Tuesday, May 5, 2015

அசைட் - ஆப்ரகாம் எராலி - Aside Abraham Eraly








சமீபத்தில் “ அசைட் ” (ASIDE)  ஏட்டின் ஆசிரியர் ஆப்ரகாம் எராலி மறைவைக் குறித்து மெட்ராஸ் மியூஸிங்ஸ் (மே1-15 2015 ) ஏட்டில், அவர் நிறுவிய அசைட் ஏட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்த திருமதி. ஜானகி வெங்கட்ராமன் கட்டுரை எழுதியிருந்தார்.  அவர் எழுதியிருக்கும் பத்தியைப் பார்த்தவுடன்அசைட் பத்திரிகை குறித்த நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. அசைட் ஏடு
1970-80களில்  அனைவராலும் ஈர்க்கப்பட்டு விரும்பப்பட்ட பத்திரிகைகளில் ஒன்றாகும் .

1970களில் அசைட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, கேரவன், ஆன் லுக்கர், செமினார், ஈ.பி.டபிள்யூ, சோஷியல் சைண்டிஸ்ட், சண்டே, தமிழில் கணையாழி  இதழ்களைப் படிக்காமல் இருக்க முடியாது.

தற்போது  இவற்றில்  செமினார், ஈ.பி.டபிள்யூ, சோஷியல் சைண்டிஸ்ட் ஆங்கில இதழ்கள் வெளிவருகின்றது.  முனைவர். ம. ராஜேந்திரன்  அவர்கள் முயற்சியால் கணையாழியும் வெளிவந்துகொண்டிருக்கிறது. மற்ற இதழ்கள் அனைத்தும் நின்றுவிட்டன.



இன்னும் அந்த ஏடுகளின் தனித்தனியாக பைண்டிங் செய்யப்பட்ட தொகுப்புகளை பாதுகாப்பாக வைத்துள்ளேன்.  அவ்வப்போது எடுத்து படிப்பதுண்டு. அருமையான ஆங்கில மொழிநடை இந்த ஏடுகளில் இருக்கும்.

குறிப்பாக  எராலி,”அசைட்” பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் சத்திய மூர்த்தி, எல்.ஆர்.ஜெகதீசன், பாஸ்கர், ஏ.எஸ் பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அனிதா பொட்டன்குளம் அவர்கள், சுதா திலக் போன்ற ஆங்கிலத்தில்  அற்புதமான மொழிநடைகளில் எழுதும் சிறப்புச் செய்தியாளர்களுடனான நட்பு அன்றையிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.

அடையார் காந்திநகரிலும், சர்தார் படேல் - ராஜ்பவன் சாலையிலும் அசைட் அலுவலகம் இருந்தது. அப்போது அங்கே செல்லக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அதன் ஆசிரியராக திருமதி. ஜானகி வெங்கட்ராமன் ஆங்கிலமும் தமிழிலும் நன்கறிந்த நுண்மான் நுலைபுலமுள்ள பெருமாட்டியாக இருந்தார்.

இந்த இதழில் ஹாரி மில்லர், எஸ்.முத்தையா, ஆர்.பார்த்த சாரதி, சதானந்த மேனன், மித்ரன் தேவநேசன், எஸ்.ஜி.வாசுதேவ், ரத்தேந்திரநாத் ராய், ராண்டர் கை, தியோடர் பாஸ்கரன்  போன்ற ஆளுமைகள் எல்லாம் சிறப்புக் கட்டுரைகள் எழுதிவந்தனர்.

இன்றைக்கு அற்புதமாகத் திரைப்படத்துறையில் மின்னுகின்ற கே.வி.ஆனந்த் , போட்டோகிராபர் அன்வர் ஆகியோருடைய புகைப்படங்கள் எல்லாம் கருப்பு வெள்ளையிலும் வண்ணப்படங்களாகவும் அசைட் ஏட்டில் வெளிவந்தது.

அசைட் ஏட்டில் குறிப்பாக தமிழகம், கேரளம்,ஆந்திரம், கர்நாடகத்தை சேர்ந்த செய்திகள் அதிகமாக வந்தாலும், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் குறித்த செய்திக்கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது நண்பர் எல்.ஆர்.ஜெகதீசன் ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்றால், அந்தப் பிரச்சனைக்குறித்த பகுதியிலே தங்கி அங்குள்ள மக்களோடு வாழ்ந்து அசைட் ஏட்டுக்குத் தன் கட்டுரைகளைத் தருவது வாடிக்கை.
ஒருசமயம் வியாசர்பாடி குடிசைமாற்று வாரிய வீடுகள் குறித்து எழுத வேண்டியபோது எல்.ஆர்.ஜெ-யே வியாசர்பாடி பகுதிக்குச் சென்று, லுங்கி கட்டிக்கொண்டு, அந்த மக்களோடு தங்கியிருந்து தன் கட்டுரையை எழுதினார். இப்போது அவர் இலண்டன் பிபிசி-யில் பணியாற்றிகின்றார்.

அதேபோலவே, சுதா திலக் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போராடியபோது, எங்களோடு இருந்தே அந்தப் பிரச்சனை குறித்த கட்டுரையை எழுதினார் சுதா திலக்.

இப்படியான ஆசிரியர் குழுவைக் கொண்டு நடத்தியது தான் அசைட் பத்திரிகை. அசைட் சென்னைக்கு ஒரு அடையாளமாகத் திகழ்ந்தது. இதை தன்னுடைய குழந்தையாகவே ஆபிரஹாம் எராலி நடத்தினார். அதற்கு உறுதுணையாக ஆசிரியர் ஜானகி வெங்கட்ராமன் அவர்கள் துணை நின்றார்.

 எராலி  ஒரு வரலாற்று அறிஞர். மொகலாய வரலாறு  மற்றும்  சிறப்பான சில வரலாற்று நூல்களையும் வடித்துள்ளார்.



   


அசைட் பத்திரிகையில் வெளிவராத பிரச்சனைகளோ, செய்திகளோ கிடையாது.  ஆப்ரகாம் எராலியையும், அசைட் ஏட்டையும் சென்னை மாநகர் பாராட்டி நினைவுபடுத்தி இருக்கவேண்டும்.  ஆனால், அந்தக் கடமையை சென்னை மாநகர் சரியாகச் செய்யத் தவறிவிட்டது என்பது ஒரு வருத்தமான செய்தி. அசைட் ஏடு நின்றுபோனது சென்னைக்கு ஒரு இழப்பு ஆகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-05-2015.

Aside was an English-language newsmagazine that used to be published from Chennai. It was founded in November 1977 by Abraham Eraly and ceased publication in the early 1990s. It was the the first city magazine in India and carried columns by Theodore Baskaran, Randor Guy and S. Muthiah and others. The magazine's subtitle was 'The Magazine of Madras'.




No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...