Tuesday, December 1, 2020

 


#புதைந்து_கிடக்கும்_தமிழர்_வரலாறு !
------------------------





சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டிய பகுதிக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதிக்கும் செல்ல நேரிட்டது. கொடுமணல் மற்றும் இங்குள்ள அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை.
இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது.
அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
அதே போலவே, வரலாற்றில் திருவில்லிப்புத்தூருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த பகுதியை இராணி மல்லி என்பவர் ஆண்டார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர். தமிழை ஆண்டாள், கோதை நாச்சியாருடைய திருத்தலம். ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்விச் சாலைகள், நூலகங்கள் சூழ்ந்த ஊர். திருப்பாவை என்ற தமிழ் இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்த ஊர். பெரியாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்கள் இன்றைக்கும் வியக்க வைக்கின்றது. இப்படி பல வரலாற்றுத் தரவுகளை திருவில்லிப்புத்தூருக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.
திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிரம்ப புதைந்துள்ளது. இது குறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமியும், பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியான்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாக தரவுகள் சொல்கின்றன. அதன்மீது கற்பாறைகளால் அடுக்கி மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன.
ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும், பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைபடுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளும் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது. இந்த சிற்றோடையின் வடகரை மிகப் பழமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே அங்கு கட்டுமானப் பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் கீழும் முதுமக்கள் தாழிகள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த பகுதி தொல் மூத்த தமிழ் குடியினர் வாழ்ந்துள்ளனர். இவர்களுடைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் வெளிக் கொணர வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இதே போல, இதன் அருகேயுள்ள மம்சாபுரம், குறவன்கோட்டை ஆகிய இடங்களின் அருகேயும் பழமையின் அடையாளங்கள் பூமியில் புதைந்துள்ளன என்றும் பல கருத்துகளை சொல்கின்றனர். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று குறிப்பிடுகின்றனர்.
சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடிக்கல் நாட்டிய நிலத்திலும் அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழர்களின் தொல் நாகரிகத்தின் அடையாளம் கிடைக்கும் என்று திருவில்லிப்புத்தூரை சேர்ந்த கள ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி, கோபால்சாமி மலை போன்ற சில பகுதிகளும், திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு, கழுகுமலை போன்ற பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மட்டுமல்லாமல், பாறை ஓவியங்களையும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன.
கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை.
தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை. இந்நகரின் தொன்மையை பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள் மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் சொல்லுகிற சான்றுகளாகின்றன. இருந்தாலும் மதுரை மாநகரைப் பற்றிய சொல்லும்படியான அகழ்வாய்வு சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்திற்கு நகர்த்துவதற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதுவும் மதுரை நகர் சார்ந்து இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இருந்து திரும்பவும் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள்.
ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டின் தொன்மையை காட்டுகிறது. 1872, 1876, 1903 1914 என பல கட்டங்களில் இங்கு ஆய்வுப் பணிகள் நடந்தன. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இது குறித்தான சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையும் வெளிவராமல் மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது.

இராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்ககாலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என தொல்லியல் துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது.

அந்த பகுதியில் 1986இல் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1990 தொடங்கி 2015 வரை ஏழு கட்டங்களாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளின் மூலம் தொல்பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடி மணிகள், இரும்புக் கருவிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவையும், மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை உறுதி செய்யும் அரியவகை மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. 2016 இல்
அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் கிடைத்தன. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களைவிட தொன்மை சிறப்பு மிக்க பல அரிய பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் அழகன்குளம் மற்றும் அதன் ஆற்றங்கரைப் பகுதிகள் அமைந்துள்ளதால் இலக்கியங்களில் காணப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கிய பாண்டியர்களின் துறைமுகமான மருங்கூர்பட்டினமாக இருக்கக்கூடும் என்றும் கருதப் படுகிறது.அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13000 பழங்கால பயன் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறை அறிவித்தது.

அழகன்குளம் ஆற்றங்கரை பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து மீத்தேன் எரிவாயு ஆய்வு மேற்கொள்ள முனைந்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது.

#அகழ்வாராய்ச்சி
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.08.2020
#ksrposts

••••
மோ.பிரசன்னா
தொல்பொருள் ஆய்வாளர் :
கால்டுவெல் தமிழகத்தின் தென்பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தை (தூத்துக்குடி மாவட்டத்தையும் உள்ளடக்கிய) பற்றிய ஆய்வுகள் அம்மாவட்டத்தின் கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வர மிக முக்கிய காரணியாக திகழ்ந்தார் .
இம்மாவட்டம் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபட்டாலும் வரலாற்று அறிஞர்களால் குறைந்தபட்ச அளவே ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு இருக்கின்றது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு ஆயர் கால்டுவெல், Jagar, Louis Lapicque, Alexandar Rea, J.K. Kearns, K.T.Kearns போன்றவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் இம்மாவட்டத்தின் தொல்லியலின் முக்கியத்துவத்தை வெளிகொணர்வதற்கு முக்கிய காரணியாக திகழ்ந்தனர்.
தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்டத்தையும் உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்தின் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளை பழங்கற்காலம், நுண்ணிய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் அல்லது பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்க காலம், வரலாற்றுக் காலம் என பிரிக்கலாம்.
மேற்கூறப்பட்ட பிரிவுகளில் கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் இரும்புக்காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் சார்ந்ததாகவே இருந்தது என்பதனை அவருடைய தொல்லியல் சார்ந்த கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. அவைகள்

1. Explorations at Korkai and Kayal (1887), Indian Antiquary Vol.6, 80-82
2. Excavations at Kayal (1887), Indian Antiquary Vol.6, 82-83
3. Sepulchral Urns in Southern India (1887) Indian Antiquary Vol.6, 279-280

கால்டுவெல் ஆய்வு செய்த பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலம்.இறந்தவர்கள் நினைவாக பெரிய கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் விந்திய மலைக்குத் தெற்கே இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன. பெருங்கற்களைக் கொண்டு நீத்தோர் நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டதன் காரணத்தால் இக்காலம் “பெருங்கற்காலம்” என அழைக்கப்படுகின்றது. தென்தமிழகத்திலும், ஆற்றுப்படுக்கைகளிலும் பெருங்கற்படைகளுக்கு பதிலாக ஈமத்தாழிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வழக்கம் தமிழகத்தில் ஏறக்குறைய கி.மு 1500 முதல் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை இருந்தது .
பொதுவாக பெருங்கற்காலத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை கற்பதுக்கை, கற்திட்டை, கல்வட்டம், ஈமத்தாழி, தொப்பிக்கல், குடைக்கல். குடைவரைக்கல்லறை என்று பிரிக்கலாம் .
ஈமச்சின்னங்களில் பல வகைகள் காணப்பட்டாலும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தாழிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களே அதிக அளவில் காணப்படுகின்றன. தாழிகளால் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் பெரும்பாலும் அப்பகுதியில் “பரம்பு” என்றழைக்கப்படும் அதிக பளிங்கு கற்களுடன் கூடிய மணல் பகுதியிலே அமைக்கப்பட்டுள்ளன. ஆயர் அவர்கள் ஆய்வு செய்த இடங்களான கொற்கை, காயல், மாறமங்கலம், இலஞ்சி, புதுக்குடி போன்ற பகுதிகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழிகளே கிடைத்தன.

அகழாய்வுகள்

மனிதன் தோன்றியகாலம் முதல் எழுத்தாவணங்களான இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலம் வரையிலான, இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மனிதனின் நடவடிக்கைகளைத் தெரிவிப்பது அவன் விட்டுச்சென்ற தொல்பொருள்களே. அவை இம்மண்ணுலகில் மறைந்து மட்கி மண்மூடி மேடுகளாய் காட்சியளிக்கின்றன. அவற்றை வெளிக்கொணரும் முயற்சியே தொல்லியலின் முதுகெலும்பாக விளங்கும் அகழாய்வு ஆகும்.
ஆயர் அவர்கள் அகழாய்வு என்ற ஒன்று இந்தியாவில் அறியப்படாத காலங்களிலே அப்பணியினை செய்து தொல்லியல் ஆய்வாளர்களில் முன்னோடியாக திகழ்கிறார்.
ஆயர் அகழாய்வும் களஆய்வும் செய்தப் பகுதிகள்
*கொற்கை-காயல்
*மாறமங்கலம்
*இலஞ்சி
*புதுக்குடி என பல பகுதிகள்........

#கொற்கை

தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை சங்ககாலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய இவ்வூர் பாண்டியர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. ‘புகழ்மலி சிறப்பின் கொற்கை’ முத்துபடு பரப்பின் கொற்கை முன்துறை ’ எனப் பலவாறாக சங்க இலக்கியகள் இவ்வூரினைப் பற்றிப் புகழ்ந்துரைக்கின்றன.பாண்டிய மன்னர்கள் ‘கொற்கைக் கோமான் ’ ‘கொற்கை வேந்து’ என்றும் வெற்றிவேற் செழியனுடைய தலைநகர் என்றும் கொற்கையுடன் இணைத்துப் புகழ்படுகின்றனர்.
இவ்வாறு பெருமை மிகுந்த கொற்கையில் ஆயர் அவர்கள் மேற்கொண்ட அகழாய்வில் 10 அல்லது 12 கூலியாட்களை கொண்டு அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் அகழாய்வு செய்ததின் மூலம் 3 இடங்களில் முதுமக்கள் தாழியினை கண்டறிந்தார்.
அவற்றில் 2 முதுமக்கள் தாழியினுள் எவ்வித ஈமச்சின்னங்கள் மற்றும் அரிய பொருட்கள் கிடைக்கவில்லை எனவும் ஆனால் அம்முதுமக்கள் தாழியினுள் மட்கிய நிலையில் மனித எலும்புகள் துகள்களாக இருந்ததாகவும் மூன்றாவதாக கிடைத்த முதுமக்கள் தாழியினுள் முழுமையான மனித எலும்புகள் உடைந்த நிலையில் தான் கண்டறிந்ததையும், மேலும் அவ்வாறு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் ஒரு தாழியானது 11 அடி சுற்றளவுடன் உடைந்த நிலையில் காணப்பட்டதையும் தன் கட்டுரையில் ஆயர் அவர்கள் பதிவு செய்கிறார் .

#காயல்பட்டினம்
காயல் அல்லது பழையகாயல் என்று அழைக்கப்படும் இப்பகுதி சங்ககாலத் துறைமகமாகிய கொற்கையின் புகழ் மங்கிய பிறகு அதே பகுதியில் இடைக்காலத்தில் பாண்டியர்களின் சிறந்த துறைமுகமாக காயல்பட்டினம் உருவானது.
கி.பி.13ஆம் நூற்றாண்டில் இத்தாலிய கடல் பயணி மார்க்கோ போலோ சீனாவிலிருந்து கடல்வழியாக இத்துறைமுக நகரை வந்தடைந்த அவர் இத்துறைமுக நகரை காயல் (Cail) என்று குறிப்பிடுவதோடு மட்டுமின்றி, ஒரு சிறந்த, மாபெரும் நகராகவும் குறிப்பிடுகின்றார்.
மார்க்கோ போலோ இத்துறைமுக நகரைப் பற்றி விவரிக்குமிடத்தில் “மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள்யாவும் இத்துறைமுகம் வந்து சென்றதாகவும், அரேபியர்கள் மிக அதிகமாக வாழும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் காணப்படும் கடல்சார் நாடுகள் குறிப்பாக ஆர்மோஸ், கிஸ் மற்றும் ஏடன் பகுதிகளிலிருந்து அதிகமாக இத்துறைமுகத்திற்கு குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் இதன்வழி பிற நாடுகளைச் சேர்ந்த வணிகர்களின் இறக்குமதிப் பொருட்களுக்கு முக்கிய வியாபாரத் தலமாகவும் காயல் இருந்தது” எனக் குறிப்பிடுவதை தன்னுடைய ஆய்விலும் ஆயர் அவர்கள் குறிப்பிடுகிறார் .
ஆயர் அவர்கள் இப்பகுதியில் செய்த களஆய்வில் கிடைத்த பானையோடுகளில் மூலம் இப்பகுதியானது வாணிப நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் மேலும் அவர்கள் தான் அமைத்த கூலியாட்களை பயன்படுத்தி ஏரியின் அருகே ஒரு பகுதியனை அகழாய்வு செய்து கொற்கையில் கண்டுறியப்பட்ட முதுமக்கள் தாழியினை போன்றே 11 அடி சுற்றளவு உள்ள முதுமக்கள் தாழியினை கண்டறிந்தார் என்பதினையும் குறிப்பிடுகிறார்.
மேலும் இப்பகுதியில் முதுமக்கள் தாழியினை உள்ளூர் மக்கள் மதமதக்கான்தாழி என்று அழைப்பிதனையும் அத்தாழியில் மனித எலும்புகளும், மண்டையோடு கிடைத்ததை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அம்மண்டையோட்டில் ஆயதத்தைப் பயன்படுத்தி துளையிடப்பட்டதையும் தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.
மேலும் காயல்பட்டினம் மற்றும் கொற்கை அருகேயுள்ள மாறமங்கலத்திலும், தென்காசி அருகேயுள்ள இலஞ்சியிலும் முதுமக்கள் தாழியினை தான் கண்டறிந்ததையும் தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.
தன் ஆய்வுகளை முதுமக்கள் தாழியினை கண்டு அறிவதோடு மட்டும் நிறுத்தி விடாமல் இலஞ்சியில் முதுமக்கள் தாழியினுள் கிடைத்த மண்டையோடுகள் மற்றும் பற்களை Dr.Fry, Surgeon to the Resident of Travancore அவர்களிடம் கொடுத்து ஆய்வு செய்தார். அவ்வாய்வில் அப்பகுதி மக்கள் தானியங்களை உணவாக உட்கொண்டனர்கள் என்பதினையும் ஆய்வில் கிடைத்த முடிவினை தன் கட்டுரையில் பதிவு செய்து தொல்லியலை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார் ஆயர் .
தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்கிறது செய்திகள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும். இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வு மூலம், தமிழ் மண்ணல் ஆதிகாலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் தாவரப் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.
3. தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல தரவுகள் கிடைத்துள்ளது.
ஆனால் தமிழனுடைய வரலாறு சரியாக, சீராக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பை சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற அனைத்து மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்