Sunday, November 17, 2024

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை
———————————————————
இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில் உள்ளது. கடந்த 1978 ஆம் ஆண்டில் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.  அதற்கு பல்வேறு  கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன ஆனால் இதுவரை எந்த ஒரு ஆளும் கட்சியும் இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைத்தது இல்லை.

இன்றைக்கு இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தேர்தலை சந்தித்த என் பி பி யாழ்ப்பாணத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிட தகுந்தது அங்கு தமிழர் கட்சி அல்லாத தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது இதுவே முதல்முறை . 

மலையகத் தமிழர்கள் அதிகம் வாழும் நுவரேலியா மாவட்டத்திலும் எம்பிபி கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. கண்டி மாத்தளை கேகாலை பதுளை சுளுந்துறை உள்ளிட்ட பகுதியிலும் இந்த கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி  அதிக இடங்களில்  வெற்றி பெற்றது! மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவான இடங்களைப் பெற்றதால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற சில எதிர்க்கட்சியினரின் ஆதரவை அவர்கள் பெற வேண்டிய நிலை இருந்தது! தற்போது என்பிபி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வலிமையுடன் வெற்றி பெற்றதால் ஆளும் கூட்டணி எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில்  இனி எளிதாக நிறைவேற்ற முடியும்!

அதிபரின் அதிகாரத்தை குறைக்க நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பங்குப் பெரும்பான்மை தேவை! இதைக் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்! இலங்கை அரசியலின் அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிப்பேன்!. சர்வதேச செலாவணி நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேம்படுத்தி இலங்கைப்பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன் என்றெல்லாம் அனுரா தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தார்!

இன்றைய பன்னாட்டு பொருளாதாரச் சூழலில் இந்த வாக்குறுதிகள் அதிபருக்கான அதிகாரத்தை குறைப்பேன்.! ஊழலை ஒழிப்பேன்! பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்! என்கிற மூன்றும் கவர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது? 

போக முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு பின்பு  தமிழருடைய வாழ்க்கை மீண்டும் எந்த நிலைக்கு அவர்களது ஜனநாயக குடியுரிமைகள் மதிக்கப்பட்டு மீட்டுத் தரப்படும் என்பது பற்றி அவர் தெளிவாக சொல்லி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. 

ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்கிற முறையில் மக்களுக்கு இந்தப் புதிய ஆட்சி குறிப்பாக தமிழர்களுக்கு செய்யப் போகும் நலன்களில் இருந்து தான் அதற்கான பரிகாரங்களூடன் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பதோடு இன்று குற்றுயிராய்க் கிடக்கும் இலங்கையின் சனநாயகத்தையும் மீட்டுக் கொள்ள முடியும்!

சர்வதேச நிதியங்களை அணுகும் போது அனுரவுக்கு என்ன விதமான அனுகூலங்கள் அல்லது சிக்கல்கள் ஏற்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!
••••••

Sharmila Vinothini Thirunavukarasu
நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும். அனைவரும் 'இலங்கையர்களாக' ஒன்றிணைய வேண்டும். நல்ல வாதம் தான். இந்த நாடு பின்னோக்கி போனதற்கு ஊழல் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் தான் காரணமா இல்லையே! புரையோடிப் போன இனப்பிரச்சினை. அது தீர்க்கப்படாமல் வேறு எந்த வழிமுறைகளும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நான் நம்பவில்லை.

நாங்கள் இலங்கையர்களாக ஒன்றிணைய மாட்டோம் என்று சொல்லியிருக்கிறோமா என்றால் இல்லையே. 1915 இல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது அன்றைய தினம் தமிழ் அறிவு ஜீவியாக இருந்த பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் இங்கிலாந்து மகாராணியை சந்தித்து இலங்கையராக அக்கலவரத்தை நிறுத்தியிருந்தார். அவர் இலங்கையை வந்தடைந்த பொழுது அவரை குதிரை வண்டிலில் குதிரைக்கு பதிலாக சிங்கள தலைவர்களே அவரை வண்டியில் வைத்து இழுத்து வந்த கதை தெரிந்திருக்கும். இந்த நாடு சுதந்திரம் பெற்ற பொழுது தமிழருக்கான தனி அலகு பற்றி யாரும் கேட்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் ஒன்றாக இலங்கையராக வாழ்வோம் என்று கூறியே நாட்டையும் பெற்றோம்.
அதன் பின் எதற்காக எழுந்தது இந்த இனப்பிரச்சினை? எந்த புள்ளியில் தொடங்கியது?

1956ல் S.W.R.D பண்டாரநாயக்கா பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றி சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார். நாட்டில் 1/4 பங்கு இருந்த தமிழ் பேசும் இருந்தனர். இச்சட்டத்தால் தங்கள் இறைமை பாதிக்கப்படும் என உணர்ந்த தமிழ் மக்கள் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.

போராட்டங்களால் இன முறுகல் ஏற்பட்டு கிழக்கிலங்கையில் கல்லோயா நகரில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து 1957ல் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழும் நிருவாக மொழியாக இருக்க உடன்பாடு எட்டப்பட்டது. 

ஆனால், சிங்களத் தேசியவாதிகள், மற்றும் பௌத்த துறவிகளின் எதிர்ப்பு குறிப்பாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு நடைப் பயணம் என எதிர்ப்பு எழுந்தமையால் பண்டாரநாயக்கா அரசு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது.

தொடர்ந்தும் முறுகல் நிலை, பொலன்னுறுவையில் தமிழர்களை குடியேற்ற எடுத்த முயற்சி என நிகழ்வுகள் தொடர 1958ல் தமிழ் மக்களுக்கு எதிரான இன வன்முறைகள், கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசாங்கங்கள் மாறுகிறது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்த இனவாத ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழரசு கட்சி பங்காளியாகி ஆட்சியை அமைக்கிறது, மாவட்ட சபை அளவிலான நிர்வாக அமைப்பு போன்ற விடயங்களுடன் டட்லி - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்து ஆகிறது. அதுவும் பௌத்த துறவிகள் உள்ளிட்டோரின் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது (அதன்பின்னரும் தமிழரசு கட்சி டட்லி அரசின் காலம் முடியும் வரை முட்டு கொடுத்தது வேறு கதை).

'பண்டா-செல்வா', 'டட்லி-செல்வா' ஆகியவற்றின் தோல்வி தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை உணர்த்தியது. சிங்களத் தலைமைகள் ஒரு போதும் 'சிங்கள-பௌத்த' பேரினவாதிகளை அதிருப்திப்படுத்தும் எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்களுக்குத் தரப்போவதில்லை.

இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட மக்கள் சார்பிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர். அதன் முன்னரும் , பின்னரும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்களாக, ஆட்சியின் பங்குதாரர்களாக, அமைச்சர்களாக, அரசுடன் இணைந்தே பல தடவைகள் தமிழ் பிரதிநிதிகள் இருந்தனர். ஆனால் தீர்வு? அல்லது நாடு ஏன் முன்னேற்றப் பாதையில் செல்லவில்லை.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகியும் பாதீட்டில் 50 வீதத்திற்கு அதிகமான தொகை பாதுகாப்பு நிதியாக ஒதுக்கிய போது அதனை ஆதரித்தே இருந்திருக்கிறீர்கள். இப்பொழுது ஊழலை ஒழித்து இலங்கையராக இணையுங்கள் நாட்டை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்வோம் என்ற கோசத்திற்கும் மக்கள் ஆணையை தந்துள்ளனர்.

உங்கள் முன் பல சவால்கள் உள்ளன. அவற்றில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை எவ்வாறு நிறுத்தப் போகிறீர்கள் என்பதே பிரதான கேள்வி. இந்த நிலத்தில் வசிக்கும் யாருமே மீண்டும் ஒரு வன்முறையோ, ஆயுதப் போரோ, வருவதை விரும்பவில்லை. இழந்த வரை போதும் என்றே நினைக்கிறார்கள். அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக
முதலில் தமிழ் மக்கள் உங்கள் மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாக நல்லெண்ண சமிக்ஞையாக
- நிலங்களை விடுவித்தல்.
- இனப்பரம்பலை மாற்றுகின்ற வலிந்த குடியேற்றங்கள்.
- பௌத்தமயமாக்கல், தமிழர் பகதிகளில் விகாரைகளை அமைத்தல்.
- நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான உரிமை
- தமிழ் பகுதிகளில் ராணுவ எண்ணிக்கையை குறைத்தல்
- பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்
- நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை
- சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமை. குறிப்பாக கடற் தொழில்
- முக்கிய துறைகளில் தமிழர்களுக்கும் சமவாய்ப்பு
- தொல்பொருள் திணைக்களத்தினால் ஸ்டிக்கர் ஒட்டப்படும் தமிழர் மரபுரிமைகள்
- வரலாற்று புனையப்பட்டு ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தொல் வழிபாட்டு தலங்களில் வழிபாடு
- கடந்த காலங்களில் திணைக்களங்களிலும் கல்வி சார் நிறுவனங்களிலும், கட்சிகளால் வழங்கப்பட்ட 'கௌரவ' நியமனங்கள் இல்லாது செய்யப்பட வேண்டும்.

போன்ற பல விடயங்களில் உங்களால் முன் வைக்கப்படும் நடவடிக்கைகள், மக்களை உங்களை நோக்கி ஈர்க்கும்.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும். மிக முக்கியமாக அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படத்த வேண்டும். இந்த நாட்டில் பௌத்தம், சிங்களம் போன்றவற்றிற்கு வழங்கும் முன்னுரிமை போலவே  தமிழ் மொழிக்கும் அவர்களின் மத, கலாசார, விழுமியங்களுக்குமான சம உரிமையே இந்த நாட்டில் ஐக்கிய நாட்டிற்குள் அனைவரும் சமமாக வாழ வழி சமைக்கும்.

நீங்கள் அரசியலமைப்பு மாற்றத்தில் கை வைத்தால் மீண்டும் சிங்கள பேரினவாதம் அதனை கையில் எடுக்கும். பூதாகரமாக்கி சிங்கள மக்களை தூண்டி விடுவர். அதனை அடுத்த தேர்தலில் முன்னிருத்தி ஆட்சிக்கு வருவர். ஏற்கனவே சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சிகள் ஏமாற்றிய பின்னும் மக்கள் உங்களை நம்பி உங்களுக்கான ஆணையைத் தந்துள்ளனர். உங்கள் மீது நீண்ட நெடும் சவால் காத்திருக்கிறது. எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே மக்களின் உங்கள் மீதான ஆதரவு இருக்கும்.

அது போலவே தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்வோர், மக்கள் சார்ந்த அபிவிருத்தி அவர்களது வாழ்க்கைகளை முன்னேற்றக் கூடிய அத்தனை திட்டங்களுக்கும் அரசியல் திட்டங்களுக்கும் முழு ஆதரவையும் வழங்க வேண்டும். அரசு பாதை தவறி போகும் போது அதனை சுட்டி காட்டி எதிர்வினையும் ஆற்ற வேண்டும். 

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பதிவு - Uthayaseelan Katkandu.

#இலங்கைநாடாளுமன்றதேர்தல் ல #அனுரகுமாரதிசநாயக்கா
#srilankaelections2024

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-11-2024

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...