Sunday, May 31, 2015

மறக்க முடியாத அந்த நாள்! கயவர்கள் யாழ் நூலகத்தை எரித்த நாள் - Jaffna Library.




ஈழத்தில்   யாழ் நூலகம் எரிந்ததைப் பற்றி இன்றைக்கு தோழர். மணி வருணன் எழுதிய பத்தி கவனத்தை ஈர்த்தது . தம்பி பிரபாகரன் அவர்களும், பேபி சுப்பிரமணியம் அவர்களும் 33ஆண்டுகளுக்கு முன்னால், இந்தப் பிரச்சனை குறித்த செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்களோ அது அப்படியே தோழர் மணி வருணன் பதிவில் இருப்பதைக் கண்டேன்.
வரலாற்றில் இந்த துயர சம்பவத்தை இன்றைய தலைமுறைகள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இதோ மணிவருணன் எழுதிய அந்தப் பதிவு.

- கே.எஸ்.இராதருஷ்ணன்.
31-05-2015.

*******************************************************

  1981 ஆம் ஆண்டினை தமிழீழ விடுதலைப் புலிகளும் மறக்க முடியாது. தமிழ் மக்களும் மறக்க மாட்டார்கள்,அந்த ஆண்டின் மே மாதம் 31ஆம் நாள் தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொதுசன நூல்நிலையம் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு சிறிலங்காவின் தலைநகரில் இருந்து சிங்களக் குண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டு யூஎன்பி-கட்சியின் அமைச்சர்கள் முன்னிலையில் இராணுவ, பொலிஸ் படையினரின் பாதுகாப்போடு எரியூட்டப்பட்ட நாள்.

  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள்,மீண்டும் கிடைக்க முடியாத கையெழுத்துச் சுவடிகள் என ஈழத்தமிழர்களின் கல்விப் பொக்கிஷங்கள் தீயிட்டுச் சாம்பராக்கப்பட்ட நாள். அந்த நாட்கள் விடுதலைப் புலிகளுக்கும் சோதனை மிகுந்த காலம்.

அப்போது தங்கத்துரை தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தினரோடு நமது தேசியத்தலைவரோடு விடுதலைப்புலிகள் இயக்கமும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தது,81 மார்ச் மாத இறுதி நாட்களில் நீர்வேலியில் வைத்து மக்கள் வங்கிக்குச் சொந்தமான 82 இலட்சம் ரூபா பணம் வாகனத்தை இடைமறித்து பறித்தெடுக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து இயக்கத்தினரைக் கைது செய்துவிட வேண்டும்,ஆரம்பத்திலேயே இயக்கத்தை அழித்தொழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் சிறிலங்கா அரசு தனது முப்படைகளையும் கொண்டு தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தது. ஏப்ரில் 5ஆம் நாள் தங்கத்துரை, குட்டிமணி, தேவன் ஆகிய மூவர் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு முன்புறமாக உள்ள கடற்கரையோரத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

  அதனைத் தொடர்ந்து அவர்கள் மீதான சித்திரவதைகளும்,தேசியத் தலைவரோடு சேர்த்து அனைவரையும் கைது செய்துவிட வேண்டும் என்று அரச படைகள் வெறிபிடித்த வேட்டைநாய்களாக அலைந்து கொண்டிருந்தார்கள். ஏப்ரில் மாதம் 29 ஆம் திகதி காலை வேளை.
15வருட காலம் அரச ஊழியனாக செயற்பட்டுக்கொண்டிருந்த நான் வழமைபோல பணியில் இருந்தேன்.

  தலைவரின் தாய் மாமா வேலுப்பிள்ளை அண்ணர் என்னைத் தேடி வந்தார்.தம்பி இரவு இரத்தக்காயங்களோடு வாகனத்தில் பொலிசார் தங்கத்துரையைக் கொண்டு வந்தார்கள்.என்னையும் அடித்து வாகனத்தில் ஏற்றி இரவு பூராவும் பல இடங்களுக்கு கொண்டு சென்றார்கள். விசாரணையின் பின் என்னை இறக்கிவிட்டுச் சென்றனர். நீங்களும் கவனமாக இருங்கள் என என்னை எச்சரித்துச் சென்றார்.

 உடனடியாக குறுகிய கால விடுமுறை எடுத்துக்கொண்டு நான் ஒரு வாரத்திற்கு முன்புவரை வாடகைக்கு குடியிருந்து தலைவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் காலி செய்த வீட்டை நோக்கிச் சென்றேன்.அந்த வீடு இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பொன்னம்மான் அவர்களின் மாமியாருக்குச் சொந்தமானது.மாமியார் என்னைக் கண்டதும் ‘நேற்று இரவு உங்கடை தம்பியையும் பொலிஸ் தேடி வந்து எங்களையும் கஷ்ரப்படுத்திப் போட்டாங்கள் ‘என்றார்.சுதாகரித்துக் நான் ‘பொடியளோடை அவனுக்கும் ஏதும் தொடர்புகள் இருந்ததோ தெரியவில்லை”என்று சொல்லி அவரைச் சமாளித்துவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றேன்.

எனது மூளையும் வேகமாக இயங்கியது.”எங்கள் வீட்டையும் தலைவர் தான் தலைமறைவாக தங்கியிருப்பதற்கு பயன்படுத்திக்கொண்டிருந்தார்.அவரை எனது தம்பி என்றும்,பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருப்பதாகவுமே நாங்கள் மாறி மாறி குடியிருந்த வீட்டு உரிமையாளர்களுக்கு சொல்லிக்கொண்டு வந்தோம்.

அலுவலகம் சென்ற நான் உடனடியாக இரண்டுநாள் விடுமுறைக்கு விண்ணப்பம் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு நோக்கி விரைந்தேன்.எனது மனைவியையும்,நான்கு குழந்தைகளையும் பின்பு குடியிருந்த வீட்டில் இருந்து வல்வைக்கு அழைத்துச் சென்று எனது தாய் மாமன் வீட்டில் தங்கவைத்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு புறப்பட்டுச் சென்றேன்.

என்மீது அப்போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.. தலைவருக்கு அடைக்கலம் கொடுத்து தங்க வைத்திருந்தது..மக்கள் வங்கிப் பணத்தில் ஒரு பகுதி என்னிடம் இருந்தது.பலத்த சித்திரவதைகளின் பின்னர் தங்கத்துரையிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னைக் கைது செய்தால்,தலைவரின் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.அவரைக்கைது செய்துவிடலாம் என்பது அவர்களின் நப்பாசை

.கொழும்பிலிருந்து நான் திரும்பிவந்து தலைவரைச் சந்தித்ததனைத் தொடர்ந்து எனது வாழ்க்கைப்பயணம் மற்றோர் திசையில் நகர்ந்தது.அத்தோடு எனது அரச பணிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.யாழ் நூலக எரிப்போடு சம்பந்தப்படாத விடயத்தை இவர் வளரத்துச் செல்கின்றாரே என உறவுகள் எண்ணக்கூடும்.இயக்கம் போதிய வளர்ச்சி பெற்றிராத அந்தக்காலகட்டத்தில் நாம் எவ்வளவு கஷ்ரப்பட்டோம் என்பதற்காகவே இந்தப் பதிவு நீள்கிறது.

தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்து விட்ட என்னை யாழ் நுாலக எரிப்புச் சம்பவத்திற்கு முதல்நாள் மாலை இயக்கத் தம்பி ஒருவர் யாழ் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு இடிந்த வீடொன்றுக்கு அழைத்துச் சென்றார்.அங்கு மலையக வம்சாவழியைச் சேர்ந்த வயோதிபர் அம்மா ஒருவரே இருந்தார்.

பின்னாளில் வடக்கு மாகாண முதல் அமைச்சராக அறியப்பட்ட வரதன் ராசப்பெருமாளின் தாயாரே அவர்.அப்போது வரதராசப்பெருமாள் அமிர்தலிங்கம் ஆகியோரை விட்டுப் பிரிந்து யாழ் பல்கலைக் கழகத்தில் பயின்ற வண்ணம் காதல் அத்தியாயத்தையும் எழுதிக்கொண்டிருந்த நாட்கள் அவை. எம்மவர்களிடம் வந்து உரையாடிச் செல்வதையும் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்.

எரியூட்டப்பட்ட அந்த பயங்கரமான இரவு….இப்போதும் என் மனக்கண் முன்னால். நள்ளிரவைத் தாண்டிய அதிகாலை வேளை. திடீரென வாகனங்களின் இரைச்சல் சப்தம், வெளிச்சங்கள். நாம் இருந்த வீட்டின் அருகே சிங்கள உரையாடல்கள். என்னைத்தான் சுற்றி வளைத்துவிட்டார்கள் என்ற அச்ச உணர்வு, எனது பாதுகாப்பிற்கான தம்பிமார் வழங்கிச் சென்ற கைத்துப்பாக்கியைப் பற்றிக்கொள்கின்றேன்.

நான் நினைத்த மாதிரியான சம்பவம் நிகழவில்லை.வாகனங்கள் கிழம்பிச் சென்றன,சிறிது நேரத்தில் தூரத்தில் பெரு நெருப்பு, புகைமண்டலம். எதுவுமே புரியவில்லை, தூக்கமின்றி விடிந்ததும்.விடிந்ததும் விடியாத வேளை. மாத்தையா வாடகை வண்டி ஒன்றில் வந்து அவசர அவசரமாக என்னை அழைத்துச் சென்றார். நூல் நிலையம் எரியூட்டப்பட்ட செய்தியை அவர்தான் எனக்குத் தெரிவித்தார்.

சில காலத்திற்கு அரசாங்கத்தினால்  தேவைப்படுவோர் தமிழகம் வருவதென முடிவு செய்யப்படுகிறது. ஜூன் 6 ஆம் நாள் தலைவரோடு என்னையும் சேர்த்து ஐவர் தமிழகம் நோக்கிப் படகேறினோம். கோடியாக்கரையில் வந்திறங்கியதும் ஒரு வயோதிக மீனவர் எங்களிடம் கேட்டார், “கள்ளத்தோணியிலா வந்திறங்கினீங்க?”.

#JaffnaLibrary
#KSR_Posts
#KSRadhakrishnan

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...