Wednesday, January 23, 2019

சட்டமன்ற பொதுத் தேர்தல் 1989 – கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 1989இல் நடந்து முடிந்து சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்னால் 22/01/1989இல் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக வெற்றி பெற்றது. அப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்ய 45 நாட்கள் இருக்கும். இரவு 12 மணி, 1 மணியைத் தாண்டியும் கிராமம், கிராமமாக பிரச்சாரம் செய்யும் வழக்கமும் உண்டு. நான் கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக அந்த தேர்தலில் களம் கண்டேன்.
21/12/1988இல் கலைஞர் என்னை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவித்தார். அறிவித்தவுடன் 23/12/1988 வேட்புமனுவை கோவில்பட்டி கோட்ட வருவாய்த்துறை அதிகாரியிடம் தாக்கல் செய்தேன்.
அந்த தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் படியேறி மக்களிடம் அப்போது ஓட்டு கேட்டதுண்டு. ஒரு அம்பாசிடர் காரில் பயணித்து, ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக் கொண்டு ஓட்டு கேட்பது அன்றைக்கு வழக்கம். சுவரில் சின்னங்களை மட்டும் வரைவோம். பலவகைகளில் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுவது வழக்கம். டோர் சிலிப் என்ற சிறிய நோட்டீசில் அண்ணா, கலைஞர் படத்துடன் உதயசூரியன் சின்னத்தோடு வினியோகிப்போம். வைகோ அவர்கள் எனக்கு தேர்தல் பிரச்சாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டுமென்று அறிவுறுத்துவார். அதன்படி அப்போது பணிகள் நடக்கும். செலவும் இதுமாதிரி இருக்காது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதெல்லாம் அப்போது கிடையாது. 

அப்போதெல்லாம் பிரச்சாரம் காலையும், மாலையும் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்பது உண்டு. நள்ளிரவு தாண்டி 2 மணி வரை கூட பிரச்சாரங்கள் செய்வது உண்டு. ஒரு கிராமத்திற்கு சென்றால் வேட்பாளர் வந்துவிட்டார் என்று வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடக்கும். கிராமத்தில் வாக்குகள் கேட்டு திரும்பும்போது என்னிடம் ஒரு கவரில் வைத்து "இந்தாங்க, இது எங்க ஊர் உங்கள் தேர்தல் நன்கொடை" என்று 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று தருவதுண்டு. தேர்தல் காலத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுத்தாலே, வாங்க கிராமத்தில் மறுத்துவிடுவார்கள். அன்றைக்கு வாக்குச் சீட்டு முறை இருந்தது. சட்டமன்றத் தேர்தல் 1989இல் நடந்தபோது, கரூர் அடங்கிய திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், நாகை மாவட்டம், ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம், ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், வடாற்காடு மாவட்டம், நாமக்கல் உட்பட்ட ஒன்றுபட்ட சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் உடனிருந்த ஒன்றுபட்ட கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம் என இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு எப்படியிருக்கிறது, நல்ல வேட்பாளர்கள் யார் என்று தெரிந்துவர தலைவர் கலைஞர் அவர்கள் என்னை பணித்தார். நான் அனைத்து பகுதிகளுக்கும் காரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். தலைவர் கலைஞர் அவர்களால் இந்த பணியை மேற்கொண்டதால் நேர்காணலுக்கு வராமலே எனக்கு போட்டியிட வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இந்த தேர்தலின் களஆய்வுப் பணிகளில் தான் திருச்சி மாவட்டத்தில் கே.என்.நேருவையும், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் பொன்முடியையும் (அப்போது அவரை பேராசிரியர் தெய்வசிகாமணி என்று அழைப்பார்கள்). அங்கு பழனியப்பன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் நான் கொடுத்த அறிக்கையில் அந்த பெயர் இருக்கிறதா என்று பார்த்து பொன்முடி அவர்களை அறிவித்தார். அதே போல, தென்னாற்காடு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இராமகிருஷ்ணனும் அமைச்சரானார். சேலம் மாவட்டத்தில் வி.பி.துரைசாமி பெயர் பரிந்துரைக்கப்பட்டு அன்றைக்கு சட்டமன்ற துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படியான சில தகவல்கள். 

எனக்கு கோவில்பட்டி தொகுதியில் வாய்ப்பளித்தவுடன் அங்கே தேர்தல் களத்தில் இறங்கினேன். டிசம்பரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பணிகளில் இறங்கினேன். பிரச்சாரத்தை ஆரம்பித்து தொகுதியில் வேட்பாளராக நிற்கும்போது, தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்திற்கு வந்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்றைக்கு திருச்செந்தூர் தொகுதி கே.பி.கந்தசாமிக்கு பிரச்சாரத்தினை ஆரம்பித்து சாத்தான்குளத்தில் கழக வேட்பாளருக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர் ஜெகவீரபாண்டியனாருக்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் என். பெரியசாமிக்கும், ஒட்டப்பிடாரத்தில் கழக வேட்பாளர் முத்தையாவிற்கும், விளாத்திக்குளத்தில் திமுக வேட்பாளர் குமரகுரு ராமநாதனுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு, இறுதிநிகழ்வாக கோவில்பட்டி தொகுதிக்கு பிரச்சாரம் செய்தார். எட்டையபுரத்தில் எனக்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது கோவில்பட்டியில் அழகர்சாமி அவர்களுக்கும், எனக்கும் கடுமையான போட்டி. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வந்த பொதுக்கூட்டம் மாநாடு போல கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் அருகில் சாலையை மறித்து போடப்பட்ட மேடையில் பேசும்போது, அவ்வளவு ஆர்ப்பரித்த கூட்டம். அந்தக் கூட்டத்தில் வைகோ, ஆற்காடு வீராசாமி அவர்கள் கலந்துகொண்டனர். வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்கள் ராதா ஜெயித்துவிடுவார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.  வைகோ அவர்கள் தலைவரின் சுற்றுப் பயணத்தை முறைப்படுத்தினார். அந்த கூட்டத்தில் நான் வாக்கு சேகரித்த பின் தலைவர் காலைஞரும், வைகோவும் உரையாற்றினார்கள். சரியாக 12 தலைவருடைய கூட்டம் முடிந்தது. பிரச்சார வேளையில் என்னிடம் கலைஞர் அவர்கள் நான் திருச்செந்தூரில் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால் கோவில்பட்டியில் தான் ஜனத்திரளோடு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் வெற்றி பெற்றுவா, உனக்கான இடம் உண்டு என்று சூசகமாக தெரிவித்தார். 

இந்த தேர்தலில் திமுகவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சியும் தோழமையோடு இருந்தது. அன்றைய பிரதமர் வி.பி.சிங்கும் எனக்கு பிரச்சாரத்தை செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சங்கரய்யா போன்ற தலைவர்கள் கோவில்பட்டிக்கு வந்து எனக்கு ஆதரவளித்து பிரச்சாரம் செய்தார். 

அப்போது கோவில்பட்டி நகரத்திலும், குருவிகுளம் ஒன்றியத்திலும் தி.மு.க. கிளைக் கழகங்கள் முழுமையாக இருந்தன. கோவில்பட்டி ஒன்றியத்தில் வெறும் 35 கிளைகளாக இருந்ததை தேர்தல் பணியோடு 140 கிளைகளாக அன்றைய கோவில்பட்டி ஒன்றிய திமுக செயலாளர், மொழிப்போர் தியாகி பா.முத்துவோடு இணைந்து கூடுதலாக்கி அமைத்தோம். கோவில்பட்டி நகர செயலாளர் எம்.டி.ஏ. காளியப்பன், குருவிகுளம் ஒன்றிய திமுக செயலாளர் சுந்தரராஜன், நகர்மன்றத் தலைவர் தம்பி பாலசுப்ரமணியம், மாணிக்கம், ஈ.ச.நாராயணன் போன்ற நிர்வாகிகள் என்னோடு வாக்கு சேகரிக்கும் பணியில் இருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராமசுப்பு, ஜனதா கட்சியின் நகரத் தலைவர் ஆ.பொ.சுப்பையா ஆகியோர் கிராமம் வாரியாக கோவில்பட்டி நகரத்திற்கும் வீதிவீதியாக வாக்குகள் சேகரித்தனர். அனைத்து தொகுதிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் என்னுடைய தொகுதியில் மட்டும் வினோதமான நிலை. 
அப்போது குருவிகுளம் ஒன்றியம், கோவில்பட்டி ஒன்றியம், எட்டயபுரம் பேரூராட்சி, கோவில்பட்டி நகரம் என உள்ளடங்கி 1 லட்சத்து 43 ஆயிரத்து 671 வாக்குகள். ஆனால் பதிவானதோ 1 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள். இந்த நிலையில் நான் 31,724 வாக்குகளை பெற்றேன். என்னுடைய தொகுதியில் கதிர் அரிவாள், உதய சூரியன் களத்தில் இருந்தது. மற்றத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ், அ.தி.மு.க.வில் ஜா, ஜெ. அணிகள் என்று பிரிந்து நின்றார்கள். கோவில்பட்டித் தொகுதியில் கைச் சின்னம் நின்றிருந்தால் அல்லது ஜா, ஜெ அணி நின்றிருந்தால் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அரசியல் சூழல் வேறு விதமாகியிருக்கும்.  காங்கிரசும் தனியாக நின்றது. 

என்னுடைய தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ். அழகர்சாமி அவர்களை எதிர்த்து களத்தில் நின்றேன். அப்போதெல்லாம் ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. எட்டயபுரத்தில் அவர் வீட்டிற்கே வாக்கு சேகரிக்க சென்றபோது, என்னை வரவேற்று தேனீர் கூட அருந்திவிட்டுதான் செல்லவேண்டும் என்றார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தில் கீழஈரால் கிராமத்தில் திரு. அழகர்சாமி அவர்களை சந்திக்கும்போது "என்னப்பா, கடுமையான உழைப்பு போலிருக்கே. முகமெல்லாம் கருப்பாய் போய்டுச்சே" என்று என்னிடம் விசாரித்து, சற்றுநேரம் தூத்துக்குடி சாலையில் உள்ள காப்பி கடையில் காப்பி சாப்பிட்டுவிட்டு, பிரச்சாரத்தில் இறங்கும்போதெல்லாம் ஒன்றும் வித்தியாசங்கள் இல்லை. அழகர்சாமி அவர்களோடு கிட்டத்தட்ட 1970களில் இருந்து நல்ல அறிமுகம். சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு எனக்கு பரிந்துரை செய்தவர்களில் அவரும் ஒருவர். அதையெல்லாம் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணியில் இல்லை. வைகோ அவர்கள் பரிந்துரை செய்து, தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார். 

இத்தனைக்கும் எனக்கு மிகவும் வேண்டியவர். இவரை எதிர்த்து களத்தில் இருந்தேன். அன்றைக்கு காங்கிரசில் போட்டியிட்டிருந்தால் என்னுடைய வெற்றி மற்ற தொகுதிகளை போல எளிதாக இருந்திருக்கும். இரண்டு அதிமுக அணிகளும் போட்டியிடாமல் அழகிரிசாமிக்கு ஆதரவாக இருந்தது. எனக்கு மட்டும் பாதமான நிலை அமைந்தது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. 21ஆம் தேதி காலையில் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டது, அன்றைக்கு வாக்கு சீட்டு என்றதால் 22ஆம் தேதி விடியற்காலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

அன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் என்னை விட குறைவாக வாக்குகளைப் பெற்ற குமரி அனந்தன், சாத்தான்குளத்திலும், டேனியல்ராஜ் ஸ்ரீவைகுண்டத்திலும், ஓட்டப்பிடாரத்தில் முத்தையாவும் வெற்றி பெற்றனர். அப்போதெல்லாம் வாக்கு சீட்டுகள்தான். வாக்கு எண்ணிக்கை முடிய கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆகும். அந்த தேர்தலில் பாரதி பிறந்த எட்டயபுரம் வரை 3000 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தேன். எட்டயபுரத்துக்கு தென்பகுதியில் இருந்த கிராமங்களில் வாக்குகள் கிடைக்காமல் அப்போது வெற்றி வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது. கே.கே.எஸ்.எஸ்.ஆர் சேவல் சின்னத்தில் ஜெயித்துவிட்டார்.

அன்றைக்கெல்லாம் சாதி துவேசங்கள் கிடையாது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று 26/01/1989 அன்று அமைச்சரவை பட்டியலை தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். அடுத்தநாள் 27/01/2019 அன்று முதலமைச்சர் தலைவர் கலைஞர் தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். 

இதற்கிடையில் 23/01/1989அன்று தலைவர் கலைஞரை சென்னையில் சந்தித்தேன். என்னப்பா நீ ஜெயித்துவிடுவாய் என்று நினைத்திருந்தேன். இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். உடனிருந்த ஆற்காட்டார், நீ ஜெயித்து வந்திருந்தால் ராஜபாளையம் வி.பி.ராஜனோடு உனக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்குமே என்று ஆதங்கப்பட்டார்.

ஆனால் அந்த தேர்தலில் எனக்கு மட்டும் மிகப்பெரிய அடியாக விழுந்துவிட்டது. அன்றைக்கு வெற்றி பெற்றிருந்தால் எனது அரசியல் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். பரவாயில்லை அதை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது.
----
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம்
விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே ! – அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே !

உண்மையைப் பேசிடுவார் ஒரு பிழையும் செய்தறியார்
ஊரெல்லாம் தூற்றிடுமே ஞானத்தங்கமே ! – அவரை
ஒதுக்கியே வைத்திடுமே ஞானத்தங்கமே !

நாக்கினிலே இனிப்பிருக்கும் நெஞ்சினிலே நஞ்சிருக்கும்
நல்லவரைப் போல் நடித்திடுவார் ஞானத்தங்கமே ! – அவரை
நாடும் நம்பிடுமே ஞானத்தங்கமே !

ஓதாத நூல்களில்லை உரைக்காத ஞானமில்லை
எது உண்மை என்றறியார் ஞானத்தங்கமே ! – உலகில்
இவர்களும் வாழுகின்றார் ஞானத்தங்கமே !

பந்தமேது பாசமேது பக்தியேது முக்தியேது
அந்தமெது ஆதியெது ஞானத்தங்கமே !  – இதை
அறிந்தவர் யாருமில்லை ஞானத்தங்கமே !  – என்னை
அறிந்தவர் யாருமில்லை ஞானத்தங்கமே !

Tail Piece.
---------
1. இவ்வளவு தேர்தல் பரபரப்பு இருந்தாலும் மதியம் நல்லெண்ணெயில் நாட்டுக் கோழியும், கடலை எண்ணெயில் குளத்து மீன் குழம்பும், வத்தல் குழம்பு, ரசம், கெட்டி எருமைத் தயிரும், இரவும் சூடான இட்லியோடு நாட்டுக்கோழியுடன் செல்கின்ற கிராமத்திற்கெல்லாம் நூறு, இருநூறு பேருக்கு அன்போடு பாசத்தோடு விருந்தளிப்பார்கள். அம்பாசிடர் வண்டியில் கோவில்பட்டி கடலை மிட்டாய், சேவு, கல்உப்போடு வெள்ளரிப் பிஞ்சு நொறுக்குத் தீனியாக கொரிக்க இருக்கும். லட்சுமி மில் மேலாளர் செல்வராஜும், ஆனந்தா ராஜாவும், விவசாயச் சங்கத் தோழர்களும் அளித்த ஆதரவை மறக்க முடியாது. ஏனெனில் என்னுடைய கிராமத்தில் விவசாயப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

2. ஆரத்தியும், மஞ்சள் தண்ணீரும் வேட்டியிலும், சட்டையிலும் அன்போடு காட்டும் பொழுது வேட்டியில் கொட்டிவிடுவதுண்டு.  தினமும் இரண்டு, மூன்று வேட்டியாவது மாற்ற வேண்டியிருக்கும்.

3. தேர்தல் பிரச்சாரத்தில் கொடிகளும், துணிப்பைகள், துணி பேனர்களும், போஸ்டர்கள் அருகாமையில் உள்ள சிவகாசியில் இருந்து அச்சடித்து எவ்வளவு தான் வந்தாலும் அதை கேட்டு நித்தமும் அன்புத் தொல்லைகளும் இருக்கும். 

#கோவில்பட்டி
#தேர்தல்1989
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-01-2019

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...