Tuesday, May 9, 2023

தமிழக ஊடகங்கள்…. Tamil media

தமிழக ஊடகங்கள் இன்று கேள்விகுறி?

திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஊடகங்கள், சமூக வலைதளங்கள் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று எழுதும் போதெல்லாம் திமுகவினர் சண்டைக்கு வருவார்கள். "ஏங்க திமுக எதிர்கட்சியாக இருக்கு, மீடியா எப்பவுமே ஆளும்கட்சிக்கு தானே சப்போர்ட் செய்யும்" என்று லாஜிக் பேசுவார்கள். ஆனால் ஊடக நெறியாளர்களில் இருந்து, செய்தியாளர், எடிட்டர் வரை இடதுசாரிகளாக இருந்தது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல. இவர்கள அனைவருமே திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை பார்த்தது உண்மை. அதிமுக, பாஜக ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக சித்தரித்து, திமுகவால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று தொடர் பிரச்சாரம் மூலம் மக்களை நம்பவைத்து, திமுக ஆட்சிக்கு வருவதற்கு பெரும் உதவி செய்தது தமிழக ஊடகங்களும், அதில் வேலை பார்ப்பவர்களும்.

எதிர்கட்சியாக இருக்கும் போதே திமுக ஆதரவு நிலைப்பாடு என்றால், ஆளும்கட்சியான பிறகு கேட்கவா வேண்டும். திமுக என்ற கட்சியின் குரல்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல், திமுக என்ற கட்சியின் நிலைப்பாடு தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடு, திமுக என்ற கட்சியின் கருத்து தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்து என்று நிறுவுவதற்கு அனுதினமும் போராடி வருகிறார்கள் தமிழக ஊடகத்தினர். 50 வருடமாக மத்திய அரசு என்று சொன்ன திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  ஒன்றிய அரசு என்று அழைக்க ஆரம்பித்தது. அதை அடிபிரளாமல் அனைத்து ஊடகங்களும் சொல்ல ஆரம்பித்தன. செய்தியாளரில் இருந்து, நெறியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் வரை அனைவரும் ஒன்றிய அரசு என்று அழைக்க ஆரம்பித்ததே, திமுகவுக்கு இந்த ஊடகங்கள் அடிமையாக இருப்பதற்கான மிகப்பெரிய உதாரணம். 

தமிழக செய்திச் சேனல்களில் யாருக்காவது தெரியுமா? டிவி விவாத நிகழ்ச்சிகள் முழுக்க முழுக்க திமுகவுக்கு ஆதரவாக நடக்கிறது இதை வெளிப்படையாக சொல்லியும் தமிழக மீடியா அசைந்து கொடுக்கவில்லை. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.

டிவி விவாதங்களும் எப்படி நடக்கின்றன என்று பாருங்கள். திமுகவில் மொத்தம் 5 பேர் ஒரு கருத்தை பேச, இன்னொரு பக்கம் ஒற்றை ஆளாக மறுத்து பேச வேணும். 40 நிமிட விவாதத்தில் 5 நிமிடங்கள் கிடைத்தாலே அதிசயம் தான். திமுகவுக்கு பங்கமாக ஏதாவது நடந்தால் நெறியாளரே மடை மாற்றுவதும், பாயிண்ட் எடுத்துக் கொடுப்பதெல்லாம் சாதாரண நிகழ்வு. 

இன்று திமுகவை நோக்கி கேட்கப்படும் கேள்விகளை திமுகவினரிடம் கேட்கவே மாட்டார்கள். அவ்வளவு விஸ்வாசம். சில சமயங்களில் அதற்கு பத்திரிகையாளரே பதில் சொல்கிறார். 

திமுகவினர் பொய்யே சொன்னாலும் அதே பொய்யை இவர்களும் தூக்கிக் கொண்டு சுற்றுகின்றனர். திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் பொய்யை உண்மையாக்கி மக்களை நம்ப வைக்கும் உக்தி. 

பொய் சொல்வது ஒருபுறம் என்றால் உண்மையை மறைப்பது இன்னொரு சாதுர்யம். செய்தியை முழுமையாக சொல்லாமல், அதில் திமுகவுக்கு சாதகமானதை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை வைத்து விவாதிப்பதை தொடர்ந்து செய்கிறார்கள். இதன் மூலம் நான் முன்பே சொன்னது போல், திமுகவின் கருத்து, நிலைப்பாடு, கொள்கை தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடு என்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க மீடியா துணை போகிறது. திமுகவினருக்கு சாதகமான நெரேட்டிவ் செட் செய்வதைத் தான் முழுநேர வேலையாக செய்கிறது தமிழக மீடியா. 


அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊடகங்களும் மக்களின் பணத்தில் தான் செயல்படுகிறது. மக்கள் தான் மீடியாவுக்கும் எஜமானர்கள். காசு கொடுத்து வாங்கி பத்திரிகை படிக்கிறார்கள். பணம் கொடுத்து, தங்கள் நேரத்தை கொடுத்து டிவி விவாத நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் தங்களை ஏதோ தேவதூதர்கள் போல் நினைத்து செயல்படுகிறார்கள். மக்களுக்கு உண்மைகளை சொல்லி, தவறுகளை வெளிச்சம் போட்டுகாட்ட வேண்டிய ஊடகங்கள், இன்று பணத்திற்காகவும, சித்தாந்தத்திற்காகவும் பிரச்சாரம் செய்யும் இழிவான வேலையை செய்து கொண்டிருக்கிறது. 

திமுகவை எதிர்த்து, திமுகவுக்கு சங்கடம் தரக்கூடிய, திமுகவுக்கு சேதாரம் ஏற்படக்கூடிய, திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் இமெஜிற்கு பங்கம் வரக்கூடிய எந்த கேள்வியையும் இவர்கள் கேட்பதே இல்லை என்பது இன்று மக்களுக்கே தெரிகிறது. 

தமிழக ஊடகங்களை காலடியில் போட்டு, கழுத்தில் மிதித்துக் கொண்டு, பத்திரிகை சுதந்திரம் பற்றியும், கருத்து சுதந்திரம் பற்றியும் கூச்சமே இல்லாமல் மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை திமுகவும், முதல்வரும் நிறுத்திக்கொண்டால் நல்லது. 

#தமிழக_ஊடகங்கள்


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...