நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 20
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்துக்கும் கட்டபொம்மனுடைய
உண்மையான வரலாற்று சம்பவங்களுக்கும் சில மாறுதல்கள் உள்ளன என ஏற்கெனவே நான் கூறியிருந்தேன்.
அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், கட்டபொம்மனின் வீரத்தையும், தீரத்தையும் உலகுக்கு பறைசாற்றியது.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வரவில்லை என்றால், கட்டபொம்மனைப் பற்றி இந்த அளவுக்கு உலகுக்கு தெரியாமல் போயிருக்கும்.
அதேநேரம், அவரது தம்பி ஊமைத்துரையின் வீரத்தையும்,
அவரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை ‘வீரபாண்டிய
கட்டபொம்மன்’ படத்திலும் சரி, வரலாற்றுப்
பதிவுகளிலும் சரி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது யாருடைய
தவறு என்று தெரியவில்லை.
திரைப்படத்தில் கட்டபொம்மனைப் போல், ஊமைத்துரையும் வசனங்கள் பேசுவார். ஆனால் ஊமைத்துரை பிறவி ஊமை. குழந்தைப் பருவத்தில் சவலைப்
பிள்ளையாக இருந்தவர். இப்படி திரைப்படத்தில் பல முரண்பாடுகள்
இருந்தன.
முதலில் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்...
பாஞ்சாலங்குறிச்சி என்பது சிறு பாளைய பகுதியாகும். அது‘பாஞ்சை’ என்று அழைக்கப்பட்டு வந்தது. பாஞ்சாலங்குறிச்சியின். 18-வது பாளையக்காரர்
ஜெகவீர பாண்டியன். இவருக்கு இரண்டு மனைவிகள்.
மூத்த தாரத்துப்
பிள்ளையாகப் பிறந்தவர்தான் ஊமைத்துரை. அவரது இயற்பெயர் குமாரசாமி. ஊமையாக இருந்ததால் அவர் ஊமைத்துரை என்று அழைக்கப்பட்டார். அவரை திருச்செந்தூர் முருகனின் அவதாரமாகவும், அவரது அருளால் பிறந்த தெய்வப் பிறவியாகவும்
மக்கள் கருதினர். இதனால் அவரை ‘சாமி’ என்று அழைத்தனர்.
ஜெகவீர பாண்டியனின் இளையதாரமான ஆறுமுக ஆத்தாளுக்கு மகனாகப்
பிறந்தவர் கட்டபொம்மன். அவரது இயற்பெயர் கருத்தையா, அவருக்கு அடுத்த பிள்ளைக்கு
செவத்தையா என்று பெயர். ஊமைத்துரை மூத்த தாரத்து பிள்ளையாக இருந்தாலும், இளைய தாரத்துக்குப் பிறந்த கட்டபொம்மன் வயதில் மூத்தவர்.
இதனால் தந்தைக்குப் பின், மூத்த தாரத்து பிள்ளையான ஊமைத்துரைக்கு கிடைக்க வேண்டிய தலைமைப் பதவி, கட்டபொம்மனுக்கு கிடைத்தது. மேலும், ஊமைத்துரை நோஞ்சானாகவும், ஊமையாகவும் இருந்ததால், அந்தப் பதவி அவருக்கு கிடைக்காமல்
போனது என்றும் கூறுவார்கள்.
கட்டபொம்மன் 1790-ல் ஆட்சிக்கு வருகிறார். ஆனாலும், முறைப்படி ஊமைத்துரைக்கு கிடைக்க வேண்டிய பதவி இது என்பதால், ஒருவித குற்ற உணர்ச்சி கட்டபொம்மனை வருத்தியது. இதனால் தனது உடன்பிறந்த சகோதரரை விட, ஊமைத்துரையின் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.
ஊமைத்துரையைப் பற்றி ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் வேல்ஸ் எழுதிய
பதிவில், ‘‘ஊமைத்துரை அசாத்தியமான வீரன், அவரது அறிவும், சிந்தனையும், திறமையும் ஆற்றலுக்குரியது’’ என்று குறிப்பிட்டுள்ளார். கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போர் 4 நாட்கள்தான். ஆனால் ஊமைத்துரைக்கும் ஆங்கிலேயருக்கும்
இடையே 4 மாதங்கள் போர் நடைபெற்றுள்ளது.
ஊமைத்துரையைச் சந்தித்து, அவருடன் பழகி, போர்க்களத்தில் இருந்தவர் இந்த ஜேம்ஸ்
வேல்ஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னுடைய பதிவுகளில், கட்டபொம்மனை விட ஊமைத்துரையைப்
பற்றிதான் வானளாவப் புகழ்ந்து கூறியுள்ளார். ஆனால் திரைப்படத்தில் கட்டபொம்மன் வீரனாகக் கட்டமைக்கப்பட்டார். வரலாற்றிலும் அதுவே நிலைத்து விட்டது.
கட்டபொம்மனோடு பாஞ்சாலங்குறிச்சி அத்தியாயம்
முடிந்து விட்டது என்று வரலாறு கூறுகிறது. ஆனால், 1799-ல் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட பின் தொடர்ந்து
போரை வழிநடத்தியவர் ஊமைத்துரை. மேலும், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்காமல் கட்டபொம்மன்
எதிர்த்துப்
போரிட்டார் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் ஆங்கிலேயருக்கு கட்ட வேண்டிய 3,363 கோல்டன் பகோடாவை எந்தவித பாக்கியும் இல்லாமல் கட்டி விட்டார். அதைக் கட்டுவதற்காகத்தான் ஜாக்சன் துரையைப் பார்க்கச் சென்றார். இதுதொடர்பான ராணுவ கடிதங்கள், ரகசிய கடித ஆதாரங்கள் ஆங்கிலேயர் வசம் லண்டன் சென்று விட்டன.
கட்டபொம்மன் வரியை கொடுக்க ஜாக்சன் துரையைச் சந்தித்தபோது
அவமரியாதை செய்யப்பட்டு தப்பித்து செல்லும் போது ஏற்பட்ட சண்டையில் கேப்டன் கிளார்க்
கொலை செய்யப்பட்டார். இருதரப்புக்கும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணை மேற்கொண்ட இராபர்ட் கிளைவ்வின் மகன் எட்வர்டு கிளைவ், ஜாக்சன் துறை மீதுதான் தவறு என்று குறிப்பு எழுதியுள்ளார்.
ஊமைத்துரையை தெய்வப்பிறவியாக மக்கள் கருதியதால், அவருடைய வாக்கை தேவ வாக்காகக் கருதிக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சி
மக்கள் போரிட்டார்கள். இதையும் ஜேம்ஸ் வேல்ஸ் எழுதிய பதிவில்
இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை பிடிப்பதற்கு புதுக்கோட்டை விஜயரகுநாத
தொண்டைமான் உதவினார். கட்டபொம்மன் மற்றும் சகோதரர்கள் செவத்தையா, ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர், தளபதி என 6 பேர் பிடிபடுகின்றனர்.
2 நீதிபதிகள்
மற்றும் ஆங்கிலேய அதிகாரிகள் முன்னிலையில், பொதுமக்கள் கூடியிருக்க 11 நாள்கள் விசாரணை
நடைபெறுகிறது.
நீதிபதியின் முன் கம்பீரமாக நின்றிருந்தார் கட்டபொம்மன்.
அவர் மீது
குற்றம் சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
இறுதியாக, தூக்கில் போடுவதற்கு முன் ‘ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனைப் பார்த்து ஆங்கிலஅதிகாரி கேட்டபோது, ‘‘அட போங்கய்யா... ஒங்களுக்கு வேற வேலையில்லை, நடத்துங்க...’’ இளக்காரமாக
பதில் கூறுகிறார் கட்டபொம்மன்.
கயத்தாறு புளியமரத்தில் தூக்கிலிட அழைத்துச் செல்லும்போதும் கம்பீரமாகவே
நடந்து சென்றார். எதற்கும் கலங்காதவர் ஊமைத்துரையைப் பார்த்ததும்
நெகிழ்ந்தார். ‘‘என் மனைவியையும், என் நாட்டையும் விட்டு ஓடியதற்கு இந்த கேவலமான சாவு எனக்கு தேவைதான்’’ என்று ஊமைத்துரையிடம் கூறி கண் கலங்கினார்.
இவற்றையெல்லாம் ஜேம்ஸ் வேல்ஸ்ஸின் பதிவுகளில் இருந்து அறிய
முடிகிறது.
அந்த வகையில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்துக்கும், வரலாற்று நிகழ்வுகளுக்கும் பல வேறுபாடுகளைக் காண முடிகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனைப் போலத்தான், ஈழ விடுதலைப் போராளி வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிரிகளால்
தான் இறக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் சயனைடு குப்பியை கழுத்தில் எப்போதும் தொங்கப்
போட்டுக் கொண்டிருந்தார். அவரைப்போலவே ஒவ்வொரு போராளிகளும் சயனைடு
குப்பி வைத்திருந்தனர். இதற்கு கட்டபொம்மனே முன்மாதிரி என்று பிரபாகரனே
என்னிடம் கூறினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து, அவரது பெருமையை உலகுக்கு அறியச் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அதுமட்டுமல்ல, கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட புளியமரத்தின் அருகில் இடம் வாங்கி உயர்ந்த
கட்டமைப்புடன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலையை கம்பீரமாக நிறுவியவரும் சிவாஜிகணேசன்தான்.
அந்த சிலை திறப்பு விழாவுக்கு அன்றைய குடியரசுத் தலைவர்
நீலம் சஞ்சீவரெட்டியை வரவழைத்து சிலையை திறந்தார். அதன் காரணமாகவே, கட்டபொம்மனுடைய வாரிசு குருசாமி நாயக்கருக்கு
விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தார் குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி. கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவில் நானும் பங்கேற்றது எனக்கு
வாய்த்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.
கட்டபொம்மனுக்கு மட்டுமல்ல, தனக்குப் பிரியமான சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும் தன்னால் இயன்றவரை பெருமை சேர்த்துள்ளார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
(தொடர்வோம்...)
No comments:
Post a Comment