—————————————
நண்பர், தமிழகம் அறிந்த மூத்த படைப்பாளி ஜெயமோகன், கி. ரா நூறு புத்தகத்தைப் பற்றி இரண்டு பதிவுகளை (1 மற்றும் 3 ஏப்ரல் 2023) தன் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். முதல் பதிவு வந்த பிறகு நான் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர் நான் அந்த புத்தகத்தில் கமலஹாசனிடம் கட்டுரையை கேட்டிருக்கலாம் என்று எழுதியிருந்தார். கமலஹாசன் எட்டாத உயரத்தில் இருப்பவர். 52 ஆண்டுகள் அரசியலில் இருந்தாலும் நான் சாமானியன் தான். என்னைப்போன்ற சாமானியனால் அவரிடமிருந்து கட்டுரை வாங்க முடியாது.
கி.ராவிற்காக 60, 75, 80, 85, 90, 95 மற்றும் 100 என்று இத்தனை விழாக்களை எடுத்தேன். தில்லியில் 90இல் கி.ராவை அழைத்து சென்று , தினமணியும் தில்லி தமிழ் சங்கமும் இணைந்து கி.ராவின் 90வது விழாவினை நடத்த அடிப்படை ஏற்பாட்டினை நான் தான் செய்தேன்கி.ரா 95 நடைபெற்ற சமயம் முந்தைய நாள் எனது தாயார் 98 வயதில் ககாலமாகிவிட்டார். கோவில்பட்டி அருகில் இருக்கும் எங்களுடையது கிராமம் அனைத்து காரியங்களையும் முடித்து விட்டு மறு நாள் காலை வரை பாண்டிச்சேரி வந்து விழாவினை நடத்தினேன். கி.ரா நூறு விழாவினை மாண்புமிகு குடியரசு முன்னாள் துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு அவர்களை வைத்து நடத்தினேன். என் போன்ற சானானியனால் இவ்வளவு தான் முடியும். இதை ஜெயமோகனிடன் தெரிவித்தேன். அவரும் உணர்ந்துக்கொண்டார். மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். இன்றும் அதுக்குறித்து வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அவருக்கு நன்றி.
•••••••••••••••••
https://www.jeyamohan.in/181642/
https://www.jeyamohan.in/181268/
#கிரா100 #ஜெயமோகனின்_இரு_பதிவுகள்
(ஏப்,1,3-2023)
#கிரா100 , கேஎஸ்ஆர்
April 3, 2023
கி.ரா -100
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அழைத்திருந்தார். கி.ராஜநாராயணனுக்கு அவர் தொடர்ச்சியாகச் செய்து வரும் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். கி.ரா-100 தொகுப்பே அவர் முயற்சியால் உருவானது. 500 கட்டுரைகளில் இருந்து கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. அவர்தான் அதன் தொகுப்பாசிரியர்.
கி.ராஜநாராயணனுக்கு 60 நிறைவு விழாவை கொண்டாடியது, 70 நிறைவை கொண்டாடியது, 80 நிறைவை கொண்டாடியது, டெல்லியில் 95 நிறைவை கொண்டாடியது ஆகியவை தன் முயற்சியாலும் முன்னெடுப்பாலும்தான் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சொன்னார். அரசியல்வாதியும், வழக்கறிஞருமான ஒருவர் ஓர் எழுத்தாளரின் படைப்புலகில் இத்தகைய தீவிரமான அர்ப்பணிப்புடன் இருப்பதும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவ்வெழுத்தாளரை கொண்டாடி வருவதும் மிக முன்னுதாரணமான ஒரு நிகழ்வு. இலக்கியவாதி என்னும் வகையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என் நன்றிக்குரியவர்
நான் கிரா 100 நூலை பற்றி எழுதும்போது எவ்வகையிலும் அதைத் தொகுத்தவர்களின் பணியை குறைத்து எழுதவில்லை.ஆனால் இன்னும் ஒருங்கிணைந்த முயற்சிகளைச் செய்திருக்கலாமோ என்னும் ஆதங்கமே என்னிடம் இன்னும் உள்ளது.
பிறந்தநாள் விழாக்கள் சிறப்பானவை. ஆனால் அதை சாதாரணமானவர்களுக்கும் செய்கிறார்கள். டெல்லியில் ஓர் இந்திய அளவிலான கருத்தரங்கு நிகழ்த்தியிருக்கலாம். அதில் இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்குகொள்ளச் செய்திருக்கலாம் . ஆங்கிலத்தில் கி.ராவின் நூல்கள் வெளிவரச்செய்திருக்கலாம். ஒரு நல்ல தொகைநூலும் ஆங்கிலத்தில் வந்திருக்கலாம். கி.ரா ஞானபீடம் நோக்கிச் சென்றிருப்பார்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனிமுயற்சியால் செய்த பணிகள் பாராட்டுக்குரியவை. தமிழ் அறிவியக்கம் இன்னும் கூடுதலாக இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே என் மனக்குறை.
கிரா100, கேஎஸ்ஆர்
April 1, 2023
கி.ராஜநாராயணன் –
தமிழ் விக்கி
கி.ராஜநாராயணன் மறைவுக்குப் பின்னர் வரும் நூல்களைப் பார்க்கையில் ஓர் ஆற்றாமை ஏற்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்நூல்களை வெளியிட்டிருந்தால், அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தால், சற்று தொடர்புப்பணிகளைச் செய்திருந்தால் தமிழுக்கு இன்னொரு ஞானபீடம் கிடைத்திருக்கும். நாம் பெருமைகொள்ளும் ஞானபீடமாகவும் அது இருந்திருக்கும்.
ஆனால் எப்போதுமே இறந்தபின் கொண்டாடுவதே நம் வழக்கம். அது நமது தொன்மையான நீத்தார்வழிபாட்டின் மனநிலையின் நீட்சி. கி.ராவின் நினைவாக கதைசொல்லி இதழும் பொதிகை, பொருநை, கரிசல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கி.ரா 100 நூல் (இரு தொகுதிகள்) அந்த ஆற்றாமையையே உருவாக்கியது.
மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட நூல். மொத்தம் 158 கட்டுரைகள் அடங்கியது. தமிழ்ச்சமூகத்தின் எல்லா பகுதியினரும் எழுதியிருக்கிறார்கள். இலக்கியவாதிகள், இதழாளர்கள், ஆய்வாளர்கள், அரசியலாளர்கள், நீதிபதி, நடிகர் என பலர். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயிடு தலைமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புதான், ஆனால் இதையும் சில ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கலாம்.
நூல் எனும் வகையில் இது ஒரு முக்கியமான தொகுப்பு. கி.ராவின் மீதான தமிழ்ச்சமூகத்தின் ஒட்டுமொத்தப்பார்வையே இதன் வழியாக அறியக்கிடைக்கிறது. எதிர்காலத்தில் கி.ரா மீதான பெரும்பாலான ஆய்வுகள் இந்நூலின் வழியாகவே நிகழவிருக்கின்றன என்று தெரிகிறது. திடவை பொன்னுசாமி, ப்ரியன், அருள்செல்வன், ஆகாசமூர்த்தி, இர.சாம்ராஜா, இளசை அருணா, கார்த்திகாதேவி, கவிமுகில் சுரேஷ் என நிறையபெயர்கள் எனக்கு எவரென்றே தெரியாதவர்கள் . உக்கிரபாண்டி, கோ.சந்தன மாரியம்மாள், கு.லிங்கமூர்த்தி என பல பெயர்கள் அசலான தெற்கத்திப் பெயர்களாகத் தோன்றுகின்றன.
இத்தனைபேர் கி.ரா பற்றி எழுதியிருப்பதும், இவர்களின் எழுத்துக்களை தேடித் தொகுத்திருப்பதும் உண்மையில் பெரும்பணி. பல கட்டுரைகள் மிக எளிய சமூகப்பார்வை அல்லது கல்வித்துறைப் பார்வை கொண்டவை. ஆனால் எந்த ஒரு கட்டுரையிலும் அதை எழுதியவருக்கு கி.ராவுடன் இருக்கும் அணுக்கமும், அவருக்கு கி.ரா அளித்ததென்ன என்பதும் இல்லாமலில்லை.
இந்நூலில் சில கட்டுரைகள் முக்கியமானவை. சூரங்குடி அ.முத்தானந்தம், பாரத தேவி, மு.சுயம்புலிங்கம் போன்றவர்களை நடை, கூறுமுறை, பார்வை ஆகியவற்றில் கி.ராவின் நேரடியான தொடர்ச்சிகள் என்றே சொல்லமுடியும். பாரததேவி கி.ராவுடன் நேரடியான அணுக்கமும் கொண்டிருந்தார். ’கி.ரா. எனக்கு எழுதிய கடிதங்களை நான் என் மேல்சட்டைப்பையில் வைத்திருப்பேன். அந்தக் கடிதங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்போ அப்போ எழுத்து நான் படிச்சிக்கிட்டே இருப்பேன். கிராவின் கடிதங்கள் படிக்கிறதுக்கு சொகம்மாயிருக்கு,. அவர் கடிதங்கள் இதயநோயாளியான மு.சுயம்புலிங்கத்தின் பலஹீனமான இதயத்தை இதமாய் தடவிக்கொடுக்கும்’ என்னும் சுயம்புலிங்கத்தின் வரிகளில் இருக்கும் நெருக்கமும் நெகிழ்வும் ஆழமானவை.
கி.ரா மீது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்று விடுத்த தீண்டாமைக்கொடுமை வழக்கு அவரை அலையவைத்து சோர்வுள்ளாக்கியது. அவ்வழக்கில் கி.ராவின் இடத்தை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்திய நீதிபதி ஜிஆர். சுவாமிநாதனின் கட்டுரை இந்நூலில் உள்ளது. “வட்டாரவழக்கு என்று பெருந்தகைகளாலும், தமிழ்ப்பதாகைகளாலும் செம்மல்களாலும் அறிஞர்களாலும் அவதூறு செய்யப்பட்ட மக்கள் மொழி என்பது ஓரு மொழிக்கிடங்கு என்று எப்போதும் நிறுவியவர் கிரா’ என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். கி.ராவை அவர் பயன்படுத்திய சொற்கள் வழியாகவே அணுகும் சுவாரசியமான கட்டுரை அது.
இன்னும்கூட கட்டுரைகள் கேட்டு பெறப்பட்டிருக்கலாம். கமல்ஹாசன் கி.ரா மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை பெற்றிருக்கலாம். கி.ராவின் நிலத்தைச் சேர்ந்தவரான வசந்தபாலனிடம் ஒரு கட்டுரை கேட்டிருக்கலாம். ஆனால் அப்படிப்பார்த்தால் அந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.
தமிழின் முதன்மைப்படைப்பாளி ஒருவரின் நினைவுக்கு ஆற்றப்பட்ட மிகப்பெரிய அஞ்சலி இந்நூல்.
கிரா-நூறு
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
3-4-2023.
No comments:
Post a Comment