Sunday, May 31, 2015

செண்பகவல்லி (தோப்பு) அணை பிரச்சனை. -Padavedu Shenbaga Thoppu Dam.






செண்பகத்தோப்பு அணை நெல்லை மாவட்டம் சிவகிரி, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்- திருவில்லிப்புத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர் உற்பத்தியாகி பல நீர்நிலைகளிலிருந்து ஒருமுகமாக திருவில்லிப்புத்தூரை ஒட்டி மேற்கே உள்ள மலைப் பள்ளத்தாக்கில் இணைகிறது.

நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அதனை அணைகட்டி தடுத்து பாசானத்திற்கு பயன்படுத்தினால், திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம் வரையும்  விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், கீழராஜகுலராமன் கிட்டத்தட்ட ஆலங்குளம் சிமெண்ட் ஆலைவரை பாசான வசதிக்கும், குடிநீருக்கும் பயன்பெறும்.

ஏற்கனவே 1989ல் தி.மு.க ஆட்சிகாலத்தில், அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர்களும் வைகோ அவர்களும் அன்றைய அமைச்சராக இருந்த சகோதரர் தங்கவேலுவும், நெல்லை மாவட்ட தி.மு.க செயலாளாலராக இருந்த டி.ஏ.கே.இலக்குமணனுடன் நானும் மலைப்பகுதிகளுக்குச் சென்று, உள்ளாறு, செண்பகத்தோப்பு அணைகட்டுவதைக் குறித்து ஆய்வு நடத்தினோம்.

அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், செண்பகத் தோப்புக்கு, நிதி ஒதுக்கவும் செய்தார். செண்பகத்தோப்பு அணைகட்டிய பின் 1991ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. 1991-1992ல் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கேரள அரசு செண்பகத் தோப்பு அணைக்கட்டுப் பகுதியில் கட்டிய அணையை இடித்து அப்புறப்படுத்தியது. அன்றைக்கு தொலைக்காட்சி ஊடகங்கள் இன்றைய அளவில் கிடையாது. பத்திரிகைகளில் கூட இதுகுறித்த செய்திகள் பெரிய அளவில் வெளிவரவில்லை.

2002ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில், 1989ல் தி.மு.க ஆட்சியில் செங்கோட்டை அருகே கட்டிய அடவிநயினார் அணையினை இடிக்கவும் கேரளத்தில் அன்றைய எதிர்கட்சி தலைவராக அச்சுதானந்தன் கடப்பாரை, மண்வெட்டியோடு வந்தார். இதெல்லாம் கடந்தகால செய்திகள்.

உச்சநீதிமன்றத்தில் என்னுடைய வழக்கில், நதிகளை தேசியமயமாக்கி, கங்கையை , காவிரி,வைகை, தாமிரபரணி, குமரிமாவட்ட நெய்யாற்றோடு இணைத்து, கேரளாவில் மேற்குநோக்கிப் பாயும் நதிகளின் உபரிநீரை தமிழகத்திற்குத் திருப்புவதும், அச்சன்கோவில் பம்பை நதிகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்க வேண்டுமென்று தொடர்ந்த வழக்கில் செண்பகத் தோப்பு பிரச்சனையைப் பற்றியும் வலியுறுத்தியிருந்தேன். 1986லிருந்து இந்த வழக்கு நடந்து, கடந்த 2012 பிப்ரவரி 27ம் நாள் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.

அதன்படி, மத்திய அரசு பொதுவாக கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள நதிநீர்பங்கீட்டுப் பிரச்சனைகளான, குமரிமாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினாறு, உள்ளாறு, நெல்லை மாவட்டத்தோடு விருதுநகர் மாவட்டம் பயன்பெறும் இந்த செண்பகத் தோப்பு அணை, திருவில்லிப்புத்தூர் அருகே உள்ள அழகர் அணைத் திட்டம் மட்டுமில்லாமல் பிரச்சனைகளில் உள்ள முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி எனப் பல நீராதாரப் பிரச்சனைகளுக்கு இந்த வழக்கின் தீர்ப்பினால் மத்திய அரசு அமைத்துள்ள செயலாக்கக்குழு ஆய்ந்து நிச்சயமாக முடிவுகட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்படி ஒவ்வொரு அணை பிரச்சனைகளிலும் கேரளா தமிழகத்தோடு வம்பு செய்துகொண்டேதான் இருக்கின்றது. நதிகளின் நீரினை கடலுக்கு வீணாகச் செல்லுமே தவிர தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தரமாட்டோம் என்று சட்டமன்றத்தில் மேற்கொண்ட தீர்மானத்தின்படி உத்தரவுகளையும் பிறப்பித்தது.

என்ன வேடிக்கை, ஒரு சமஸ்டி அமைப்பில் ஒரு மாநிலம் இயற்கை வளத்தைத் தடுப்பது நியாயம் தானா?  தமிழகத்திடமிருந்து மின்சாரம், அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், பால், காய்கறிகள், முட்டை  போன்ற அத்யாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு நதிகளின் உபரி நீரை வழங்க மறுக்கும் நன்றியற்ற கேரளாவின் போக்கை என்ன சொல்ல…

ஐரோப்பாவில் பல்வேறு நாடுகள் நதிநீர் வளங்களை பகிர்ந்துகொள்கின்றன. ருமேனியா, பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகள் நதிநீரினை எந்தப் பிரச்சனையுமில்லாமல் பகிர்ந்து கொள்கின்றன. ஆப்ரிக்காவில் நைல் நதியின் நீரைப் பங்கிடுவதில் அங்குள்ள நாடுகளுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை.  இந்தியாவில் தான் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குத் தண்ணீர் வழங்க மனம் இல்லை.

இந்நிலையில்,திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, சங்கரன்கோவில் வருவாய் வட்டங்களில் 12,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் வழங்கி வந்த செண்பகவல்லி அணை, 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்துவிட்டது.  இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் சிவகிரி அருகே இருந்தாலும் கேரள எல்லைக்குள் உள்ளது.
இந்த அணை கட்டி தண்ணீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சிவகிரி ஜமீனுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையில் 1733ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.

 1965 ல் ஏற்பட்ட உடைப்பைச் காரணமாக பயன்படுத்திக் கொண்டு கேரள அரசு மீண்டும் தமிழகம் அங்கு அணை கட்டிக் கொள்வதைத் தடுத்து வருந்தது.  

உடைந்த அணையினை மீண்டும் கட்டுவதற்கு ரூ. 10,29,732 செலவாகும் என்று கேரளப் பொதுப்பணித் துறையினர் திட்டமதிப்பீடு தந்தனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம்
 முதல் தவணையாக ரூ.5,15,000 காசோலையினை கேரள அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதைப் பெற்றுக் கொண்ட கேரள அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, சிவகிரி விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் 3.8.2006 அன்று அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அணை கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. கேரள அரசு “சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணை தங்களைக் கட்டுப்படுத்தாது” என்று கூறியது.  ஆனால் நான் தொடுத்த கண்ணகி கோட்டம் பிரச்சனை வழக்கில் கேரள அரசின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி வழக்கையும் நடத்தினார். இந்த இரட்டை நிலைக்கு என்ன பதில் சொல்ல…


அணைகட்டுவதற்காக தமிழக அரசு கொடுத்திருந்த முதல் தவணைத் தொகையை கேரள அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இன்று வரை அந்த அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறது.  மன்னர்கள், சமீன்தார்கள் காலத்திலிருந்த நியாய உணர்வும், மனித நேய உணர்வும் மக்களாட்சி காலத்தில் இல்லாமல் போனது பெரும் கேடாகும். 1989லேயே இந்த அணையை இடிக்க வேண்டுமென்று கேரளா நடவடிக்கை எடுத்தது.  அப்படிப்பட்ட கேரள அரசாங்கத்திடம் எப்படி நேர்மையை எதிர்பார்ப்பது.

செண்பகத் தோப்பு அணை வானம்பார்த்த கரிசல் பூமிக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2015.

#
#KSR_Posts
#KSRadhakrishnan

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...