#ஆற்றலும்பொருளாகிறது
————————————
ஆற்றல் உள்ளது; பொருள் உள்ளது. அதுதான் வாழ்க்கை: ஆற்றல் மற்றும் பொருள். சிந்தனை பொருளில்லை என்று நினைக்கிறோம்; அப்படி அல்ல. சிந்தனை என்பது பொருள் - ஒரு கருத்தாக இருப்பின், ஒரு சித்தாந்தமாக இருப்பின்.
ஆற்றலும் பொருளாகிறது, எனவே பொருளும் ஆற்றலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது.
ஆற்றலுக்கும் பொருளுக்கும் இடையில் எவ்வளவு சமநிலை இருக்கிறதோ, எவ்வளவு அதிகம் இணக்கம் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக மூளையின் செயல்பாடு இருக்கும் - சுறுசுறுப்பாக, உயிர்ப்பாக. இது வெறுமனே ஒரு கருத்து அல்ல.
மனிதனின் மாற்றத்தில் புத்தகங்களுக்கும் என்ன இடம் இருக்கிறது? எதுவும் இல்லை.
நம்மை மாற்ற அறிவையும் அனுபவத்தையும் சார்ந்திருக்கிறோம், அது பயனளிக்கவில்லை.
மனதில் தீவிரமான, நிபந்தனையற்ற தன்மையைக் கொண்டுவர அறிவுக்கு இடமில்லை.
கவனிப்பு மட்டுமே அதை செய்யும்.
***
#துறவி
பட்டப்பகலிலே
பரந்த உலகிலே
என்னென்னவோ
கண்டேன்
எதுவும் என்னை
கவரவில்லை
ஏது நான்
சற்றுத் துறந்த
முனிவனாய்
விட்டேனோ என
ஐயுற்றேன்.
அந்த நான்
நடுநிசியிலே
இடுங்கிய அறையிலே
மூலையிலோர்
குகை கண்டேன்
கண்டதும் நான்
முற்றத் துறந்த
முனிவனாய்
முழுமூச்சுடன்
தவத்திலாழ்ந்தேன்.
-#ஷண்முகசுப்பையா
மனிதர்களால் சிற்சில தருணங்களில் மட்டுமே உன்னதமானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் நடந்துகொள்ள முடியும். அந்த மேன்மையான கணங்கள் நிகழும்போது தங்களது இயல்பான குணங்களில் இருந்து விலகி, சுயநலமான எண்ணங்களைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, மிகுந்த கருணையுடன் வெளிப்படுவார்கள். தங்களைப் புதிதாக உணர்வார்கள். பரிவுடன் செயல்படுவதும் கருணையுடன் சிந்திப்பதுமே மனிதனின் இயல்புநிலை எனப் புரிந்துகொள்வார்கள். வளர்ப்பு, சூழல், கசப்பான அனுபவம் போன்ற காரணங்களால் நாம் விலங்குகளைப்போல நடந்துகொள்கிறோம் என்றுணர்ந்து வெட்கப்படுவார்கள்.
அந்த உன்னத நிலை எப்போது சாத்தியப்படும்? மகத்தான நேரடி அனுபவங்கள் நிகழும்போது, நெஞ்சை உலுக்கும் கதைகளைக் கேட்கும்போது, சக மனிதர்களின் நெகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சாட்சியாகும்போது, நன்றியுணர்ச்சி பெருகும்போது! நம்மில் பலரும் இதனை அவ்வப்போது உளமார உணர்ந்திருப்போம். பெரும்பாலான சமயங்களில் வஞ்சகமும் பொறாமையும் தீய எண்ணங்களும் கொண்டு வாழும் நாம், திடீரென ஒரு சமயத்தில் இவற்றால் தீண்டப்படாத பரிசுத்தமான ஆத்மாக்களாகக் கண்ணீர் மல்கியிருப்போம், சிசுவைப் போலத் தூயநிலையை அடைந்திருப்போம். அந்தக் களங்கமற்ற நிலை சில மணித்துளிகளோ சில நாள்களோ நீடிக்கும். பின்னர், அந்த உணர்ச்சிகள் வடிந்த பிறகு நம்முடைய அன்றாட இயல்புக்குத் திரும்பிவிடுவோம். நம் மனமாற்றம் ஒரு மின்னல்கீற்று போலக் கடந்துவிடும். பழைய கசடுகள் மீண்டும் ஒட்டிக்கொள்ளும்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-10-2024
No comments:
Post a Comment