Saturday, October 25, 2014

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன்


இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன்
-------------------------------------------------
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன், தனது 86ஆவது வயதில் இன்று காலமானார். 48 வயதில் சினிமா உலகில் நுழைந்து, பராசக்தி, மனோகரா, சிவகங்கைச் சீமை, ஆலயமணி, ரத்தக்கண்ணீர், ராஜா தேசிங்கு, பூம்புகார், மணிமகுடம், காஞ்சித் தலைவன், குமுதம், முதலாளி, அவன் பித்தனா, முத்து மண்டபம், தைப் பிறந்தால் வழி பிறக்கும், குலதெய்வம், வானம்பாடி, கைகொடுத்த தெய்வம் போன்ற மக்களின் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். தெளிவான தமிழ் உச்சரிப்போடும், புராணப் படங்களில் நடிக்கக் கூடாது என்ற அணுகுமுறையில் பிடிவாதமாக இருந்தவர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்தியாவில் நடிகர் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக ஆனது எஸ்.எஸ்.ஆர்.தான். எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.
                                  

1980களின் துவக்கத்தில் சேடப்பட்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது திரு. பழ. நெடுமாறன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் (காமராஜர்) கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். எனக்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தரவேண்டுமென்று, 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுமாறன் விரும்பியபோது, விளாத்திகுளம் தொகுதி கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் போட்டியிடுவது சிரமம் என்று நான் மறுத்துவிட்டேன். அப்போது நெடுமாறன் அவர்கள், பரவாயில்லை. ராதாவுக்கு நாடாளுமன்றம் தான் பொறுந்தும். அடுத்தத் தேர்தலில்.. .. என்று மானசீகமாக சொன்னார். நெடுமாறனை விட்டு வெளியே வந்தபின், நான் யாரை நம்பி உழைத்தேனோ, அந்த தலைமை என் பெயரை சொல்லி நாடாளுமன்றத் தொகுதியை வாங்கிக் கொண்டபின், வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளும் எனது உழைப்பை சுரண்டிய தலைமை. ஏனெனில், ‘தகுதியே தடை’. அது வேறு விஷயம். அந்தச் சூழலில் நெடுமாறன் மதுரை மத்திய தொகுதி, தஞ்சை ராமமூர்த்தி தஞ்சை தொகுதி, ஏ.எஸ். பொன்னம்மாள் நிலக்கோட்டைத் தொகுதி, பாரமலை மானாமதுரை தொகுதி, திண்டுக்கல் அழகிரிசாமி வேடச்சந்தூர் சட்டமன்றத் தொகுதி, சேடப்பட்டித் தொகுதியில் செல்வராஜூம் வேறு பலரும் போட்டியிட்டனர்.

தேர்தல் பணிப் பொறுப்பின் காரணமாக சேடப்பட்டி தொகுதிக்கு போகும் போது டி.வி. நாராயணசாமி அவர்களை டி.கல்லுபட்டியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. டி.வி. நாராயணசாமி எங்கள் கோவில்பட்டி பகுதியில் உள்ள எஸ்.துரைசாமிபுரம் கிராமத்தைச் சார்ந்தவர். அவர், அருகிலிருந்த எஸ்.எஸ்.ஆரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அன்று வெளிவந்த தினமணியில் நடுபக்க கட்டுரையாக எனது சேதுக் கால்வாய் பற்றிய பத்தி வந்திருந்தது. உடனே எஸ்.எஸ்.ஆர். உங்கள் கட்டுரையை தினமணியில் படித்தேன். அண்ணாவின் திட்டத்தை விவரமாக எழுதி உள்ளீர்கள் என்று சொன்னார். அன்றைய அறிமுகத்திலிருந்து பல நேரங்களில் அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. என்னுடைய நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அவரை அழைப்பேன். அவரோ, வேண்டாம் தம்பி என்பார். ஆனால் நூல்களை படித்துவிட்டு, கருத்துகளை சொல்ல நேரில் வருமாறு அழைப்பார்.

அண்ணா வெளிநாடுகளுக்கு செல்லும்பொழுது அவருக்குத் தேவையான கோர்ட், பேண்ட்ஸ் போன்றவைகளை எஸ்.எஸ்.ஆரே பொறுப்பெடுத்து கவனத்துடன் தைத்துக் கொடுப்பார். இதனை கண்டு அண்ணா சொன்னாராம்; உன்னுடைய பழைய கோர்ட் சட்டைகளை தானே சரி செய்து தர சொன்னேன். ஏன் புதிதாக தைத்தாய் என அன்பாக கடிந்து கொண்டாராம். ஒரே ஒரு கேள்விக்குத்தான் விடை தெரியவில்லை. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, இந்திரா காந்தி கொண்டு வந்த ராஜமானியம் ஒழிப்பு மசோதா விவாதத்தின்போது அவையிலிருந்து வெளியேறினார். காரணம் கேட்டதற்கு, கழிப்பறைக்கு சென்றேன் என இவர் விளக்கம் சொன்னது ஏன் என்று தெரியவில்லை.

எல்டாம்ஸ் ரோடில் உள்ள தன்னுடைய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு தமிழகத்தில் உள்ள அனைவரையும் அழைத்து, மாநாடு போல நடத்தி விருந்து படைத்தார் எஸ்.எஸ்.ஆர். வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சில வேதனைகளை விழுங்கிக் கொண்டு, நண்பர்களிடம் இன்முகத்துடன் பேசுவார். பழைய நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எம்.ஆர். ராதா, பாலாஜி, முத்துராமன், கல்யாண குமார் போன்ற நவரச நடிகர்களின் வரிசையில் இருந்த எஸ்.எஸ். ஆரும் இறுதியாக நம்மிடமிருந்து சென்று விட்டார்.



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...