Wednesday, October 14, 2015

சிரியா - Syria


முகநூல் நண்பர்கள் பலரும் சிரியா பிரச்சனையை பற்றி சுருக்கமாக பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிரியாவிலிருந்து லட்சகணக்கான மக்கள் ஐரோப்பா நாடுகளுக்கு தப்பி போவது ஏன். சிரியாவில் என்ன பிரச்சனை , அதற்க்கு யார் காரணம் என்பதை கவனத்தோடும் மனிதாபிமானத்தோடும் பார்க்க வேண்டும்.

சிரியாவில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் அமெரிக்கா.அங்கு  அல்-அசாத்தின் ஆட்சியை கவிழ்க்க முஸ்லிம்கள் இடையே சன்னி-ஷியா என்று மோதல்களை நடத்தி , அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி அங்குள்ள மக்களை பல்வேறு ரணங்களுக்கு உட்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து ,அங்கு மனித உரிமைகளை மறுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிலும் , ஈரானிலும் சதாம் ஹுசன் தூக்கிலிடப்பட்டதும் , லிபியாவில் நடந்த கொடுமைகளும் இன்றைக்கும் நினைத்தாலும் வேதனையளிக்கிறது. அதே நிலைமையில் சிரியாவிலும் ஆட்சி மாற்றம் செய்ய இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் அங்கே வளர்க்கப்பட்டு , உள்நாட்டு குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர். ஈராக் போரில் அமெரிக்கா நேரிடையாக இறங்கியது. சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்தி , அங்குள்ள இஸ்லாமிய குழுக்களை தூண்டிவிட்டு கொண்டிருக்கிறது.



சிரியா என்பது மற்ற இஸ்லாமிய நாடுகள் போல் அல்லாமல், கல்வியறிவு ,பண்பாடு என பண்டைய கிரேக்க , ரோம பண்பாட்டு அரசியலுடைய சிரியாவில் உண்டு.  சிரியாவில் அல்-அசாத் தலைமையில் நடக்கும் ஆட்சி இஸ்லாமிய தீவிரவாத போக்கில்லாமல் பல குழுக்களையும் இணைத்து , இதுவரை இன மோதல் இல்லாமல் அமைதியான ஆட்சியாக இருந்தது.

ஆனால் , சவுதி அரேபியாவும் ,கத்தாரும் மறைமுகமாக இன குழுக்களுக்கு ஆயுத உதவியும் செய்தது. அமெரிக்க என்ன சொல்கிறது என்றால் சிரியாவில் ஜனநாயகத்தை பேணி காப்போம் என்று சொல்லிக்கொண்டு அங்குள்ள மதவாத குழுக்களுக்கு பால்வார்த்து உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிடுகிறது.

இப்போது ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிராக இப்பிரச்சனையில் சிரியாவில் இறங்கியுள்ளது. இப்படியான போக்கு நீடிக்குமானால், உலக அமைதியை பாதிக்கும். எண்ணெய் வளமிக்க மேற்காசிச்ய பிராந்திய ஆதிக்கத்தை அமெரிக்க எடுத்துகொள்ள நினைக்கிறது. மறுபுறம் ரஷ்யாவும் இந்த பிரச்னையில் இதே நோக்கத்திற்காக இறங்கியுள்ளது. சவுதி அரேபியாவும் கத்தாரும் இஸ்லாமிய மேலாண்மை என்று சொல்லிக்கொண்டு சிரியாவின் இறையாண்மையில் தலையிடுகிறது.

இப்படியான இடியாப்ப சிக்கலில் , அமைதியாக இருந்த அந்நியர்களுடைய அத்துமீறலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பராரியாக அகதியாக ஐரோப்பா நாடுகளுக்கு தப்பித்து சென்றால் போதும் என்ற நிலைமையில் , கடந்த ஒரு மாதமாக தரைவழி மார்க்கமாகவும் , கடல்வழி மார்க்கமாகும் ஐரோப்பாவை நோக்கி சிரியாவின் மக்கள் தஞ்சமாகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னாள், இந்த அகதிகள் ஐரோப்பா கண்டத்திற்கு தப்பிசெல்லும் போது ஒரு குழந்தை கடலில் விழுந்து பிணமாக கரையோரம் ஒதுங்கிய காட்சியை பார்த்து உலகமே கண்ணீர் சிந்தியது.

துருக்கி நாட்டு எல்லையில் , சிரியா நாட்டு அகதிகளை அனுமதிக்காமல் இரும்பு வேலி போட்டு தடுத்தனர். மத்திய தரை கடலில் பயணிக்கும்பொழுது , கடலில் விழுந்து மாண்டதும், பட்டினியால் சிரியா மக்கள் கோரமாக அழுத காட்சிகளெல்லாம் இன்றைக்கும் நம் கண் முன் இருக்கின்றன.

மனித இனம் காக்கப்படவேண்டும் , அமைதி என்று சொல்லிக்கொண்டு வேட்டை நாய்கள் போல மனித இனத்தை அழிப்பதையும் உலக சமுதாயம் பார்த்துகொண்டிருக்கிறது . இஸ்லாமிய நாடுகளிலேயே பண்பாடு மிக்க சிரியா நாட்டில் இப்படி ஸ்திரதன்மை இல்லாமல் இருப்பது கண்டு உலக சமுதாயம் வேதனையில் கண்ணீர் வடிக்கிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-10-2015

‪#KSR_Posts‬ ‪#KSRadhakrishnan‬ #Syria

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...