Sunday, January 20, 2019

"பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்” நூல் வெளியீட்டு விழா.

நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மனின் கீர்த்தியையும், தெற்குச் சீமையின் வரலாற்றைச் சொல்லும் “பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்” நூல் வெளியீட்டைக் குறித்து பல நண்பர்கள் தொடர்பு கொண்டு அந்த நூலினை குறித்து விசாரித்தார்கள். அவர்களுக்க,எனது பதிப்புரையையே ஆய்வுரையாக கொடுத்துள்ளேன். அது வருமாறு.

-----
பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் 'பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்' 1954 வரை இரண்டு பதிப்புகளாக வந்து, மூன்றாவது பதிப்பு செம்பதிப்பாக உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் நண்பர் மனுஷ்ய புத்திரனின் சீரிய முயற்சியில் வெளிவர இருக்கின்றது. இந்த நூல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த நூலுக்கு அற்புதமான வாழ்த்துரை வழங்கிய தலைவர் கலைஞர் அவர்களை நன்றியோடு வணங்குகிறோம். அடியேன் பொதிகை-பொருநை-கரிசல் என்ற அமைப்பை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தபொழுது முதற் பணியாக வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் சொல்லும் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரத்தை வெளியிட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண் டோம். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் பராக்கிரமும் ஆளுமையும் வெள்ளையர் களை அஞ்ச செய்த பெருமைகளையும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.
கெட்டிபொம்மு என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கட்டபொம்மன் என்று பெயர் வழங்கப்பட்டது. தந்தை ஜெகவீர கட்டபொம்மனுக்குப் பின்பு 1790 பிப்ரவரி 2ஆம் தேதி 30 வயதில் மன்னனாக முடிசூட்டப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தளவாய் குமாரசாமி (ஊமைத்துரை), துரைசிங்கம் (சுப்பையா) என்ற தம்பியர் இருவர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி வீர சக்கம்மாள் ஆவார். கட்டபொம்மன் தமது முப்பதாம் வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரசர் ஆனார். தம்பியர் இருவரை இளவரசர்களாகவும், தனக்கு அமைச்சராகச் சிவசுப்பிரமணியம் பிள்ளை, தளபதியாக வெள்ளையத்தேவனை நியமித்தார். வீரர் சுந்தரலிங்கம் கட்டபொம்மனின் அணியில் இருந்து சாதனைகள் படைத்தார்.

கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் முதலில் 96 ஊர்கள் இருந்தன. அவை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அவை கவுனகிரி, பசுவந்தனை, புதியம்புத்தூர், ஆதனூர், வேடநத்தம், பட்டணமருதூர் என்பனவாகும். இவைகளைக் காக்க தளக்காவல், திசைக்காவல் படைகளைக் கட்டபொம்மன் திறம்பட அமைத்து செயல்பட்டார். இதனால் வழிப்பறி, கொள்ளை, கொலை முதலிய குற்றங்கள் குறைந்தன. மதுரை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எழுபத்திரண்டு பாளையங்களில் திருநெல்வேலிச் சீமையில் மட்டும் முப்பது பாளையங்கள் இருந்தன.  அவையும், மற்ற பாளையங்களும் இவரிடம் தொடர்பு கொண்டு இவருக்கு இணங்கி நடந்தன. பாளையங் களுக்குள் ஏற்படும் குழப்பங்களையும், பிறங்கடையுரிமைப் போர்களை யும் கட்டபொம்மன் தீர்த்து வைப்பார். நாயக்க மன்னர்களும் கட்டபொம்மன் மரபினருக்கு மதிப்பளித்தனர்.

இக்கால முறைப்படி இவரிடமிருந்த வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டி ருந்தனர். இவரிடம் 6,000 நாயக்க வீரர்களும், 5,000 மறவர்களும், 3,000 பிறவினத்தவரும் பட்டாணியர், கவுண்டர், கவரையர், வலையர் முதலிய இனத்தைச் சேர்ந்த வீரர்களும் இருந்தனர். வாள், வேல், வல்லயங்கள், கம்புகள் ஆகிய படைகள் வகைக்கு ஆறாயிரம் வில், கவண் முதலிய படைகளுமாக மொத்தம் இருபதாயிரத்திற்கும் மேலிருந்தன. குதிரைகளும், யானைகளும், ஒட்டகங்களும், காளைகளும், செம்மறிக் கிடாய்களும், வேட்டை நாய்களும் கூட இவர் படையில் இருந்தன. எண்பது கோட்டைகள் இவருடைய ஆளுமையிலிருந்தன.

ஆங்கிலேயர் கி.பி.1792இல் ஆர்க்காட்டு நவாபுக்கு உட்பட்டிருந்த திருச்சி, திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்த ஊர்களில் வரித்தண்டல் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றனர். தண்டலுக்கு ஏற்ற வகையில் இப்பகுதிகளிலிருந்த நிலங்கள் முழுவதும் அளக்கப்பட்டதோடு, தரம் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஆங்கிலேயருக்கு அடங்கி நடப்பவர்கள் பெரிதும் நன்மையடைந்தனர். இப்பணியை மேற்கொண்ட படைத்தளபதி லெப்டினென்ட் கர்னல் மேச்சுவல் என்பவர் பாஞ்சாலங்குறிச்சிக்கு உட்பட்டிருந்த ஆதனூர் பகுதியிலிருந்த அருங்குளம், சுப்பலாபுரம் ஆகிய இரண்டு ஊர்களை எட்டயபுரத்து எட்டையப்பனுக்குக் கொடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சியி லிருந்தே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் பகைமை மூண்டது. மேலும், கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் ஆங்கிலே யர்களைக் கண்டு வணங்காமலும், ஆறு ஆண்டுகள் வரி கொடாமலும் இருந்து வந்தார். இது பகையை மேலும் வளர்த்தது. ஆங்கிலேயர்கள் மைசூர்ப் போர்களிலும், வங்காளப் போர்களிலும், கருநாடகத்திலும், மராட்டியத்திலும் எந்த எதிர்ப்புமின்றி வளர்ச்சியடைந்தனர். மூன்றாம் மைசூர்ப் போருக்குப் பின் 1792இல் சீரங்கப்பட்டணத்தில் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பின்னரே ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் மீது ஆளுமை பெற்றனர். 1785இல் இராமநாதபுரமும் வேறு சில இடங்களும் இவர்களின்கீழ் வந்தன. மணப்பாறையை ஆண்ட இலக்குமண நாயக்கருடைய பாளையமும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. பழநி பாளையக்காரர் திண்டுக்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட் டார். 1796இல் சங்கம்பட்டி, மடூர், ஏற்றி வடூர் முதலிய ஊர்களையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இவ்வாறு ஏதாவதொரு குற்றம் சாட்டப் பெற்றுப் பாளையங்கள் பலவற்றையும் ஆங்கிலேயர் கம்பெனி ஒடுக்கும் ஆணைகளை இட்டதோடு ஒடுக்கி, அடக்கும் செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டது. பாளையக்காரருக்கு முதுகெலும்பாக விருந்த மைசூரும் (ஐதரும், திப்புவும்) கடைசியாக நான்காம் மைசூர்ப் போரில் (1799) ஒடுக்கப்பட்டுவிட்டது.

கட்டபொம்மன் கிஸ்தி வசூலிக்க வந்த மாக்ஸ்வெல், ஆலன் ஆங்கிலேயரை எதிர்த்தது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலேய ருக்கு ஆதரவாகவும் கட்டபொம்மனுக்கு எதிராகவும் இருந்த எட்டயபுரம் எட்டப்பனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1798இல் நெல்லைக்கு கலெக்டராக வந்த ஜாக்ஸன் தன்னைச் சந்திக்க கட்டபொம்மனைக் கேட்டபொழுது, கலெக்டருடைய உத்தரவைக் கட்டபொம்மன் தூக்கி எறிந்தார்.

கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் திறை செலுத்தாமல் வாழ்வதே தன் பிறப்புரிமை என்றார். வானம் பொழி கிறது;  வையகம் விளைகிறது;  உனக்கேன் திறை செலுத்துவது என்பதே அவருடைய வினா. ஆனால், ஆங்கிலேயர்கள் 1792லிருந்து 1798 வரை தங்களுக்குப் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் 3,300 பகோடா கிஸ்தி செலுத்த வேண்டுமென்று பல நினைவூட்டல் அறிக்கைகளையும், மடல்களையும், தூதுவர்களையும் அனுப்பிக் கேட்டனர். ஆலன், பெயருக்காவது சிறு தொகையைக் கொடுக்குமாறு கேட்டும் கட்டபொம்மன் மறுத்தார்.
1799இல் நான்காம் மைசூர்ப் போர் நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயப் படைகள் அப்போருக்கு அனுப்பப்பட்டிருந்தன. திருநெல் வேலியில் கலெக்டராக இருந்தவர் ஜாக்ஸன். 1798ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வீரபாண்டியனைத் தன்னைக் காணுமாறு ஜாக்ஸன் கூறினார். கட்டபொம்மன் தன் பரிவாரம் சூழ ஜாக்சனைக் காணச் சென்றார். ஆனால், ஜாக்சன் அவருக்கு நேர்காணல் (பேட்டி) கொடுக்க மறுத்து, காலந்தாழ்த்தம் செய்தவண்ணம் குற்றாலம், சொக்கம்பட்டி ஆகியவிடங்களைப் பார்வையிட்டு, இராமநாதபுரம் சேர்ந்தார். கட்டபொம்மனும் தம்பியர் ஊமைத்துரையும், துரைசிங்கமும் அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளையும் படையில் ஒரு பகுதியும் ஜாக்சனைப் பின்தொடர்ந்து 23 நாட்கள் நடந்து, 400 கல் தொலைவைக் கடந்து இராமநாதபுரத்தை அடைந்தனர். கட்டபொம்மன் கடைசியாக ஜாக்சனைச் சந்திக்க நேரும்போது திடீரென அவரைச் சிறைபிடிக்க ஜாக்சன் முயன்றார். வீரபாண்டியன் தப்பினார். ஆனால், அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளை மட்டுமே சிறைப்பட்டார். சென்னை ஆங்கிலேயக் கம்பெனியினர் அமைச்சர் பிள்ளையைப் பின்னர் விடுதலை செய்து, ஜாக்சனை வேலை நீக்கம் செய்தனர். லூசிங்டன் திருநெல்வேலி கலெக்டராக அமர்த்தப்பட்டார்.

நான்காம் மைசூர்ப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. கட்டபொம்மனின் நிலையைப் பிற பாளையக்காரர்கள் நோக்கினர். ஆங்கிலப் படைகள் தென்பாண்டி நாட்டிலிருந்து மைசூர்ப் போரில் ஈடுபட்டிருக்கும் இந்தச் சமயத்தில் பாளையக்காரர்களின் கூட்டணிப் படைகளைத் திரட்டித் தமிழகத்திலிருந்து ஆங்கிலேயரை அடியோடு விரட்டத் திட்டமிட்டனர். இதில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள் சிவகங்கை மருதுபாண்டியரும் திண்டுக்கல் கோபால நாயக்கரும் ஆனைமலையை ஆளும் நாயக்கரும் ஆவர். 1797லேயே மருதுபாண்டிய ரால் பல பாளையங்களின் கூட்டணிப் படைகள் அமைக்கப்பட்டு விட்டன. நாகலாபுரம், மன்னார்கோட்டை, கோலார்பட்டி, செந்நெல் குடி ஆகியவை ஒன்றுகூடி ஒரு கூட்டணி அமைத்திருந்தன. கட்ட பொம்மன் இவ்வணிக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டார். கள்ளர்களும் இவர்கீழ் ஒன்று கூடினர். சென்னையில் ஆங்கிலேயக் கம்பெனியின் நடவடிக்கைகளைக் கவனித்து செய்தி யனுப்ப கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியரின் தம்பி, பாண்டியப் பிள்ளை அனுப்பப்பட்டார். கட்டபொம்மன் இத்தகைய மறைமுகக் கூட்டணி செயல் படுவதற்கு பாஞ்சாலங்குறிச்சியை விட, மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடியிலுள்ள சிவகிரியே சிறந்ததெனக் கொண்டு அதனையும் தன் கூட்டணியில் சேர்த்தார். ஆங்கிலேயரிடமிருந்து சிவகிரி புரட்சிக்காரருக்குத் தலைமை இருக்கையாகப் போவதை எப்படியோ ஆங்கிலேயர் உணர்ந்து கொண்டனர். அதனை முதலில் கைப்பற்றி அங்கு தங்களின் தலைமை யிடத்தை அமைக்கப் புரட்சிக்காரர்களின் கூட்டணிப் படைகள் புறப்பட்டன.

இதனையறிந்த வெல்லெசுலி, தஞ்சை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்த ஆங்கிலப் படைகளைத் திருநெல்வேலி நோக்கி அணிவகுத்துச் செல்லும்படி ஆணை யிட்டார். தளபதி பானர்மேன் தலைமையில் ஆங்கிலப்படையினர் 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்ட னர். 300 அடி அகலமும் 500 அடி நீளமுள்ள அக்கோட்டையை ஆங்கிலப் படைகள் முற்றுகையிட்ட பின்பு இராமலிங்க முதலியார் என்பவர் தூது செல்வதுபோல் உளவு அறியச் சென்றார். கட்ட பொம்மனைக் கண்டபின், பானர்மேனுக்குக் கோட்டை யின் உள்ளமைப்பையும் மற்ற ரகசியங்களையும் கூறிவிட்டார். எட்டப்பனும் திருவிதாங் கூராரும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டனர். பாளையக்காரர் படைகளுக்கு ஊமைத்துரை தலைமை தாங்கினார்.

ஆங்கிலப்படைகளைத் துச்சமெனக் கருதி ஊமைத்துரை போரிட்டார். ஊமைத்துரையிடம் இராமசாமி என்பவரைத் தூதனாக அனுப்ப ஆங்கில படைக்குத் தலைமையேற்ற அக்கனியூ மேஜர் முயற்சி எடுத்தபொழுது ராமசாமி Òஊமைத்துரையிடம் சென்றால் திரும்பி வர முடியாது. வீரம் கொண்ட ஊமைத்துரையிடம் மாட்டி னால் எனக்கு ஆபத்து' என்று எடுத்துச் சொன்னார். கட்டபொம்மனு டைய வீரத் தளபதி வெள்ளையத்தேவன் போர்க்களத்தில் காட்டிய வீரம் வெள்ளையர்களைத் திக்குமுக்காடச் செய்தது.

கடைசியில் கடுந்தாக்குதலுக்குப் பின்பு கோட்டை சரிந்தது. பாளையங்கோட்டையிலிருந்து மேலும் ஆங்கிலப் படைகள் வந்தன. கோளார்பட்டி, நாகலாபுரம் முதலிய இடங்களில் போர்கள் நடந்தன. சிவசுப்பிரமணியப் பிள்ளை சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் தப்பினார். கோளார்பட்டி பாளையக்காரர் ராஜகோபால் மாளிகையில் தங்கினார். அங்கு எட்டப்பன் படைகள் சூழ்ந்து கொண்டன. புதுக்கோட்டையில் தன்னுடைய நண்பர் தொண்டைமானிடம் அடைக்கலமாகச் சென்றார். அவரை விஜயரகுநாத தொண்டைமான் தன் ஆட்கள் மூலம் பிடித்துப் பானர்மேனிடம் திருக்களம்பூர் காட்டில் ஒப்படைத்தார். இதனையறிந்த பிற புரட்சிக்காரர்கள் சிவகங்கை திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு ஓடி மறைந்தனர்.

ஆங்கிலேயர் கட்டபொம்மனையும் பிற புரட்சி வீரர்களையும் சிறை செய்தனர். சிவசுப்பிரமணியப் பிள்ளையை நாகலாபுரத்தில் தூக்கிலிட்டனர். பின்பு சிவகிரி மீது படையெடுத்தது, ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டது, மக்களைக் கொள்ளையடித்தது, தீயிட்டது, கொலை செய்தது போன்ற குற்றங்களுக்காகச் சூழ்ச்சியாகக் கைது செய்து 16.10.1799 அன்று கயத்தாறில் விசாரணை நடைபெற்றது. பின்பு 39 வயதில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மன் ஆங்கிலேயரைக் கண்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலையெழுச்சியும் வீரவுணர்வும் நாட்டுப்பற்றும் ஏற்பட வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் இட்ட வித்து இவருக்குப் பின் இவருடைய தம்பிகளால் பயிராக்கப்பட்டு, வெள்ளையனை வெளியேற்றும் ஒரு நீண்ட போர்க்களமாக மாறியதைக் காண்கிறோம்.

கறந்த பாலையும் காகம் குடியாது
கட்ட பொம்முதுரை பேரு சொன்னால்
என்ற பாடலும், பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்த கட்டபொம்மன் கதைப்பாடல்,

பஞ்ச நாட்டுக்கு ஆத்த மாட்டாமல்
படைக்கருவிகள்  வந்திருக்கு
படைக்கருவிகள் வந்திருக்கு
பரத்தி வைக்கிறேன் பாரும் இப்போ
அரும் கருவிகள் வந்திருக்கு

சம்பத்தூள் சக்கை ஆனது போல
காத்துவாக்கிலே தூத்திடுவேன்
கண்ணுக்கு இதுதான் காணுது பட்டாளம்
காலாலே எத்துவேன் பாரும் என்றார்
அதோடு,
காகம் பறவாத பாஞ்சால நாட்டிலே
கருப்பு சட்டைகள் காணுதையா
சிட்டுப் பறக்காத பாஞ்சால நாட்டில்
சிவப்பு சட்டைகள் தோணுதையா

குண்டுசட்டி போலத் தலையுமாக
குழிதாழி போல வயிறிருக்கும்
தின்ன நிலையிலே மாடு ஒன்று அவன்
ஒத்தையிலே ஒருவன் தின்றிடுவான்
முந்திரி சாராயம் மூணுபுட்டி
கோதுமை ரொட்டி முந்நூறு தின்றிடுவான்

வெள்ளிப்பிடி அருவா
வெள்ளையத் தேவன் வீச்சருவா
சங்குப்பிடி அருவா-தங்கமே
சந்தனத் தேவன் சாய்ப்பருவா
    - நாட்டுப்புறப்பாடல்.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், மற்ற உறவினர்களும் பாளையங் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்து ஊமைத்துரை தப்பி, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கைப்பற்றி னார். திரும்பவும் போர் நடைபெற்றது. சிவகங்கைக்குத் தப்பிச் சென்ற ஊமைத்துரை பிடிக்கப்பட்டு 1801 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங் குறிச்சியில் யாரும் வாழக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயக் கேப்டன் புரூஸ் அந்தக் கோட்டையைத் தரைமட்டமாக்கி, ஆமணக்கு விதை களை விதைத்தான். பாஞ்சாலங்குறிச்சி மண் வீரமண் என்று தமிழக மக்கள் இந்த மண்ணைக் கையில் அள்ளிச் சென்றார்கள்.

நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, கோளார்பட்டி, குளத்தூர், காடல்குடி பாளையக்காரர்களும் சிறையில் வாடினர். கட்ட பொம்மனுக்கு ஆதரவாக இருந்த நாகலாபுரம் அரசர் சௌந்தர பாண்டிய நாயக்கர், அவருடைய திவான் கோபாலசாமி நாயக்கர் ஆகியோர் ஆங்கிலேயரால் மிகவும் பாதிப்புக்குள்ளாயினர். கட்டபொம்மனை அழிப்பதில் ஆங்கிலேயருக்குத் துணைபுரிந்த எட்டயபுரம்  எட்டப்பனுக்கு, அருங்குளம் என்ற ஊரும் பல்வேறு பொருள்களும் பரிசளிக்கப்பட்டன.
கட்டபொம்மன் சிலை குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்:

“மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நான் அவசியம் பார்க்கும் இடம் கயத்தாறு. சாலையை ஒட்டிய சிறிய ஊர் அது. கோவில்பட்டிக்கு அடுத்ததாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பயணிகள் கடந்து செல்லும் அந்தச் சாலையின் மேற்கில், சரித்திரத்தின் நீளும் நினைவாக நின்றிருக் கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை.

ஆம், அந்த இடத்தில்தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். அவனது நினைவாக அங்கு ஒரு சிலை அமைக்கப்பட்டு, நினைவு ஸ்தூபியும் எழுப்பப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவாக கோட்டையும், சிறிய காப்பகமும் உள்ளது.

அந்தப் புளிய மரம் இருந்த இடத்தில்தான் இப்போது நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி செல்லும் நெடுஞ் சாலை முழுவதும் மருத மரங்களும் புளிய மரங்களும் ஆதியில் இருந்திருக்கின்றன. அப்படியொரு புளிய மரத்தில் மக்கள் முன்னிலை யில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். சில மாதங்களிலே அந்தப் புளியமரம் புனித மரமானது என்று மக்களால் வழிபடப்பட்டி ருக்கிறது. ஆனால், அதைச் சகித்துக்கொள்ள முடியாத வெள்ளைக்காரர் கள் அப்புளிய மரத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டார்கள். பிற்காலத் தில் அந்த இடம் அப்படியே மறந்துபோனது.'

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட உருவாக்கக் காலத்தில் அதைப்பற்றி ஆராய்ந்த ம.பொ.சி. போன்ற தமிழ் அறிஞர்கள், அந்தப் புளிய மரம் எங்கே இருந்திருக்கக்கூடும் என்ற ஆய்வை நிகழ்த்தினார்கள். அந்தப் படம் அடைந்த வெற்றியின் காரணமாக சிவாஜிகணேசன் கயத்தாறில் உள்ள அந்த இடத்தை விலைக்கு வாங்கி, தனது சொந்தச் செலவில் கட்டபொம்மனுக்கு சிலை எடுத்து நினைவு ஸ்தூபியும் அமைத்து, அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி திறந்துவைத்தார். இப்போது அந்த இடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் எடுப்பதற்கு தமிழகத்தில் கோட்டை களும், பழைய அரண்மனைகளும் இல்லை என்பதால், அந்தப் படம் முழுவதும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டிருக்கிறது. நமது சரித்திரச் சான்றுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது).

வீரம் செறிந்த எங்களின் தெற்குச் சீமையான நெல்லை மண் உயிரோட்டமானது;  உணர்ச்சிகரமானது. அதன் அசைவுகள் யாவும் வரலாற்று அசைவுகளாகும். அந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமல்லாமல், பூலித்தேவர், தீரர் சுந்தரலிங்கம், அழகு முத்துக்கோன், ஒண்டிவீரன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சிதம்பரனார் என தியாக தீபங்கள் பிறந்த மண். வீரமானாலும் இலக்கியமானாலும் மத நல்லிணக்கமானாலும் இசை, நாகரிகமானா லும் இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பூமிதான் எங்களின் நிமிர வைக்கும் நெல்லை.

என்னைப் பிரசவித்த பூர்வீக மண்ணில் தோன்றிய மூத்த குடிகளைத் தொழ வேண்டும் என்ற ரீதியில் 'நிமிர வைக்கும் நெல்லை' என்ற நூலை ஆக்கினேன். அதன் அடுத்த கட்டமாக கட்டபொம்மன் புகழ் சொல்லும் இந்தப் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் வெளிவரு கிறது. இதை கண்டு இதயசுத்தியோடு பெருமை அடைகிறன். இந்தக் கடமையை எங்கள் கரிசல் மண்ணுக்குச் செய்கின்ற திருப்பணி யாகக் கருதி, நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் ஒப்படைத்தேன். ஓராண்டுக்கும் மேலாக பழைய நூலினைக் கவனமாகத் தட்டச்சு செய்து கொண்டுவர காலதாமதமாகியது. மோசமான அதன் தாள் களைப் பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டு பாதுகாத்து கவனமாகத் தட்டச்சு செய்ததே பெரும் பணியாக இருந்தது.

எங்கள் மண்ணுக்கு நிகர் வேறு எதுவும்  இல்லை என்ற பெருமை நெல்லை வட்டார மக்களுக்கு என்றும் உண்டு. இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என்றால் தமிழகத்திலிருந்துதான் துவங்க வேண்டும். குறிப்பாக, நெல்லையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தமிழர்களின் நாகரிகம் வளர்ந்த இடம். அதற்கு ஆதாரமாக ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரமும் இருக்கின்றன. எத்தனை கவிஞர்கள் இம்மண்ணில் தோன்றினார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கின்றது. வைணவ பாசுரங்களைத் தீட்டிய நம்மாழ்வார், இலக்கண நூலை எழுதிய சுப்பிரமணிய தீட்சிதர், இலக்கணக் கொத்தை வழங்கிய சாமிநாத தேசிகர், திரிகூட ராசப்ப கவிராயர், அதற்கு முன்பு குமரகுருபரர், சிவப்பிரகாசர், மதுரகவியாழ்வார், தொல்காப்பியத்திற்கு விளக்கம் தந்த சேனாவராயர், நப்பசலையார், அதிவீரராமபாண்டியர், சுப்பிரமணிய தம்பிரான், கடிகை முத்துப் புலவர், அரிச்சந்திர புராணம்  எழுதிய வீரகவிராயர், சண்டமாருத புலவர், புனித சவேரியார், கால்டுவெல், ஜி.யு போப், வீரமாமுனிவர், ரெயின்ஸ் அய்யர், உமறுப்புலவர், வரகுணராமப் பாண்டியர், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், விளாத்திகுளம் சுவாமிகள், பத்தமடை சுவாமி சிவானந்தர், எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர், காசிம் புலவர்,  பழனியாண்டிப் புலவர்,  அருணாசல கவிராயர்,  சுப்பிரமணிய முதலியார்,  கா.சு.பிள்ளை,  அ.மாதவய்யா,  ரசிகமணி டி.கே.சி., நீலகண்ட சாஸ்திரி,  புதுமைப்பித்தன்,  கே.கே. பிள்ளை,  அ.சீனிவாச ராகவன்,  சங்கரதாஸ் சுவாமிகள், குருமலை சுந்தரம் பிள்ளை,  காருகுறிச்சி அருணாச்சலம், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, சங்கரதாஸ் சுவாமிகள், வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதி, சாத்தான்குளம் ராகவன்,  பெ.நா.அப்புசாமி,  கு.அழகிரிசாமி,  தொ.மு.சி. ரகுநாதன்,  வல்லிக்கண்ணன்,  நா.வானமா மலை, கி.ராஜநாராயணன்,  தி.க.சி. என இன்றைக்கு வரை எண்ணற்ற ஆளுமைகள். இவ்வாறு ஒரு பட்டியலில் அடக்கிவிட முடியாத அளவிற்கு, இயற்கை தமிழகத்திற்கு வழங்கிய அருட்கொடைகளாகும். அப்படிப்பட்ட இந்த மண்ணில் தோன்றியவர்தான் இந்நூலாசிரியர் ஜெகவீர பாண்டியனார்.

கட்டபொம்மன் வம்சத்தில் ஒட்டநத்தம் கிராமத்தில் பிறந்த ஜெகவீரபாண்டியனார் திருக்குறள், குமரேச வெண்பா, கம்பன் கடைநிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் சரிதம், திருச்செந்தூர் அந்தாதி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். இவருடைய தமிழ்ப் பணிக்காக மதுரைத் தமிழ்ச் சங்கம்,  கரந்தை தமிழ்ச் சங்கம் ஆகியன இவரை அழைத்துப் பாராட்டின.

இளமையிலேயே கவிபாடும் திறமையைப் பெற்றவர். 1920இல் கோவையில் உள்ள பேரூரில் நடைபெற்ற கவிப்போட்டியில் வெற்றி பெற்றவர். வ.உ.சி.  பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார்,  சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர் சோமசுந்தரபாரதி, டி.கே.சி., ந.மு. வேங்கட சாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை,  கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் இவருக்கு நண்பர்களாக இருந்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி , திருவாவடுதுறை ஆதினம்,  மதுரை ஆதினம்,  தருமபுர ஆதினம்,  திருக்குறுங்குடி ஜீயர்,  குன்றக்குடி ஆதினம்,  முதல்வர்கள் இராஜாஜி,  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்,  குமாரசாமி ராஜா,  காமராஜர், அண்ணா மற்றும் பசும்பொன் தேவர், ம.பொ.சி.,  அவினாசிலிங்கம் செட்டியார்,  ப.ஜீவானந்தம் , க.வேங்கடாசலபதி,  ஜ.மாயாண்டி பாரதி போன்றவர்களோடு நெருக்கமாகப் பழகியவர். இவரைப் பற்றி கல்கி, நா.பார்த்தசாரதி,  பழ.நெடுமாறன் ஆகியோர் ஏடுகளில் கட்டுரைகளைத் தீட்டி உள்ளனர். ஒட்டநத்தத்தை விட்டு தூத்துக்குடியில் குடியேறி 1940இல் தமிழவேள் பி.டி.ராசன்,  என்.எம்.ஆர்.சுப்பராயன்,  பழ.நெடுமாறனுடைய தகப்பனார் கி.பழனி யப்பனார், ஆர்.எஸ் நாயுடு ஆகியோரின் விருப்பத்திற்கிணங்க மதுரையில் குடியேறி இலக்கியப் பணிகளை மேற்கொண்டார். மதுரைப் பல்கலைக்கழக அகாடமி உறுப்பினராக, அன்றைய துணை வேந்தரான தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இவரை 1966ஆம் ஆண்டு நியமித்தார். 1987 ஜூன் 17 அன்று காலமானார். இளமைக் காலத்தை ஒட்டநத்தத்தில் கழித்த கவிஞர் கண்ணதாசன், அடிக்கடி என்னிடம் ஒட்டநத்தத்தையும், ஜெகவீரபாண்டியனார் பற்றியும் பேசுவது உண்டு.

ஆரம்ப காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தபோது பயன்படுத்திய மேசை, நாற்காலிகள் உள்ளன. எஸ்.ராஜேஸ்வரி சிவராமன், ஜே.ராஜசூடாமணி பாண்டியன், ஜெ.சீதாலட்சுமி, டாக்டர் சந்திரசேகரன், அ.அன்பரசி , கே.ஜெகநாத பாண்டியன், எஸ்.சரவண பாண்டியன் என சிலர் அவருடைய வாரிசுகளாகத் திகழ்கின்றனர்.
ஜெகவீரபாண்டியனார் மதுரை மேலமாசி வீதியில் உலாவும்போது அவரைப் பார்த்ததுண்டு. நெடுமாறன் அவர்களின் விவேகானந்தர் அச்சகத்திற்கு வந்து, நெடுமாறனின் தந்தையார் கி.பழனியப்பனாரோடு நட்போடு இலக்கியங்களைப் பற்றி பேசுவதும் உண்டு.

இந்நூலின் மூல நூல் கிடைப்பதற்குப் பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவர் மறைந்த அண்ணன் பெ.சீனிவாசன் அவர்களிடம் பெற்றேன். 1989 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கோவில்பட்டியில் களம் இறங்கியபோது, அண்ணன் பெ.சீனிவாசன் தி.மு.க. சார்பில் சிவகாசியில் போட்டியிட்டார். அப்போது என்னைச் சந்திக்க கோவில்பட்டிக்கு வந்தபோது அவருடைய காரில் இந்த நூல் இருந்தது. அதை அவரிடம் போராடி பெற்று 24 வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு அச்சில் வருகிறது. எப்படி ஒரு தாய் தன் பிள்ளையைக் கருத்தரிப்பாளோ, அம்மாதிரி இந்நூலைத் தேடிக் கண்டுபிடித்து இன்றைக்கு அச்சில் பார்க்கும்போது மனதில் ஒரு கம்பீரம் ஏற்படுகிறது. இந்த நூலினுடைய ஜெராக்ஸ்களை தமிழில் கொடுத்து அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவிடம் அணிந்துரையும் வாங்கினேன். அப்போதே அச்சுக்கு வராததால் அந்த அணிந்துரை எங்கோ கைதவறியதால் இந்த நூலில் சேர்க்க இயலவில்லை.

நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். கி.ரா., மாலன் ஆகியோருக்கும், இந்தப் புத்தகப் பணி முடிந்து வெற்றிகரமாக வெளிவர பல உதவிகளைச் செய்த தி.க.சி., மறைந்த சுப.கோ.நாராயணசாமி (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கல்கி ப்ரியன், நண்பர் வி.எஸ். ராமன், நண்பர் மணா ஆகியோருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நூலைக்கொண்டு வரவேண்டும் என்று அவருடைய நெருங்கிய உறவினர் என்னுடைய கிராமமான குருஞ்சாகுளம் அருகில் உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த பெ.ஜெய்சங்கர் மிகவும் உதவியாக இருந்தார். இந்நூல் வெளிவர எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் உதவிய மறைந்த கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் சோ. அழகர்சாமி, முன்னாள் அமைச்சர் அண்ணன் பொன். முத்து ராமலிங்கம், ச. தங்கவேலு எம்.பி., கோவில்பட்டி இலட்சுமி ஆலையின் முன்னாள் நிர்வாக மேலாளர் செல்வராஜ்,  என்னுடைய சகோதரர் பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலகிருஷ்ணன் (மதுரை), கழனியூரன், பேராசிரியை டாக்டர் ஜெயபாரதி (குற்றாலம்),  கவிஞர் மதுமிதா (இராஜபாளையம்), நெல்லை ஓவியர் வள்ளிநாயகம்,  மறைந்த 'ஆனந்த' இராமகிருஷ்ண ராஜா (கோவில்பட்டி), வளசை செல்வராஜ் (குறுக்குச்சாலை), பா.மு.பாண்டியன் (கோவில்பட்டி), எட்டையபுரம் பாரதி, மண்டபம் மோகன் ஆகியோரை இந்த இடத்தில் நினைவுகூர வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது.

இந்த நூல் வெளிவர பல்வகையில் உதவிய பெங்களூரு பர்சுரி சுரேந்திரகுமார் அவர்களுக்கும் திரு.ராமன் அவர்களுக்கும் நன்றி.

இந்நூல் திரும்ப வெளிவருவது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும். இந்த நூலைக் கொண்டு வந்திருக்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும், கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கும் செல்விக்கும் பாராட்டுக்கள்.

 வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
     செய்தி தொடர்பாளர் - தி.மு.க.
     இணை ஆசிரியர் - கதைசொல்லி
      பொதிகை - பொருநை - கரிசல்

#பாஞ்சாலங்குறிச்சிவீரசரித்திரம்
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-01-2019

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...