Saturday, October 25, 2014

தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்




தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல்
----------------------------------------------------------------------------
இந்தியாவில் முதன் முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண். இன்றைக்கு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் முறை வாக்காளர்களுக்கு உள்ளது.





பிரிட்டனில் மக்களுக்கு திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பாராட்டத்தக்கது. தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைப்பது குறித்து, 1993 தினமணியில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை, எனது உரிமைக்குக்கு குரல் கொடுப்போம் நூலில் உள்ளது.

அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது :

#தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதி மொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல், அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான். தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் கிட்டத்தட்ட 80 சதவீதம் தங்கள் ஆட்சியின் காலத்தில் நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமையாகும். அவ்வாறு தேர்தல் காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்றால், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குச் சமமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் திருப்திக்கு மாறாகவும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், ஆட்சியிலிருந்து திரும்ப அழைக்கும் (Right to Recall) உரிமை மக்களுக்குத் தரப்பட வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மை அந்த நாட்டின் மக்களே ஆவார்கள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.

திரும்ப அழைத்தல் என்ற முறை ஜோன்ஸ் ஙண் ஹாரியான் (Tex Ch. App. 109 SW - 21 - 251,254 Black Law Dictionary 1989 Edition, Jones Vs Harian) என்ற வழக்கிலிருந்து உருவகப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள், தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், இலஞ்சம் வாங்குவது, உறவினர்களுக்குச் சலுகைகள் (Nepotism) போன்ற ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரும்ப அழைத்தல் கோட்பாடு ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் லோக்பால் என்ற மசோதா, ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில், முதன் முதலில் திரும்ப அழைத்தல் என்ற கோட்பாட்டுக்கு குரல் கொடுத்தவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான்.

எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டுமானால், காவிரிப் பிரச்சினையில் காவிரி விசாரணை தீர்ப்பாணை இடைக்கால நிவாரணமாக கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கோரியும், கர்நாடக அரசு சற்றும் சிந்திக்காமல் மௌம் சாதிக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரிப் பிரச்சினையில் காவிரி தீர்ப்பாணயம், இடைக்கால நிவாரணம் அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்படிப்பட்ட சாதகமான தீர்ப்பு இருந்தும், தமிழக அரசு அதை சற்றும் சிற்திக்காமல் இருந்தது. தற்பொழுது, முதலமைச்சர் காலங்கடந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினால்கூட ஆட்சியாளர்களைத் திரும்ப அழைக்கும் முறை ஜனநாயகத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.
இதேபோல மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுகொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு பல குழுக்களை அமைத்தும், இந்தக் குழுக்களின் அறிக்கையினை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்ட பொழுதும், மத்திய அரசு இந்தத் திட்டத்தைப் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் ஆகும். இப்படிப்பட்ட செயலுக்குக் கூட, மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களால் திரும்ப அழைக்கும் உரிமையை ஒரு கொள்கையளவில் செயல்படுத்தலாம்.

இதுமட்டுமன்று, ஒரு குறிப்பிட்ட தொகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பணி, நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமலிருந்தால் அவரை திரும்ப அழைக்கும் உரிமையை, அக்குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து வருட காலம் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு வாய்ப்பாக Checks and Balances இருக்கும்.

சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106இல் இந்தக் கொள்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு, கண்காணிக்க உரிமையுள்ளது என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தவறினால், தங்களை திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். இந்தக் கொள்கை பாராட்டுக்குரிய தன்மை கொண்டுள்ளதாகும். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டு இருக்கிறது என்பது வேறு விவகாரம்.
திரும்ப அழைக்கும் செயல்முறையை நம் தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும். சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறிவிட்டால், தன்னுடைய பதவியை இழக்கிறார். அதேபோல தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்குப் பணியாற்றத் தவறினால், தங்களுடைய பதவியை இழக்கக் கூடிய தன்மையை, நம் இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரவேண்டும்.

திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வரலாம். சமீபத்தில் நீதித் துறையிலும் ஊழலென்று தினமும் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. நீதி, நிர்வாக, ஆட்சி மன்றங்களில் பங்கேற்கும், மக்களின் பல்வேறு பிரதிநிதிகள், அஞ்சித் தங்களுடைய ஜனநாயகப் பணிகளைச் செவ்வனே செய்ய ஒழுங்குப்படுத்துவதே திரும்ப அழைத்தல் கோட்பாடாகும். இதனால் அரசியலிலும், பொது வாழ்விலும் தூய்மை ஏற்படும்.
திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர். ஆனால், இந்தக் கொள்கையை எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுமா என்று இதுவரை பிரகடனப்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...