Tuesday, May 19, 2015

இலங்கை இராணுவத்தின் பிடியில் முன்னணி போராளி நண்பர் பாலகுமாரன். Balakumaran -Military Custody





முள்ளிவாய்க்கால் கொடூரம்  ஆறு ஆண்டுகளுக்கு முன்னால்
18-05- 2009ல் நடந்தேறிய போது 1.5லட்சம் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்தது.

எண்ணிக்கையில் அறிய முடியாதபடி பல தமிழர்கள் இராணுவத்தின் பிடியில் அப்போது சிக்கினார்கள். பலர் எங்கே உள்ளார்கள் என்றே இன்னும்  தெரியவில்லை. இந்நிலையில் நண்பர் பாலகுமாரன் மற்றும் அவருடைய மகன் இருவரும் சிங்கள இராணுவத்தின் பிடியில் இருப்பது போன்ற புகைப்படத்தை  இன்றைக்கு லண்டனில் பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன்  வெளியிட்டுள்ளார்.

முழுக்கை சட்டை போட்டு பேண்டுக்குள் இன் செய்து பலரின்  கவனைத்தையும் ஈர்க்கும் நண்பர் பாலகுமாரனைப் பற்றி நன்கு அறிந்தவன் நான். இந்தப் புகைப்படத்தில் கைலியோடு அவர் உட்கார்ந்திருப்பதைப்பார்த்து இவரா பாலகுமாரன் என்று மனம் வேதனையில் ஆழ்த்தியது.


அவர் பக்கத்தில் ஒன்றுமறியாத முகத்துடன் அவரது மகன் அமர்ந்திருப்பது, எப்படி நண்பர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திரன் கைகளில் பிஸ்கட் பாக்கெட்டுடன் அப்பாவியாகப் பார்க்க முடிந்ததோ அதுபோல இவரது முகபாவனைகளும் உள்ளது.



இன்று ஹரிசன் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள ராணுவத்தின் பிடியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஆகியோர் இருக்கும் இந்தப் படத்தையும்  பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தியாளர் இசைப்பிரியாவுடன் கொலை செய்யப்பட்ட உஷாலினியின் படங்களையும் வெளியிட்டவர் இவர் தான்.

முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், நூற்றுக்கும் மேலான முக்கிய தளபதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர்.

சிங்கள இராணுவத்தின் கையில் சிக்கிய பேபி சுப்பிரமணியம் எனக்கு மிகவும் நெருங்கியவர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் தென் இலங்கையில்  “காலி”  நகரின் அருகில் இருட்டான பாதாள அறையில் ஆறு ஆண்டுகளாக அடைத்து வைக்கப் பட்டிருக்கின்றார் என சில நம்பத் தகுந்தவர்கள் மூலம் அறிய வந்தபோது வேதனையாக இருக்கின்றது.

பேபி சுப்பிரமணியத்துக்கு இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை, ஒரு ஜோல்னா பை, சில காகிதங்கள் இதுதான் அவரது சொத்து. காலில் செருப்பு அணியமாட்டார். சரியான நேரத்துக்கு  உணவு உண்பதும் கிடையாது. இட்லி, தோசை சாப்பிடும் போது சட்னிக்கு பதில் காரமான ஊறுகாயைப் பிசைந்து சாப்பிடுவார். அவர் ஏற்கனவே அல்சராலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

கிராமத்திலிருந்து கொடுத்தனுப்பப்படும் முறுக்கு, சீடைகளை சற்று விரும்பி சாப்பிடுவார். வேறு எந்த பொழுதுபோக்கோ, விருப்பங்களோ அவருக்கென கிடையாது. ஆட்டோவிலோ, வாகனங்களிலோ பயணங்கள் பத்து நிமிடம் சென்றாலே பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்வதுபோல கிடைத்த நேரத்தில் உறங்கி தெம்போடு தன் பணிகளை ஓயாமல் ஆற்றுவார்.

முதன்முதலாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தம்பி பிரபாகரனுடைய சகாக்கள், பேபி, இரவீந்திரன், செல்லக்கிளி, கிட்டு, சங்கர், பொன் அம்மான், நேசன் போன்றோர்கள் அடங்கிய அமைப்பாக இருந்து பின்னாட்களில் சீலன், புலேந்திரன், பொட்டு, விக்டர், ரெஜி என பல இளைஞர்கள் அணிவகுத்து இயக்கத்தைக் கட்டமைத்தார்கள்.

தமிழகத்தின் திண்டுக்கல் சிறுமலை, மேட்டூர் போன்ற இடங்களில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியால் இராணுவப் பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டன. நெல்லைமாவட்டத்தில் சிங்கம்பட்டியிலும், திருவில்லிப்புத்தூர் -வத்திராயிருப்பு அருகிலும் பயிற்சி முகாம் அமைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டபோது சுற்றுச்சூழல் அதற்குப் பொருந்தி வரவில்லை.

பயிற்சி முகாம்களில் தம்பி பிரபாகரன் தன்னுடைய சகாக்கள் என்ன  உணவு எடுத்துக் கொள்கிறார்களோ அதே உணவைத் தானும் எடுத்துக்கொள்வது வாடிக்கை. இவருடைய பெயர், அரிகரன், துரை என்று இவர் தந்தையார் வேலுப்பிள்ளையால் அழைக்கப்படுவதுண்டு.

ஒரு அண்ணனும், இரண்டும் மூத்த சகோதரிகளும் இவரோடு பிறந்தவர்கள். முதலில் TNT என்ற தமிழ் தேசியப் புலிகள் என்ற அமைப்பை நிறுவினார்.  குட்டிமணி, தங்கதுரை, உமா மகேஸ்வரன், பெரிய சோதி சின்ன சோதி, சந்திரன் என்ற முக்கியமானோர் இயக்கத்தை கட்டியெழுப்பினர்.

இவர்களில் பிரபாகரன் தான்  இளையவர் என்பதால் எல்லோராலும் தம்பி என்று அழைக்கப்பட்டார். இவர்களுக்கு முன்னால் சகோதரர் பொ.சத்தியசீலன் தற்போது லண்டனில் வசிக்கின்றார். இவர்  1960-1970 களின் துவக்கத்தில்,  தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும்
தட்டிக்கொடுத்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும் என்று ஒருங்கிணைத்தார்.

தன்னுடைய மோதிரத்தை விற்று முதன்முதலாக துப்பாக்கி வாங்கிய தம்பி பிரபாகரன், “ஆயுதம் தாங்கித் தான் தமிழ் ஈழத்தைப் பெறமுடியும்” என்ற கருத்தில் தெளிவாக இருந்தார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை முகவும் நேசிப்பார். அலெக்ஸ் ஹார்வியின் ஏழு தலைமுறைகள் நாவலும், பொன்னியில் செல்வனில் வரும் பழுவேட்டரையர் போன்ற கதாப்பாத்திரங்களையும் நினைவில் கொண்டவர். ஆயுதங்கள் சம்பந்தமான அனைத்து நூல்களையும் அக்கறையுடனும், ஆர்வமுடனும் வாசிப்பதுண்டு.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளையொட்டி,  25,26,27 ஆகிய மூன்று நாட்கள் உண்ணா நோன்பை அனுசரிப்பார். போரில் யாரும் காயமடைந்தால் தவறாமல் அவர்களைப் பார்த்து, அவர்களுடைய சிகிச்சை முடியும் வரை கவனித்துக்கொள்வார். இலங்கை இராணுவத்தால் போரில் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க செஞ்சோலை, காந்தரூபன் என்ற காப்பகங்களை அமைத்தார்.

இப்படியான மறக்கமுடியாத செய்திகள் பல உண்டு. தமிழகத்தில் அவரோடிருந்த நாட்களில் பார்த்த நிகழ்வுகளை சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. இவற்றை முழுமையாக என்னுடைய வரலாற்றுப் பதிவுகளில் எழுத உள்ளேன்.

முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. தம்பி பிரபாகரன், பேபி, பாலகுமாரன் போன்ற போராளிகளுடைய பணிகளையும், அவர்களுடைய குறிக்கோள்களையும் கவனத்தில் கொள்ளவேண்டிய தருணம் இவை.

விடுதலை என்பது பெரும் போராட்டத்தின் பின் அடையவேண்டிய இலக்கு. போராட்டம் தொடர்கின்றது. தமிழீழம் என்பது நம் அனைவருக்கும் உள்ள தாகம். அதற்கு நம்மாலான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமும், கடமையுமாகும்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-05-2015.




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...