Monday, August 21, 2023

“கடவுளைக் காண நான் தேர்ந்தெடுத்த பாதை இசை” -#பிஸ்மில்லாகான்

“கடவுளைக் காண நான் தேர்ந்தெடுத்த பாதை இசை” 
                  -#பிஸ்மில்லாகான்

பனாரஸ் அல்லது காசி அல்லது வாரணாசி எனப் பலப்பெயர்களில் அழைக்கப்பட்டாலும், ரகசியங்களும், ஆச்சர்யங்களையும் தன்னகத் தில் கொண்டுள்ள இந்தப் புராதான நிலப்பரப்புக்கு மற்றொரு பெருமையும் உண்டு. அது உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த நகரம்! மற்றொரு இசை மேதை சிதார் கலைஞர் ரவிஷங்கரும் வாரணாசியில் பிறந்தவர்தான். வருணா மற்றும் அஸி என்ற இரண்டு சிறிய ஆறுகளுக்கிடையில் கங்கை நதி ஓடுவதால், கரையில் இருக்கும் நகரத்தின் பெயர் வாரணாசி என அழைக்கப்படுகிறது. 

பைகம்பர் கான், மித்தான் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பீகாரில் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு சூட்டிய பெயர் கமரூதின். போஜ்பூர் அரண்மையில் ஆஸ்தான ஷெனாய் வித்துவானாக இருந்தவர், அவருடைய பாட்டனார் ரஸ்சூல் பக்ஸ் கான். தெய்வீகக்களையோடு, குழந்தையின் ஒளிரும் கண்களை பார்த்த அவருடைய தாத்தா, ’கடவுளின் அருளால்’ என்ற பொருள்பட ‘பிஸ்மில்லா கான் என பெயர் சூட்டினார். இறுதிவரையில் இந்தப்பெயரே அவருக்கு நிலைத்து நின்றது.

 தன்னுடைய ஆறாவது வயதில் பிழைப்பிற்காக பெற்றொருடன் பனராஸ் வந்தார். அப்போது பனராஸ் காசி விஸ்வநாதர் கோவிலில் தினமும் ஷெனாய் வாசித்தவர், பிஸ்மில்லா கானின் மாமா அலி பக்‌ஷ். ஆறு வயது முதல் தன்னுடைய மாமா அலியிடம் முறை யாக இசையை கற்றார். கங்கை, காசி விஸ்வநாதர் கோவில், பனாரெஸ், ஷெனாய் ஆகிய நான்கும் கான் சாகிப்பின் வாழ்க்கை யோடு பின்னிப் பிணந்திருந்தது. ஒவ்வொன்றையும் தனியாக பிரிக்கமுடியாது.

பிஸ்மில்லா கான் உள்ளூரில் இருந்தால் தினமும் தன் வீட்டு வாசலில் வேப்ப மரத்தடியில் அயராமால் ஷெனாயை சாதகம் செய்பவர். பிறகு காலையில் 4 மணிக்கு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தவறாமல் செல்பவர். இசையை மட்டும் கொடையாக கொடுத்தது மட்டுமல்லாமல், தான் சம்பாதித்த அனைத்தையும் மத பேதம் பார்க்காமல் பல எழை எளியவர்களுக்கு வாரி வழங்கிய மகான்! 

பனாரஸ் தெருக்களில் சில சமயம் நடந்தும், பல நேரங்களில் சைக்கிள் ரிக்‌ஷாவில் போய் வந்தார். இறுதிவரையில் மிகச் சாதாரணமாக எளிமையாக வாழ்ந்தார். எந்த வசதியையும் பெருக்கிக்கொள்ளவில்லை. ஜன சந்தடி மிக்க பனாரஸின் குறுகிய சந்தில் உள்ள ஒண்டு வீட்டில் வாழ்ந்தவர். 

ஷியா முஸ்லிமாக இருந்தாலும், அவர் தினமும் பூஜையோடு வழிபட்டது சரஸ்வதியை! இசையும், காசியும் தான் தன் உயிர்மூச்சு என ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். கடவுளை அடைய பல வழிகள் உண்டு. நான் கடவுளைக் காண தேர்ந்தெடுத்த பாதை இசை என்கிறார். இசை வாயிலாக கடவுளோடு தினமும் உரையாடுகிறேன் என்கிறார். 

து. நான் பேறு பெற்றவன், எளியவனான எனக்கு கடவுள் கொடுத்த அங்கீகாரம், இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்” என பணிவன்புடன் குறிப்பிடுகிறார். 

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெரும் செல்வந்தர், கான் சாகிப்பின் இசையில் மயங்கி, தயவுசெய்து அமெரிக்காவுக்கு வந்துவிடுங்கள். எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறார். இதற்கு பிஸ்மில்லா கான் சொன்னது “ நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் என்னுடன் கங்கை, காசி விஸ்வ நாதர் கோவில், பனாரஸ் மூன்றும் வரவேண்டும். முடியுமா? என்றார். 

தன் வாழ்நாள்முழுவதும் மத பேதமின்றி சக மனிதனை நேசித்தார். கூடுதலாக அவருடைய ஆன்மாவுக்கு நெருக்கமாக இருந்தது பனாரஸ், காசி விஸ்வநாதர் கோவிலும், கங்கையும் நேசித்தார். தன் சக கலைஞர் களை வாயார புகழ்ந்தவர். இசைத்துறையில் பெண் களூம் வரவேண்டும் என மனதார விரும்பினார். நம் தமிழ்நாட்டு எம்.எஸ். சுப்புலட்சுமி குரலுக்கு தான் அடிமை என பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இரு மத வழிப்பாட்டு முறைகளை தன் இறுதிக்காலம் வரைக்கும் தவறாமல் பின்பற்றியவர். தினமும் இஸ்லாமிய நெறிப்படி ஐந்து முறை தொழுகை செய்தவர். மறுபுறத்தில் தினமும் காசி விஸ்வநா தரையும், பாலாஜியையும், சரஸ்வதியையும் வழி பட்டவர். ஏழு ஸ்வரங்கள்தான் என்னுடைய நமாஸ் எனக் குறிப்பிட்டுள்ளார். 

சங்கீதம் என்பது ஒரு பிரமாண்டமான சமுத்திரம். கடவுளின் சிருஷ்டியான இந்த சமுத்திரத்தை ஒரு போதும் தன்னால் கடக்க முடியாது என்றும், அதன் கரையில் நின்று. பிரமாண்டத்தின் முன்னால் கைகூப்பி நிற்கிறேன் என்கிறார்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ம் 21ம் தேதி, 93 வருடங் களாக இசைத்துக்கொண்டு கொடையாக வழங்கிய ஷெனாய் வாத்தியம் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. அவர் விருப்பப்படியே, அவர் வீட்டு வாசல் அருகில் இருக்கும் வேப்ப மரத்தடியில் நம் காலத்திய மகத்தான கலைஞன் கான் சாகிப் அடக்கம் செய்யப் பட்டார். அவரோடு அவர் ஷெனாயும் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டது!

பிஸ்மில்லா கான் நினைவு தினம் இன்று.....

நன்றி; வாசு தேவன்


No comments:

Post a Comment