Friday, May 15, 2015

எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு - S.G.Ramanujalu Naidu


   “காலச்சுவடு” திரு. கண்ணன் அவர்கள் முயற்சியில் , ஆ .இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து, எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு-வின்  “சென்று போன நாட்கள்” நூல் காலச்சுவடு கிளாசிக் வாழ்க்கை வரலாறு  வரிசையில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது. 

இதைப் பதிப்பித்த ஆசிரியர் ஆ .இரா. வேங்கடாசலபதி, இந்நூலுக்கான தரவுகளை பல இடங்களில் திரட்டி அக்கறையோடும், ஆர்வத்தோடும் வெளியிட்டுள்ளார். சென்னை மறைமலை அடிகள் நூல்நிலையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல் நிலையம், சென்னை அரசாங்க ஆவணக் காப்பகம், புதுக்கோட்டை ஞானாலயம், மட்டுமல்லாமல் புதுடெல்லிவரை பயணித்து முப்பதாண்டுகள் தன்னுடைய சீரிய உழைப்பில் இந்த நூலைக் கொண்டுவந்தது பெரும் பாராட்டுக்குரிய செயலாகும்.  

கதை சொல்லுவதில் சமர்த்தர் என்று புதுமைப்பித்தனால் பாராட்டப் பட்டவர்தான் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு. மகாகவி பாரதியாரைப் பற்றி விரிவான குறிப்புகளை எழுதி, பாராட்டுரையும் தந்தவரும் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு ஆவார். 

சுப்பிரமணிய பாரதிக்கு, செங்கோட்டை ஆவுடையக்காள் மீது கவிதைபாடுவதில் சமர்த்தானவர் என்று ஈர்ப்பு இருந்ததைப் போல, இவர் மீதும் பாரதியாருக்கு இதழாளர், நல்ல படைப்பாளி, அவர் பேனாவைத்து எழுதும் போது அந்தப் பேனாவில் அவர் சுழித்து சுழித்து எழுதும் முறையையும் சொல்லி உள்ளார். 

இந்த நூலை கையில் கிடைத்தவுடன் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதின் விளைவாக, படித்து முடித்தபின் இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்நூலில் பாரதியாரைப் பற்றி குறிப்பிடும் போது , புதுச்சேரியில் பாரதி ஒரு தாடிக்காரராக இருந்ததாகவும், பாரதியாரைப் பிடித்துத் தருபவருக்கு 100 ரூபாய் பரிசு என்று காவல் நிலையங்களில் அறிவிக்கப்பட்டு, அவர் பூநூல் அணியமாட்டார், அவர் உயரம் இத்தனை அடி என்று பாரதி பற்றிய விபரங்களோடு அறிவிப்பு ஒட்டப்பட்டது என்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 








எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு.

தமிழ் இதழியல் வரலாற்றில் மறைந்தும், மறந்தும் போன பல பத்திரிகையாளர்களை நினைவு கூர்ந்து அவர்களைப் பற்றி பதிவு செய்தவர் எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு.  1886ம் ஆண்டு திருவரங்கத்தில் சங்கு கோவிந்தசாமி நாயுடுவுக்கும் கோவிந்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். உடன் பிறந்த தங்கை எதிராஜவல்லி.   இவரது பாட்டனார் சங்கு இராமசாமிநாயுடு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் தாசில்தாராகப் பணியார்றியவர்.  

 பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.ஏ படித்த இராமாநுஜலு, பதினாறு வயதிலேயே தன்னுடைய எழுத்து வாழ்வைத் தொடங்கியவர்.  1904ம் ஆண்டு  #பிரஜாநுகூலன் என்ற மாத இதழை இவர் நடத்திவந்தார், பண்டிதர். ம.கோபால கிருஷ்ண ஐயர் பிரஜானுகூலனின் ஆசிரியரைக் காண திருவரங்கம் வந்தபோது பதினேழுவயது இளைஞர் இதழ் ஆசிரியராக இருப்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறார். 

தமிழ்நாட்டின் முதல் நாளேடாகிய #சுதேசமித்திரனில்  எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு “நித்திய பாராயணம்” செய்த பத்திரிகையாகும். மித்ரன் மட்டுமல்லாமல் பல தினசரி, வார இதழ்களில் அறிவைப் பெருக்கும் அனுபவ உண்மைகளை எழுதிவந்தார்.  

1907ல் சேலம்  #தக்‌ஷண தீபம் பத்திரிகை உதவி ஆசிரியர் #டி.ஏ.ஜான் நாடார்  அதிலிருந்து விலகி தனி இதழைத் தொடங்கியபோது, ராமாநுஜலு  அதற்கு “#திராவிடாபிமானி” என்று பெயரிட்டு வாரா வாரம் புதன் கிழமைகளில் தலையங்கமும், வியாழனன்று முக்கியச் செய்திகளையும் திருவரங்கத்திலிருந்து எழுது அனுப்புவார். 

சென்னையிலிருந்து வெளியான #வந்தேமாதரம் என்ற வாரம் மும்முறை வெளியாகும் பத்திரிகையிலும் இவர் தலையங்கம் இடம் பெற்றிருக்கும்.  1919ம் ஆண்டு சேலத்தில் #தமிழ்நாடு பத்திரிகையை #பி_வரதராஜலு நாயுடு தொடங்கி நடத்தி வந்தார், அவர் சேலத்தை விட்டு  செல்ல வேண்டிவந்தபோது எஸ்.ஜி.ஆரை அழைத்து தமிழ்நாடு பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தக் கேட்டுக் கொண்டார். அந்த அளவுக்கு #இதழியல் துறையில் இவருக்கு அனுபவமும் செல்வாக்கும் இருந்தது. 

1926ல் இராமாநுஜலு #ஆநந்தகுணபோதினி இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது அவருக்குப் பேரும் புகழும் கிடைத்தது. போதினி என்ற பின்பெயரில் அப்போது பல பத்திரிகைகள் வெளிவந்த நேரம். அவற்றில் #ஆனந்த போதினிக்கு மக்களிடையே  வரவேற்பு இருந்தது. அதன் உரிமையாளரான #ஆரணிகுப்புசாமி முதலியார் இராமாநுஜலு ஆசிரியராக இருந்த ஆநந்த குணபோதினிமீது வழக்குத் தொடர்ந்தார்.  எனவே ஆநந்த குணபோதினி #அமிர்தகுணபோதினியாக மாற்றம் அடைந்தது. 


1934ம் ஆண்டு அமிர்தகுணபோதினி  மதுரை #இ.மா.கோபால கிருஷ்ண கோனுக்கு விற்கப்பட்டதால் அவருக்கும் எஸ்.ஜி.ஆருக்கும் ஒத்துப் போக மறுத்து ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறினார். இந்த வருத்தத்திலே 1935ம் ஆண்டு அவரது மரணமும் சமீபித்துவிட்டது. 

ன்னுடைய ஏடுகளில் அற்புதமாக மக்களைக் கவரக்கூடிய வகையில் எழுதும் இதழாளர் தான் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு.  சென்னையில் ஒருமுறை மூர் மார்கெட் கட்டிடத்தை கவர்னர் திறந்துவைக்கும் அன்று ஒரு வதந்தி பரவியது. அந்த வதந்தி என்னவெனில் , கவர்னர் விழாவில் ஒரு ரூபாய்க்கு எட்டுப்படி அரிசி அங்கு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், ஏழைகளும், செல்வந்தர்களும் கூட மூர் மார்க்கெட்டைச் சூழ்ந்துவிட்டனர். ஆனால் அப்படி எட்டுப்படி அரிசி ஏதும் கொட்டி அளக்கப்படவில்லை என்று தனது பத்திரிகையில் எழுதி இருந்தார் எஸ்.ஜி.ஆர். 

தனது சென்று போன நாட்களில் தமிழகத்தில் அக்காலத்தில் அச்சிடப்பட்ட பதினெட்டு பத்திரிகைகளையும் வரிசைக்கிரமாமாக இந்நூலில் சொல்லியுள்ளார்  எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு.
 இது தமிழக பத்திரிகை வரலாறு குறித்து நல்ல தரவு ஆகும். 

பல பத்திரிகைகளோடு ஆண்டாண்டுகாலமாய் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு  உழன்ற போதும் தான் 17வயதில் தொடங்கிய #பிரஜானுகூலனை அவர் நிறுத்தவே இல்லை. 1932 பிப்பிரவரி 21ம் நாள் பிரஜானுகூலன் தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. 
 அன்றைக்கு பத்திரிகை துறையில் பிரபலமாக இருந்த #எம்.ஏ.நெல்லையப்ப முதலியார், #பரலி.சு. நெல்லையப்பப் பிள்ளை, #எஸ்.எஸ்..வாசன், #ஜே.ஆர்.ரங்கராஜூ, க#ல்கி.ரா. கிருஷ்ணமூர்த்தி #வை.மு.கோதை நாயகியம்மாள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். 

எஸ்.ஜி. இராமாநுஜலு, #ஆனந்த கதா கல்பகம் (1913) , #கதாமோகன ரஞ்சிதம் (1915), #நளாயனி (1917) , #அதிசய சிந்தாமணி (1926), #தராசு (1946),  எனப் பல்வேறு நூல்களையும், கதைகளையும், நாடகங்களையும் எழுதியிருக்கிறார். 

#மகாகவி சுப்பிரமணிய பாரதி, #ஜி.சுப்பிரமணிய ஐயர், #அ. மாதவையா, பேரறிஞர் அண்ணாவின் நண்பர், அக்ரகாரத்து அதிசயம் #வ.ரா, #ஜே.ஆர். ரங்கராஜூ, #மணவை ரெ. திருமலைசாமி, #கல்கி ஆகியோர்க்கு நண்பராகவும் இருந்தவர் இராமாநுஜலு.  மகாகவி பாரதியார் பற்றி இவர் எழுதிய முக்கிய குறிப்புகள் பல, பாரதியாரை பொதுதளத்தில் முதன்முதலாக அறிமுகப் படுத்தியது. 

மேலும், 
#வி.நடராஜ ஐயர்,
#எம்.வீரராகவாச்சாரியார்,#டி.வி.கிருஷ்ணதாஸ், #டி.வி.கோவிந்தசாமி பிள்ளை,#குருமலை சுந்தரம் பிள்ளை,#ஏ.சங்கரலிங்கம் பிள்ளை,
#பி. வேணுகோபாலசாமி நாயுடு, #சி. சுப்பிரமணிய பாரதி, #சி. செல்வராஜூ முதலியார், #ஜீவரத்தின முதலியார்,#ம கோபால கிருஷ்ண ஐயர்,#டி.வில்சன், #டி.ஏ.ஜான் நாடார்,#கே.எஸ்.கதிர்வேலு நாடார்,#சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார், #க.வீரேசலிங்கம் பந்துலுகாரு,#பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை, #வ.ரா  ஆகியோரைப் பற்றி 1926லிருந்து 1934வரை இவர்  எழுதிய  “சென்று போன நாட்கள்” என்ற  நினைவுக்குறிப்புகளை, பதிப்பாசிரியர் திரு. #ஆ.இரா.வேங்கடாசலபதி புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. 

இன்றைக்கு பல ஆளுமைகள் இப்படி மக்களின் நினைவுக்கு கொண்டுவரப்படாமலே தமிழ்கூறும் நல்லுலகம் இருப்பது சற்று கவலையாக உள்ளது. 


பல பத்திரிகையாளர்களுக்கு நினைவுக்குறிப்பு எழுதிய எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவை நினைவுகூறும் இந்த “சென்று போனநாட்கள் “ நூலினை கிளாசிக் வாழ்கை வரலாறு வரிசையில் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் அரும்பணி பாராட்டத்தக்கது.

புதுமைப்பித்தனால் “கதை சொல்வதில் சமர்த்தர்” என்று பாராட்டப்பட்ட எஸ்,ஜி,ஆருக்கு இந்தப் புத்தகம் ஒரு போற்றத்தகு நினைவஞ்சலி. 


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
 15-05-2015.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...