இன்றைய(17-09-2020) #தினமணி செய்தித்தாளில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அமர்ந்து விசாரித்த முக்கிய வழக்கான #கேசவானந்த_பாரதி_வழக்கு குறித்தான கட்டுரை * ‘
#வரலாற்று_சாசனமாகிவிட்ட_வழக்கு’* என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
•••
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
————————————————
இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் 1973 –ல் உச்சநீதிமன்றம் 13 நீதிபதிகள் விசாரித்த கேசவானந்த பாரதி எதிரி(VS) கேரள மாநில அரசு வழக்கு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
அந்த வழக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பை (Basic structure) மாற்ற முடியாது என்று தெள்ளத் தெளிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. கூட்டாட்சி, அடிப்படை உரிமைகள், மதசார்பின்மை, அதிகாரப் பங்கீடுகள், அதனுடைய பணிகள் (separation of power) அதாவது நாடாளுமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்றம் என்ற அதிகாரங்கள் ஒன்றுக்கொன்று தலையிடக்கூடது என முக்கிய விஷயங்களில் அரசியல் சாசனத்தை எந்த சூழ்நிலையிலும் திருத்த முடியாது. இதெல்லாம் சாசனத்தின் அடிப்படைக் கூறுகள் என்று தெளிவுப்படுத்தினர்.
இந்த 13 நீதிபதிகளில் 7, 6 என்று இரு பிரிவாகப் பிரிந்து, கருத்து மாறுபாடுகள் சொன்னாலும், நீதிபதி எச்.ஆர்.கண்ணாவின் தீர்ப்பின் வரிகள் முன்னெடுத்தன. இந்தத் தீர்ப்புக்கு காரணமான மூத்த நீதிபதிகளான ஜெ.எம்.ஷெலாட், ஏ.என்.குரோவெர், கே.எஸ்.ஹெக்டே ஆகிய மூன்று நீதிபதிகளுக்கு, மூத்த நீதிபதிகள் இந்த வழக்கில் பெரும்பான்மை தீர்ப்பு வழங்கியதன் காரணமாக இந்தியத் தலைமை நீதிபதி பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்து அன்றைய மத்திய அரசால் பெயர்கள் நீக்கப்பட்ட அநீதி நடந்தது. பிரதமர் இந்திரா காந்தி மீது இந்தக் குற்றச்சாட்டு கடுமையாக வைக்கப்பட்டது.
இந்த மூன்று நீதிபதிகளும் இதைக் கண்டித்து பதவியும் விலகினார்கள். பிரதமர் இந்திரா காந்தி இந்தத் தீர்ப்பை 1973 ஏப்ரல் 24 ஆம் தேதி வழங்கியதிலிருந்து நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் எதிர்வினையாற்றத் தயாரானார். அலகாபாத் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக ராஜநாராயணன் தொடுத்த தேர்தல் வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு கிடைத்ததால், நீதித்துறை மீது கடுமையான எதிர்ப்பு நிலையை எடுத்தார் இந்திரா.
இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பால் இந்திராகாந்தி அவசர நிலை காலத்தை அறிவித்தார். சித்தார்த்தா சங்கர்ரே போன்றோர்களின் ஆலோசனை பேரில் சில கடுமையான நடவடிக்கைகளும் இந்திராகாந்தி மேற்கொண்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்வரண்சிங் தலைமையில் நீதிமன்ற அதிகாரத்தை மட்டுபடுத்தவும், பிரதமர் போன்றோர்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்ற நிலை எடுக்க அரசியல் சாசன திருத்தத்தில் பல திருத்தங்கள் கொண்டு வர ஸ்வரண்சிங் தலைமையில் இந்திரா ஒரு குழுவை அமைத்தார். அப்போது சட்ட அமைச்சர் எச்.ஆர்.கோகலே. ஸ்வரண்சிங் குழுவின் பரிந்துரையின்பேரில் 42, 43வது சட்டதிருத்தங்கள் நடைமுறைக்கு வர முன்னெடுக்கப்பட்டன.
42-வது திருத்தம் டிசம்பர் 1976-ல் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவசர நிலை காலத்தில் கொண்டுவரப்பட்டது; பிரதமர் இந்திராகாந்தி இதற்காக தனிக் கவனம் செலுத்தினார். இந்த சாசன திருத்தம் கடுமையான
விமர்சனத்து உள்ளானது.
இந்திய அரசியல் சாசனம் வழங்கிய சில அடிப்படை உரிமைகளை யாரும் மாற்றிவிட முடியாது. நாடாளுமன்றம் நினைத்தால் எந்தச் சட்டமும் கொண்டு வரலாம்; ஆனால், நாடாளுமன்றத்தில் கூட இந்த “அடிப்படை உரிமைகளை” மட்டுமே மாற்றி விட முடியாது; இப்படி ஏதாவது மாற்றிவிட நினைத்து, சட்டம் கொண்டு வந்தால், அதை சுயமாக ஏற்று விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.
இந்த நிலையில், 42-வது திருத்தச் சட்டம் இதை மாற்றி விட்டது; அதன்படி, நாடாளுமன்றத்துகே சர்வ அதிகாரம் என மாற்றங்கள் வந்தன.
இதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது என்ற அவலநிலை ஏற்பட்டது. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்க முடியாது.
42-வது திருத்தத்தை எல்லாம், 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது திரும்பப் பெறப்பட்டன. அப்படி ரத்து செய்த சட்டங்கள்தான், 43, 44-வது திருத்தச் சட்டங்கள்;
மினர்வா மில்ஸ் -எதிர்- இந்திய யூனியன் என்ற வழக்கில் 1980ல் வழங்கிய தீர்ப்பில் (AIR 1980 SC 1789) நாடாளுமன்றத்தை கேள்வி கேட்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தை குறித்து இல்லை என்று இருந்ததை தவறு என்று கூறி உள்ளது; இந்த வரலாற்று தீர்ப்பை அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், மற்றும் நீதிபதிகள் ஏ.சி.குப்தா, என்.எல்.உண்ட்வாலியா, பி.எஸ்.கைலாசம், பி.என்.பகவதி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பை வழங்கியது; இதில் முதல் நான்கு நீதிபதிகளும் நாடாளுமன்றத்துக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும், நீதிபதி பி.என்.பகவதி மட்டும் அப்படிப்பட்ட அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்றும் தீர்ப்பை வழங்கினர்;
இந்த தீர்ப்பில் – “அரசியல் சாசன சட்டத்துக்கு என்று சில அடிப்படைத் தன்மைகள் உண்டு என்றும், அதை நாடாளுமன்றம் மாற்றிவிட முடியாது என்றும்; அரசியல் சாசனத்தில் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம், வானளாவிய அதிகாரம் இல்லை; அந்த அரசியல் சாசன சட்டத்துக்கு கட்டுப்பட்ட அதிகாரமே என்றும்; எந்த ஒரு சட்டத்தையும் திருத்தம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்றாலும், அதில் கொடுக்கப்பட்டுள்ள “அடிப்படை உரிமை” என்னும் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது;” என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது;
இந்த நிலையில் திரும்பவும் கேசவானந்த பாரதி தொடுத்த வழக்குக்கு வருவோம்.
கேசவானந்த பாரதி வழக்கு ஜனநாயகத்தையும், நாட்டின் ஆட்சி அதிகார பிரிவுகளையும் பிற்காலத்தில் ஒழுங்குபடுத்த உச்சநீதிமன்றம் வழங்கிய அடிப்படை நெறிமுறைகளாகும். ஏற்கனவே 1967-ல் கோலகநாத் VS ஸ்டேட் ஆப் பஞ்சாப் என்ற வழக்கில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் திருத்த முடியாது என்ற தீர்ப்பு வழங்கியதும் அன்றைக்கு ஆட்சியில் இருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் விரும்பவில்லை.
கேசவானந்த பாரதி வழக்கு 1972 ல் அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டு, 1973 துவக்கம் வரை வாதங்கள் நடந்தன. 68 நாட்கள் நடந்தன.
தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி
ஜெ.எம்.ஷெலாட்
கே.எஸ்.ஹெக்டே
ஏ.என்.குரோவெர்
எ.என். ரே
பி.ஜெகன்மோகன்ரொட்டி
டி.ஜி.பலேகேர்
எச்.ஆர்.கண்ணா
கே.கே. மேத்யூ
எம்.எச். பெக்
எஸ்.என்.திவேதி
எ.கே. முகர்ஜி
ஓய்.வி.சந்திரசூட்
என்ற 13 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். நீதிபதி சந்திரச்சூட் தன்னுடைய தீர்ப்பை மாற்றியதுண்டு.
இந்த வழக்கு விசாரிக்கும்போது நீதிபதி பெக் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்று விட்டர். அவர் பிற்காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பால்கிவாலாயொடு ரவீந்திர நாராயணன், டி.ஆர். அந்தி அர்ஜூனா, ஜெ.பி.டடாசான்ஜி இந்த வழக்கில் ஆஜரானார்கள். கேரள அரசு சார்பில். மூத்த வழக்கறிஞர் எச்.எம். சீர்வை மத்திய அரசு சார்பில் நிரேன் தே (அட்டர்னிஜெனரல்) ஆஜரானார்கள்.
கேசவானந்த பாரதி வழக்கில் கேரள அரசு நிலச் சீர்திருத்தச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்தது. துறவியான கேசவானந்த பாரதி தன்னுடைய மடத்தின் சொத்துக்களான விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பால் மடத்தின் உரிமைகள் பறிபோகும் என்றுதான் கேரள அரசை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
கேசவானந்த பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பால்கிவாலா வாதாடினார். வாதாடும்போதே, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு விரிவான வாதங்களும், அதன் நீட்சியாக அன்றைய மத்திய அரசு ஜனநாயகத்தை எவ்வளவு பாழ்படுத்துகிறது என்பதையும் விரிவாகத் தளம் அமைத்து தன்னுடைய வாதங்களை வைத்தார்.
‘கோர்ட்டும் ஜீனியஸ்’ என்ற நூலில் சோலி சொராப்ஜி, நண்பர் அரவிந்த் தத்தா எழுதிய நூலில் எந்த அளவில் பல்கிவாலா, கேசவானந்த பாரதியின் வழக்கை, ஒரு வழக்கென்று எடுத்துக் கொள்ளாமல் நாட்டின் ஜனநாயகம் காக்க வேண்டும் என்ற தவ நோக்கத்தில் தான் அக்கறைப்பட்டார்.
‘கேசவானந்த பாரதி வழக்கு’ என்ற டி.ஆர்.அந்தி அர்ஜூனா எழுதிய ஆங்கில நூலிலும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 708 பக்கங்களில் தீர்ப்பு பெற்ற கேசவானந்த பாரதி, கேரளத்தின் வடகோடியில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள எட்நீர் மடத்தின் ஜீயர் ஆவர்.
இந்த மடம் சங்கராச்சாரியாருடைய வழியில் பயணிக்கின்ற மடமாகும். ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான தோடா கச்சியாரின் வழிவந்தவர் இவர். மலையாளம், கன்னடம் இரண்டும் இந்த மடத்தின் மொழிகளாகும். கேசவானந்த பாரதி 1961 இல் இந்த மடத்தின் பீடாதிபதியானார். 80 வது வயதை நெருங்குகின்ற நேரத்தில் மங்களூரு மருத்துவமனையில் 6 செப்டம்பர் 2020 அன்று மறைந்தார்.
ஒரு துறவி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நீதிமன்றங்களின் விசாரணையில் மட்டுமல்ல ஜனநாயகம், அரசியல், சட்டம், ஆட்சி முறைகள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம் கேசவானந்த பாரதியின் வழக்கு மையப்படுத்தப்படுகின்றது.
இந்த வழக்கைப் போல ஏ.கே.கோபாலன் வழக்கு, மேனகா காந்தி வழக்கு, மினர்வா மில் வழக்கு, மாதவராவ் சிந்தியா வழக்கு, ராஜநாயராணன் வழக்கு, சாபானு வழக்கு, ஒல்கா டெலிஸ் வழக்கு, போபால் விஷவாயு வழக்கு, நீதிபதிகள் மாற்றம் குறித்த வழக்கு, எஸ்.ஆர்.பொம்மை வழக்கு என்ற பல வழக்குகள் வெறும் தீர்ப்புகள் மட்டுமல்ல ஜனநாயகத்தையும் நாட்டையும் பிழையில்லாமல் நெறிமுறைகளோடு சட்டத்தின் ஆட்சியையும் மக்கள் நல அரசையும் பேணிக்காக்க இந்திய மக்களுக்குக் கிடைத்த அருட்கொடையான பிரகடனத் தீர்ப்புகளாகும்.அதை மதிப்போம். வணங்குவோம்.
கேசவானந்த பாரதி வழக்கில் அவருக்கான சரியான பரிகாரம் கிடைக்கவில்லை என்றாலும், நாட்டுக்கு பரிகாரம் கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம்மிடம் இம்மாதிரியான நிகழ்வுகள், விஷயங்களில் சரியான புரிதலும் இல்லை, தெளிவும் இல்லை. அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை. ஆட்சியாளர்களும் இப்படித்தான் இருகின்றார்கள் இன்றைக்கு அரசியலில் என்ன நடக்குகின்றது. வாக்குகள் விற்கப்படுகின்றன. அரசியல் வியாபார மயமாகிவிட்டது.
எந்தத் திறமையும், எந்தச் செயல்பாடும் இல்லாதவர்கள் எல்லாம் ஆளுயர போஸ்டர்கள், விளம்பரக் கட்டவுட்கள், செய்தித் தாள்களில் விளம்பரங்கள் கொடுத்து ஊடக வெளிச்சங்களில் வாழ்கின்றனர். இன்றைய அரசியல் நிலைமை அப்படித் தான் உள்ளது.
தகுதியே தடையாக இருக்கின்ற நிலையில், சுய இருத்தல், ஊடக வெளிச்சம், தன்னலன் என்ற குறிக்கோள் இருக்கும் பொழுது, சில துறவிகளும் நேர்மையான, தன்னலம் இல்லாத பணிகளைச் செய்துள்ளதை நம்மால் மறுக்க முடியாது.
எத்தனை அரசியல் பிரமுகர்களுக்கு கேசவானந்த பாரதியின் வழக்கைப் பற்றித் தெரியும்? அல்லது அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்களா?
சமீபத்தில் என்னுடைய முகநூலில் ஆங்கிலத்தில் கேசவானந்த பாரதி பற்றி பதிவிட்டிருந்தேன். அதைப் பார்த்து விட்டு ஒரு பத்திரிகையாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் “யார் சார் இந்த கேசவானந்த பாரதி” என்று கேட்கும் பொழுது ரௌத்திரப்பட வேண்டி இருக்கிறது. இது தான் இன்றைய அரசியல் .
உண்மையான பிரச்சனைகளை கவனிக்காமல், இல்லாத பிரச்சனைகளை தானே உருவாக்கி, அதற்காக விவாதங்களை நடத்துவது தான் நம்முடைய வாடிக்கையாகி விட்டது.
மதுவிலக்கை தமிழத்தில் நடைமுறைப்படுத்த உங்களால் கூப்பாடு போட முடியுமா? விவாதம் எழுப்ப முடியுமா. முடியாது. ஏனென்றால் போலியான அரசியல் நடைமுறைகளே இன்று நாடு முழுக்கப் பரவிக் கிடக்கின்றன.
இந்த நிலையில், கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் மக்கள் ஆட்சியை காக்கும் வைர வரிகளாகும். உலக அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனைத் தீர்ப்பாகும்.
அண்மையில் ஜூனியர் வழக்கறிஞர் ஒருவர். பெரியார் சிந்தனை உள்ளவர். அவர் கேசவானந்த பாரதி குறித்து குறிப்பிடும் பொழுது முழுமையாகவே இந்தத் தீர்ப்பு அவருக்கு சாதகமாகக் கிடைக்கவில்லையே என்றார்.
உண்மை தான். ஆனால், அந்தத் தீர்ப்பின் தன்மை என்ன? தீர்ப்பால் கிடைத்த விளைவு என்ன? என்பதை நினைத்துப் பாருங்கள் என்று சொன்னேன்.
அந்த அளவில் கேசவானந்த பாரதி வழக்கு இந்திய ஜனநாயகத்திற்கும், வளரும் ஜனநாயக நாற்றாங்காளில் விதைக்க வேண்டிய உரங்களாகும்.

No comments:
Post a Comment