நம்ப முடியாத நாட்குறிப்பிலிருந்து.... 1
அரசியலாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று கூறிய திருஞானசம்பந்தர். “தண்பொருநைப் புனல் நாடு” என்று கூறியவர் சேக்கிழார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் ஒரு காலத்தில் இன்றைய
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரில் தொடங்கி தெற்கே வள்ளியூர்
வரை இருந்தது.
இம் மாவட்டத்தின் தென்பகுதி தாமிரபரணி
தீராவாசத்தில் பச்சைப் பசேல் என்று இருக்கும். இன்றைக்கு இம் மாவட்டம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி என மூன்றாகப் பிரிந்து
விட்டது.
இந்தியாவின் ஆக்ஸ்போர்டாக திருநெல்வேலியின்
பாளையங்கோட்டை திகழ்ந்தது. இதன் வடபகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் - வானம் பார்த்த கரிசல் மண் பகுதி.
கோவில்பட்டி - சங்கரன்கோவில் மார்க்கத்தில் இடையே சின்ன கிராமமான குருஞ்சாக்குளம் கிராமத்தில்தான்
நான் பிறந்தேன்.
அரசியல் குடும்பம். எங்களுடைய கிராமத்தில் நான் பிறந்த
காலத்திலேயே மின்சார வசதி வந்துவிட்டது. மங்கலான நினைவு - எங்கள் வீட்டில் பெரிய திண்ணை உண்டு. அதில் கோடுகள் போட்ட சமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து அரசியல், உலக நடப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து
பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றைய திருநெல்வேலி மாவட்ட பிரமுகர்கள் மட்டுமின்றி, அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் வருவது உண்டு.
அந்த வகையில், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த செல்லப்பாண்டியன், அமைச்சர்களாக இருந்த கடையநல்லூர் மஜித், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள்
சைமன், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தியாகி
சோமையாஜுலு, ராஜாஜி குஞ்சிபாதம், சங்கரன்கோவில் ஊர்காவலன், தியாகி சட்டநாத கரையாளர் (இவர்தான் செங்கோட்டையை கேரளாவில் இருந்து
தமிழகத்துக்கு போராடி பெற்றுத் தந்தவர்) ஆகியோரும்
வருவார்கள்.
அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.நாயுடு, வேணுகோபால கிருஷ்ணசாமி நாயுடு, சங்கிலி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி தலைவர் ரா.கிருஷ்ணசாமி
நாயுடு, தியாகி சுப்பா நாயக்கர், கடையநல்லூர் சுப்பையா முதலியார், தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகு, ஈவிகே. சம்பத், எல்.வி.ராமகிருஷ்ணன் முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர்,
பிற்காலத்தில் முதல்வராகப் பதவியேற்ற பக்தவத்சலம் உள்ளிட்ட பலர் வந்து சென்ற வீடு என்னுடைய வீடு.
மேலும், ஈழத்துத்
தலைவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் மற்றும்
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரும் வந்துள்ளனர். கோடை விடுமுறை காலங்களில் பிற்காலத்தில் என்னோடு வழக்கறிஞராக இருந்து பின்னாட்களில்
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளாகப் பணியாற்றிய நண்பர்களும்
என் கிராமத்துக்கு வந்து சென்றதுண்டு.
அப்பொழுதெல்லாம் செய்தித்தாள்களான ஆங்கில
‘இந்து’ பத்திரிகை சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு என்னுடைய வீட்டுக்கு மதியம்தான்
வரும். அதேபோல், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து
காலையில் வரும். திருநெல்வேலி தச்சநல்லூரில் அச்சடிக்கப்பட்டு
தினமலர் வரும்.
மேலும், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, ஆங்கில ஏடுகளான இல்லஸ்ட்ரேட் வீக்லி, ரீடர்ஸ் டைஜெஸ்ட், சோவியத் நாடு, அமெரிக்கன் ரிப்போர்ட்டர், ஜெர்மனி வீக்லி... என பல ஏடுகளும், இதழ்களும் தபாலில் வீட்டுக்கு வரும்போது
புரட்டிப் பார்ப்பது உண்டு.
இவ்வாறாக அரசியல் ஆர்வமும் அக்கறையும் எனக்கு ஏற்பட்டது. சற்று மங்கலான நினைவு... 1957-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குச்
சென்று வாக்களிப்பதை நான் கண்ணால் பார்த்தேன்.
அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரைப்
பொருத்தவரை பிளவுபடாத காங்கிரஸ், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, அன்றைக்கு பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சியான
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரபலம். இதில் காங்கிரசுக்கு இரட்டைக்காளை சின்னம், சுதந்திரா கட்சிக்கு நட்சத்திர சி்ன்னம், கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சி்ன்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறியப்படாத பிரஜா சோசலிஸ்ட், சம்யுக்த சோசலிஸ்ட் என்ற 2 கட்சிகளின் சின்னமாக ஆலமரம், குடிசை இருக்கும். அப்போதைய காலத்தில் திராவிட முன்னேற்றக்
கழகம் என்ற கட்சி மற்றும் உதயசூரியன் சின்னம் அறியாத கிராமமாக எங்கள் ஊர் இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 494 இடங்களில் 371 இடங்களில்
காங்கிரஸ் வெற்றிபெற்றது.
எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி என்பதால், மானாவாரிப் பயிர்களான உளுந்து, எள், துவரை, நிலக்கடலை அதிகமாக
விளையும். பம்ப்
செட்டுகள், குளத்துப் பாசன ஏரியாக்களில்
நெல், வாழை, கரும்பு, போன்றவற்றைப் பயிரிடுவோம். அதோடு மிளகாய், பருத்தியும் உண்டு.
பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் பள்ளியில்
என்னைச் சேர்த்தபோது, அங்குள்ள
விடுதியில் தங்க விருப்பம் இல்லாது, திரும்பவும் எங்களுடைய கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன்
நடுநிலைப் பள்ளியிலேயே சேர்ந்து படித்தேன்.
அப்போதெல்லாம் நோட்டுப் புத்தகங்கள்
பென்சில்கள் கிடையாது. சிலேட்டுகளில்
சிலேட்டு குச்சிகளை வைத்து எழுத வேண்டும். தமிழ் பாடப் புத்தகத்தை தனியார் வெளியீட்டாளர்கள் அச்சடித்து தருவார்கள். அந்த பாடப் புத்தகத்தில் திருவிக, திருவள்ளுவர் படங்கள் எல்லாம் இருந்ததாக
நினைவு.
ஒரு பென்சில் குச்சி கிடைத்தால்கூட, அதைப் பெரிய அளவில் கொண்டாடும் நிலை இருந்தது. பென்சில் தாளில் எழுதுவது என்பது அந்தக் காலத்தில் பெரிய விஷயமாகத் தெரியும். பெருக்கல் வாய்ப்பாடு என்கின்ற அரிச்சுவடி, ஏ - பி - சி - டி சொல்கின்ற என்ற அட்டை இவையெல்லாம் நாங்கள் படித்த
காலத்தில் எங்களுக்கு கிடைத்த கல்வி புத்தகங்களும், சாதனங்களும்.
இப்படியாக கிராமத்தில் கல்வி தொடர்ந்தது. நான் படித்தது திருவேங்கடத்தில் உள்ள
அரசு உயர் நிலைப்பள்ளி. எங்கள் காலத்துக்கு முன்னால் இந்தப் பள்ளி கழக உயர் நிலைப்
பள்ளியாக இருந்தது. எங்கள்
காலத்தில் அது அரசு உயர் நிலைப்பள்ளியாக மாறியது.
இன்றைக்கு கிராமத்தில் பள்ளிகள் எப்படி
இருக்கின்றன என்றால், பஞ்சாயத்து
நடுநிலைப் பள்ளி, 8-ம்
வகுப்பு முடித்தவுடன், உயர்
நிலைப்பள்ளி அடுத்து அரசு மேல்நிலைப் பள்ளி என
உள்ளன.
கல்லூரியை அன்றைக்கு பிரி-யூனிவர்சிட்டி (பியூசி) என்பார்கள். இப்போது போல பிளஸ் 2 கிடையாது. எங்கள் காலத்தில் 9, 10 மற்றும் எஸ்எஸ்எல்சி அரசு உயர் நிலைப்
பள்ளியில் படித்தோம். அடுத்து, பியூசி அதாவது புகுமுக வகுப்பு ஒரு ஆண்டு கல்லூரியில் படிக்க வேண்டும். அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவம், பொறியியல், விவசாயக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக்
கல்லூரிக்குச் செல்லலாம்.
அந்த வகையில் எனக்கு கால்நடை மருத்துவக்
கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விருப்பம் இல்லை. எனக்கு பி.ஏ. வரலாறும், பொருளாதாரம், அரசியல் படிக்க
வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இளம்பிராயத்தில். எங்கள் கிராமத்தில் சில்லாங்குச்சி, கோலி, தெள்ளுக்காய் விளையாட்டுகளில் விளையாடியதுண்டு. அதேபோல் என்னுடைய சகோதரர்கள் கல்லூரியில்
இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது சின்ன சின்ன பந்துகளை வாங்கி வருவார்கள். அவற்றை மட்டையால் அடித்துக் கொண்டிருப்பேன்.
சினிமாவுக்குச் செல்ல வேண்டுமென்றால்
அருகேயுள்ள திருவேங்கடம் (இன்றைக்கு தாலுகா தலைநகராகி உள்ளது) செல்ல வேண்டும். புதிய படங்கள் என்றால், கோவில்பட்டி, சங்கரன்கோவில் அல்லது திருநெல்வேலிக்குச்
செல்ல வேண்டும்.
திருநெல்வேலியில் சென்ட்ரல், ரத்னா, பார்வதி, லட்சுமி, ராயல் என்ற தியேட்டர்கள்தான் அன்று
முக்கியமாக இருந்தன. அதேபோல், கோவில்பட்டியில் நாராயணசாமி மற்றும்
ராமசாமி, சரஸ்வதி, சங்கரன் கோவிலில் கோமதி சங்கர், தென்காசியில் பாக்கியலட்சுமி என்ற திரையரங்கங்கள்
இருந்தன. மதுரைக்குச் சென்றால் ரிலீசான படங்களை
உடனே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில்
மதுரையில் ரீகல், சென்ட்ரல்,
தங்கம், கல்பனா, சிந்தாமணி
தியேட்டர்களில் படம் பார்ப்பதுண்டு. ரீகல் தியேட்டரில் ‘கோல்டு ஃபிங்ஞர்’ என்ற ஆங்கிலப் படத்தை முதன்முதலாகப்
பார்த்தது இன்றும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது.
1959 - 60களில் சென்னையில் என்னுடைய சி்த்தப்பா
ஒருவர் விமானப்படையில் லெப்டினன்டாக இருந்தார். அப்போது தாம்பரத்தில் தங்கி, சென்னை கடற்கரை பீச், இன்றைய அண்ணாசாலை, சைனா பஜார், மூர் மார்க்கெட்
அருகில் இருந்த மிருகக்காட்சி, மீனம்பாக்கத்தில்
விமானம் இறங்குவது, ஏறுவது மற்றும், ஓடுதளத்தில் பாய்வதை எல்லாம் பார்க்கும்போது, பிரமிப்பாகத் தெரிந்தது. அன்றைக்கு அண்ணா நகர் கிடையாது, அமைந்தகரை செனாய் நகர், அடையாறு காந்தி நகர் இவையே பிரபலமாக இருந்தன. மின்சார
ரயில் பயணம் மூலம்தான் சென்னையை சுற்றிவர முடிந்தது. அதுதான்
பெரியதாகத் தெரிந்தது. இன்றைக்கு சாதாரணமாக கடந்து செல்கின்றோம்.
ஏற்கெனவே அரசியல் பின்புலத்தில் வளர்ந்ததால், பியூசி படிக்கும்போதே அரசியல் மீது
ஆர்வம் வந்தது. அரும்பு மீசை வளரும் காலம், வானம்பாடிகளாக சுற்றுகின்ற காலத்தில், ஸ்தாபன காங்கிரஸில் எனது மாணவர் காங்கிரஸ்
பணியைத் தொடர்ந்தேன்.
நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்
பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டார். மார்சல் நேசமணி இறந்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு களப்பணி ஆற்றுவதற்கு முன்பு வெற்றி
வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துவர அண்ணன் பழ.நெடுமாறனையும், நாகர்கோவிலில் ஸ்தாபன இளைஞர் காங்கிரஸில்
இருந்த சிரோன்மணியையும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி கள ஆய்வு செய்யச் சொன்னார் பெருந்தலைவர் காமராஜர்.
அப்போது ஸ்தாபன காங்கிரஸின் தலைவராக
பா.ராமச்சந்திரன். கட்சியின் பொதுச் செயலாளராக பழ.நெடுமாறன், குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, வேலூர் தண்டாயுதபாணி போன்றோர் இருந்தார்கள்.
ஸ்தாபன காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக கோவை கம்பன்
பி.ஜி.கருத்திருமன் இருந்தார். அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களாக மேலே
குறிப்பிட்ட தலைவர்கள் இருந்தார்கள்.
இதுதவிர, இன்றைக்கு நம்மோடு இருக்கின்ற எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், பழ.கருப்பையா, தமிழருவி மணியன், கன்னியாகுமரி முத்துக்கருப்பன் என்று
சிலரும் இருந்தனர். கவிஞர் கண்ணதாசன் நாகர்கோவிலிலேயே தங்கி
காமராஜருக்காகப் பணியாற்றினார். அந்தத் இடைத்தேர்தலில் காமராஜரை எதிர்த்து சுதந்திரா கட்சி வேட்பாளராக டாக்டர் மத்யாஸ்
போட்டியிட்டார்.
கடந்த 1957-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் நன்றாக நினைவில் உள்ளது... அப்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கும்
சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடக்கும். வேட்பாளர் சின்னங்கள் எல்லாம் வந்து
விட்டன. வாக்குச் சீட்டுகளில் வாக்களித்து, ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும். அதற்கு முன்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்களாக கலர்கள்தான் ஒதுக்கப்பட்டன. உதாரணமாக, சுப்பையா என்பவருக்கு சிவப்பு, ராமகிருஷ்ணன் என்பவருக்கு மஞ்சள் என கலர்கள்தான் இருக்கும். உருவச் சின்னங்கள் இருக்காது.
கட்சிகள் சார்பில் பெரிய போஸ்டர்கள்
ஒட்டப்படும். கதவுகளில் ஒட்டக்கூடிய ‘டோர் ஸ்லிப்’ ஒன்று கொடுப்பார்கள். அது ரிப்பன் மாதிரி இருக்கும். அதேபோல் சட்டையில் மாட்டிக் கொள்ளும்
வகையில் காளை மாடு, நட்சத்திரம், கதிர் அரிவாள் சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட
வட்ட வடிவமாக ‘பேட்ஜ்’கள் என்று சொல்லக் கூடிய அட்டையை ‘ஊக்’குடன் தருவார்கள் இவைதான் அன்றைய பிரச்சாரத்துக்கான
விளம்பரப் பொருட்கள்.
அதைத்தவிர தேர்தல் அன்று யாராவது ஒருவர்
வீட்டில் மதிய உணவுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்வார்கள். அன்றைக்கெல்லாம் பிரியாணி விருந்தும் கிடையாது, ஓட்டுக்குக் காசும் கிடையாது. சைவ உணவுதான். வடை, பாயாசத்துடன் இருக்கும். காலையில் ஒரு காபி அல்லது சோடா கலர்
பானம், மதியம் 4 மணிக்கு தேநீரோடு வடை கொடுப்பார்கள். இவைதான் அன்றைய தேர்தல் களத்தில் காணக்கூடிய
காட்சிகள். அன்றைக்கு மது விலக்கு அமலில் இருந்ததால் மதுக் கடைகளே கிடையாது.
இப்படியாக எனது அரசியல் பணி தொடங்கியது. கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கின்றன.
அதேபோல் நெல்லை மாவட்டம் என்பது என்றைக்கும்
வீரத்துக்கும், பண்புக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான தலமாக விளங்குகிறது. சென்னை மாகாணமாக இருந்தாலும் சரி; இன்றைய தமிழ்நாடாக ஆனாலும் சரி... முக்கிய வட்டாரமாக எதிலும் திகழ்கின்றது திருநெல்வேலி சீமை.
முக்கியமாக குற்றாலத்துக்கு வருகின்ற விருந்தினர்கள், அதேபோல பாரதி பிறந்த எட்டையபுரம், தமிழ் தேசியம் உருவாக்கிய
தலைவர்களில் ஒருவரான பாரதியின் நண்பர் சோமசுந்தர பாரதியும், உமறுப் புலவரும், முத்துசாமி தீட்சிதரும் உலவிய மண் எங்களுடைய எட்டையபுரத்து மண்.
இதன் அருகில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனுடைய பாஞ்சாலங்குறிச்சி, செக்கிழுத்த செம்மல் சிம்பரனார் பிறந்த ஓட்டப்பிடாரம், இந்திய அரசியல் சாசனத்தின் மூலப் பிரதியில் இன்றைக்கும் தமிழில் கையெழுத்திட்ட மு.சி. வீரபாகு பிறந்த தூத்துக்குடி, பத்திரிகை பிதாமகன்கள் தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம், அம்பாசமுத்திரம் கீழாம்பூரில் பிறந்த ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், பாமரர்களும் படிக்கக் கூடிய தினசரி ஏட்டைத் தந்த ‘தினத்தந்தி’ சி.பா.ஆதித்தனார், ‘தினமலர்’
பத்திரிகையை நிறுவிய ராமசுப்பையர் என்ற அடையாளங்கள் மட்டுமல்லாமல், சென்னையில் முதன்முதலாக ‘ஹிக்கின்பாதம்ஸ்’ புத்தகக்
கடையைத் திறந்த சிம்சன், டிவிஎஸ் போன்ற தொழில்
அதிபர்களையும் தந்தது எங்களுடைய நெல்லை மண்.
எங்கள் மண்ணில் பிறந்த அனைவருக்கும் அந்த மண்ணின் மகத்துவமான வீரமும், ஆற்றலும் திறமையும், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கக் கூடிய ஞானமும் ரத்தத்தோடு கலந்து நிற்கும்.
இப்படியான நிலையில் ஒரே ஒரு ஏக்கம்... எங்கள் அருகாமையில் உள்ள ராஜபாளையம், விருதுநகரைச்
சேர்ந்தவர்கள் முதலமைச்சர்களாகி விட்டார்கள். எங்கள் நெல்லை மைந்தர் யாரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகவில்லையே என்ற வருத்தமும், ஆதங்கமும், கவலையும் எங்களுக்கு
உண்டு -
இவ்வளவு திறமைகளும் ஆற்றலும் இருந்தும்கூட.
ஒரேயொரு ஆறுதல்... ராஜபாளையத்து குமாரசாமி
ராஜா எங்கள் மண்ணின் மைந்தர் என்பது. காரணம் ராஜபாளையம் ஒரு காலத்தில் திருநெல்வேலியில்தான் இருந்தது.
இப்படியாக கிராம வாழ்க்கை, திருநெல்வேலி கல்லூரி வாழ்க்கை என்ற நிலையில் அரசியல், ஈழப் பிரச்சினை, விடுதலைப்புலிகள்
தலைவர் பிரபாகரன் என்னோடு தங்கியதால், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஈழப் பிரச்சினையில் என்னுடைய செயல்பாடுகள் மட்டுமல்லாமல், 69 - 70-களில் தொடங்கிய விவசாய சங்கப் போராட்டத்தில் நாராயணசாமி நாயுடுவோடும், கிருஷ்ணசாமி கவுண்டரோடும், முத்துசாமி கவுண்டர் எம்.பி.யோடும் பங்கேற்றேன். அதேபோல், மதுராந்தகம்
முத்துமல்லா ரெட்டியாரோடு விவசாய சங்கத்திலும் பயணித்தேன்.
தமிழ்நாட்டில் அதிகமாக துப்பாக்கி சூட்டுக்கு பலியானது விவசாயிகள்
சங்கப் போராட்டத்தில்தான். இதில் 48 பேர் பலியாகி உள்ளனர். என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமத்தில் மட்டும் 8 பேர் பலியாகினர்.
என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்ற நூல் இதுவரை 5 பதிப்புகள் வந்துள்ளது. இதில் நெல்லையினுடைய சிறப்பை விரிவாகச் சொல்லியுள்ளேன். நெல்லை மாவட்டம் தமிழர்களின் ஐந்து வகை நிலங்கள் உள்ளடக்கிய மாவட்டம் என்ற
பெருமை பெற்றது.
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் இடத்தில் சமீபத்தில்
நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய
முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொற்கை துறைமுகத்தில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ்
பெற்றதாக விளங்கியது.
காருக்குறிச்சி அருணாச்சலம், விளாத்திகுளம் சுவாமிகள், சங்கரதாஸ் சுவாமிகள்,
ஆபிரகாம் பண்டிதர் போன்ற பல இசை ஆளுமைகளும் இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார்கள்.
மத நல்லிணக்கம் என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய மதச்சார்பின்மை என்று
சொல்லக் கூடாது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திருநெல்வேலி
மாவட்டம் திகழ்கிறது.
சைவம், நவத்திருப்பதிகள்
அடங்கிய வைணவம், கிறித்துவம், இஸ்லாம் போன்ற
மதங்கள் மட்டுமல்லாமல், தென்காசி அருகில் உள்ள வீரிருப்பில் புத்தமத
விகார்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜைனமும்
இங்கே ஒருகாலத்தில் இருந்தது. கழுகுமலை வெட்டுவான்கோவிலினுடைய
சிறப்பு தமிழருடைய முத்திரையாகத் திகழ்கின்றது. இங்கே ஆதி காலத்தில்
மாணவர்கள் படிக்கின்ற கலாசாலையும் அமைந்திருந்தது. இப்படி மத
நல்லிணக்கத்துக்கான மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்.
சுலோச்சனா முதலியார் பாலம்
1843-ல் கட்டப்பட்டது. படைப்பாளி மாதவய்யா காலத்தில்,
தாமிரபரணி ஆற்றில் இறங்கி வந்துதான் பள்ளியில் படிக்க வேண்டிய சூழ்நிலை
இருந்தது. 1876-ல் திருநெல்வேலிக்கு ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளாக பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு,
காரையாறு, சேர்வலாறு, கடனாநதி.
வராக நதி, ஜம்பு நதி, ராம
நதி, கருப்பா நதி ஆகிய ஆறுகள் பயணிக்கின்றன. மற்றும் விளாத்திகுளம் பகுதியி்ல் ஓடும் வைப்பாறு.
அதேபோல் கன்னடியன் கால்வாய் ஒரு வரலாற்று சிறப்பு பெற்ற கால்வாயாகும். அதைப்பற்றி பின்னர் சொல்கின்றேன்.
பொதிகையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் தமிழகத்தின்
ஒரே ஜீவநதி தாமிரபரணி. திருநெல்வேலியும்,
மதுரையும், தஞ்சையும் நெல்லை மட்டும் உற்பத்தி
செய்யவில்லை. கலைகளையும் படைத்தன. தமிழ்கூரும்
நல்லுலகத்தில் அகத்தியர், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், குமரகுரு
தொடங்கி, இன்றைய நவீன எழுத்தாளர்கள் மாலன், கோணங்கி வரை நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கின்றனர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. கால்டுவெல் தனது காலத்தில், திருநெல்வேலி வரலாற்றை வடக்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தெற்கே நாங்குநேரி,
வள்ளியூர் வரையுள்ள நெல்லை மாண்பைப் பற்றி விவரிக்கின்றார். தமிழில் முதல் படைப்பு நாவல் ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை
எழுதிய ‘பிரதாப முதலியார் கதை’ என்பார்கள்.
அதற்கு முன்பே திருநெல்வேலி சேஷய்யர் ‘ஆதியோ அவதானி’
என்ற கதையை படைத்து விட்டார். அதிலும் திருநெல்வேலி
முன்னோடியாக இருக்கின்றது.
மேடைப் பேச்சு நாவலர் சோமசுந்தர பாரதி, ரா.பி.சேது பிள்ளையை விட தன்னுடைய பேச்சு சிறப்பாக அமைய வேண்டும் என்று பேரறிஞர்
அண்ணா விரும்பியது உண்டு. இதுகுறித்து அவர் சொன்னதும் உண்டு.
தமிழகத்திலேயே அதிகமாக சாகித்திய அகாடமி விருதை இதுவரை 14 பேருக்கும் மேல் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
பெற்றுள்ளனர். அதிலும் இந்தியாவிலேயே ஒரே கிராமத்தைச் சேர்ந்த
இருவர் இந்த விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்,
ராஜவள்ளிபுரத்தில் ரா.பி.சேதுப்பிள்ளை, வள்ளிக் கண்ணனும், இடைசெவலில் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணனும் பெற்றனர். புத்தகப் பதிப்பிலும் சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை என்ற பதிப்பகங்களும்
1950-க்கு முன்னாலேயே தோன்றி விட்டன.
இனிவரும் தொடர்களில் தமிழக அரசியல், ஈழ அரசியல், அகில இந்திய
அரசி்யல், இந்திரா எப்படி சிக்மங்களூரில் போட்டியிட்டார் என்பதைப்
பற்றியெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நீங்கள் அறிந்து, கேள்விப்பட்ட விஷயங்களைத் தாண்டி, அறியாத பல விஷயங்களைப்
பற்றியும் சொல்ல இருக்கிறேன்.
இதற்கு ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர்
குழு ஒரு வாய்ப்பை எனக்கு நல்கியுள்ளதை நன்றியுடன் பார்க்கிறேன்.
தொடர்ந்து சந்திப்போம்....
No comments:
Post a Comment