிரி ஹெவி வாட்டர் புராஜெக்ட், ஐஎன்எஸ் கட்டபொம்மன், கல்பாக்கம் என தெற்கே இருந்து சென்னை, விசாகபட்டினம் வரை உள்ள முக்கிய கேந்திரங்கள், துறைமுகங்களுக்கு ஆபத்தல்லவா?
 வங்கக் கடலில் இப்படி ஒரு சிக்கல் இருக்கும்போது அரபிக்கடலிலும் கேரளத்தின் தெற்கே தும்பாவிருந்து கொச்சின் துறைமுகம், மங்களூர் என அரபிக் கடல் ஓரத்திலும் சீனா சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.  இப்படி 19 நாடுகளை அழைத்தது இந்தியாவுக்கு எதிராக அவர்களைத் திசை திருப்பத்தானே? சீனாவில் மாநாடு இப்படி ஒரு மாநாடு நடத்த என்ன அவசியம் இருக்கிறது? இந்த மாநாட்டை சீனா நடத்தியதன் முழுநோக்கமே, இந்த நாடுகளின் ஆதரவோடு இந்தியாவுக்கு எதிராக சீன காய்களை நகர்த்தத்தான்.
 இந்த விடயம் குறித்து பிரதமர்,தமிழக முதல்வர் அறிவாராகளா என்று தெரியவில்லையா. இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பால்  தமிழகத்திற்கு ஏற்படும் எதிர்கால எதிர்வினைகளை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதச் சொல்லி் முதல்வரிடம் குறிப்புகள் கொடுத்தேன். அவர் கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விடயம். 

சீனா நடத்தியுள்ள மாநாடு குறித்து பிரதமர் கடுமையான எதிர்வினைகள் ஆற்ற வேண்டியது அவசரமான கடமை மட்டுமல்ல, அவசியமான அணுகுமுறையும் கூட. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
இந்த செய்தியை மட்டுமல்ல, இன்னொரு முக்கிய விடயத்தையும் தமிழக செய்தி நிறுவனங்களும் ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை என்பது இன்னொரு வருத்தமான செய்தி.  
 கடந்த 10 நாட்கள் முன் இந்திய அரசில் சார்பில் அஜித் தோவலும், ரா தரப்பில் இருந்து அதனுடைய தலைவர் சமந்த்குமார் கோயலும் இலங்கை சிங்கள அரசோடு ஈழத்தமிழர் பிரச்னை குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இலங்கைப் பிரதமர் ரணிலுடன் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது தவறு என்று சுட்டிக்காட்டியும், தமிழ் மாணவர்களை பாகிஸ்தான் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்ப சம்மதித்ததும், தமிழ்நாட்டில் குற்றவாளியாக வலம்வந்த இலங்கை மீன்வளத்துறை டக்ளஸ் தேவானந்தம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு - யாழ்ப்பாணம், திரிகோண மலைக்கு – சீன, பாகிஸ்தான் தூதர்களை அழைத்துச் சென்று தமிழர்களைச் சந்திக்க வைத்ததும் எவ்விதத்திலும் நியாயமில்லை என்று கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். தமிழக மீனவர்களைக் கைது செய்தது குறித்தும், அவர்களுடைய படகுகளை நாசப்படுத்துவது குறித்து ரணிலிடம் கடுமையாக எடுத்துச் சொல்லப்பட்டது என்றும் கொழும்பு நண்பர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தூதர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது, கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை விரட்டி அடித்தது குறித்து அக்கறையாக கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விடயங்களைக் குறித்தெல்லாம் இந்தியா தரப்பிலிருந்து ரா தலைவர் ரணிலுடன் பேசியுள்ளார் என்று தெரிகிறது.
இதைக் குறித்து என்னுடைய சமூக  ஊடகத்தில் அப்போதே பதிவிட்டேன், யாரும் கண்டு கொள்ளவில்லை. அஜித் தோவலும், ராவின் தலைவர் சமந்த்குமார் கோயலும் ரணில் விக்ரமசிங்கை சந்தித்ததைக் கூட தமிழகப் பத்திரிகைகள் வெளியிடவில்லை ஊடகங்களும் சொல்ல வில்லை என்றால், என்ன எழுதுகிறார்கள்? என்ன செய்தி வெளியிடுகிறார்கள்?  
 அவருக்கு அமைச்சர் பதவி தயாராகிவிட்டதா? என்ன துறை கொடுக்கப் போகிறார்கள்? ஒப்பாணி - சப்பாணி இணையப் போகிறார்களா? அவ்வையார் பிராட்டி தலைமை தாங்கப் போகிறாரா என்று உப்புக்குச் சப்பில்லாத செய்திகளைப் பரபரப்பாக வெளியிடுவதுதான் ஊடகங்களின் பணியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை ஈழத்தமிழர்களைப் பற்றிய முக்கிய செய்திகளை வெளியிடுவதைப் பற்றி பலருக்கும் அக்கறையில்லை.  
 சில விலை போன வேடிக்கை மனிதர்கள்  காக்காக் கூட்டத்தின் உறுப்பினர்கள் தானே? ஆயிரம் உலக நியாயங்களை வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் நாட்டுக்குத் தேவையான முக்கியமான செய்திகளைப் பற்றி அக்கறை கொள்ளமாட்டார்கள். என்ன செய்வது?

#ksrpost
29-11-2021.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...