Sunday, February 18, 2024

#*நாவலர் இரா.நெடுஞ்செழியன்* #*விருதுநகர் செந்தில்குமார்நாடார் கல்லூரி* … #*காசி பெனாரஸ் இந்துசர்வகலாசாலை*

#*நாவலர் இரா.நெடுஞ்செழியன்* 
#*விருதுநகர் செந்தில்குமார்நாடார்
கல்லூரி* …
#*காசி பெனாரஸ் இந்துசர்வகலாசாலை*
————————————
ஒரு முறை, 1990 இல் விருதுநகரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு  பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்த ஜெயித்த அண்ணன் பெ.சீனிவாசனும் நானும் அருப்புக்கோட்டையில் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது வழியில் விருதுநகர் செந்தில் குமார் நாடார் கல்லூரியில் கல்லூரி முதல்வரைச் சந்திப்பதாக இருந்தது.

நாங்கள் நேரில் சென்ற போது வரவேற்ற கல்லூரி முதல்வர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை சொன்னார். நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் தனது பட்டயப் படிப்பிற்கு பின்பு கல்லூரி ஆசிரியர் வேலைக்கு முதன்முதலாக எங்கள் கல்லூரித் தமிழ் துறைக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார் என்று சொல்ல எங்களது பேச்சு தொடர்ந்தது.

ஏனோ செந்தில்குமார் நாடார் கல்லூரியில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை . அதற்குப் பிறகு மதுரை தியாகராசர் கல்லூரிக்கும் முறையாக விண்ணப்பம் அனுப்பி இருந்தார். அங்கும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் காலம் அவரைக் கோபுரத்தில் பின்னாட்களில் தூக்கி  அமர வைத்தது.

அதற்குப் பிறகு பல கல்லூரிகள் அவரை வேலைக்கு வற்புறுத்தி அழைத்த போதும் மறுத்து ஒதுக்கி வைத்தார். வடக்கே காசி,பெனாரஸ் இந்து சர்வகலா சாலையில் கூட தமிழ் துறையில் பணிபுரிய அவருக்கு அழைப்பு வந்தது அதற்கு நாவலர் இணங்கவில்லை.

மதுரை கருமுத்து தியாகராச செட்டியார் தனது தமிழ்நாடு இதழில்  ஆசிரியராக பணிபுரிய அழைத்தபோதும் அதை நாவலர் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்.

அண்ணாவின் அழைப்பின் பேரில் கட்சிப் பணிகளில் அவர் ஈடுபட்டு சிறை சென்று கொண்டிருந்த அவரை அவரது துணைவியார் தயவுசெய்து சிறை செல்லாத மாதிரியான ஏதேனும் ஒரு தொழிலை மேற்கொள்ளுங்கள் என்று வற்புறுத்திய போதும் இணங்கவில்லை. பல்துறையைச் சேர்ந்தவர்கள் அவரை அவரின் தகுதி கருதி பல்வேறு வகையான வேலைகளுக்கு நியமனம் செய்து அழைத்தபோதும் தன்குறித்த எந்த வகையான முடிவாக இருந்தாலும் அது அண்ணாவின்  ஒப்புதலின் பேரில்தான் நடக்கும் என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

இதுகுறித்து அண்ணாவிடம் அணுகியபோது அண்ணா “தம்பி நாவலர் நெடுஞ்செழியன் என்னிடத்தில் இருப்பது ஜெயிலிலும்  மிஞ்சிய நேரத்தில் ரயிலிலும் இருப்பதற்காகவே ஒழிய தொட்டிலை ஆட்டுவதற்கும் வட்டிலில் போடுவதை சாப்பிடுவதற்குமாக அல்ல”
என்று சொல்லி எல்லோரையும் வியக்க வைத்ததோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

அத்தகையத் தலைவர்கள் மக்கள் பணியாற்றியதை  அதற்காகத் தங்கள் சொந்த நலன்களைக் கருதாத பாங்கினை  நினைத்துப் பார்க்கிறேன்.

#நாவலர்_இராநெடுஞ்செழியன் 
#விருதுநகர்_செந்தில்குமார்நாடார்_கல்லூரி …
#காசி_பெனாரஸ்_இந்துசர்வகலாசாலை

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்.
18-2-2024.


No comments:

Post a Comment