Friday, February 9, 2024

நாடாளுமன்றத்தில் 54 பக்க இந்திய பொருளாதார வெள்ளை அறிக்கை தகவல்கள் சில……

🟩 நாடாளுமன்றத்தில் 54 பக்க இந்திய பொருளாதார வெள்ளை அறிக்கை தகவல்கள் சில……

‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு விட்டுச் சென்ற சவால்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக எதிா்கொண்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளது’ என பொருளாதாரம் மீதான வெள்ளை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-இல் பதவி ஏற்பதற்கு முன்பாக நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், பொது நிதி நிலைமை குறித்தும் விவரிக்கும் 54 பக்க வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு, சாரதா நிதி நிறுவன முறைகேடு என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த 15 முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ள வெள்ளை அறிக்கை, ‘இந்த ஊழல் வழக்குகள் பொருளாதாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்திருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-இல் பதவியேற்கும்போது நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. பொருளாதாரத்தைப் படிப்படியாக மேம்படுத்தும் வகையில் நிா்வாகச் சீா்திருத்தங்களை பெருமளவில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருந்தது.

பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்குவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுமையாகத் தோல்வியுற்றது. பொருளாதார நடவடிக்கைகளுக்கான தடைகளையும் அந்த அரசு ஏற்படுத்தியதால், பொருளாதாரம் சரிவைச் சந்தித்தது.

பலவீனமான, செயல்பாடற்ற தலைமை காரணமாக நாட்டின் பாதுகாப்புத் தயாா்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. செலவு மிகுந்த திட்டங்கள் மற்றும் தீா்வுகள் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2013-இல் கடுமையாகக் குறைந்துள்ளது. 2004-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் 17 மாத இறக்குமதிகளுக்குப் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்த நிலையில், 2013-இல் 6 மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அளவில் மட்டுமே கையிருப்பு இருந்தது.

கடினமான முடிவுகள்: இத்தகைய சூழலில், 2014-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பொருளாதாரத்தை மேம்படுத்த சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணா்ந்து, அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. முந்தைய அரசு போன்று அல்லாமல், பொருளாதாரத்தின் அடித்தளங்களில் முதலீடுகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டு, வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கியது. தேக்கமடைந்த நிதித் துறைக்கு புத்துயிா் அளித்து, பொருளாதாரத்தில் கடன் சூழலை மாற்றியமைத்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக, உலகளாவிய சூழல் மிகப் பெரும் சவாலை சந்தித்த நிலையிலும், சிறந்த முன்னேற்றங்களைப் பதிவு செய்துவந்த இந்தியா, தற்போது உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளைத் திரும்பிப் பாா்க்கும்போது, முந்தைய அரசு விட்டுச் சென்ற சவால்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என உறுதியாகக் கூற முடியும்.

அதே நேரம், வரும் 2047-இல் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் இலக்கை அடைய, நாம் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெள்ளை அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

#whitepaperfromparliament 
#WhitePaper 
#WhitePaperonindianeconomy 
#வெள்ளைஅறிக்கை.


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...