Tuesday, November 8, 2022

#*அரசியல் சாசன_42 ஆவது திருத்தம், அன்றய நிலைப்பாடுகள், நேற்றைய சென்னை உ.யர்நீதி மன்றத்தில் வைத்த வாதங்கள், அன்றைய திமுகவின் நிலைப்பாடு* (*1976-77*)



————————————
நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பைச் சார்ந்தவர்கள் அரசியல் சாசன 42 ஆவது திருத்தத்தைப் பற்றிய வாதங்களை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.சுந்தர், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் வைத்துள்ளனர். திமுக வாதத்தை அடர்த்தியாக வைக்கவில்லை.
 
அவசரநிலைக் காலத்தில் சுவரண்சிங் குழுவின் பரிந்துரைகளை ஏற்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 42 ஆவது திருத்தத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றினார். இதற்கு அன்றைக்கு கணக்கில் இருந்த மாநிலங்களில் 20 மாநிலங்கள் சட்டப் பேரவையில் ஒப்புதல் அளித்துள்ளன என்ற ஒரு வாதத்தை முன்வைத்தார். 42 ஆவது திருத்தம் ஜனநாயகத்தைப் படுகுழியில் புதைக்கக் கூடிய சட்டமாக நிறைவேறியது. அன்றைக்கு அவசரநிலை காலம் என்பதால், எளிதாக இந்திராகாந்தி அதை நிறைவேற்றிவிட்டார்.
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதையெல்லாம் வாதங்களில் எடுத்து வைத்துள்ளனர். இதில் ஒரு விட.யத்தைச் சொல்லியாக வேண்டும். கல்வியை மாநிலத்திலிருந்து பொதுப்பட்டியலில் சேர்க்கும்போது கல்வியறிஞர் டாக்டர் நூருல்ஹசன்தான் மத்திய கல்வி அமைச்சராக இருந்தார். அவர் பல் கலை அறிஞரும் கூட. அன்றைக்கு தமிழகத்தில் கலைஞரின் திமுக ஆட்சி. கல்வியைப் பொதுப்பட்டியலில் சேர்க்கும்போது கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுக்கின்ற கதையாக அது மாறியது.  

 42 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை இந்திராகாந்தி கொண்டுவரும்போது  நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்துக் கொடுத்துக் குரல் கொடுத்தவர் இரா.செழியன் அவர்கள்தான். கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றும்போது இன்று போல் பெரிய விவாதமோ, எதிர்ப்போ அன்றைக்குத் தமிழகத்தில் இல்லை என்பது அந்த காலகட்டத்தில் அரசியல் களத்தில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். 

ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளாகிவிட்டன. இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த உண்மைகள் சரியா என்று பழைய ஆவணங்களைக் கொண்டு சரி பார்த்துக் கொள்ளலாம்.

 கல்வி சம்பந்தமான பிரச்னைகளில் தற்போது நடக்கும் விவாதங்கள், எதிர்வினைகள் எதுவுமே அவசரநிலை காலமான 1976 - இல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 42 ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தையும், கல்வியைப் பொதுப்பட்டியலில் அன்றைக்கு மாற்றியபோது, இன்றைக்கு நடக்கின்ற கடுமையான, வெப்பமான விவாதங்கள் அப்போது இல்லை. இருப்பினும் அன்றைக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெ.பி.கிருபளானி தலைமையில் ‘அமைதிப் புரட்சி  ’ என்ற நிலையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் அகில இந்திய அளவில் கடுமையாக எதிர்த்துப் போராடினர். சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

சுவரண்சிங் குழுவின் பரிந்துரையின்படி, இந்த  42 ஆவது அரசியல் சாசனத் திருத்தம், இந்திராகாந்தி காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த எச்.ஆர்.கோகலேவால் மசோதாவாகக் கொண்டு வரப்பட்டு, 3.1.1977 - இல் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய அன்றைய அமைச்சர் மறைந்த செ. மாதவன் தலைமையில் ஒரு குழுவை திமுக அமைத்தது.

கடும் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்ட இந்த 42 ஆவது திருத்தம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் அரசியல் சாசன அதிகாரங்களை ஆட்சியாளர்கள் தமது கைகளில் எடுத்துக் கொள்ள உதவியது. அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக இந்தச் சட்டத் திருத்தம் இருந்தது. அது மட்டுமல்லாமல், அடிப்படை கடமைகள் என்ற ஒரு புது பிரிவும் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. இதை ‘மினி கான்ஸ்டிடியூஷன்  ’ என்று அன்றைக்குக் கிண்டலாகச் சொன்னார்கள். 

ஆட்சியாளர்கள் கையில்தான் எல்லா அதிகாரமும் என்ற வகையில் இந்த 42 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
பிரதமர் மொரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி அமைந்தபோது, இந்த 42 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் திரும்பப் பெறப்பட்டது. அன்றைக்கு சாந்திபூஷண் மத்திய சட்ட அமைச்சர். இந்த 42 ஆவது திருத்தச் சட்டத்தை 43, 44 ஆவது திருத்தங்களின் மூலம் முறையாக 1977 -78 இல் திரும்பப் பெற்றனர்.

இவற்றையெல்லாம் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
உச்சநீதிமன்றமும் 31.07.1980 அன்று மினர்வா மில் வழக்கிலும், 42 ஆவது 
சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; அது ஜனநாயகரீதியாகச் செல்லக் கூடியதல்ல என்ற தீர்ப்பை வழங்கியது. மேலும் கேசவானந்தபாரதி   எதிர் கேரள அரசு, கோலக்நாத் எதிர்  பஞ்சாப் மாநிலம் ஆகிய இரண்டு வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் தெளிவாக அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகளை( basic structure)மாற்ற, திருத்த நாடாளுமன்றத்துக்கு உரிமையில்லை என்று தீர்ப்பை வழங்கியது.
 
அன்றைக்கு இந்த கொடிய திருத்தங்களை அவசரநிலைக் காலத்தில் இந்திராகாந்தி கொண்டு வந்தபோது திமுகவின் சார்பில் நாடாளுமன்றத்தில் இரா.செழியனின் பங்களிப்பு மட்டும்தான் இருந்தது. கச்சத் தீவு பிரச்னையிலும் அவர்தான் கடுமையாக இலங்கைக்கு அந்தத் தீவைக் கொடுக்கக் கூடாது என்று கருத்துகளை எடுத்து வைத்தார். அவற்றையெல்லாம் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் கல்வியைப் பொதுப்பட்டியலில் மாற்றும்போது பெரிய எதிர்ப்புக் குரல் எழுப்பப்படவில்லை என்பதுதான் அன்றைய நிலைப்பாடாக இருந்தது. 42 ஆவது திருத்தத்துக்கு  கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள் அன்றைய ஜனசக்தி, பார்வர்ட்பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தது உண்டு.  இதைச் சொல்வது என்னுடைய கடமை.

#அரசியல்_சாசன_42_ஆவது_திருத்தம், 

#ksrpost
8-11-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...