Sunday, December 3, 2017

தாமிரபரணி வெள்ளம்

இன்றைய (03/12/2017) ஆங்கில தி இந்து (The Hindu) 9ம் பக்கத்தில் தாமிரபரணி வெள்ளம் குறித்து அதன் சிறப்பு செய்தியாளர் டி.இராமகிருஷ்ணன் விரிவாக எழுதியுள்ளார். என்னுடைய கருத்தும் அதில் விரிவாக பதிவாகியுள்ளது. அது வருமாறு,

1992லும் இது போன்றதொரு வெள்ளம் தாமிரபரணியில் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தை தடுத்து தண்ணீரை சேமிப்பது அவசியமானது ......
1. தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டலாம்,
2. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தலாம். திமுக ஆட்சியில் கொண்டுவந்த இத்திட்டத்தை அதிமுக கிடப்பில் போட்டுள்ளது. திமுக காலத்தில் நாங்குநேரி வரை இணைப்பு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.
3. இந்த மழை நீரை அம்பாசமுத்திரத்திலிருந்து வடக்குபுறமாக ஆழ்வார்க்குறிச்சி வழியாக தென்காசிக்கும், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு கால்வாயுடன் இணைக்கலாம். இதனால் தென்காசி - கடையநல்லூர் - புளியங்குடி ஒருமுகமாகவும், வாசுதேவநல்லூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வரை ஒரு கால்வாயும், இன்னொரு கால்வாய் கிழக்குமுகமாக சங்கரன்கோவில் - திருவேங்கடம் வழியாக கோவில்பட்டி, சாத்தூர் வரை இணைக்ககூடிய கால்வாயும் வெட்டலாம். இதற்கான செலவுகளும், சிரமங்களும் மிகவும் குறைவு. அருகருகில் உள்ள அனைத்து ஓடைகளையும், குளங்களையும் இணைக்கும் நீர்வழிப்பாதைகளை கால்வாயுடன் இணைத்தாலே இத்திட்டம் சாத்தியப்படும். இதனால் 10-15 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் வெள்ளத்தை நாம் ஆக்கப்பூர்வமாக சேமித்து பயன்படுத்த முடியும். வீணாக கடலுக்கு போகும் வெள்ளநீரை சேமித்து நிலத்தடி நீரையும், குடிநீரை பெருக்கியும் நாம் பயன்படுத்தலாம் என்ற கருத்தை கூறுகிறன்.
4. லோயர் டேம், மணிமுத்தாறு அணைகளின் உயரத்தை அதிகரிக்கலாம், தூர்வாரி அதன் ஆழத்தையும், சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு அதனை அகலப்படுத்தலாம்.
5.சீவலப்பேரியில் தெற்காக திரும்பும் ஆற்றில் இருந்து கிழக்கு நோக்கி உலக்குடி மேட்டை கடந்து கால்வாய் வெட்டினால் பஞ்சபிரதேசமான ஓட்டப்பிடரம் தொகுதி யில் பல குளங்கள் நிரம்பும். புதிய நீர்தேக்கமும் அமைக்கலாம். இது பற்றிய ஆய்வு ஐம்பது ஆண்டுகள் பொ.ப.து. கிடப்பில் உள்ளது. இன்று உளஂள தொழில் நுட்பத்தில் இரண்டு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-12-2017


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...