Thursday, August 3, 2023

தமிழ் கலைக்களஞ்சியம்

#கலைக்களஞ்சியம் 
———————————
சென்னை ராஜதானியின் ஓமந்தூரர் விருப்பத்தின் பேரில்  டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து  வெளியிட்டது பெரிய பணி, சாதனையாக  அன்றைய சென்னை மாநிலத்தில் பேச்சும், விவாதமும்  இருந்தது.

ஒவ்வொரு வீட்டிலும் இந்த தொகுதிகள் இருப்பது அறிவுபூர்மாக பார்க்கப்பட்டது. எனது தந்தையார் இந்த தொகுதிகளை வாங்கி படித்து, பாதுகாத்து வந்தார். அவை இன்று அதன் கட்டமைப்பு கிழிந்து பக்கம் பக்கமாக ஆகிவிட்டது. இது குறித்து அன்றைய திமுக நிர்வாகி க. அன்பழகன் ( பேராசிரியர்- அன்று மேலவை உறுப்பினர்- எல்எல்சி )  கடுமையாக எதிர் வினைகளை தனது கடிதங்கள் மூலம் ஆற்றியதுண்டு. அண்ணா இதை மறுத்து பேச வேண்டாம் என அவருடம் சொன்னதுண்டு.










தமிழ்க் கலைக்களஞ்சியம் (1948 -1968 ) தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது; பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார். சென்னை ராஜதானியின் ஓமந்தூரர் விருப்பத்தின் பேரில் இந்த பணி
துவங்கியது.

பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் 1963ல் வந்தபோது அப்போதைய முதலமைச்சர் கு.காமராஜ் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.
இந்திய குடியரசுத் தலைவர் பத்ம பூஷன் 1968ல் விருது வழங்கி தூரனை கௌரவித்தார்.

கோவையில் 1944 ல் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெரியசாமித் தூரன் தமிழில் ஓரு கலைக்களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்னும் விருப்பத்தை காங்கிரஸ் தலைவர்ம் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரிடம் கூறினார்.ஆர். சண்முகசுந்தரம் ஒருங்கிணைக்க ஜி.டி.நாயுடு ஆதரவுடன் நடந்த இலக்கிய மாநாடு இது.

1947 ல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றபோது அப்போது தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் (1946 -1949) கல்வி அமைச்சராகப் பணியாற்றிய அவினாசிலிங்கம் செட்டியார் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை விரிவான முன்மொழிவாக வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்). தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் ஏற்கனவே தூரனுக்கு அணுக்கமானவர். அவர் நிறுவிய ராமகிருஷ்ணா கல்விநிலையங்களில் தூரன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவினாசிலிங்கம் செட்டியார் அந்த மாநாட்டிலேயே ஒரு கலைக்களஞ்சியப் பணியை தொடங்கும் செய்தியை அறிவித்தார். 1946 ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பரப்பவும், அறிவியலை தமிழில் கற்பிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. கலைக்களஞ்சியம் உருவாக்க ஒரு துணையமைப்பு உருவாக்கப்பட்டு கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் பெரியசாமித் தூரன் நியமிக்கப்பட்டார்.

கலைக்களஞ்சிய பதிப்பாசிரியர் குழு:

தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்
ஏ.லட்சுமணசாமி முதலியார்
எஸ்.ஜி மணவாள ராமானுஜம்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
ஆர்.என். செல்வம்
டி.எஸ்.சதாசிவன்
ரா.பி. சேதுப்பிள்ளை
எச்.கோவிந்தராஜுலு நாயுடு
கே.சுவாமிநாதன்
டாக்டர் மு. வரதராசன்
பா.நடராஜன்
டி.என்.சேஷாத்ரி
நா. அனந்த வைத்தியநாதன்
கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி
பொ.திரிகூடசுந்தரம்
ப.மு.சோமசுந்தரன்
ம.ப.பெரியசாமித் தூரன்
அலுவலர் குழு
ம.ப.பெரியசாமித் தூரன்
பொ.திரிகூடசுந்தரம்
ப.மு.சோமசுந்தரன்
பூ.அ.பாஷ்யம் ஐயங்கார்
ஜ.இராஜு முதலியார்
நா.கி.நாகராஜன்
ந.சுப்ரமணியம்
பு.மு.ரத்னசபாபதி முதலியார்
கு.மதுரை முதலியார்
சிறுவை மோகனசுந்தரன்
கீ.ச.கணபதி

கலைக்களஞ்சியத்தின் அமைப்பு:
கலைக்களஞ்சியம் 7,500 பக்கங்களும் 15000 கலைச்சொற்களும் கொண்டது.

தொகுதி 1 - 1954 ஆம் ஆண்டு - 742 பக்கங்கள்
தொகுதி 2 - 1955 ஆம் ஆண்டு - 760 பக்கங்கள்
தொகுதி 3 - 1956 ஆம் ஆண்டு - 756 பக்கங்கள்
தொகுதி 4 - 1956 ஆம் ஆண்டு - 778 பக்கங்கள்
தொகுதி 5 - 1958 ஆம் ஆண்டு - 750 பக்கங்கள்
தொகுதி 6 - 1959 ஆம் ஆண்டு - 770 பக்கங்கள்
தொகுதி 7 - 1960 ஆம் ஆண்டு - 754 பக்கங்கள்
தொகுதி 8 - 1961 ஆம் ஆண்டு - 758 பக்கங்கள்
தொகுதி 9 - 1963 ஆம் ஆண்டு - 751 பக்கங்கள்
தொகுதி 10- 1968 ஆம் ஆண்டு - 560 பக்கங்கள்.

நிதி
கலைக்களஞ்சியப் பணிக்கு ரூ 14 இலட்சம் செலவு மதிப்பிடப்ப்பட்டு அரசு நிதியுடன் தனியார் நன்கொடைகளும் திரட்டப்பட்டன. முதல் திட்டமதிப்பான பத்துலட்சத்தில் ஐந்து இலட்சத்தை ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் வீதம் தருவதாக சென்னை அரசாங்கமும், மூன்று இலட்சத்தினை ஆண்டொன்றுக்கு எழுபத்தைந்தாயிரம் வீதம் நான்காண்டுகளில் தருவதாக மத்திய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டன. திருப்பதி தேவஸ்தானம் ஐம்பதினாயிரமும் வழங்க ஒத்துக்கொண்டது. அன்றிருந்த புரவலர்களிடமும் நிதி திரட்டப்பட்டது. அழகப்பச் செட்டியார், எம்.ஏ.முத்தையா செட்டியார், தருமபுரம் ஆதீனம், டி.ஏ.ராமலிங்கச் செட்டியார், கருமுத்து தியாகராஜச் செட்டியார், ட்ரோஜன் அண்ணாமலைச் செட்டியார், கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி, திருவாவடுதுறை ஆதீனம், நா.ம.ரா.சுப்பராமன் ஆகியோர் நிதியளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தேசப்பிரிவினைக் கலவரங்களை ஒட்டிய நிதிநெருக்கடிகளால் மையஅரசு வாக்களித்த பணம் வந்துசேரவில்லை. அவினாசிலிங்கம் செட்டியார் தொடர் கடிதங்கள் வழியாக நிதியை திரட்டினார்.

கலைக்களஞ்சியங்கள் அறிவியக்க வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ச்சியாக புதுப்பிக்கப் படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டியவை. தமிழில் அறுபதுகளுக்குப்பின்னர் நவீன இலக்கியம், அறிவியல்தமிழ், இதழியல் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி உருவானது. தமிழ்வழிக் கல்வி பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்லப்பட்டமையால் எல்லா துறைகளிலும் புதிய கலைச்சொற்கள் உருவாயின. ஆனால் அதற்கேற்ப பின்னர் இக்கலைக்களஞ்சியம் புதுப்பிக்கப்படவில்லை. மாறாக வேறுபெயர்களில் புதிய கலைக்களஞ்சியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவை எவையும் உரியமுறையில் முழுமைப்படுத்தப்படவோ, அறிவியமுறைப்படி சீரான ஆசிரியநெறியுடன் உருவாக்கப்படவோ இல்லை. வெவ்வேறு கல்வியாளர்கள் வெவ்வேறு தரநிலைகளில் எழுதிய, மேற்பார்வையும் மறுதொகுப்பும் செய்யப்படாத கட்டுரைக்குவியல்களாகவே அவை அமைந்தன. ஆகவே தூரனின் கலைக்களஞ்சியமே இன்றும் தமிழின் ஒரே அதிகாரபூர்வ கலைக்களஞ்சியமாக நீடிக்கிறது.

 பொதுக் கலைக்களஞ்சியப் பணி 1963 முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். அந்த வேலை ஏழு ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வெளிவந்தன.


No comments:

Post a Comment