Wednesday, May 6, 2015

கோவையில் மாவோயிஸ்ட்கள் கைது. Maoists Arrested in Kovai






கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் மதுரை பழைய குயவர்பாளையத்தைச் சேர்ந்த  கண்ணன் , கேரள மாநிலம் கொச்சியை அடுத்துள்ள குஷத் பகுதியைச் சேர்ந்த  ரூபேஷ் (எ) பிரவீன் (எ) பிரகாஷ் (எ) பிரசாந்த், இவரது மனைவி சைனா (எ) சைனி , கேரளம், பத்தனம்திட்டா கும்பளபொய்கா பகுதியைச் சேர்ந்த அனுப், கூடலூர் காட்டுமன்னார்குடி, கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த  வீரமணி (எ) ஈஸ்வர் (எ) சர (எ) சுனில்குமார்.  ஆகிய ஒரு பெண் உட்பட ஐந்து மாவோயிஸ்டுகள் நேற்றைக்கு முன்தினம் (04-05-2015) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்டோர் மீது, தேசதுரோகம், கூட்டுச் சதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவோயிஸ்டுகள் என்ற தீவிரவாதம் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் சாரு மஜூம்தார் தலைமையில் 1960களில் உருவெடுத்தது.
இன்றைக்கு மேற்குவங்கம், சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரம்,. மகாராஷ்ட்டிரம், பீகார், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் ஊடுருவி தமிழ்நாடுவரை இந்த இயக்கங்கள் வளரத் தொடங்கிவிட்டது.

வன்முறையும் அழிவுகளும் ஒருகாலும் நம்முடையத் தீர்வுகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. காந்தி பிறந்த மண்ணில் படித்த பண்பான இளைஞர்கள் கூட இந்த இயக்கங்களில் சேர்கிறார்கள் என்றால் அதன் காரண காரியங்களை அரசுகள் அறியவேண்டும்.

முக்கியமாக சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஊழலும், உழைப்பை உறுஞ்சும் போக்குகளும் அடிப்படைக் காரணங்களாக இந்த இயக்கத்தில் இணைய இளைஞர்களை ஊக்குவிப்பதாகத் தெரிகின்றது.
இந்த இயக்கத்தில் பொறியியல், மருத்துவம் சட்டம் என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படித்த நுண்மான்நுழைபுலம் கொண்டவர்களும் இருப்பதாக ஆங்கில ஏடுகள் எழுதியுள்ளன.

சற்றுப்பின்னோக்கி நினைவு கொள்கிறேன். 1979காலகட்டம் என்று நினைவு, ஒரு பத்திரிகையாளர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் ஒருவர் ஆகியோரோடு வனப்பகுதியில் மக்கள் யுத்தப் படையினர்களிடம் செய்திகள் சேகரிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் உடன்செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு பல சிரமங்களை ஏற்று செல்லவேண்டிய நிலை அன்றைக்கு எங்களுக்கு இருந்தது. அவர்களுடைய கொள்கைகளுக்கு மாறுபட்டிருந்தாலும் அவர்களின் நிலைப்பாட்டை அறிய இளைஞராக இருந்த காலத்தில் ஆர்வமும் இருந்தது.   

அப்போது சீத்தாராமையா, கணபதி போன்றவர்கள் அவர்களை வழிநடத்தி சென்ற தளபதிகளாக இருந்தார்கள். அவர்களிடம் ஆய்வு நடத்தியபோது சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளும், ஊழலும், ஏற்றத் தாழ்வுகளும் பிரதானமாக தங்களுடைய பிரச்சனைகள் என எடுத்துவைத்தது நினைவுக்கு வருகின்றது.

அவர்களிடம் விவாதித்ததிலிருந்து..........
நாட்டில் உண்மைகள் உறங்குகின்றன,
நியாயங்கள் நிராயுதபாணியாக உள்ளன.
எல்லாமே பொய்வேசம்,
பகட்டுக்குப் பாராட்டுக்கள்,
சாதியால் சாதிக்காக சாதிகளின் ஆதிக்கத்துக்கு அரசுகளா?
மதத்தால் மதத்தின் ஆதிக்கத்துக்கு அரசுகளா?
தகுதியே தடை !
நல்லவர்களைப் புறந்தள்ள ஏகலைவன் எழுச்சிகளுக்கு ஏற்பில்லாதது
என்ற மனப்போக்கு எப்படி ஜனநாயகம் ஆகும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்னால்  அவர்கள் வைத்த வாதத்திற்கு மக்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

இவ்வளவு போராடும் போராளிகள் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து கோபமான போர்குணத்தில், வன்முறையைக் காட்டுவதை விட தங்களுடைய பிரச்சாரங்களை சற்று வேகமாக எழுச்சியோடு மக்கள் மன்றத்தில் சொல்லலாமே!


-    கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-05-2015.


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...