Friday, October 24, 2014

செங்கோட்டை பெண் கவிஞர் ஆவுடையக்காள்

செங்கோட்டை பெண் கவிஞர் ஆவுடையக்காள்
--------------------------------------------------------------------
செங்கோட்டை ஆவுடையக்காள் பெண் கவிஞர் காரைக்கால் அம்மையார் போன்று சீர்திருத்தக் கருத்துக்களை சொன்னவர். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அக்காலத்தில், தைரியமாக கருத்துகளை வெளிப்படுத்தியவர். இந்த ஆவுடையக்காளை எத்தனைப் பேருக்குத் தெரியும்? என தெரியவில்லை.


ஆவுடையக்காளின் கவிதை மீது கொண்ட உணர்வால், தனக்கு கவிதைகள் மீது ஈர்ப்பு வந்ததாக மகாகவி பாரதி கூறியுள்ளார். 2012ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு சென்றபோது, அங்குள்ள தென் கிழக்கு ஆசிய மையத்தில், இவரைப் பற்றி என்னிடம் விசாரித்ததும் உண்டு. எனது ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் ஆவுடையக்காள் பற்றிய பதிவு வருமாறு:


தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பெண் ஞானிகளில் ஒருவர் ஆவுடை அக்காள். 350 ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டையில் பிறந்து மிக இளம் வயதிலேயே உயர்ந்த ஞான யோக அனுபவங்களைப் பெற்றார். ஆவுடை அக்காள் இளமையில் விதவையாகி விட்டதால் அவருக்கு ஏற்பட்ட வைராக்கியத்தின் காரணத்தால், மெய்ஞானத்தில் ஆர்வம் செலுத்தினார். தமிழகத்தில் அவ்வையார், காரைக்கால் அம்மையார் போன்று ஆவுடை அக்காளும் பாக்கள் புனைவதில் ஒப்பற்றவராவார். இவருடைய பாக்கள் ஏடுகளாகச் சிதறிக் கிடந்தன. அதை ஸ்ரீ ஞானானந்த தபோவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
ஆவுடை அக்காளைப் பற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ சிறப்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. குற்றாலம் மலையேறிச் சென்றவர் திரும்பவில்லை. இவருடைய பாடல்களைச் சிறுசிறு குழுக்களாகச் செங்கோட்டை, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்பள்ளம், தென்காசி, சங்கரன்கோவில், திருவைகுண்டம், திருச்செந்தூர், நாகர்கோவில், சுசீந்திரம் போன்ற பகுதிகளில் மதிய உணவுக்குப் பின்பு பாடுவார்கள். திருவைகுண்டம் கோமதி ராஜாங்கம் அவர்கள், ஆவுடை அக்காள் பற்றிய பாடல்களையும் வாழ்க்கைக் குறிப்பையும் வெளிக்கொணர்ந்தார். ஆவுடையக்காளின் வேதாந்தக் குறவஞ்சி, வேதாந்தப்பள்ளு, சூடாமலைக்கும்மி என்ற பல பாக்களை நெல்லைத் தமிழில் கிராமப்புற இலக்கியங்கள் போன்று படைத்துள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைக்கு உள்ள சமுதாயச் சூழலில் புரட்சிகரமான கருத்துக்களை கவிதைகள் மூலமாக வெளியிட்டது சாதாரண செய்தி அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

1 comment:

  1. ஆகச் சிறந்த பதிவு.
    கோமதி ராஜாங்கம் அவர்கள் புகைப்படங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete